பொய்யுரைப்பது என்று முடிவான பிறகு என்ன வேண்டுமானாலும் புளுகலாம். ? இதற்கு ஜெயலலிதா மட்டும் விதிவிலக்கா என்ன?

பொய்யுரைப்பது என்று முடிவான பிறகு என்ன வேண்டுமானாலும் புளுகலாம். அதைப் பிரசுரிக்க ஊடகங்கள் தயாராக இருக்கும்போது, சொல்ல நா கூசுமா என்ன…

போர் என்பது நேருக்கு நேர் இரு தரப்புக்குமிடையே மட்டும்தான் நடக்க வேண்டும். அதுதான் யுத்த தர்மமும் கூட. ஆனால் இலங்கை விஷயத்தில் நடப்பது எந்த வகை தர்மம் எனப் புரியவில்லை.

ஒரு பக்கம் இலங்கை ராணுவம். அவர்களுக்கு பின்னால் மறைந்து நின்று தாக்கும் 6 பெரிய வல்லரசுகள். கூடவே இருந்து காட்டிக் கொடுத்த கூட்டம்,

தமிழர்களின் தீரா வியாதிகளாய் மாறி கொழும்பில் கூடாரமடித்துத் தங்கிவிட்ட பெருச்சாளிகள் தொடர்ந்து தரும் தொல்லை, இன்னொரு பக்கம், இலங்கைத் தமிழரின் துயர நிலை என்னவென்றே புரியாமல், புலி எதிர்ப்பு என்பதை மட்டும் பிடித்துக் கொண்டு தொங்குவோர் போடும் சத்தம்.

இவர்களை எல்லாம் எதிர்த்து நின்று, போராட வேண்டிய நிர்ப்பந்தம் புலிகளுக்கு. தங்கள் மீது அளவற்ற நம்பிக்கை கொண்டுள்ள பெரும்பான்மைத் தமிழர்களுக்கு நியாயம் செய்ய வேண்டிய பெரும்பாரத்தைச் சுமந்தபடி போர்முனையில் நிற்கிறார்கள் அவர்கள்.

விடுதலைப் புலிகள் வேறு, இலங்கைத் தமிழர்கள் வேறு என்பது போன்ற ஒரு பொய்யைத் தொடர்ந்து பரப்பும் முயற்சியில் ஜெயலலிதா போன்ற தமிழகத் தலைவர்கள் இறங்கியுள்ளனர். கிட்டத்தட்ட இலங்கை அரசின் அறிவிக்கப்படாத பிஆர்ஓக்களாகவே மாறிவிட்டார்களோ என்று சந்தேகப்பட வைக்கிறது, இந்தப் பிரச்சாரத்தை அவர்கள் மேற்கொண்டுள்ள முறை.

தமிழர்களும் அவர்களுக்காகப் போராடும் போராளிகளும் வேறு வேறானவர்கள்… அல்லது மக்களை ஆயுதங்களாக வைத்து போராளிகள் செயல்படுகின்றனர் என்ற பிரச்சாரம் மற்றும் குற்றச்சாட்டுகளில் எந்தளவு உண்மையுள்ளதை என்பதை இங்குள்ள தாயகத் தமிழர்கள் எண்ணிப் பார்க்க வேண்டும்.

இவர்கள் சொல்வது போலவே போராளிகள் வேறு, தமிழர்கள் வேறு என்று வைத்துக் கொண்டால், புலிகள் போராட்டம் யாருக்காக? மக்களுக்காக அவர்கள் போராடவில்லையென்றால், இத்தனை இழப்புக்களை அவர்கள் தாங்க வேண்டிய அவசியமில்லையே. கருணா மாதிரி, தலைகளை அடகு வைத்து பாராளுமன்றத்தில் உட்கார்ந்தபடி ஆள்காட்டி வேலையில் ஜரூராக இறங்கிவிடலாமே!

