கடந்த ஜனவரி முதலாம் திகதியிலிருந்து 16ஆம் திகதி வரை வன்னியில் மக்கள் வாழ்விடங்களை இலக்கு வைத்து நடத்தப்பட்ட கண்மூடித்தனமான விமான,ஷெல், பல்குழல் பீரங்கித் தாக்குதல்கள், துப்பாக்கிச் சூடுகளினால் 54 பேர் கொல்லப்பட்டதுடன் 175 இற்கு மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இதில் கொல்லப்பட்டவர்களில் 7 சிறுவர்க ளும் காயமடைந்தவர்களில் 10 சிறுவர்களும் அடங்குவர்.
ஒரு நாளைக்கு 5 தடவைக்கு மேல் நடத்தப்படும் விமானத் தாக்குதல்களாலும் பல தடவைகள் மேற்கொள்ளப்படும் ஷெல், பீரங்கித் தாக்குதல்களினாலும் உயிரழிவுகள் மட்டுமன்றி பெரும் சொத்தழிவுகளும் ஏற்பட்டுள்ளன. முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு, விசுவமடு வைத்தியசாலைகள் கூட இந்தத் தாக்குதல்களிலிருந்து தப்பவில்லை.
அத்துடன், வன்னியில் தற்போது எஞ்சியுள்ள வைத்திய சாலைகளில் பாரியளவு மருந்துத் தட்டுப்பாடு நிலவுவதால் காய மடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சையளிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் உயிரிழப்போரின் தொகை அதிகரிப்பதாகவும் தெரிவித்த மருத்துவமனை டாக்டர்கள் இனிவரும் நாட்களில் நிலைமை இன்னும் மோசமடையலாம் என்றும் எச்சரித்துள்ளனர்.
வன்னி மீதான இராணுவ நடவடிக்கை ஆரம்பமான நாள் தொட்டு இது வரை 12 தடவைகளுக்கு மேல் வன்னி மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். இராணுவம் நிலங்களை ஆக்கிரமிக்க, ஆக்கிரமிக்க மக்களும் ஒவ்வொரு இடமாக இடம்பெயர்ந்து வருகின்றனர்.
பரந்துபட்ட பிரதேசமான வன்னி யில் 4 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் மிகவும் செறிவாக வாழ்ந்து வந்தனர். ஆனால், இராணுவம் அகலக்கால் வைக்க வைக்க இந்த மக்கள் வாழும் பிரதேசங்கள் குறுகத் தொடங்கியுள்ளன. தற்போது இராணுவம் கிளிநொச்சியை ஆக்கிரமித்ததுடன் முல்லைத்தீவை நோக்கி நகரத் தொடங்கியமை வன்னி மக்களின் உயிர் வாழும் உரிமையையே கேள்விக் குறியாக்கிவிட்டது.
பரந்த பிரதேசங்களில் வாழ்ந்த மக்கள் நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டமையால் தற்போது குறிப்பிட்ட பிரதேச மொன்றுக்குள் முடக்கப்பட்டுள்ள தாலும் பரந்த பிரதேசங்களில் தமது இராணுவ வலுவைப் பயன்படுத்திய படையினர் தற்போது குறிப்பிட்டதொரு பிரதேசத்தை மட்டும் இலக்கு வைத்து ஆயுத பலத்தை பயன்படுத்துவதாலுமே மக்கள் பேரழிவை சந்திக்கத் தொடங்கி யுள்ளனர்.
பூச்சிய வீத பொது மக்கள் உயிரிழப்புடன் கிளிநொச்சியை தமது படைகள் கைப் பற்றியதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ பெருமைப்பட்டுக் கொண்ட நிலையில் முல்லைத்தீவை கைப் பற்றும் இராணுவ நடவடிக்கையில் கடந்த 16 தினங்களில் மட்டும் 54 பொதுமக்கள் கொல்லப்பட்டும் 175 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்து முள்ளனர்.
கிளிநொச்சியை இரா ணுவம் கைப்பற்ற முனைந்த போது தமது உயிர்களை பாதுகாத்துக் கொள்வதற்கு பொதுமக்களுக்கு வேறு இடங்கள் இருந்தன. ஆனால் தற்போது கிளிநொச்சியை கைப்பற்றிய இராணு வத்தின் பார்வை முல்லைத்தீவை நோக் கித் திரும்பியுள்ள நிலையில் தமது உயிர்களை பாதுகாத்துச் செல்வதற்கு பொது மக்களுக்கு வேறு இடங்கள் இல்லை.
வன்னிப் பகுதி மக் களை இராணுவ கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வருமாறு அரசு அறிவிப்புகளை விடுத்து வருகின்றது. இவ்வா?ன நிலையில் கடந்த வாரம் இராணுவ கட்டுப்பாட்டுப் பகுதியை நோக்கி வந்த பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 7 பேர்கொல்லப்பட்ட சம்பவம் மிகவும் கொடூரமானது.
