ஈழத் தமிழர் இனப்படுகொலையைக் கண்டித்தும் உடனடிப் போர் நிறுத்தம் அங்கு வேண்டுமென்றும் தமிழகத்தின் அரசியல் கட்சிகளும் தமிழ் அமைப்புகளும் குரல் எழுப்பிவரும் நிலையில் தமிழ்நாட்டில் மட்டுமன்றி தலைநகர் டில்லியிலும் அரசியல் கட்சிகளைப் பின்தள்ளி கல்லூரி மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்ட "ஆயுதத்தை' கையிலெடுத்துள்ளனர். கண்டனக் கூட்டம், உண்ணாவிரதப் போராட்டங்களில் கல்லூரி, பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றிணைந்து பல்வேறு கட்டங்களாக எதிர்ப்புகள் தெரிவித்து இந்திய அரசின் கவனத்தை ஈர்த்து வருகிறார்கள். இதே மாதிரி தமிழகத்தின் எல்லா மாவட்டங்களிலும் நேற்றுமுன்தினம் வரை மூன்றாவது நாளாகத் தொடரும் கல்லூரி, பல்கலைக்கழக மாணவர்களின் ஆர்ப்பாட்டத்தில் முதல் தடவையாக பாடசாலை மாணவர்களும் பெரும் எண்ணிக்கையில் சேர்ந்துகொண்டுள்ளனர்.
ஆர்ப்பாட்டம், சாலைமறியல், வகுப்புகள் பகிஷ்கரிப்பு என்று தொடரும் இவர்களது அடுத்த கட்டப் போராட்டம், சாகும்வரை உண்ணாவிரதமாக எழுச்சிபெறவிருக்கிறது!
அனைத்துக் கல்லூரி மாணவர் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் கே.வெங்கடாசலம் விடுத்த அறிக்கையில், இப்போராட்டத்தில் மருத்துவம், பொறியியல் கல்லூரி மாணவர்களும் குதிப்பார்கள் என்றும் அனைத்துக் கல்லூரி மாணவர் பிரதிநிதிகளை சென்னைக்கு அழைத்து, சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தத் திட்டமிட்டுள்ளோம் என்று தெரிவித்துள்ளார். இதற்கிடையே, செங்கல்பட்டு சட்டக்கல்லூரி மாணவர்கள் பதினான்கு பேர் சாகும்வரை உண்ணாவிரதத்தை நேற்றுமுன்தினமே ஆரம்பித்து விட்டனர்.
அனைத்திந்திய மாணவர் பெருமன்ற மாநில செயலாளர் இரா.திருமலை "தினக்குரலு'க்குத் தெரிவிக்கையில்; பாடசாலை மாணவர்களும் பெரும் எண்ணிக்கையில் அணிதிரண்டு வந்திருப்பது உற்சாகம் அளிக்கிறது என்றும் இருபத்து ஐந்து வருட இடைவெளிக்குப் பின்னர் ஈழத் தமிழர் பிரச்சினையில் இப்படியொரு பேரெழுச்சி ஏற்பட்டுள்ளதென்றும் திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக மாணவர்கள் கடந்த வெள்ளிக்கிழமை உண்ணாநோன்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர், அடுத்தடுத்த நாட்களில் பெருமளவில் போராட்டங்கள் வெடிக்கும் என்றும் கூறினார்.
தமிழகத்தில் நாளை முதல் மீண்டும் தொடரும் மாணவர்கள் போராட்டம், வன்முறைகள் இன்றி மிகுந்த கட்டுப்பாட்டுடன் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.
பாடசாலை மாணவர், கல்லூரி மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் ஒருங்கிணைந்து நடத்தும் இப்போராட்டம், மாநிலம் தழுவிய பேரணி, சென்னை கோட்டை நோக்கிய ஊர்வலம், சாலை மறியல், சென்னையிலுள்ள இலங்கைத் துணைத் தூதரகத்துக்குள் நுழையும் போராட்டம் என்று பலவடிவங்களில் தீவிரப்படுத்தப்படவிருக்கின்றன.
இதே நேரத்தில், இந்திய மத்திய அரசுக்கு இறுதி எச்சரிக்கையை தமிழக சட்ட மன்றம் மூலமாக விடுத்து, "இலங்கையில் நாளையே தமிழ் ஈழம் மலரும் என்று உறுதி கிடைக்குமேயானால் ஆட்சியை இழக்கவும் தயார்' என்று முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி தமிழக சட்டப் பேரவையில் தெரிவித்த கருத்து அரசியல் கட்சிகளுக்கிடையே பலதரப்பட்ட அபிப்பிராயங்களை ஏற்படுத்தியுள்ளன.
இலங்கைத் தமிழர் பிரச்சினையில் அரசியல் தீர்வு ஏற்படவேண்டுமென்று அனைத்துக் கட்சி சார்பில் மத்திய அரசுக்கு ஏற்கனவே கோரிக்கை விடுக்கப்பட்டது என்றும் மீண்டும் மத்திய அரசுக்கு இறுதி வேண்டுகோளாக தீர்மானம் கொண்டு வருவது தமிழக அரசு நடத்தும் நாடகம் என்றும் அ.தி.மு.க., ம.தி.மு.கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன. பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் ஜி.கே.மணி இன்றைய தீர்மானமே இறுதித் தீர்மானமாக இருக்க வேண்டும். உலகெங்கும் பத்து லட்சம் தமிழர்கள் அகதிகளாக உள்ளனர். ஆட்சியை வைத்து எதுவும் செய முடியாதபோது, ஆட்சியைப் பலிகொடுத்து ஒரு வரலாற்றைப் படைக்க ஏன் முயலக் கூடாது' என்று கேள்வி எழுப்பினார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா, ""முல்லைத்தீவில் உள்ள அனைவரும் கொல்லப்படுவதற்கு முன்னர், காலம் தாழ்த்தாது மத்திய அரசு உடனடி போர் நிறுத்தம் ஏற்பட வலியுறுத்த வேண்டும். இல்லையென்றால், இந்திய பாராளுமன்றத்துக்கு உள்ளேயும், வெளியேயும் போராட்டம் தொடரும்' என்று எச்சரித்துள்ளார். விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன், ""இலங்கைத் தமிழர்களைக் காப்பாற்ற ஒரு இறுதிப் போரை நடத்தவேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது' என்று சூளுரைத்தார். பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ்; மத்திய அரசுக்கு முதல்வர் கருணாநிதி கெடுவிதிக்காதது ஏமாற்றம் அளிக்கிறது. தமிழக அரசு உடனடி முடிவெடுக்க வேண்டும் என்றார்.
இலங்கையில் போர் நிறுத்தத்தை வலியுறுத்தி இம்மாதம் 15 ஆம் திகதி தொல். திருமாவளவன் நான்கு நாள் உண்ணா விரதமிருந்தார். டில்லியில் மாணவர்கள் நேற்று உண்ணாவிரதமிருந்தனர். ம.தி.மு.க.வைகோ, அடுத்த மாதம் இந்திய பாராளுமன்றம் கூடும் 12 ஆம் திகதி பாராளுமன்றம் முன்பாக உண்ணாவிரதம் இருக்கிறார். அரசியல் கட்சிகளின் செயல்பாடுகள் விட்டு, விட்டுக் கொந்தளித்தாலும், மாணவர்களின் போராட்டம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்துவதாகவே உள்ளது.
தமிழகத்திலிருந்து கே.ஜி.மகாதேவா
Comments