திருமாவளவனுக்கும், காங்கிரஸுக்கும் ஏற்கெனவே ஏழாம் பொருத்தம்தான் என்ற நிலையில், இதில் இன்னொரு வில்லங்கமாக வந்து முளைத்திருக்கிறது ஒரு சி.டி! அது புலிகளை ஆதரித்து திருமா வெளியிட்டுள்ள `எகிறிப் பாய்' என்ற சி.டி.
கடந்த டிசம்பர் மாதம் 26-ம்தேதி விடுதலைச் சிறுத்தைகள் நடத்திய `தமிழீழ அங்கீகார மாநாட்டில் வெளியிடப்பட்ட குறுந்தகடு அது. இதற்காக திருமா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்வருக்கு மட்டுமல்ல, மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் உள்பட பலருக்கும் புகார் அனுப்பியிருக்கிறார் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநிலச் செயலாளரான பட்டுக்கோட்டை ராஜேந்திரன்.
அவரை நாம் சந்தித்தோம்.
``திருமாவளவனின் புலி ஆதரவு எல்லைமீறிப் போய்க்கொண்டே இருக்கிறது. `கடுமையான நடவடிக்கை எடுப்போம்!' என்று வைகோ, சீமானை எல்லாம் கைது செய்த முதல்வர், திருமாவிற்கு மட்டும் ஏன் விதிவிலக்கு வைத்திருக்கிறார் என்பது புரியவில்லை? முன்பு புலிகளுக்கு ஆதரவாக வெறும் பிரசாரம் மட்டுமே செய்து வந்த திருமா, இன்று சி.டி. போட்டு பிரசாரம் செய்ய யார் இடம் தந்தது? அதற்காக அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமா? வேண்டாமா? `எகிறிப்பாய்' என்ற அந்தக் குறுந்தகடை வாங்கி நானும் கேட்டேன். அதில், தொடக்கத்திலேயே மூன்று நிமிடங்கள் உரையாற்றுகிறார் திருமா.
`விடுதலையைக் கேட்டதற்கு சிங்களவன் இனப்படுகொலையைச் செய்கின்ற செய்தி கேட்டு- வீரமுள்ள மறத்தமிழா இன்னுமிங்கே விழிமூடிக்கிடக்கின்றாயே? நியாயம்தானா? இளம் தமிழா எழுந்து வாடா போருக்கு! -உன் இனப்பெருமையை எடுத்துச் சொல்லு பாருக்கு! நிரந்தரமாய் நாடு வேண்டும் யாருக்கு? நம் நேசமுள்ள தமிழர்களின் வாழ்வுக்கு!' என்று அதில் சீறுகிறார்.
இப்படிச் சொல்லி இலங்கையில் மட்டுமல்ல, இந்தியாவிலும் பிரிவினை வாதத்தை திருமா தூவுகிறார். நிரந்தரமாய் நாடு வேண்டும் என்கிறார். யாருக்கு என்றால் இலங்கையில் உள்ள தமிழனுக்கு. அங்கே தனிநாடு கேட்பது யார்? விடுதலைப் புலிகள்தானே? தடைசெய்யப்பட்ட அமைப்பான புலிகள் இயக்கத்திற்கு ஆதரவாக இப்படி இங்கே பிரசாரம் செய்தால் தமிழ்நாட்டில் அல்லவா அமைதி கெடும்? அது மட்டுமல்ல, அந்தக் குறுந்தகட்டில் வரும் முதல் பாடலே பிரபாகரனைப் போற்றிப் புகழ்ந்து பிரசாரம் செய்வதாக உள்ளது.
`பழந்தமிழன் வீரம் இன்னும் செத்துப் போகவில்லை! தமிழ்ப் பரம்பரைக்கே சரணாகதிப் பழக்கமென்றுமில்லை! பாருக்கதை உணர்த்துகிறான் தம்பி வேலுப்பிள்ளை! அவன் பக்கம் செல்லும் தகுதி நம்மில் யாருக்குமே இல்லை!' என உள்ளது அந்தப் பாடல். அதை எழுதியவர் திருமாதான். பாடியவர் புஷ்பவனம் குப்புசாமி. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் படுகொலைக்குக் காரணமான பிரபாகரனின் பின்னால் செல்லும் தகுதி இங்கே யாருக்கும் இல்லை என்று கூறி இங்குள்ள தமிழ் மண்ணின் தலைவர்களை, மைந்தர்களை கேவலப்படுத்துவதாக உள்ளது அந்தப் பாடல். அதே பாடலில்...
