பலமுறை கொடுக்கப்பட்ட காலக்கெடுக்களின் மத்தியில் தாக்குப் பிடித்த கிளிநொச்சியும், பரந்தனும் படையினரிடம் வீழ்ச்சியடைந்திருக்கின்றன. கிளிநொச்சியின் வீழ்ச்சி குறித்து தென்னிலங்கையில் பெரும் கொண்டாட்டங்கள் நடத்தப்படுகின்றன. கிளிநொச்சியைக் கைப்பற்றுவதற்கான சண்டையை "சமர்களுக்கெல்லாம் தாய்ச்சமர்' என்று சிலரால் விமர்சிக்கப்படுகிறது.
ஆனால் இது தவறான கருதுகோளாகவே தெரிகிறது. கிளிநொச்சியின் இழப்பு புலிகளுக்கு பின்னடைவே தவிர அவர்கள் எதிர்பார்க்காத ஒன்று எனக் கருத முடியாது. கிளிநொச்சியின் வீழ்ச்சியை புலிகளின் மீளமுடியாத தோல்வியாகச் சித்தரிக்க பலரும் முற்படுகின்றனர். ஆனால் அது எந்தளவுக்குச் சரியானதென்பதை இப்போது தீர்மானிக்க முடியாது. ஏனென்றால் இப்போதுள்ள படை வளங்களைக் கொண்டு புலிகள் தொடர்ந்தும் மரபு வழிச் சண்டைகளைச் செய்யப் போகின்றனர்.
கிளிநொச்சி, பூநரிக்குப் பின்னரும் மரபுவழிச் சண்டைகள் நீடிக்கப் போகிறது என்றும், கிளிநொச்சியின் வீழ்ச்சி பற்றி சூசகமாகவும் 2008.11.09 வாரவெளியீட்டில் இதே பத்தியில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இது எதிர்பார்க்கப்படாத ஒரு நிகழ்வு அல்ல. ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்டதொன்றுதான் என்பதும் ஆனால், சற்றுத் தாமதமாக நடந்தேறியிருக்கிறது என்பதும் தான் உண்மை. புலிகளின் போர் நிகழ்ச்சி நிரலை தொடர்ச்சியாக அவதானித்து வருபவர்களுக்கு அவர்கள் கேந்திர நிலைகளைத் தக்க வைப்பதற்கு எந்தளவுக்குச் சண்டையிடுவார்கள் என்பதும் அதற்குப் பின்னர் என்ன செய்வார்கள் என்பதும் நன்கு தெரியும்.
சாதகமான இடங்களில் வலுவாக நின்று போரிடுவது, குறிப்பிட்ட இடத்துக்காக குறிப்பிட்ட அளவுக்கு மேல் சண்டையிடாமல் ஒதுங்கிக் கொள்வது, தமது படைவளங்களைப் பாதுகாப்பதற்காக திடீர் பின்னகர்வைச் செய்வது என்று புலிகள் தமது போர் நிகழ்ச்சி நிரலுக்கேற்பவே இன்னமும் இயங்கிக் கொண்டிருக்கிறார்கள். கிளிநொச்சி பரந்தனின் வீழ்ச்சி என்பது புலிகளால் முன்னரே தீர்மானிக்கப்பட்டதொன்று. படையினரின் நகர்வைத் தடுத்து நிறுத்திச் சண்டையிடாமல் அணிகளைப் பின்னகர்த்திச் சண்டையிடும் உத்தியையே புலிகள் கிளிநொச்சிக்கான இறுதிச் சண்டையின் போது கையாண்டிருந்தனர்.
நவம்பர், டிசம்பர் மாதங்களில் படையினரின் கிளிநொச்சி நோக்கிய ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை முறியடித்திருந்த புலிகள் ஒரே நேரத்தில் நான்கு டிவிசன்களின் தாக்குதலை தடுத்து நிறுத்திய புலிகள் இரணைமடுவில் முன்னகர்ந்து நிலை கொண்ட படையினரை அரைப்பகல் சண்டையில் பின் தள்ளிய புலிகள் ஒரே நாளில் பரந்தனையும் கிளிநொச்சியையும் கைவிட்டுப் பின்வாங்குவார்கள் என்று எதிர்பார்க்க முடியாது. அதற்காக இதை ஒரு தந்திரோபாயமான பின்வாங்கல் என்று நியாயப்படுத்த முடியாது. புலிகள் தமக்கு பலமுனை அழுத்தங்களைக் கொடுக்க முனையும் படையினரை ஏதோ ஒரு வில்லங்கமான களமுனைக்குள் இழுத்துச் செல்ல எத்தனிக்கின்றனர் என்பது மட்டும் தெளிவாகத் தெரிகிறது.
