அதற்கெல்லாம் கொஞ்சமும் பலனில்லாமல் போனதாலோ என்னவோ... உணர்வைப் பிளிற வைக்கும் உருக்கமான கடிதம் ஒன்றை இந்த சமூகத்தின் முன்னால் எழுதி வைத்துவிட்டு, தீக்குளித்து உயிரை விட்டிருக்கிறார் முத்துக்குமார் என்ற இளைஞர்.
ஜனவரி 29-ம் தேதி, சென்னை சாஸ்திரி பவனில் ஏதேதோ வேலைகளோடு பலரும் காத்திருக்க,
அவர்களின் கைகளில் ஒளியச்சு செய்யப்பட்ட ஒரு கடிதத்தைக் கொடுத்துவிட்டு, முத்துக்குமார் தன் உடலில் தீவைத்துக்கொள்ள... அதன் பிறகே நிகழும் கொடூரம் பலருக்கும் தெரிந்து
அலறி இருக்கிறார்கள். தின்றது போதுமென நினைத்து, தீ கரிக்கட்டையாக உடலைத் துப்பியபோதும், 'ஈழ மக்களுக்குத் தீர்வுவேண்டும்... என் தமிழ் இனம் இனியும் வதைபடக் கூடாது!' என முனகியபடியே துடித்திருக்கிறார் முத்துக்குமார்.
காவல் துறையினர் ஓடிவந்து முத்துக்குமாரை ஆஸ்பத் திரியில் சேர்க்க, ''எனக்கு தயவு பண்ணி சிகிச்சை கொடுக் காதீங்க... நான் உணர்ச்சிவசப்பட்டு தீக்குளிக்கலை. என்னை காப்பாத்துறதுக்கு பதிலா ஈழத்தைக் காப்பாத்துங்க... உங்களைக் கையெடுத்துக் கும்பிடுறேன்!'' எனக் கெஞ்சியபடியே அடங்கி இருக்கிறது அவருடைய உயிர்.
இந்தி எதிர்ப்புப் போராட்டத்துகுப் பிறகு மொத்தத் தமிழகத்தையும் உலுக்கி இருக்கிறது முத்துக்குமாரின் தற்கொலை. கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் பரிசோதனைகளுக்குப் பிறகு கிடத்தப்பட்டிருந்த முத்துக்குமாரின் உடலைப் பார்க்கக் கலங்கிய விழிகளோடு ஓடோடி வந்தார் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ. ''வாழைக் குருத்தை வாரிக் கொடுத்துட்டோமே... இப்படியெல்லாம் நடக்கக்கூடாது என்பதற்காகத்தானே உண்ணாவிரதம் இருந்த மாணவர்களிடம் கெஞ்சிக் கூத்தாடினேன். இந்த வீரத் தமிழனின் சாவுக்கு அரசு என்ன பதில் சொல்லப் போகிறது?'' என்றபடியே முத்துக்குமாரின் கால்களைத் தொட்டு வணங்கி, வைகோ கலங்கியது... எல்லோருடைய கண்களிலும் நீர் கோக்க வைத்துவிட்டது. தகவலறிந்து அடுத்தடுத்து திருமாவளவன், டாக்டர் ராமதாஸ், நெடுமாறன், சுப.வீரபாண்டியன் என பலரும் சோகம் அப்ப மருத்துவமனைக்கு வந்தனர்.
திருச்செந்தூர் மாவட்டம் கொலுவைநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த முத்துக்குமார், சென்னைக்கு வந்து பத்து வருடங்களுக்கும் மேலாகிவிட்டது. சினிமா முயற்சியில் இயக்குநர்கள் பலரைச் சந்தித்தும் பலனில் லாமல் போனதால்... கடந்த இரண்டு மாதங்களாக பா.ம.க. தலைவர் ராமதாஸின் மகள் கவிதா நடத்தும் 'பெண்ணே நீ' என்கிற மகளிர் மாத இதழில் உதவி ஆசிரியராகப் பணியாற்றி இருக்கிறார். வாசிப்பு தாகமும் எழுத்து ஞானமும் தீராத தமிழ்ப் பற்றும்கொண்ட முத்துக்குமார், ஈழ விவகாரத்தின் சமீபத்திய நிகழ்வுகளைத் தீவிரமாக கவனித் திருக்கிறார். சிவசங்கர் மேனன் பயணம், பிரணாப் முகர்ஜி பேச்சுவார்த்தை என ஒப்புக்குச் சப்பாக நடந்த போர் நிறுத்த நடவடிக்கைகள் முத்துக்குமாரை ரொம்பவே கலங்கடிக்க, இறுதியில் தீக்குத் தன்னையே இரையாக்கி இருக்கிறார்.