அது தவிர விமான மற்றும் ஷெல் தாக்குதல்களி?ல் பொதுமக்கள் வன்னியில் தினமும்கொல்லப்படுகின்றனர்.காயப்படுத்தப்படுகின்றனர். அங்கவீனமாக்கப்படுகின்றனர். சிறுவர்கள் குடல் வெளியேறி, மூளை சிதறி உருக்குலைந்து பலி யாகின்றனர். தாய், தந்தையரை இழந்து பச்சிளங் குழந்தைகள் அநாதைகளாகின்றனர். தாய் கொல்லப்பட்டதால் தாய்ப்பாலுக்கு வழியின்றி கதறியழும் பச்சிளங் குழந்தைகளின் ஓலங்கள் நெஞ்சை உருக்குகின்றன.
வன்னியில் கடந்த 16 நாட்களில் நடந்த தாக்குதல்களை பார்க்கும் போது அதில் இராணுவ இலக்குகள் இருப்பதாகத் தெரியவில்லை. அனைத்தும் பொதுமக்கள் மீதான தாக்குதல்களாகவே காணப்ப டுகின்றன. அதிலும் குறிப்பாக இடம்பெயர்ந்து செல்லும் மக்கள் மீதே அதிகளவான தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.
2009ஆம் ஆண்டு பிறந்த அன்றைய தினம் முரசுமோட்டை மற்றும் கிளிநொச்சி பகுதிகள் மீது நடத்தப்பட்ட விமானக்குண்டு வீச்சில் ஆசிரியை ஒருவர் உட்பட 5 பேர் கொல்லப்பட்டனர். 28 பேர் படுகாயமடைந்தனர். இவர்களில் 5 பேர் சிறுவர்கள்,28 பேரில் பலர் தமது அவயவங்களை இழந்தனர்.
மறுநாள் 2ஆம் திகதி மாலை 5 மணியளவில் முல்லைத்தீவு பஸ் டிப்போ மீது நடத்தப்பட்ட விமானத் தாக்குதலில் 4 பேர்கொல்லப்பட்டதுடன் 8 பேர் படுகாயமடைந்தனர். இத்தாக்குதல் முல்லைத்தீவு வைத்தியசாலை மற்றும் ரோமன் கத்தோலிக்க பாடசாலை என்பனவற்றுக்கு மிக அருகாகவே நடத்தப்பட்டது.
அதேதினம் மாலை 4.20 மணியளவில் புளியம்பொக்கனைப் பகுதி மீது நடத்தப்பட்ட ஷெல் தாக்குதலில் 14 வயது சிறுமி ஒருவர் கொல்லப்பட்டதுடன் அச்சிறுமியின் பெற்றோர் படுகாயமடைந்தனர். இதேநாள் முரசுமோட்டை மீது நடத்தப்பட்ட ஷெல் தாக்குதலில் இருவர் கொல்லப்பட்டதுடன் 9பேர் படுகாயமடைந்தனர்.
4ஆம் திகதி வட்டக்கச்சி மற்றும் கல்மடுப் பகுதிகள் மீது நடத்தப்பட்ட ஷெல் தாக்குதலில் சிறுமி ஒருவர் உட்பட 13 பேர் படுகாயமடைந்தனர்.
மறுநாள் 5ஆம் திகதி முல்லைத்தீவு கோயில் குடியிருப்பு பகுதி மீது நடத்தப்பட்ட ஷெல் தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டார். அவரின் 13 வயது மகன் படுகாயமடைந்தார்.
8ஆம் திகதி பிற்பகல் 1 மணியள வில் வட்டக்கச்சி மீது நடத்தப்பட்ட ஷெல் தாக்குதலில் 11 மாதக் குழந்தை உட்பட மூவர் கொல்லப்பட்டனர். 4 சிறுவர்கள் உட்பட 13 பேர் படு காயமடைந்தனர்.
அதேநாள் பிற்பகல் 1.30 மணிய ளவில் தர்மபுரம் பகுதி மீது நடத்தப்பட்ட ஷெல் தாக்குதலில் மூவர் கொல்லப்பட்டதுடன் 5 சிறுவர்கள் உட்பட 14 பேர் படுகாயமடைந்தனர்.
10ஆம் திகதி இரவு 10.10 மணியளவில் முல்லைத்தீவு புதுக் குடியிருப்பில் நடத்தப்பட்ட ஷெல் தாக்குதலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் (தாய், தகப்பன், மகள்) உட்பட நான்கு பேர் கொல்லப்பட்டதுடன் மூவர் படுகாய மடைந்தனர். இதில் ஒருவர் 5 வயது சிறுமியாவார்.
