தென் இந்திய தமிழர்கள், இலங்கை சகோதரர்களுடன் உறவை உறுதி செய்கின்றனர் - பிராஞ்சின் பிரபல ஊடகம் தெரிவிப்பு


பிரான்சின் பிரபல செய்தி இதழான 'லூ மோண்'டில் வெளியாகிய கட்டுரையின் தமிழ் வடிவம் இது. திரு.தொல் திருமாவளவன் அவர்கள் உண்ணாவிரதம் மேற்கொண்டபோது அங்கு நின்றிருந்த 'லூ மோண்ட்' ஊடகவியலாளர் 'பெடறிக் பொபின்' எழுதிய தமிழகத்திற்கும் ஈழத்தமிழர்களுக்கும் இடையிலான உறவையும் இந்திய மத்திய அரசின் நிலையையும் விளக்கும் கட்டுரை இது.

தமிழீழ விடுதலைப் புலிகள் சந்தித்த தோல்விகள் தமிழ்நாட்டு மக்களைப் பதற்றமடையச் செய்துள்ளது. இவர்கள் தீவின் சிறுபான்மையினருடன் உணர்வு பூர்வமாக இணைந்துள்ளனர்.

தொல் திருமாவளவன் இன்றைய நட்சத்திரம். களைத்துப் போன நட்சத்திரம். அவர் பாதி கண்ணை மூடிய நிலையில் அமர்ந்திருக்கும் மேடையைச் சுற்றி மக்கள் கூட்டம் அலை மோதுகிறது.ஒரு மருத்துவர் அவரது கையில் நாடித்துடிப்பை அளவிடும் கருவியால் அவரது நாடித்துடிப்பை அளவிட்டபோது மக்கள் கவலையுடனும், படபடப்புடனும் கவலைப்படுகின்றனர்.

இரண்டு நாட்களுக்கு முன் தொல் திருமாவளவன் அவரது உண்ணாவிரதத்தை ஆரம்பித்தார். சென்னைப் புறநகரில் ஆரம்பித்த இந்த விரதம் உள்ளூர் அரசியல்வாதிகளிடையே பதைபதைப்பை உருவாக்கி உள்ளது.

தொல் திருமாவளவன் மக்கள் ஆதரவு பெற்ற ஒரு கிளர்ச்சியாளர். அதாவது உண்ணாவிரதத்துக்கு மக்களிடையே நல்ல ஆதரவு காணப்படுகிறது. விடுதலை சிறுத்தைகளின் தலைவர் ஆன இவர், தாழ்த்தப்பட்ட மக்களின் நலன்களைப் பாதுகாக்கும் இவர், இலங்கைத் தமிழர்களின் தீவிரமான பாதுகாவலர்.ஈழத்தமிழரின் பாதுகாப்பு என்பது தமிழ் நாட்டு மக்களுக்கு உயிர் மூச்சு போன்றது.

களைப்புற்று இருந்த போதிலும் இச் சிறந்த பேச்சாளர் எழுந்து ஒலி வாங்கியை நெருங்குகிறார். சிறுத்தை பொம்மை ஒன்று அவரது காலருகே தெரிகிறது.அவரது ஆதரவாளர்களிடம் தொல் திருமாவளவன் பேசினார்,

ஈழத் தமிழ் மக்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளுக்கு எதிராக உண்ணா விரதம் இருக்கிறேன். எனது உயிரையும் அவர்களுக்கு அளிக்க நான் தயார்.பல மாதங்களாக, இந்திய நாட்டின் தென்கோடி மாநிலமான தமிழ்நாடு இலங்கையில் நிலவும் அரசியல் - இராணுவ நிலைமை குறித்து மிகவும் கோபமாக இருக்கிறது.

இரு பக்கத்து மக்களும் மிகவும் நெருக்கமானவர்கள். 30 கிலோ மீற்றர் தூரமே உள்ள பாக்குநீரிணை இரு மக்களையும் பூகோள ரீதியாக பிரிக்கின்றது. இரு மக்களையும் மொழி இணைக்கின்றது.

தமிழ் நாட்டின் 6 கோடி தமிழர்களும் இலங்கையில் வாழும் 30 இலட்சம் தமிழர்களிடம் உணர்வுபூர்வமான தொடர்பு கொண்டுள்ளனர். பின்னவர்கள் 1983 முதல் தொடங்கிய தீவின் வடக்கு - கிழக்கு பகுதிகளுக்கான சுதந்திரப்போருக்கு முன்னவர்கள் ஆதரவு அளிக்கின்றனர்.