அழுகையும் ஓலமுமாக முத்துக்குமாரின் உடலைப் பார்க்க வந்த அவருடைய மைத்துனர் கருக்கவேல், யாரிடமும் பேசத் திராணியற்று மயக்கமானார். சில நிமிடங்களில் லேசாகக் கண் விழித்தவரிடம், ''முத்துக்குமார் எந்த அமைப்பிலாவது இருந் தாரா?'' என ஒரு நிருபர் கேட்க, ''ஆமாங்க... 'தமிழ்'ங்கிற தீவிரவாத அமைப்புல இருந்தான்னு கொட்டை எழுத்துல போடுங்க... ஒரு வார்த்தைகூட ஆங்கிலத்தில பேசாம தமிழ் மேல வெறி பிடிச்சு அலைஞ்சு, எந்த நேரமும் ஈழத்தைப் பத்தியே பேசி, கடைசியில ஒரு எழவும் நடக்காம போன வருத்தத்துல உயிரையே விட்டுட் டான். அவனைப் போய் எந்தத் தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த வன்னு கேட்குறீங்களே?'' எனத் தலையிலடித்துக் கொண்டு அழுதார் கருக்கவேல்.
முத்துக்குமாரின் தங்கையான தமிழரசியை திருமணம் செய்திருக்கும் கருக்கவேலை தேற்றிப் பேச வைத்தோம்.
''நேத்து நைட் (28-ம் தேதி) பத்து மணி வரைக்கும் நல்லாத்தான் பேசிக்கிட்டு இருந்தான். அப்போ டி.வி. நியூஸ்ல, ஈழத்தில குழந்தைகளைக் கொல்றது பத்தியும், பெண்களைச் சீரழிக்கிறது பத்தியும் சொன் னாங்க. அதைப் பார்த்து நாங்ககூட மனசு வெடிச்சுப் போயிட்டோம். ஆனா, அவன் ரொம்ப அமைதியா இருந்தான். அப்புறம் என்ன நினைச்சானோ... யார் கிட்டயும் பேசாம மாடியில இருக்கிற அவனோட ரூமுக்குப் போயிட்டான். பெரும்பாலும் நாங்க யாரும் அவனோட ரூம் பக்கம் போக மாட்டோம். தனிமையில் புத்தகங்கள் படிச்சுக்கிட்டும் எழுதிக்கிட்டும் இருப்பான். அன்னிக்கு நைட் என்ன நடந்துச்சுன்னே தெரியலை. அடுத்த நாள் விடிகாலை அஞ்சு மணிக்கெல்லாம் வீட்டை விட்டு வெளியே கிளம்பிட்டான். 'பத்து மணிக்கு சாஸ்திரி பவனில் யாரோ ஒரு பையன் ஈழப் பிரச்னையைக் கண்டிச்சு தீக்குளிச்சிட்டான்!'னு எல்லாரும் பேசிக்கிட்டாங்க. அப்ப எனக்கு சட்டுன்னு முத்துக்குமார் ஞாபகம்தான் வந்தச்சு. ஆனா, அவனைப் பத்திதான் எல்லாரும் பேசியிருக்காங்கனு அப்புறம்தான் எனக்குத் தெரிஞ்சது...'' என்றபடியே கண்கலங்கியவர்,
''மலை ஏறினாலும் மச்சான் துணை இருந்தா போதும்னு சொல்வாங்க. ரெண்டு வருஷத்துக்கு முன்னாலதான் முத்துக்குமாரோட தம்பி ஆக்சிடென்ட்ல செத்துப் போனான். 'பரவாயில்லடா... எனக்கு நீ ஒருத்தன் இருக்கிறதே போதும்'னு சொல்லி ஒருத் தரை ஒருத்தர் தேத்திக்கிட்டோம். ஆனா, இப்ப உறுதுணையா இருந்த அந்த ஒருத் தனையும் இழந்துட்டேனே... என் பொண்டாட்டி இப்ப ஒம்பது மாச கர்ப்பிணி. எங்க புள்ளைகளுக்கு தாய் மாமாங்கிற விதியத்துப் போச்சே...'' எனப் பெருங்குரலெடுத்து அழத் தொடங்கினார், கருக்கவேல்.
