வன்னியிலும், கிழக்கு மாகாணத்திலும் அப்பாவித் தமிழ்மக்கள் எதிர்நோக்குகின்ற பேரவலங்களை நேரில் சென்று பார்வையிடுவதற்காக சர்வதேச சமூகம் உடனடியாக சுயாதீனக் குழு ஒன்றை அப்பகுதிகளுக்கு அனுப்புவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா. சம்பந்தன் நாடாளுமன்றத்தில் கோரிக்கை எழுப்பியிருக்கின்றார்.இது அவரதும், அவரது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினதும் கருத்து நிலைப்பாடு மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த ஈழத் தமிழினத்தின் கருத்தாகவும், நிலைப்பாடாகவும் கூட கொள்ளத்தக்கது.
ஆனாலும், ‘ஆசாரி இடங்கொடுத்தாலும் பூசாரி இடங்கொடுப்பாரா?' என்ற மாதிரி, சர்வதேச சமூகம் தனது பிரதிநிதிகள் குழுவை இவ்விடயத்தைக் கவனிப்பதற்காக அனுப்பி உதவ முன்வந்தாலும் கூட, இலங்கை அரசு அதற்கு அனுமதிக்குமா என்பதே முக்கிய கேள்வியாகும்.மனிதப் பேரவலத்துக்குள் சிக்கி, சொல்லொணாத் துன்ப, துயரங்களையும், பேரழிவுகளையும், நாசங்களையும் சந்தித்துத் துவண்டு கிடக்கும் ஈழத் தமிழர்களுக்கு குறைந்த பட்சம் மனிதாபிமான உதவிகளையாவது நேரில் சென்று விரைந்து வழங்க ஐ.நா.முகவர் அமைப்புகளும், முக்கிய - அரச சார்பற்ற - சர்வதேச தொண்டு நிறுவனங்களும் தயாராகவே உள்ளன.
அதேபோல, தேவைப்பட்டால் நிலைமைகளை நேரில் கண்டறிந்து வருவதற்காகத் தனது பிரதிநிதிகள் குழுவை இலங்கைக்கு அனுப்புவதற்கும் சர்வதேசம் பின்நிற்காது என்பது உறுதி.ஆனால் அதற்கான அனுமதியை இலங்கை அரசு வழங்குவது துர்லபம் என்பதால், இலங்கை அரசு தமிழர் தாயகம் மீது தொடுத்திருக்கும் கொடூர யுத்தத்தினால் அப்பாவித் தமிழ் மக்களுக்கு ஏற்பட்டிருக்கும் மிக மோசமான பாதிப்புகளை சர்வதேசத்தின் சுயாதீனக் குழு ஒன்று நேரில் கண்டறிவது என்பது சாத்தியமற்றதாகவே இருக்கும் எனக் கருதப்படுகின்றது.
தமிழர் தாயகப் பகுதி மீதான தனது இராணுவக் கெடுபிடி நெருக்குவாரத்தைத் தீவிரப்படுத்த முன்னர் இலங்கை அரசு எடுத்த முதல் நடவடிக்கை அந்தப் பிரதேசத்தில் நிலைகொண்டு பணியாற்றி வந்த ஐ.நா. முகவர் அமைப்புகளையும், சர்வதேச மற்றும் உள்ளூர் தொண்டர் அமைப்புகளையும் அவற்றின் பிரதிநிதிகளையும் அங்கிருந்து வெளியேற்றியதுதான். தான் அப்பிரதேசம் மீது தொடுக்கப்போகும் ஈவிரக்கமற்ற கொடூர யுத்தத்தால் அங்கு உருவாகக் கூடிய மனிதப் பேரவலம் பற்றிய உண்மை நிலைவரத்தை வெளியுலகுக்கு மூடிமறைப்பதற்காகவே - முற்கூட்டிய எச்சரிக்கை நடவடிக்கையாகவே - சர்வதேச பிரதிநிதிகளை அங்கிருந்து வெளியேற்றியது கொழும்பு என்பது வெளிப்படையான உண்மை.