11ஆம் திகதி பிற்பகல் 1 மணி யளவில் முல்லைத்தீவு தேராவில் பகுதி மீது நடத்தப்பட்ட ஷெல் தாக்குதலில் 2 வயது குழந்தை உட்பட 8 பேர் படுகாயமடைந்தனர்.
அன்றைய தினம் கிளிநொச்சி தர்மபுரம் மற்றும் கல்லாறு பகுதிகள் மீது நடத்தப்பட்ட ஷெல் தாக்குதலில் ஒரு வயதுக் குழந்தை உட்பட 5 பேர் படுகாய மடைந்தனர்.
13ஆம் திகதி காலை 10 மணியளவில் புதுக்குடியிருப்புப் பகுதி மீது நடத்தப்பட்ட ஷெல் தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டதுடன் இருவர் படுகாயம டைந்தனர். புதுக் குடியிருப்பு வைத்தி யசாலையும் சேதமடைந் தது.
அதேதினம் பிற்பகல் 12.20 மணியளவில் புதுக்குடியிருப்பு மந்துவில் பகுதி மீது நடத்தப்பட்ட ஷெல் தாக்குதலில் மூவர் படுகாயமடைந்தனர்.
இதேபோன்று விசுவ மடு தொட்டியடிப் பகுதி மீது நடத்தப்பட்ட ஷெல் தாக்குதலில் 2 சிறுவர்கள் உட்பட மூவர் கொல்லப்பட்டனர். இவர்களில் இருவர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். 3 சிறுவர்கள் உட் பட 15 பேர் படுகாயமடைந்தனர்.
தமிழர் திருநாளான தைப்பொங்கல் தினமான 14 ஆம் திகதி புதுக்குடியிருப்பு கைவேலி பகுதி மீது நடத்தப்பட்ட ஷெல் தாக்குதலில் 13 பேர் படுகாயமடைந்தனர்.
15 ஆம் திகதி சுண்டிக்குளி பகுதியில் இடம்பெயர்ந்து சென்று கொண்டிருந்த மக்கள் மீடு நடத்தப்பட்ட ஷெல் தாக்குதலில் 4 பொதுமக்கள் கொல்லப்பட்டனர். 8 பேர் படுகாயமடைந்தனர். இவர்க ளில் ஒருவர் சிறுமியாவார்.
அதே தினம் விசுவமடுநகர்ப் பகுதி மீது நடத்தப்பட்ட ஷெல் தாக்குதலில் 2 பேர் கொல்லப்பட்டதுடன் 7 பேர் படுகாயமடைந்தனர். காய மடைந்தவர்களில் மூவர் ஒரே குடும்பத்தை சேர்ந்த சிறுவர்களா வர்.
16 ஆம் திகதி முல்லைத்தீவு விசுவ மடு, புன்னை நீராவி, சுதந்திரபுரம், தோராவில், கைவேலி, கோம்பாவில் பகுதி கள் மீது நடத்தப்பட்ட தொடர் ஷெல் தாக்குதலில் 14 பேர் கொல்லப்பட்டனர். 12 பேர் காய மடைந்தனர்.
கொல்லப்பட்டவர்கள், காய மடைந்தவர்களில் அநேகர் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்களாவர். இத்தாக்குதல்களில் கொல்லப்பட்ட வர்களில் மூன்று சிறுவர்களும் காயமடைந்தவர்களில் மூன்று சிறுவர்களும் அடங்குவர். இடம் பெயர்ந்து அகதிகளாக சென்று கொண்டிருந்த போது அவர்கள் பயணித்த உழவு இயந்திரங்கள் மீது ஷெல்கள் விழுந்ததில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
தற்போது நடைபெற்று வரும் அகோர ஷெல் தாக்குதல்களால் இடம்பெயர்ந்து செல்லும் மக்களே மிக மோசமாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
குறுகிய பாதைகள் வழியாக பெரும் தொகையான மக்கள் இடம்பெயர்ந்து செல்லும் நிலையிலேயே இத்தாக்குதல்கள் நடத்தப்படுவதால் அதிகளவு இழப்புகள் ஏற்படுகின்றன.
இதேவேளை ஆயிரக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்து வருவதால் பரந்தன் புதுகுடியிருப்பு பிர தான வீதி ஓரங்களில் பாரிய போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டுள்ளது. வீதியோரங்களில் கனரக வாகனங்கள், உழவு இயந்திரங்கள், லான்ட்மாஸ்டர்கள், என பெருமளவு வாகனங்கள் இடம்பெயர்ந்து செல்லும் மக்களின் தளபாடங்கள், பொருட்களுடன் நிறுத்தி வைக்கப்படுவதாலேயே இந்த நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
அத்துடன் மழையும் பெய்து வருவதால் கிரவல் வீதிகளில் வாகனங்கள் புதையுண்டு போவதாலும் வாகன நெரிசல் ஏற்படுகின்றது.
