இலங்கை தமிழ் மக்களுக்கு மலேசிய அரசு ஆதரவு வழங்க கோரிக்கை

இலங்கையில் கடந்த கால் நூற்றாண்டுகு்குமு் மேலாக நடைபெற்று வரும் போரினால் சீரழிந்து கொண்டிருக்கும் இலங்கை தமிழ் மக்களுக்கு எவ்வாறு உதவுவது மற்றும் மலேசிய அரசாங்கத்தின் ஆதரவை எவ்வாறு பெறுவது தொடர்பான கலந்துரையாடல் மலேசியாவின் தலைநகரான கோலாலம்பூரில் நேற்று நடைபெற்றது.

"உலக அமைதி முனைவகம்" என்ற அரச சார்பற்ற அமைப்பின் ஏற்பாட்டில், "மனித உரிமைகள் அத்துமீறல்" எனும் தலைப்பில் கலந்துரையாடலும் ஊடகவியலாளர் சந்திப்பும் கோலாலம்பூர் ரோயல் சிலாங்கூர் கிளப்பில் நேற்று திங்கட்கிழமை (19.01.09) இடம்பெற்றது.

இக்கலந்துரையாடலில் வழக்குரைஞர் சி.பசுபதி, வழக்குரைஞர் கா.ஆறுமுகம், டெக் அவுட்ரீச் என்ற அரச சார்பற்ற அமைப்பின் தலைவர் முனைவர் செல்வமலர் ஜயாதுரை, நாடாளுமன்ற உறுப்பினர்கள் சார்ல்ஸ் சந்தியாகு, தியான் சுவா மற்றும் கோத்தா டாமன்சாரா சட்டமன்ற உறுப்பினர் டொடக்டர் முகமட் நசீர் ஹசிம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

1948 ஆம் ஆண்டில் இருந்து இலங்கையில் உருவான இனப் பிரச்சினைகள் மற்றும் சிங்கள அரசியல்வாதிகள் தமிழ் மக்களின் உரிமைகளைப் பறிக்க எடுத்துக்கொண்ட நடவடிக்கைகள் தொடர்பான விவரங்களை சுருக்கமாக சி.பசுபதி விளக்கினார்.

மேலும் அவர் விளக்குகையில்,

"பாஸ்தீனர்களைப் போல் இலங்கைத் தமிழர்களும் கொலை செய்யப்பட்டு வருகின்றனர். அவர்களை அழிவில் இருந்து காப்பாற்ற வேண்டும்; அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்வதற்கு அரசாங்கத்தின் ஒத்துழைப்பு மிக அவசியமாகத் தேவைப்படுகிறது" என வலியுத்தினார்.

"போரால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு, அவர்கள் யாராக இருந்தாலும், தேவையானவற்றை இயன்ற வரையில் அளிப்பது அவசியம்" என்பதை வலியுறுத்திய முனைவர் செல்வமலர், இலங்கைத் தமிழர்களுக்கான மூன்று முக்கிய தேவைகளை வலியுறுத்தினார்.

"மருத்து உதவி, குடிநீர் மற்றும் உணவுப் பொருட்கள் ஆகிய மூன்றும் தவித்து நிற்கும் மக்களுக்கு உடனடியாகத் தேவைப்படுகிறது. இவை மக்களுக்குச் சென்றடைய போர் நிறுத்தம், நிரந்தரமாக இல்லாவிட்டாலும், குறைந்தது ஒரு வாரத்திற்காகவாவது, நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். மலேசிய அரசாங்கம் இவற்றைச் செய்வதற்கான வசதிகளை ஏற்படுத்தித்தர வேண்டும்" என்றும் செல்வமலர் கூறினார்.

இந்த உதவிகளை அளிப்பதற்கு அரசாங்க உதவி ஏன் தேவைப்படுகிறது? அரச சார்பற்ற அமைப்புகள் அவற்றை செய்ய முடியாதா? என்று வினவப்பட்டது.