அப்படியிருக்கையில் இப்போது மிகமிக மோசமான மனிதப் பேரவலம், கொழும்பு ஆரம்பித்துள்ள கொடூர யுத்தத்தினால் எழுந்துள்ள சூழலில், இக்கட்டத்தில் சர்வதேசப் பிரதிநிதிகளை அங்கு அனுமதித்துத் தனது குட்டை உடைத்துக்கொள்ள - அம்பலப்படுத்த - அரசு முன்வரவே மாட்டாது என்பது உறுதி.ஐ.நா.முகவர் அமைப்புகள் மற்றும் உள்நாட்டு, சர்வதேச தொண்டர் அமைப்புகளின் பிரதிநிதிகள் அப்பிரதேசத்தில் தங்கியிருப்பது அவர்களின் உயிருக்கு ஆபத்தானது என்று கூறியே அரச கட்டுப்பாட்டில் இல்லாத பகுதியிலிருந்து அவர்களை வெளியேற்றியது கொழும்பு.
அங்கு யுத்தம் இன்னும் நெருங்கி வந்து - மிக மோசமான கட்டத்தை அடைந்திருக்கையில் - அதே பாதுகாப்புக் காரணங்களைக் காட்டி, சர்வதேச சுயாதீனக் குழுவின் உத்தேச எத்தனத்தையும் வெட்டிப்போட்டுவிடும் என உறுதியாக நம்பலாம்.ஏற்கனவே வடக்கில் அரசின் மனிதாபிமானத் திட்டங்களுக்கு உதவுவதற்கான நிதியை வழங்குவதற்கு உறுதியளித்துள்ள பிரிட்டன், அதனை வழங்க முன்னர் நிலைமையை நேரில் மதிப்பீடு செய்வதற்காக இலங்கைக்கு ஒரு கண்காணிப்பு நிபுணரை அனுப்பத் தீர்மானித்திருக்கின்றது.
இப்படி இலங்கை வரும் சர்வதேசப் பிரதிநிதிகள், கண்காணிப்பாளர்கள், ஊடகவியலாளர்கள் போன்றோர் யுத்த களத்துக்கோ, யுத்த களங்களைத் தாண்டித் தமிழர்கள் பேரவலப்படும் வன்னிப் பிரதேசங்களுக்கோ செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள். அவர்கள் கொழும்பில் தொங்கிக் கொண்டிருந்தபடி, தமிழர் தாயக நிலைமை குறித்து கொழும்பு அதிகாரிகள் வழங்கும் புள்ளி விவரங்களை உள்வாங்கிக்கொண்டு, அதனடிப்படையில் தீர்ாமானங்களை எடுத்துத் திரும்பிச் செல்ல வேண்டியதுதான்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் எம்.பி. சொல்வது போல சர்வதேசப் பிரதிநிதிகள் குழு ஒன்றை நேரடியாக இப்பிரதேசங்களுக்கு அனுப்பி வைப்பதற்கு கொழும்பு அரசும் இணங்குமானால் அப்பிரதேச மக்களின் பேரவல நிலைமை மட்டுமல்ல, அந்த மக்களைப் புலிகள் தங்களுக்கு மனிதக் கேடயமாகத் தடுத்துச் சிறை வைத்திருக்கின்றார்கள் என்ற அரசுத் தரப்பின் குற்றச்சாட்டில் உள்ள உண்மைத் தன்மையும் கூட அம்பலமாகிவிடும்.
வன்னியில் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களில் சிக்குண்டுள்ள சுமார் நான்கு லட்சம் அப்பாவி மக்களை நாலாபுறத்திலும் நெருங்கி - நெருக்கி - அவர்களின் பிரதேசங்களை ஆட்லறிகள், பீரங்கிகள், ஷெல்கள், பல்குழல் ஏவுகணைகளால் எந்நேரமும் பதம்பார்த்து, தனது முழு சூட்டு வலுவையும் அவர்கள் மீது ஏவிவிட்டபடி, அந்த மக்களின் நலன் குறித்து உதட்டளவில் அதிகப் பிரசங்கித்தனமாகக் கவலை தெரிவிக்கும் கொழும்பு, இப்போது சம்பந்தன் எம்.பி. கூறுவது போல சர்வதேசத்தின் சுயாதீனக் குழு ஒன்றை அப்பிரதேசங்களுக்குச் சுதந்திரமாகச் செல்ல அனுமதித்து, உண்மையைக் கண்டறிவதற்கு இணங்குமா?
Comments