முன்னெப்போதுமில்லாத வகையில் தற்போது ஷெல் தாக்குதல்கள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதால் பொது மக்கள் தினமும் இடம்பெயர வேண்டியுள்ளது. தற்போது புலிகளின் கட்டுப்பாட்டிலுள்ள பகுதியில் பெருமளவானவை ஷெல் வீச்செல்லைக்குள் வந்துள்ளதும் பொதுமக்களுக்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்தியுள்ளது.
வன்னியில் தினமும் பொதுமக்கள் செத்தழிவதும் சொத்துக்கள் அழிவதும் இடப்பெயர்வுகளும் பட்டினி அவலங்களுமென ஒரு பெரும் மனிதப் பேரவலம் இடம்பெற்றுக் கொண்டிருப்பதை எந்தவொரு நாடோ எந்தவொரு அமைப்போ ஏறெடுத்தும் பார்க்கவில்லை. ஒரு கண்டனத்தையோ கவலையையோ வெளியிடக் கூட இவர்கள் தயாராகவில்லை.
பலஸ்தீனத்தின் காஸாவில் இடம்பெற்று வரும் கொடூர தாக்குதல்கள், பொதுமக்கள் படுகொலைகள் கண்டிக்கப்படவேண்டியவை. அத்துடன் உடனடியாக நிறுத்தப்படவேண்டியவை. அதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. காஸாவில் இடம் பெறும் சம்பவங்களை கண்டித்து இலங்கையிலும் ஆர்ப்பாட்டங்கள், கண்டனப் பேரணிகள் தற்போது உருப்பெற்றுள்ளன.
இன்னொரு நாட்டில் தமது இனத்தின் மீது நடத்தப்படும் தாக்குதல்களுக்கெதிராக கிளர்ந்தெழுவது ஒவ்வொரு இனத்தினது உரிமை, கடமை. ஆனால் தமது சொந்த நாட்டில் தமது சக இனம் தினமும் விமானக்குண்டு வீச்சுகளி?லும் ஷெல் தாக்குதல்களினாலும் உருக்குலைந்து போய்க்கொண்டிருப்பது தொடர்பாக காஸாவில் நடக்கும் படுகொலைகளுக்கு எதிராக கொழும்பில் ஆர்ப்பாட்டம் நடத்தும் இந்தக் கருணையுள்ளம் படைத்தவர்கள் ஒருவார்த்தையையோ, எழுத்தையோ கூட பயன்படுத்த முன்வரவில்லை. இது அவர்களின் மனிதாபிமானம் தொடர்பில் சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது.
புலிகளுக்கு ஆதரவாக எவரும் கிளர்ந்தெழ வேண்டாம். புலிகள் உயிரிழப்பது தொடர்பில் எவரும் கவலைப்பட வேண்டாம். ஆனால் புலிகளை எதிரியாக கருதிக் கொண்டு, தமிழினம் அழிந்து கொண்டிருப்பது தொடர்பில் மௌனம் சாதிப்பவர்களும், இவ்வா?ன செயல்களுக்கு உந்துதல் கொடுப்பவர்களும், தமிழின அவலங்களை நியாயப்படுத்துபவர்களும் காஸா விடயத்தில் தம்மை மனிதாபிமானமிக்கவர்களாக காட்டிக் கொள்ள முனைவது தான் வேடிக்கையானது.
தென்பகுதி ஊடகங்கள் கூட வன்னிமக்களின் அவலநிலையை, அங்கு நடக்கும் படுகொலைகளை, விமான, ஷெல் தாக்குதல்களை இருட்டடிப்புச் செய்வதிலேயே அதிக கவனம் செலுத்துகின்றன. தமது செய்தி நேரங்களில் "காஸா' பிரச்சினைக்கு அதிக நேரத்தை செலவழிக்கும் ஊடகங்கள் தமது நாட்டுக்குள் தமது மக்களுக்கு நடக்கும் அவலங்களை வெளிக்கொண்டுவர மறுக்கின்றன.
இவ்வாறு சர்வதேச நாடுகள், மனித உரிமை அமைப்புகள், ஊடகங்கள், என அனைத்துப் பிரிவினராலும் கைவிடப்பட்ட தமிழினம் வன்னியில் தற்போது அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது. முல்லைத்தீவை நோக்கிய படைநகர்வு உத்வேகம் பெற்று வரும் நிலையில் இனிவரும் நாட்களில் வன்னியில் பொதுமக்களின் இழப்புகளும் அதிகரிக்கவே போகின்றது.
இவ்வாறான நிலையில் இலங்கைக்கு சிவ்சங்கர் மேனன் வந்தாலென்ன, இந்திய பிரதமர் வந்தாலென்ன, வன்னியிலுள்ள மக்களை பாதுகாக்க எவருமேயில்லை.
தாயகன்
Comments