1996 இல் "சத்ஜய' நடவடிக்கையின் போது ஆனையிறவில் இருந்து படையினர் மூன்று கட்டங்களாக முன்னேறியே கிளிநொச்சியைப் பிடிக்க முடிந்தது. அதற்குத் தேவைப்பட்ட நாட்களோடு ஒப்பிட்டுப் பார்க்கும்போது இப்போது புலிகள் பரந்தனையும் கிளிநொச்சியையும் கைவிட்டிருப்பதன் அர்த்தத்தைக் கேள்விக்குள்ளாக்குகிறது. ஒன்றில் படைத்தரப்பு சொல்வது போன்று புலிகள் பலவீனமடைந்திருக்க வேண்டும். அல்லது அவர்கள் மற்றொரு வியூகத்தை வகுத்துச் செயற்படத் தொடங்கியிருக்க வேண்டும். அதேநேரத்தில் புலிகள் கிளிநொச்சியை விட்டு விலகிச் சென்றிருப்பதால் அவர்கள் தோற்கடிக்கப்பட்டு விட்டதாக தெற்கில் செய்யப்படும் பிரசாரங்களின் வலிமையே அதிகமாக உள்ளது.
அது போர்க்களத்தில் படையினரின் வலிமையைப் பிரதிபலிக்கிறதா என்பது சந்தேகமே. கிளிநொச்சியைக் கைவிட்டு தமது பிரதான கோட்டையான புதுக்குடியிருப்பு அடங்கலான பிரதேசத்தை தக்க வைத்துக் கொள்ளப் புலிகள் முற்பட்டிருக்கலாம். "சமர்களுக்கெல்லாம் தாய்ச்சமர்' என்பது புதுக்குடியிருப்பைக் கைப்பற்றுவதற்கான சமராகவே இருக்குமே தவிர கிளிநொச்சியைக் கைப்பற்றுவதற்கான சமர் அல்ல. கிளிநொச்சியில் உக்கிரமான சண்டை நடந்தது உண்மை. ஆனால் அதன் இறுதி நகர்வுகளின் போது பெரியளவில் சண்டைகள் நடக்கவேயில்லை என்பது அதைவிடப் பெரிய தான் உண்மை.
பரந்தனுக்கு வடமேற்கே கிளாலி கடலேரிப் பக்கமாக ஊடறுத்த 2ஆவது கொமாண்டோ பற்றாலியன் ஏ9 வீதியைத் துண்டித்து விட புலிகளுக்கு பரந்தனின் தேவை இல்லாது போனது. ஆனால் அதற்கு முன்னரே அவர்கள் கிளிநொச்சியை விட்டு விலகத் தொடங்கியிருந்தனர். ஒரு வாரத்துக்கு முன்னரே புலிகள் கிளிநொச்சியை கைவிடும் முடிவை எடுத்திருந்தனர். அதற்கேற்ப அவர்கள் படையினருக்குப் பயன்படக் கூடும் எனக் கருதிய கட்டடங்களை தகர்த்திருந்தனர். பரந்தனை 58 ஆவது டிவிசன் கைப்பற்றிய பின்னர் கனகபுரம் துயிலும் இல்லப் பக்கமான முன்னேறிய 571 பிரிகேட், தென்கிழக்கே முன்னேறிய 572 பிரிகேட், இரணைமடுப் பக்கமாக தென்பகுதியில் இருந்து முன்னேறிய 574பிரிகேட் என்பன கிளிநொச்சிக்குள் புகுந்தன.
