தமிழகத்தின் ஈரோடு மாவட்டத்தில் நடைபெற்ற அக்கட்சியின் நிகழ்வில் வைகோ உரையாற்றிய போது மேலும் தெரிவித்துள்ளதாவது:
இலங்கையில் அப்பாவி தமிழர்கள் ஈவு இரக்கமின்றி கொலை செய்யப்படுகின்றனர். நான்கு ஆண்டுகளாக சிறிலங்கா அரசாங்கத்துக்கு இந்திய அரசாங்கம் அனைத்து வகையிலும் உதவி செய்து வருகிறது. அதனால் தான் இந்த அளவு பாதிப்பு இலங்கை தமிழர்களுக்கு ஏற்பட்டுள்ளது.
ஆனால், விடுதலைப் புலிகளை வெல்ல முடியாது. மத்திய அரசின் கூட்டணியில் இருக்கும் எந்த கட்சிகளும் இலங்கை தமிழர் விரோத போக்கை கண்டுகொள்ளவில்லை.
ஹிட்லர் ஆட்சியில் கூட நடக்காத கொடுமை இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நடத்தப்படுகிறது. இதைத்தான் சினிமா இயக்குநர் சீமான், கொளத்தூர் மணி, மணியரசன் ஆகியோர் பேசினார்கள்.
இதில் என்ன தவறு உள்ளது? போபர்ஸ் பீரங்கி ஊழல் பிரச்சினையில் இருந்து விடுபட ராஜீவ் காந்தி சிறிலங்கா இராணுவத்தை அனுப்பினார். இராணுவம் தமிழர்களுக்கு எதிராக செயற்பட்டது. இதை சீமான் பேசியதில் என்ன தவறு உள்ளது?
தற்போது இராணுவ உதவி மட்டுமின்றி இந்திய அரசு உளவு அமைப்பான 'றோ' மூலம் சிறிலங்கா இராணுவத்துக்கு உதவி செய்து வருகிறது. இந்திய அரசு கொடுத்த பணத்தில் இருந்து ஆயுதம் வாங்கி சிறிலங்கா அரசாங்கம் நம் இனத்துக்கு எதிராக பயன்படுத்துகிறது.
உண்மையில் விடுதலைப்புலிகள் முல்லைத்தீவில் உள்ள ஆறு லட்சம் தமிழர்களுக்கு அரணாக உள்ளனர். அவர்களை வீழ்த்த முடியாது. ராஜபக்ச கூட்டத்துக்கு சமாதி கட்டும் நாள்தான் தமிழர்கள் சாப்பிட்ட சாப்பாடு செரிக்கும் நாளாகும். இனப்படுகொலையை இந்திய அரசு கண்டு கொள்ளாமல் உள்ளது.
ஆனால், வாஜ்பாய் அரசு ஒரு நாளும் இலங்கை தமிழர்களுக்கு எதிராக செயற்பட்டதில்லை. தற்போது மத்திய அரசு எதிரான நிலைபாட்டை எடுத்துள்ளது என்றார் அவர்.
Comments