தமிழருக்கென்று ஒரு தனியரசு அமைக்கும் முயற்சியில் சின்னச்சின்ன குறைகள் இருக்கலாம். ஆனால் அந்த நோக்கம் பிரபாகரனின் தனிப்பட்ட ஆசை என்று பிரச்சாரம் செய்வது அபத்தம்.

தமிழர் பகுதிகளில் சின்ன ஊசி வெடி வெடித்தால் கூட அதை பூதாகரமாக்கி உலகுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டி வருகிறது இலங்கை ராணுவம். உண்மையிலேயே புலிகளிடம் மாட்டிக் கொண்டு தமிழர்கள் அவதிப்படுகிறார்கள் என்றால், அந்த அதிருப்தி இன்றுவரை வெளியில் தெரியாமலேயே இருப்பது எப்படி?

சாதாரண மக்கள் ஒன்று திரண்டு புலிகளைக் காட்டிக் கொடுத்துவிடலாமே… அட, அகதிகளாக தமிழகம் வருபவர்களாவது புலிகளின் ‘கொடுமையை’ மீடியா முன் கொட்டியிருக்கலாமே… விடுதலைப் புலிகள் என்ன ராமேஸ்வரம் முகாமுக்கு வந்தா குறிபார்த்துச் சுடப் போகிறார்கள்!

ஆனால் இலங்கையின் தமிழர் பிரதேசங்களில் கால்முனைகூட பதிக்காத ஜெயலலிதாக்களும், தங்கபாலுக்களும், சு.சாமிக்களும், சோக்களும் இந்தக் குற்றச்சாட்டைச் சொல்வதுதான் வேடிககையாக உள்ளது.


இன்னொன்று… மக்களை கேடயங்களாக புலிகள் பயன்படுத்துகின்றனர் என்ற குற்றச்சாட்டு.

இந்த குற்றச்சாட்டை இலங்கை அரசும் சொல்கிறது, ஜெயலலிதா போன்றவர்களும் சொல்கிறார்கள். ஒரு வாதத்துக்கு அது உண்மை என்றே வைத்துக் கொள்வோம்.

இதே இலங்கை அரசு இன்று வெளியிட்டுள்ள தகவல்படி, வன்னிக் காடுகளில், முல்லைத்தீவில் பதுங்கியுள்ள மக்கள் எண்ணிக்கை 5 லட்சம். இவர்கள் யாழ்ப்பாணப் போர் தொடங்கி, கிளிநொச்சியை இழந்தது வரை புலிகளுடனே பயணம் செய்பவர்கள்.

பொன்சேகா இன்று கூறியுள்ளபடி, இவர்களுடன் உள்ள புலிகளின் எண்ணிக்கை வெறும் 1000 பேர்!

சரி, இது உண்மை என்றே வைத்துக் கொள்ளுங்கள்.

இந்த 1000 பேர் கட்டுப்பாட்டில் 5 லட்சம் மக்கள் இருப்பதாகக் கூற வருகிறார்களா? இந்த 1000 பேரைச் சமாளித்துவிட்டு, வெளியில் வந்து வாழ முடியாதவர்களா இந்த 5 லட்சம் பேரும்?

அல்லது இந்த 1000 புலிகளை வீழ்த்தத்தான் 1 லட்சம் வீரர்கள், இந்தியா வாரிக் கொடுத்துள்ள கோடிக்கணக்கான ஆயுதங்களுடன் முன்னேறிக் கொண்டிருக்கிறதா இலங்கை ராணுவம்?!

நல்லா சொல்றாங்கய்யா டீடெய்லு!!

இந்தியத் தலைவர்களே… மனமிருந்தால், இலங்கை தமிழ் மக்கள் தங்கள் வாழ்வுரிமையும், சொந்த மண்ணையும் மீட்டுக் கொள்ள ஆதரவுக் குரல் கொடுங்கள்.

இல்லாவிட்டால் இருக்கவே இருக்கிறது ஆயிரம் பொய்சொல்லி ஓட்டுப் பொறுக்கும் பொதுவாழ்க்கை… அந்த வேலையை ஆனமட்டும் பாருங்கள்!

இன்போதமிழ்

Comments