சிறிலங்காவின் தாக்குதலில் படுகாயமடைந்த நோயாளர்களுக்கான போக்குவரத்துக்களை ஒழுங்கு செய்ய ஐ.நா.வுக்கு பா.நடேசன் வேண்டுகோள்



சிறிலங்காவின் தாக்குதலில் படுகாயமடைந்த நோயாளர்களுக்கான போக்குவரத்துக்களை ஒழுங்கு செய்ய ஐ.நா. உள்ளிட்டஅனைத்துலக அமைப்புக்கள் உடனடியாக ஏற்பாடு செய்ய வேண்டும் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பில் பா.நடேசன் மேலும் கூறியுள்ளதாவது: சிறிலங்கா அரசாங்கம் அறிவித்திருக்கிற பாதுகாப்பு வலயங்களுக்கு ஐ.நா. மற்றும் இதர அனைத்துலக நிறுவனங்களின் பிரதிநிதிகள் உடனடியாக நேரில் சென்று பார்வையிட்டு அங்குள்ள மக்களின் கருத்துகளை சுயாதீனமாக கேட்டறிய வேண்டும்.

வவுனியாவுக்கு செல்லும் நோயாளிகளை தமிழீழ விடுதலைப் புலிகள் தடுத்து வைத்திருக்கவில்லை. வவுனியாவுக்கு வியாழக்கிழமை மட்டும் 200 நோயாளர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மருத்துவ போக்குவரத்து வசதிகள் இல்லாமையால் பல பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர். படுகாயமடைந்தவர்களுக்கான மருத்துவ தேவைகளுக்கான போக்குவரத்துக்களுக்கு அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் ஐ.நா. உள்ளிட்ட அனைத்து அனைத்துலக அமைப்புக்களும் ஏற்பாடு செய்ய வேண்டும்.

அனைத்துலக மற்றும் ஐ.நா. விதிகளின் படி படுகாயமடைந்த பொதுமக்களுக்கான சிகிச்சைகளுக்குரிய போக்குவரத்துக்களை அனுமதிக்காமல் சிறிலங்கா அரசு இருப்பது பாரிய மீறலாகும். தங்களது குடும்பத்தாருடன் இணைந்து கொள்ள விரும்புவோரையும் கூட சிறிலங்கா படைத்தரப்பு அனுமதிக்க மறுத்து வருகிறது. மோதல் பகுதியிலிருந்து வெளியேற விரும்புவது தனிநபரின் உரிமை என்பதில் நாம் உறுதியாக உள்ளோம்.

எந்த ஒரு தனிநபருக்கு எதிராகவும் எந்த தடையும் விதிக்கவில்லை. அனைத்துலக சமூகத்தினர் இதனையும் பொதுமக்களின் உரிமையையும் புரிந்துகொள்ள வேண்டும். சிறிலங்கா படையினரின் இனப்படுகொலை கரங்களில் சிக்கிக் கொள்ள விரும்பாத தமிழ் மக்களை தமிழீழ விடுதலைப் புலிகள் பாதுகாப்பார்கள். பொதுமக்களை படுகொலை செய்யும் நடவடிக்கைகள் தொடர்பாக சர்வதேச சமூகத்தின் செயல்பாடுகள் குறித்து மக்கள் அதிருப்தியடைந்துள்ளனர் என்று பா. நடேசன் தெரிவித்துள்ளார்.


Comments