`தமிழனென்று சொல்லிக் கொள்ள வெட்கமாக இருக்கிறது. தலைநிமிர்ந்து நடப்பதற்கே கூச்சமாக இருக்கிறது. தமிழன் தலை ஈழத்திலோ ரத்தஆற்றில் மிதக்குது!- இந்தத் தமிழ்நாட்டு தறுதலைகள் திரையரங்கில் கிடக்குது!' என்ற வரிகளும் உள்ளன.
என்ன கொடுமை இது? `வெட்கமாக இருக்கிறது, கூச்சமாக இருக்கிறது' என்று எந்தத் தமிழனை இங்கே இவர் கூறுகிறார்? தமிழக முதல்வரையா? அல்லது காங்கிரஸ்காரர்களையா? அது மட்டுமல்ல, திரையரங்கில் கிடப்பவர்களெல்லாம் தறுதலைகளா? அவர்கள் தறுதலைகள் என்றால் சினிமாவில் நடிப்பவர்கள் யார்? திருமா இதையெல்லாம் விளக்க வேண்டும்.
புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த திலீபனுக்காகவும் திருமா அந்த சி.டி.யில் ஒரு பாடலை எழுதியிருக்கிறார். அதைப் பாடியிருப்பவர் உன்னிகிருஷ்ணன். தடை செய்யப்பட்ட ஓர் இயக்கத்திற்கு ஆதரவாக இப்படியெல்லாம் பிரசார பாடல் எழுதினால் என்ன அர்த்தம்? இந்திய அரசால் தடை செய்யப்பட்ட இயக்கம் புலிகள் இயக்கம். தமிழக அரசு அதை நடைமுறைப்படுத்துகிறதா என்ற கேள்விக்கு பதில் வேண்டும்.
அந்தத் தமிழீழ ஆதரவு மாநாட்டிலேயே பிரபாகரன் படம் போட்ட போஸ்டர், புத்தகங்களை எல்லாம் போலீஸ் பறிமுதல் செய்திருக்கிறது. ஆனால் இந்த `எகிறிப்பாய்' சி.டி.யை மட்டும் போலீஸ் எப்படி அனுமதித்தது என்பது தெரியவில்லை. சென்னை புத்தகக் காட்சியிலும் இது பரபரப்பாக விற்பனைக்கு வைக்கப்பட்டிருக்கிறது. இதுபற்றி கட்டாயம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பாடலை எழுதி வெளியிட்ட திருமா மீது நடவடிக்கை கோரி முதல்வர் கலைஞர், கவர்னர் மட்டுமின்றி மத்திய உள்துறை அமைச்சர், எங்கள் கட்சித் தலைவி அன்னை சோனியா, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் தங்கபாலு ஆகியோருக்கும் புகார் அனுப்பியிருக்கிறேன்'' என்று குமுறி முடித்தார் பட்டுக்கோட்டை ராஜேந்திரன்.
இந்த நிலையில், சென்னை புத்தகக் காட்சியில் பிரபாகரன் படம் போட்ட புத்தகங்களை விற்கிறார்கள் என்று கேள்விப்பட்டு, அந்த மாதிரி புத்தகங்களை விற்கக் கூடாது என்று கியூ பிராஞ்ச் போலீஸார் தடை போட்டிருக்கிறார்கள். சிறுத்தைகளின் புத்தகக் கடைக்குப் போய் இப்படிக் கூறியபோது, `முடியாது! நீதிமன்றத்தில் பார்த்துக் கொள்ளலாம்' என்று கூறியிருக்கிறார்கள் அவர்கள்.
இந்த சர்ச்சை பற்றி காங்கிரஸ் தரப்பில் நாம் விசாரித்தோம்.