"அரச சார்பற்ற அமைப்புக்களால் இதனைச் செய்ய முடியாது. ஏனெனில், துறைமுகத்தில் இருந்து, வானூர்தி நிலையத்தில் இருந்து, செல்கின்ற சாலைகளில் எல்லாம் தடைகள் இருக்கின்றன. பொருட்கள் அபகரிக்கப்படுகின்றன. பொருட்கள் மக்களைச் சென்றடையாது" என்று ஆழிப்பேரலையின் போது அவர் பெற்ற அனுபவத்தை விளக்கி கூறினார் பசுபதி.

பாலஸ்தீன மக்களின் போரட்டத்தில் நேரடி அனுபவமுள்ள சார்ல்ஸ் சந்தியாகு பாலஸ்தீன மற்றும் இலங்கைத் தமிழ் மக்கள் முறையே இஸ்ரேல் மற்றும் சிறிலங்கா அரசாங்கங்களுடன் கடந்த ஐம்பது ஆண்டுகளாக நடத்தி வரும் போரின் பின்னணியை ஒப்பிட்டு விளக்கமளித்தார்.

இந்த இரு நாட்டு அரசாங்கங்களும் பாலஸ்தீன மற்றும் தமிழ் மக்களுக்கு எதிராக தடுப்புக்களை ஏற்படுத்தி அம்மக்கள் முற்றுகையிடப்பட்ட சூழ்நிலையில் வைக்கப்பட்டுள்ளனர் என்பதை புரிந்து கொள்ள வேண்டிய அவசியத்தை அவர் விளக்கினார்.

உணவு, உதவி, வீடு, நடமாட்டம் மற்றும் இதரத் தேவைகளைப் பெறுவதற்கு இம்மக்கள் தங்களை ஆக்கிரமித்துள்ள அரசுகளிடம் இருந்து அனுமதி பெற வேண்டிய கட்டாயத்தில் வைக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர் கூறினார்.

இன்னொரு முக்கியமான கருத்தையும் அவர் வெளியிட்டார்.

தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கிறது இஸ்ரேலிலும், இலங்கையிலும். போட்டியிடப் போகிறவர்களுக்கு இஸ்ரேலின் பாதுகாப்பும், இலங்கையின் இறையாண்மையும் தேர்தல் ஆயுதங்களாக்கப்பட்டுள்ளன. இவர்கள் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு பாலஸ்தீன மக்களும், தமிழ் மக்களும் கொல்லப்பட வேண்டும். அதுதான் இந்த இரு நாடுகளிலும் நடந்து கொண்டிருக்கின்றன.

பாலஸ்தீன மற்றும் இலங்கைத் தமிழர்களுக்கு எதிராக நடத்தப்படும் அட்டூழியங்களுக்குப் பின்னால் இருக்கும் சக்திகளையும் அவர் கடுமையாக விமர்சித்தார்.

"போரால் பாதிக்கப்பட்டுள்ள பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவு காட்டும் மலேசிய அரசாங்கத்தின் கொள்கை, அதன் உள்நோக்கம் எதுவாக இருந்தாலும், சரியானதே. அக்கொள்கையை நாம் ஆதரிக்கிறோம்", என்றார் அவர்.

"அதேவேளையில், போரால் சீரழிந்து கொண்டிருக்கும் இலங்கைத் தமிழர்களுக்கும், ஆபிரிக்க நாடுகளில் அவதிப்படும் மக்களுக்கும் ஆதரவு வழங்க வேண்டும்" என்றும் அவர் வலியுறுத்தினார்.

மேலும், இஸ்ரேலை போர்க் குற்றவாளியாக விசாரிக்கப்பட வேண்டும் என்ற மலேசியாவின் கோரிக்கையில் சிறிலங்காவையும் சேர்த்துக்கொள்ள வேண்டும். இதற்கு மலேசியா, ஆசியான் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் ஆதரவைப் பெற வேண்டும் என்று சந்தியாகு ஆலோசனை கூறினார்.