சென்னை கொளத்தூர் பகுதியில் இருக்கும் மக்காரம் தோட் டத்தில் உள்ள முத்துக்குமாரின் வீட்டுக்குச் சென்றோம். வீட்டு உரிமையாளர் வீரமுரசு நம்மிடம், ''எம்பேரைப் பத்தி அவ்வளவு பெருமையாப் பேசுவாம்பா... நல்ல தமிழ்ப் பேருன்னு வாய் நிறைய அவன் சொல்றப்ப, 'இதைக் கேட்டா என்னைப் பெத்துப் பேரு வச்சவங்க உச்சி குளிர்ந்து போயிடுவாங்கடா'ன்னு சொல்வேன். அந்த வாஞ்சையான பேச்சும் அவனோட பழக்க வழக்கமும் எனக்கு ரொம்பப் பிடிச்சுப் போச்சு. அதனாலேயே அவனுக்கு மாடியில தனியா ஒரு ரூமே கட்டிக் கொடுத்தேன். அவன் தேடித் தேடி வாசிக்கிற புத்தகங்களும், பகிர்ந்துக்கிற விஷயங்களும் அவன் மேல இருந்த பிரமிப்பை அதிகப்படுத்திடுச்சு. இதுக்கிடையில கம்ப்யூட்டர்லயும் நல்ல அறிவு அவனுக்கு. எம்.சி.ஏ. முடிச்ச என் பொண்ணுக்கு கம்ப்யூட்டர் பத்தி அவன் கத்துக் கொடுப்பான். இதையெல்லாம் பார்த்து ஆச்சர்யப்பட்டுப் போன என் மருமகன், 'நீ சிங்கப் பூருக்கு வந்துடு... கம்ப்யூட்டர் சம்பந்தமான நல்ல வேலை வாங்கித் தாரேன்'னு சொன்னார். ஆனா, அதுக்கு முத்துக்குமார் சம்மதிக்கலை. எழுத்துலயோ சினிமா வுலயோ சாதிக்கணும்கிறதுதான் அவனோட இலக்கா இருந்துச்சு. ஆனா, ஈழ விவகாரங்கள்ல அவன் மனசு இந்தளவுக்கு பாதிக்கப்படும்னு நாங்க நினைக்கலை. கரிக்கட்டையா அவன் கிடந்த கோலத்தைப் பார்த்தப்ப, அவன் உலகத்தைப் பத்திப் பேசிய பேச்செல்லாம் ஞாபகத்துக்கு வந்துடுச்சுய்யா... இனி வாய் நிறைய என் பேரைச் சொல்லி அவன் எப்ப தம்பி பாராட்டுவான்?'' என்றார் கலங்கிப்போய்.
வீரமுரசுவே நம்மை முத்துக்குமாரின் தனி அறைக்கும் அழைத்துப் போனார். தூய தமிழில் உருவான நாட் காட்டி படபடக்க, அறை முழுதும் ஏராளமான தமிழ்ப் புத்தகங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. 'இரவல் தாய்நாடு', 'சாந்தனின் எழுத்துலகம்', 'பிரிவினைக்குப் பின்',
'காலம் ஒரு வரலாற்றுச் சுருக்கம்' என நாம் அறிந்திராத புத்தகங்களைக்கூட தேடித் தேடி வாங்கி வைத்திருக்கிறார் முத்துக்குமார். அதோடு, ஈழ விவகாரம் குறித்து கடந்த ஆறேழு வருடங்களாக பத்திரிகைகளில் வந்த அத்தனை கட்டுரைகளையும் வெட்டி பத்திரப்படுத்தி வைத்திருக்கிறார்.
விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் பல்வேறுபட்ட புகைப்படங்களையும் சேகரித்து வைத்திருக்கிறார். ஒரு படத்தின் கீழ், 'அகிம்சை மிதிக்கப்படும்போது ஆயுதம் எடுப்பதில் தப்பில்லை' என எழுதி வைத்திருக்கிறார்.