``தி.மு.க.வுடன் கூட்டணி வேண்டாம் என்பதற்காக காங்கிரஸ் கட்சியில் ஒரு பெரிய டீம் காய் நகர்த்தி வருகிறது. இந்தப் போக்கை உன்னிப்பாகக் கவனித்து வரும் கலைஞரிடமும். அதற்கேற்ற கணிப்பு இருக்கிறது. இன்னும் ஒரு மாதத்திற்குள் இதன் முதல்அடி தெரிந்துவிடும். இதற்குமேல் இப்போதைக்கு வெளிப்படையாக நாங்கள் எதுவும் பேச முடியாது'' என்று கூறிச் சிரித்தனர் அவர்கள்.
சரி! இந்தக் குறுந்தகடு பற்றிய குற்றச்சாட்டுக்கு திருமாவளவனின் பதில் என்ன? கேட்டோம்.
``நெஞ்சில் நஞ்சையும், வஞ்சகத்தையும் சுமந்து கொண்டு தமிழின துரோகத்தோடு பிரபாகரனைக் காட்டிக் கொடுக்கத் துடிக்கும் இவர்கள் (காங்கிரஸார்) எல்லாம் ஒன்று சேர்ந்து இதே பிரபாகரனை பாராட்டிப் போற்றி ஆதரித்துப் பேசிய காலத்தில், 83-ம் ஆண்டில் நான் எழுதிய பாடல்கள்தான் அந்த `எகிறிப்பாய்' குறுந்தகடு.
இன்று அந்த காங்கிரஸ்காரர்கள் மாறிவிட்டார்கள். ஆனால், நான் மாறவில்லை. அந்தப் பாடல்களை இந்திய இறையாண்மைக்கு எதிராக நான் எழுதவில்லை. உலகத் தமிழர்கள் பத்தரைக் கோடிப் பேர் இருக்கிறார்கள். தேசிய இன அடிப்படையில் அவர்களுக்காக ஒரு நாடு வேண்டும் என்றுதான் குரல் கொடுத்திருக்கிறேன். அது ஒரு ஜனநாயகக் கோரிக்கையே தவிர குற்றமாகாது.
தமிழர்களுக்கென்று ஒரு நாடு வேண்டும் என்று குறிப்பிட்டிருக்கிறேனே தவிர, இவர்கள் கற்பனை செய்வதைப் போல இந்தியாவிலிருந்து தனித்தமிழ் நாடு வேண்டும் என்று கோரவில்லை. தமிழினத்தை வைத்து பதவி சுகத்தை அனுபவித்துக் கொண்டு தமிழினத்திற்கு எதிராகச் செயல்படும் இத்தகைய துரோகக் கும்பலை வைத்துக்கொண்டு தமிழ்நாட்டில் தனிநாடு கோரவும் முடியாது.
தமிழனுக்காகவே வாழ்ந்து தனித்தமிழ்நாடு கோரிய தமிழரசனை அடித்துக் கொன்ற மண் இந்த மண். இங்கே நாங்கள் தமிழ்ஈழம் வேண்டும் என்றுதான் சொல்கிறோமே தவிர, இந்தியாவுக்கு எதிராக எந்தக் கருத்தையும் பரப்பவில்லை.
காங்கிரஸ் கட்சியிலும் இனமானத் தமிழுணர்வுள்ள தமிழர்கள் ஏராளம் பேர் உள்ளனர். அதேபோல நாங்களும் அமரர் ராஜீவ்காந்தி, சோனியாகாந்தி ஆகியோரை மட்டுமின்றி உண்மையான காங்கிரஸாரை மதிக்கின்றோம். மாறாக,
சிங்களத் தூதர் அம்சாவின் எடுபிடிகளாக மாறி, அம்சா தருகிற கேளிக்கை விருந்துகளுக்கும், `பரிசு'களுக்கும் மயங்கிக்கிடக்கும் சில காங்கிரஸாரின் நிலையை ஏற்க முடியாது.
அப்படிப்பட்ட போலி காங்கிரஸார்தான் இப்படி சர்ச்சைகளைக் கிளப்புகிறார்கள்.
இவர்களுக்கு ராஜீவ் காந்தியை விட ராஜபக்ஷேதான் மானசீகத் தலைவர்.
ஆகவே, ராஜபக்ஷேவின் எடுபிடிகள் இப்படித்தான் பேசுவார்கள்'' என முடித்துக் கொண்டார் திருமா.
ஸீ
Comments