நவீன ஆயுதங்களைக்கொண்டு பாலஸ்தீனர்கள் தாக்கப்படுகின்றனர். அங்கு நடப்பது படுகொலை. இலங்கையில் நடப்பதும் அதுதான் என்று கோத்த டாமன்சாரா சட்டமன்ற உறுப்பினரும் மலேசிய சோசலிசக் கட்சியின் தலைவருமான டாக்டர் முகமட் நசீர் ஹசிம் கூறினார்.

இலங்கைத் தமிழர்கள் தனிநாடு கோருகின்றனர். சில அறிவாளிகளுக்கு அப்பாவி மக்களைக் கொல்வதில் பிரச்சினை ஒன்றுமில்லை. தேர்தல் வரவிருப்பதால் குழந்தைகளையும், பெண்களையும் முதியவர்களையும் கொன்று அவர்களின் வீரத்தைக் காட்ட முனைகின்றனர். கொலை செய்யப்பட்டு குவிக்கப்பட்டிருக்கும் பிணங்கள் மக்களுக்கு அதிர்ச்சியை அளிக்கிறது. இலங்கை தொடர்பாக அதிகமான செய்திகள் கிடைப்பதில்லை என நசிர் கூறினார்.

இனப் போராட்டம் உலகில் பல பாகங்களில் நடந்து கொண்டிருக்கின்றன. இவற்றுக்கும் மதத்திற்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. புத்த மதம் அன்பையும் அமைதியையும் போதிக்கிறது. ஆனால், மியன்மாரிலும் சிறிலங்காவிலும் நடந்து கொண்டிருப்பது இரத்த வெறிப் போராட்டம் என்று நாடாளுமன்ற உறுப்பினர் தியான் சுவா கூறினார்.

"நமது போராட்டம் சிறிலங்கா, மியன்மார், பாலஸ்தீனம் ஆகிய நாடுகளில் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் நலன் குறித்தது. ஆனால், அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் கூட்டங்கள் அனுமதிக்கப்படுவதில்லை" என்று அவர் சுட்டிக்காட்டினார்.

பாலஸ்தீனம் மற்றும் இலங்கையில் போராட்டங்கள் பல ஆண்டுகளாக நடந்து கொண்டிருக்கின்றன. ஆனால், யூகோஸ்லாவில் தோன்றிய பிரச்சினைக்கு வெகுவிரைவில் தீர்வு காணப்பட்டது. சரியோ தவறோ, நாடு பிரிக்கப்பட்டு இரத்தம் சிந்துதல் நிறுத்தப்பட்டது என்பதை விளக்கிய தியான் சுவா, பாலஸ்தீனத்திலும் இலங்கையிலும் ஏன் எதுவும் நடவாமல் போர் இழுத்துக்கொண்டே போகிறது? போரை நிறுத்துவதற்கு மற்றும் போர்க் குற்றவாளிகளைத் தண்டிப்பதற்கு திட்டவட்டமான செயல்திட்டம் ஏதும் இல்லை என்று அவர் கூறினார்.

இந்த இரு நாடுகளில் நடக்கும் இனப் போரால் பலர் பயனடைகிறார்கள். மலேசியாவும் இதர ஆசிய நாடுகளும் இப்பிரச்சினையில் தீவிரமாக ஈடுபாடு காட்ட வேண்டும்.

"நாம் இப்போது இலங்கை தமிழ் மக்களுக்காக கேட்பதெல்லாம் ஒரு மிக முக்கியமான காரணம் தமிழ் மக்கள் கொல்லப்படுவது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்பதுதான்", என்றார் அவர்.

"இலங்கையில் நீண்டகாலமாக நடந்து கொண்டிருக்கும் போர் குறித்து மலேசிய மக்களுக்கு உண்மையான நிலவரத்தை தெரியப்படுத்த வேண்டும். எதிரணியில் இருக்கும் நாங்கள் மலேசிய அரசாங்கத்திற்கு தொடர்ந்து நெருக்குதல் கொடுப்போம்" என்று சுவா உறுதியளித்தார்.

பல்லின தலைவர்களின் இலங்கை இனப்படுகொலை குறித்த கலந்துரையாடல்களோடு நிகழ்வு நிறைவு பெற்றது.



Comments