”பிரபாகரனுக்கு ஒரு நியாயம்… ராணுவத்துக்கு ஒரு நியாயமா?”

spraba-and-sl-army”ஈழத் தமிழர்களைக் காப்பது ஒருபுறமிருக்க… இந்தியத் தமிழர்களைக் காப்பாற்றுவதற்கு இந்த அரசு என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறது?”
-இப்படியரு கேள்வியுடன் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கைத் தாக்கல் செய்திருக்கிறது தமிழக மக்கள் உரிமைக் கழகம்.

‘குற்றவாளிகளை ஒப்படைப்பதற்கான 1978-ம் ஆண்டின் இந்திய-இலங்கை ஒப்பந்தப்படி, தமிழகக் காவல் துறை யால் வழக்குப்பதிவு செய்யப்பட்ட இலங்கை கடற்படையினரை, இந்தியா வுக்கு வரவழைத்து அவர்களை இந்திய தண்டனைச் சட்டத்துக்கு உட்படுத்த வேண்டும்.

இந்த ஒப்பந்தத்தைக் குறிப்பிட்டு, இலங்கைக் கடற்படையால் உயிரிழந்த மற்றும் படுகாயமடைந்த குடும்பங்களுக்கு இலங்கை அரசு இழப்பீடு வழங்கவேண்டும்.

குற்றம் சாட்டப்பட்ட இலங்கைக் கடற்படையினருக்கு தண்டனை தரவேண்டும். எதிர்காலத்தில் இப்படிப்பட்ட துர்சம்பவங்கள் நடைபெறா வண்ணம் மத்தியஅரசு பாதுகாக்கவேண்டும்!’ என்று நீதிமன்றத்தை நாடியிருக் கிறார், தமிழக மக்கள் உரிமைக் கழகத்தின் மாநில இணைச் செயலாளர் வழக்கறிஞர் புகழேந்தி.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் ஏ.கே.கங்குலி, இப்ராஹிம் கலிபுல்லா ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச், நான்கு வாரங்களுக்குள் உரிய பதில் அளிக்கச் சொல்லி மத்திய-மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டுள்ளது.

விரைவில் இறுதி விசாரணைக்கு வரவிருக்கும் இந்த வழக்கு, இலங்கை அரசுக்குப் பெரும் தலைவலியைத் தரும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில்…

புகழேந்தி சார்பில் இந்த வழக்கைத் தொடுத்த வழக்கறிஞர் ராதாகிருஷ்ணனை சந்தித்தோம்.

”பொதுவாக ஒரு நாட்டு எல்லைக்குள் இன்னொரு நாட்டு ராணுவம் அத்துமீறினால், அது மிகப்பெரிய போராக வெடிக்கும்.

1978-ல் தொடங்கி இன்று வரை தமிழக மீனவர்களை ஈவிரக்கமின்றிச் சுட்டுக்கொன்று வருகிறது இலங்கை ராணுவம். ஆனால், இந்திய அரசோ இன்று வரை அதை வெட்கமின்றி வேடிக்கை பார்த்து வருகிறது.

எந்த ஒரு நாடாக இருந்தாலும், எல்லை தாண்டுபவர்களைக் கைதுசெய்து, பிறகு சர்வதேச விதிமுறை களின்படி சம்பந்தப்பட்டவர்களிடம் ஒப்படைத்துவிடுவார்கள். ஆனால், சர்வதேச மற்றும் இந்திய-இலங்கை ஒப்பந்தங்களை இலங்கை ஒருபோதும் மதித்ததில்லை.

வருங்கால வல்லரசு என்று தன்னைத்தானே கூறிக்கொள்ளும் இந்தியா மீது இலங்கைக்கு துளிகூட பயமில்லை.

எனவேதான், தொடர்ச்சியான துப்பாக்கி சூடு நடத்திவருகிறது. உலகில், தன்னுடைய நாட்டின் பிரஜைகள் தன் கண்ணெதிரே கொல்லப்படுவதைத் தட்டிக் கேட்காத ஒரே நாடு இந்தியாதான்!

‘எல்லை தாண்டும் பயங்கரவாதம் என்பது காஷ்மீருக்கு மட்டும்தானா?’ என தமிழக மீனவர்களின் இழிநிலை குறித்து 1993-ம் ஆண்டு இந்திய நாடாளுமன்றத்தில் கேள்வியெழுப்பப்பட்டது.

அதற்கு, ‘மீனவர்கள் எல்லை மீற வேண்டாம் என்று தமிழக அரசு வலியுறுத்தி வருகிறது.

நாங்களும் இப்பிரச்னை குறித்து அவ்வப்போது நடவடிக்கை எடுத்து வருகிறோம்’ என்று அப்போது ஒப்புக்கு பதிலளித்தது மத்திய அரசு.

ஆனால், அதன் பிறகும் இலங்கைக் கடற்படையால் தமிழக மீனவர்கள் சுட்டுக்கொல்லப்படுவது தொடர்கதையாகவே இருக்கிறது.

எனவே, சட்டப்படி இதற்கொரு முடிவு கட்டவேண்டும் என்பதற்காக, கடந்த 2008-ம் ஆண்டு தமிழக டி.ஜி.பி-யை அணுகி, ‘1986-ம் ஆண்டு முதல் 2006-ம் ஆண்டு வரை இலங்கைக் கடற்படையால் சுட்டுக்கொல்லப்பட்ட தமிழக மீனவர்கள் எத்தனை பேர்?’ என்கிற விவரங்களைக் கேட்டோம்.

