கண்டி!

செருப்பால் அடித்துவிட்டுக் கருப்பட்டி கொடுக்கும் அசிங்கத்தைக் கூசாமல் செய்திருக்கிறது மன்மோகன் சிங் அரசு. நொந்துபோன இதயங்களில் மறுபடி கூர் வேல் பாய்ச்சி இருக்கிறது.

அப்பாவித் தமிழரின் நலன் காக்க, இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி விரைவில் இலங்கை செல்வார் என்று தொடர்ந்து வெளியாகிவந்த செய்திகள் எதிர்பார்ப்பு கலந்த ஆறுதலை அளித்தன. அமைச்சருக்கு அப்படி என்னதான் 'தலைக்கு மேல்' வேலையோ... அவருக்குப் பதிலாக, வெளியுறவுத் துறைச் செயலாளர் சிவசங்கர் மேனனை மத்திய அரசு அனுப்பிவைத்ததே பெரிய தவறு!

கண்டியில் ராஜபக்ஷேவைச் சந்தித்தபோது, 'யுத்தத்தின் பெயரால் தமிழர்களைக் கொன்று குவிப்பதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம்' என்று சிவசங்கர் மேனன் சொல்லவில்லை. மாறாக, 'போர்ச் சூழலில் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு இந்திய அரசு நிவாரண உதவிகள் அளிக்கும்' என்று மோசமான ஒரு வாக்குறுதியை அளித்துவிட்டுத் திரும்பியிருக்கிறார்.

பாலஸ்தீனத்து மக்களின் மீது குண்டு வீசக் கூடாது என்று நான்கு தடவை இஸ்ரேலைக் கண்டிக்கத் தெரிந்த மத்திய அரசுக்கு, கூப்பிடு தொலைவில் நடக்கும் அநியாயத்துக்கு எதிராகக் குரல் உயர்த்த மனம் இல்லாதது எத்தகைய கொடுமை!

'இந்தியாவின் பாதுகாப்புதான் எங்களுக்கு முக்கியம். எனவே, இலங்கையின் உள்விவகாரங்களில் தலையிட முடியாது' என்பதே இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை என்றால், அதை வெளிப்படையாக அறிவிப்பதில் என்ன தயக்கம்? 'இல்லை, இல்லை... ஈழத் தமிழர் அனைவரும் எங்கள் தொப்புள்கொடி உறவு. அவர்கள் துன்பத்தைப் பார்த்துக்கொண்டு சும்மா இருக்க மாட்டோம்' என்பதே உண்மையான நிலைப்பாடாக இருந்தால், உடனடியாக இலங்கை அரசின் சிண்டைப் பிடித்துக் கண்டிக்க வேண்டாமா?

நாட்டுப் பாதுகாப்பும் முக்கியம், ஓட்டுப் பிச்சை வாங்குவதும் முக்கியம் என்ற வழவழா கொழகொழா அணுகுமுறை காரணமாக நாடகமாடுவதும் நாட்களைக் கடத்துவதுமே தொடர்ந்தால்... மத்திய அரசின் மீதான நம்பிக்கை அற்றுப்போய், அதுவே நம் உள்நாட்டு அமைதிக்கும் வேட்டாகிவிடும்!

நன்றி: ஆனந்த விகடன், Jan 28, 2009



Comments