அதோடு, நாற்பது பக்கங்களுக்கும் மேலாக அவர் எழுதி வைத் திருந்த கதை ஒன்று முடிக்கப்படாமல் பீரோவில் பத்திரப்படுத்தப்பட்டிருந்தது. வியப்பும் வேதனையும் கலந்த வருத்தத்தோடு அந்த அறையை விட்டு வெளியே வந்தோம்.
தன் மகனோடு முத்துக்குமாரின் புகைப்படத்தை மடியில் வைத்து அழுது கொண்டிருந்த அவரு டைய தங்கை தமிழரசிக்கு ஆறுதல் சொல்லிப் பேசினோம்.
''இலங்கையோட சோகத்தைப் பத்தியெல் லாம் வருத்தப்பட்ட அண்ணனுக்கு எங்களோட சோகம் தெரியாமப் போயிடுச்சே... பத்து வருஷத்துக்கு முன்னால எங்க அம்மா செத்துப் போயிட்டாங்க. அப்பா ஒரு பழைய இரும்புக் கடையில வேலை பார்க்கிறவர்.
என்னோட கல்யாணத்துக்கு அப்புறம்தான் மூணு வேளையும் சாப்பிட முடிஞ்சுச்சு. வறுமையில பொறந்தவன் உலகத்தைப் பத்தியெல்லாம் ஏன் கவலைப்படணும்? என் முதல் பையனுக்கு மோனேஷ்னு பேரு வச்சோம். தமிழ்ல பேரு வைக்காததால அவனுக்குக் கோபம் வந்துடுச்சோ என்னவோ... கொஞ்ச நாள் எம் பையனோட பேசாம இருந்தான்.
அப்புறமா மனசு மாறி ரொம்பப் பாசமா இருப்பான். எம் பையன் பொறந்த நாளுக்கு யார்கிட்டயோ கடன் வாங்கி ஒரு தங்க செயின் பண்ணிப் போட்டான். பெரும்பாலும் எங்ககிட்ட சரியா பேச மாட்டான். ஆனா, பாசமா இருப்பான். போன மாசம்தான் முதல் தடவையா ஐயாயிரம் ரூபா சம்பளம் வாங்கி எங்கையில கொடுத் தான்.
அப்பதாங்க அவனோட முகத்தை பல நாளுக்கு அப்புறம் முழுசா நிமிர்ந்து பார்த்தேன். என்னோட பார்வை நிலைகுத்திப் போச்சே... எங்க அண்ணன் இல்லாமப் போச்சே...'' எனக் கதறி அழுதவரை 'நிறைமாசமா இருக்கிறப்ப அழக் கூடாதும்மா!' எனச் சொல்லித் தேற்றினார்கள் துக்கத்துக்கு வந்திருந்த உறவினர்கள்.
லேசாக ஆசுவாசமானவர் ''எங்க அண்ணன் மரந்தாளையில இருக்கிற துரைசாமி நாடார் பள்ளிக்கூடத்துல பத்தாவது படிக்கிறப்ப தங்கப் பதக்கம் வாங்கினான். அதனால அரசே அவனோட மேற்படிப்புக்கு உதவி செஞ்சது. ஆனா, கூடப் படிச்ச பசங்க, 'அரசாங்க பணத்துல படிக்கிற பய'ன்னு கிண்டல் பண்ணினதால பதினோராம் கிளாஸை பாதியிலேயே விட்டுட்டான். சாப்பாட்டுக்கு வழியில் லாட்டியும் வெளியே போயிட்டு வாரப்ப, கையில ஏதாச்சும் ஒரு புத்தகத்தோடதான் வருவான். அவனோட ரூம் முழுக்க அடுக்கி வச்சுருக்கிற புத்தகங்களை இனி யாருங்க படிக்கப் போறாங்க? என் வயித்துல கருத்தரிச் சுருக்கிற குழந்தை எங்க அண்ணனாத்தான் இருக்கும். எம்புள்ள படிக்கிற வரைக்கும் எங்க அண்ணனோட புத்தகங்கள் அப்படியேதான் இருக்கும்!'' என்றார் வெறித்த முகத்துடன்.
முத்துக்குமார் இறப்பதற்கு முன்பு கடைசியாகப் படித்த புத்தகம், எழுத்தாளர் இராசேந்திரசோழன் எழுதிய 'ஈழச் சிக்கல் தீர ஒரே வழி!'
- இரா.சரவணன்
விகடன்
Comments