‘‘விடுதலைப் புலிகளை தொடர்ந்து ஆதரிப்போம்’’ - வைகோ


மூத்த அரசியல்வாதியான இரா.செழியன் எழுதிய சமுதாய நீதியில் அரசியல் அடிப்படை என்கிற கட்டுரை தொகுப்பு நூல் வெளியீட்டு விழா சென்னை பி.டி.தியாகராயர் அரங்கில் வியாழனன்று நடந்தது. மதிமுக பொதுச் செயலாளர் வைகோ புத்தகத்தை வெளியிட, முதல் படியை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய கட்டுப்பாட்டுக் குழு உறுப்பினர் நல்லக்கண்ணு பெற்றுக்கொண்டார்.

அப்போது நல்லக்கண்ணு பேசியதாவது:இந்த நூலில் இலங்கையில் ரத்தக் கண்ணீர் என்ற தலைப்பில் அங்கு அப்பாவித் தமிழர்கள் கொல்லப்படுவது குறித்து செழியன், 1983_ல் எழுதிய கட்டுரை இடம்பெற்றிருக்கிறது. இன்றைக்கு ரத்தக் கடலே அங்கு ஓடுகிறது.

பிரணாப் முகர்ஜியை இலங்கைக்கு அனுப்பவில்லையே ஏன்? என்று கேட்டால், ராஜபக்சே விரும்பாதபோது அழையா விருந்தாளியாக பிரணாப் முகர்ஜி எப்படி அங்கே செல்வார்? என்று மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு கேட்கிறார். இது விருந்துக்குப் போகிற காரியமா? நம்மைப் போல் தமிழ் பேசும் ஒரு இனம் கொல்லப்படுகிறது. கிளிநொச்சியைக் கைப்பற்றிவிட்டோம் என்கிறார்கள். அங்கிருந்த லட்சக்கணக்கான தமிழர்கள் எங்கே சென்றார்கள் தெரியவில்லை? ஆடு, நாய்கள்தான் அங்கே இப்போது இருக்கின்றன. போரை நிறுத்த சட்டமன்றத்தில் தீர்மானம் போட்டு ஆறு மாதம் ஆகிறது. பிரதமரை தமிழக அனைத்துக் கட்சிக் குழுவினர் சந்தித்து ஒரு மாதம் ஆகிறது. இந்தியாவில் இருந்து அரை மணி நேரப் பயணத்தில் இலங்கை சென்றுவிட முடியும். தமிழனின் சாவைப் பற்றிக் கவலைப்படாமல் பிரபாகரனை எங்களிடம் தான் ஒப்படைக்க வேண்டும் என்று இங்குள்ள கட்சி கேட்கிறது.

சனீஸ்வர பகவானை கும்பிடவும், சிவனை வழிபடவும் இலங்கை அரசியல்வாதிகள் தமிழகத்துக்கு அவ்வப்போது வந்து செல்கிறார்கள். தமிழனைக் கொல்லும் அதிகாரத்தை யார் அவர்களுக்குக் கொடுத்தது? பாகிஸ்தான் மீது போர் தொடுக்க இந்தியாவை அமெரிக்கா தூண்டுகிறது. ஆனால் பாகிஸ்தான், அமெரிக்கா, பிரிட்டன், சீனா, மாலத்தீவு, பங்களாதேசம் ஆகிய ராணுவ தளபதியோடு இந்திய ராணுவ தளபதி கைகோர்த்து கிளிநொச்சியைப் பிடிக்க வியூகம் வகுத்துத் தருகிறார். இதன்மூலம், இந்திய அரசு அரசியல் நேர்மையை இழந்துவிட்டது'' என்று விளாசித் தள்ளினார்,

நல்லக்கண்ணு.தொடர்ந்து பேசிய வைகோ, ‘‘செஞ்சோலையில் 61 அநாதைக் குழந்தைகள் கொல்லப்பட்டபோதும் சுனாமி புனரமைப்புப் பணிகளுக்காகச் சென்ற பிரான்ஸ் நாட்டு தன்னார்வத் தொண்டர்கள் 17 பேரை இலங்கை ராணுவத்தினர் சுட்டுக் கொன்றபோதும் இந்திய நாடாளுமன்றம் தனது கண்டனத்தைப் பதிவு செய்யவில்லை. இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொல்லப்பட்ட போதும் இந்திய அரசு அமைதி காத்தது.

கிழக்குப் பாகிஸ்தானில் இருந்து பங்களாதேஷ் பிரிந்ததால், இந்திய மாநிலமான மேற்கு வங்கம் ஒன்றும் தனியாகப் பிரிந்து போய்விடவில்லையே? தமிழீழம் உருவானால் தனித்தமிழ்நாடு உருவாகிவிடும் என்று ஆதரமற்ற ஒரு பொய்யைப் பரப்புகிறார்கள். மும்பையில் தாக்குதல் நடத்திய பாகிஸ்தானில் இருந்து கப்பல் கப்பலாக ஆயுதங்கள் இலங்கைக்குச் செல்கின்றன.

இலங்கையில் தமிழர்கள் மீதான போரை இந்திய அரசுதான் திட்டமிட்டு நடத்துகிறது. தமிழர்கள் அனைவரையும் கொன்று குவித்துவிட்டு அதிகாரப் பரவல் பற்றி பேச பிரணாப் முகர்ஜியை அனுப்புவதுதான் இவர்களின் திட்டம். இலங்கைக்கு ஆயுதம் கொடுப்பதை கருணாநிதி கண்டுகொள்ளவில்லை. விடுதலைப் புலிகளை எதிர்க்கும் இங்குள்ள அரசியல் கட்சிகளாவது ஒரு நிலைப்பாட்டில் உள்ளன. ஆனால் கருணாநிதி நாடகம் போடுகிறார். தமிழக சட்டமன்றத்தில் இலங்கை போர் நிறுத்தம் கோரி நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை மத்திய அரசு காலில் போட்டு மிதித்துவிட்டது. தமிழனின் முதல் துரோகி ராஜபக்சே கிடையாது மத்திய அரசுதான்.

ஈழ விடுதலைப் போரை நாங்கள் ஆதரிக்கிறோம். அந்தப் போராட்டத்தை முன்னின்று நடத்தும் விடுதலைப் புலிகளையும் ஆதரிக்கிறோம். இதைச் சொல்வது என்னுடைய உரிமை. எனது இந்த அணுகுமுறையில் தவறிருக்கலாம். ஆனால் நான் பேசியதை நீங்கள் சிந்தித்து ஒரு முடிவுக்கு வாருங்கள்'' என்று பேசினார் வைகோ.

விழாவில் அதிமுக எம்.பி., மலைச்சாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலக் குழு உறுப்பினர் டி.இலட்சுமணன், ஜார்கண்ட் மாநில ஐ.சி.எப்.ஏ.ஐ. பல்கலை., வேந்தர் பி.எஸ்.இராகவன், நூல் பதிப்பாளர் ஆழிப் பதிப்பக நிர்வாகி செ.ச.செந்தில்நாதன் ஆகியோர் கலந்து கொண்டனர். மதிமுக தலைமைக்கழக செயலாளர் வழக்கறிஞர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் வரவேற்றார்.



Comments