இப்படிப்பட்ட சூழ்நிலையில் கடந்த காலங்களில் இலங்கையில் இராணுவம் தமிழீழ விடுதலைப் புலிகள் மீது பெற்ற சில வெற்றிகள் தமிழ்நாட்டைக் கலங்க வைத்துள்ளன. சிறிலங்கா இராணுவம் இலங்கைத் தமிழர் மீது நடத்தும் படுகொலைகளை, இனப்படுகொலைகளை தமிழ் நாட்டுத் தமிழர்கள் கடுமையாகக் கண்டிக்கின்றனர்.

தொல்.திருமாவளவனின் உண்ணாவிரதத்திற்கு முன்பே, 60 கிலோ மீற்றர் தூரங்கொண்ட மனிதச் சங்கிலிப் போராட்டமும், சென்னையில் அமைந்துள்ள சிறிலங்காத் துணைத் தூதுவர் அலுவலகத்தின் மீது கல் எறிந்த நிகழ்வும் இடம்பெற்றுள்ளன. வழக்கமாகச் சண்டை போட்டுக்கொள்ளும் தமிழக அரசியல் கட்சிகள் ஒரு முகமாக நின்று நவம்பர் 2008ல் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றின.

அத்தீர்மானம் டில்லி மத்திய அரசு உடனே தலையிட்டு ஒரு போர் நிறுத்தத்தை கொண்டுவரவேண்டும் என்று கோரியது. சிறிலங்கா அரசிடம் கடுமையான முறையில் டில்லி நடந்துகொள்ளா விட்டால் டில்லியில் ஆட்சி நடத்தும் கொங்கிரஸ் கட்சியிடம் தமிழ் நாட்டில் ஆட்சி புரியும் தி.மு.க. டில்லி கூட்டாட்சியில் இருந்து விலகப் போவதாக மிரட்டியது. டில்லி தூதர்களை கொழும்புக்கு அனுப்பியது. அவர்கள் தமிழ் மக்களைக் கொடுமைப்படுத்த வேண்டாம் என்று கேட்டக் கொண்டனர் - வேறு எதுவும் கேட்கவில்லை.

இந்திய அரசு தொடர்ந்து சிறிலங்காவிற்கு ஆயுதங்களை அனுப்புகிறது. 1991 இல் இடம்பெற்ற ராஜிவ் காந்தி கொலையைத் தொடர்ந்து தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளது.

"கொங்கிரஸ் கட்சி புலிகள் மீது வஞ்சம் தீர்த்தக் கொள்கிறது. சிறிலங்கா இராணுவம் மூலம் இந்தியாதான் இப்போரை நடத்துகின்றது." என்று வருந்துகின்றார் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாளரும், இன்று சென்னையில் வாழும் சிறிலங்கா நாடாளுமன்ற உறுப்பினருமான சிவாஜிலிங்கம்.

சாதாரண வஞ்சத்துக்கும் மேலே, இந்திய அரசு, பாக்குநீரிணையைத் தாண்டாக்கூடிய தமிழ் தேசியத்துக்கு எதிராக டில்லி கடுமையான கருத்துக்கொண்டுள்ளது.

தென் இந்தியாவில், தமிழ் தேசியத்துக்கு நீண்ட சரித்திரம் உண்டு. இந்த தேசியம், திராவிட அடையாளம் கொண்ட இந்தியத் தமிழர்களை வடக்கில் இருந்து வந்த பிராமணர்கள் சுரண்டுவதை எதிர்க்கிறது.

"தமிழ் தேசியம், இலங்கைத் தீவின் ஒற்றுமைக்கு மட்டும் ஆபத்து அல்ல, இந்திய ஒற்றுமைக்கும் ஆபத்தானது" என்கிறார் பகவான் சிங் - Deccan Chronicle செய்தியாளர்.

இலங்கையில் ஒரு தமிழ் அரசு, இந்தியத் தமிழ் நாட்டையும் கேட்கலாம் என்கிறார் அவர்.

தமிழ்நாட்டின் கோபத்தைத் தணிக்க டில்லி அரசு சில நடவடிக்கைகள் எடுக்கும். அதற்கு மேல் ஒன்றும் செய்யாது. ஆனால், அதே சமயம் இந்திய அரசு மிகவும் அலட்சியமாக நடந்துகொண்டால், தமிழ்நாட்டில் தமிழ்த் தேசியம் தீவிரம் அடையும்.

Frédéric BOBIN
LE Monde
வெள்ளி 23.01.2009 (7ம் பக்கம்)



Comments