‘93-ம் ஆண்டிலிருந்துதான் எங்களுக்குத் தெரியும்’ என்ற டி.ஜி.பி. அலுவலகம், ‘இதுவரை சுமார் ஆயிரம் மீனவர்கள் உயிரிழந்திருக்கிறார்கள்.

அதை விட அதிகமானோர் படுகாயமடைந்திருக்கிறார்கள்’ என்று தகவல் தெரிவித்தது. இவை அனைத்தும் இலங்கைக் கடற்படைக்கு எதிராக இந்திய அரசாங்கத்தால் பதிவு செய்யப்பட்ட அதிகாரப்பூர்வ வழக்குகள்.

இதில், ஒவ்வொரு ஆண்டும் கொல்லப்படுபவர்கள் மற்றும் படுகாயம் அடைபவர்களின் எண்ணிக்கை கூடுதலாகி இருப்பதும் தெரிய வந்தது.

அப்பாவி இந்திய மீனவர்களின் உயிர்களை சிங்களக் கடற்படை சுட்டுத் தள்ளிக்கொண்டே போக… முதுகெலும்பற்ற சிங்கள ஆதரவு இந்திய அரசோ சிறு துரும்பைக் கூடக் கிள்ளிப்போடவில்லை!” என ஆவேசமான ராதா கிருஷ்ணன் தொடர்ந்து,

”கடந்த ஆண்டு அக்டோபர் 26-ம் தேதி, ‘இந்திய மீனவர்களின் அடிப்படை மற்றும் மனித உரிமைகள் காக்கப்படும்’ என்று இரு நாட்டு அரசுகளின் சார்பாக கூட்டறிக்கை ஒன்று வாசிக்கப்பட்டது.

ஆனால், அறிக்கை வெளியான ஒரே வாரத்தில், நவம்பர் 7-ம் தேதி நாகை மாவட்டம் அக்கரைப்பேட்டையைச் சேர்ந்த இரண்டு மீனவர்கள் இலங்கைக் கடற்படையால் குண்டடிபட்டு படுகாயமடைந்தார்கள்.

மறுநாள் கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த நூற்றுக்கும் மேற்பட்ட மீனவர்களின் படகை அடித்து நொறுக்கி வலைகளை அறுத்து விரட்டியடித்தார்கள்.

எனவேதான் இந்த பொதுநல வழக்கை தாக்கல் செய்திருக்கிறோம்… வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, மத்திய-மாநில அரசுகளை பதிலளிக்க கேட்டுக் கொண்டிருக்கிறது நீதிமன்றம்…” என்றார்.

நம்மிடம் பேசிய வழக்கறிஞர் புகழேந்தி, ”ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 26 பேருக்கு மரண தண்டனை அளிக்கப்பட்டிருக்கிறது. பதினேழு ஆண்டுகள் முடிந்தும், ஏழு பேர் இன்றைக்கும் சிறையில் இருந்து வருகின்றனர்.

விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனையும் குற்றம்சாட்டி, அவரை இந்தியாவுக்கு அழைத்து வர இலங்கை அரசை இன்றைக்கும் கேட்டு வருகிறது இந்திய அரசு.

ஆனால், 1978-ம் ஆண்டு தொடங்கி இன்றைய தேதி வரை ஐந்நூறுக்கும் மேற்பட்ட அப்பாவி தமிழக மீனவர்களை சுட்டுக் கொன்றுள்ள சிங்கள ராணுவத்தினர் மீதும் கொலையில் சம்பந்தப்பட்டவர்கள் மீதும் குறைந்தபட்ச நடவடிக்கை எதையும் எடுக்கவில்லை இந்திய அரசு.

‘மும்பை குண்டுவெடிப்புகளில் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்!’ என்று தொடர்ந்து பாகிஸ்தான் அரசுக்கு நெருக்கடி கொடுத்து வரும் இந்தியா, உலக நாடுகளையும் துணைக்கு அழைக்கிறது.
நட்சத்திர ஹோட்டல்களில் வசிக்கும் பெரும் பணக்காரர்கள் என்றால் வாய் கிழியக் கத்துபவர்கள், ஏழை மீனவர்களை மனிதனாகக்கூட மதிக்கவில்லையே ஏன்? ஆக, தமிழக மீனவர்களை இந்திய அரசு தன் நாட்டின் குடிமக்களாகக்கூட மதிக்கவில்லை என்பதே உண்மை.

சிங்கள ராணுவத்தானுக்கு மத்திய அரசு ஆயுதம் வழங்குவதால், அவர்கள் நம்மை சந்தோஷமாகச் சுட்டுக்கொல்கிறார்கள்.

இதற்கு நீதிமன்றம் தண்டனை வழங்க வேண்டும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். அதே சமயம், தமிழர்கள் மீது அக்கறை கொள்ளாத மத்திய-மாநில அரசுகளுக்கு வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் தண்டனை வழங்குவார்கள்!” என்றார்.

இந்த வழக்கின் இறுதி விசாரணையில் மத்திய அரசும், மாநில அரசும் என்ன சொல்லப் போகின்றன?

தமிழன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறான்

நன்றி: விகடன்

Comments