கிளிநொச்சியையும் பரந்தனையும் கைவிடும் நிலை ஏற்படலாம் என்று புலிகள் இரண்டு மாதங்களுக்கு முன்னரே அனைத்து ஏற்பாடுகளையும் செய்திருந்தனர். ஆனால் அதற்குப் பின்னரும் தாக்குப் பிடித்து படைத் திட்டத்தை தாமதிக்கச் செய்ததற்கு காரணம் புலிகளின் வலுவான முறியடிப்பு திறனே என்பதில் சந்தேகம் இல்லை. கிளிநொச்சி மற்றும் பரந்தன் இறுதிச் சண்டைகளின் போது புலிகள் முறியடிப்பு அணிகளை களத்தில் வைத்திருக்கவில்லை என்றும் தெரிகிறது. தற்காப்பு அணிகளை நிறுத்தியே சண்டையிட்டிருக்கின்றனர். இந்த தற்காப்பு சண்டையின் போது கடந்த 31 ஆம் திகதி பரந்தன் பகுதியில் பிரிகேடியர் தமிழ்ச்செல்வனால் உருவாக்கப்பட்ட பூநகரிப் படையணியின் சிறப்புத் தளபதி லெப்.கேணல் ஈழப்பிரியன் கொல்லப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
புலிகள் கிளிநொச்சி பரந்தன் பகுதிகளை இழந்திருக்கின்ற நிலையில் ஆனையிறவைத் தக்கவைப்பது கடினமாகியுள்ளது. அவர்கள் அங்கிருந்தும் பின்விலகத் தொடங்கியிருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. ஆனால் முகமாலை கிளாலி நாகர்கோவில் களமுனைகளில் புலிகள் தொடர்ந்தும் நிலைத்திருக்க வேண்டுமானால் பரந்தன் ஊடான விநியோகப்பாதை அவசியம். அது இழக்கப்பட்ட பின்னர் இந்த முன்னரணை அவர்கள் தக்கவைக்க கடுமையாகச் சண்டையிடுவார்களா என்பது சந்தேகமே. அதேநேரத்தில் அவர்கள் இந்த முன்னரணுக்கான விநியோக வழிகளை முற்றாக இழந்து விட்டார்கள் என்றும் கருத முடியாது.
சுண்டிக்குளம் ஊடாக அவர்களுக்கு மாற்றுப் பாதை உள்ளது. ஆனால் அது சிரமம் நிறைந்தது. தற்போது புலிகள் முல்லைத்தீவு களமுனையில் எதிர்கொள்ளும் நெருக்கடியை சமாளிக்க முனைவதாகவே தெரிகிறது. மட்டுப்படுத்தப்பட்ட கட்டுப்பாட்டுப் பிரதேசத்துக்குள் இருந்தவாறு சண்டையைத் தொடரும் எண்ணம் புலிகளுக்கு இருக்கலாம். அவர்களின் கவனம் இப்போது முற்று முழுதாக முல்லைத்தீவுப் பிரதேசத்தின் மீதே இருக்கிறது. முள்ளியவளையைக் கைப்பற்றியிருக்கின்ற படையினர் ஒட்டுசுட்டானுக்கும் புதுக்குடியிருப்புக்கும் இடைப்பட்ட காட்டுப்பகுதி ஊடாக வடக்கே முன்னேற முயற்சிக்கின்றனர். இன்னொரு பக்கத்தில் படையினர் முல்லைத்தீவை நோக்கி சிலாவத்தைப் பக்கமாக முன்னேற முற்படுகின்றனர்.
இந்தப் பகுதிகளில் படையினரை தடுத்து நிறுத்தத் தவறினால் அது புலிகளின் பிரதான கோட்டையான புதுக்குடியிருப்பைத் தக்க வைப்பது கேள்விக்குள்ளாகிவிடும். இராணுவத் தளபதி லெப். ஜெனரல் சரத் பொன்சேகாவின் கணிப்புப்படி புலிகள் இயக்கத்தில் இன்னமும் 1700 தொடக்கம் 1900பேர் வரையே இருக்கின்றனர். அதுவும் தொப்பிகலவை விடவும் சிறிய பிரதேசத்துக்குள் தான் இருப்பதாகவும் இந்த வருட இறுதிக்குள் அவர்களை முற்றாக அழித்துவிட முடியும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார். ஆனால் இப்போதைய நிலையில் புலிகளின் பலம் ஒன்று குவிக்கப்பட்டிருக்கிறது. அவர்கள் எதிர்காலத்தில் நிலங்களை கட்டுப்பாட்டில் வைத்திருக்கின்ற சமர்களை அல்லது நிலங்களைப் பிடிக்கின்ற சமர்களை நடத்த முனையமாட்டார்கள்.
பிரதான இராணுவ அணிகளுக்கு பாரிய இழப்புகளை ஏற்படுத்தும் தாக்குதல்களை தொடர்வதே அவர்களின் முதன்மையான இலக்காக இருக்கக்கூடும். நிலங்களைக் கைப்பற்றும் சமர்களை செய்யும் திட்டத்தோடு இருந்திருப்பார்களேயானால் கிளிநொச்சி பரந்தனைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க உச்சகட்ட முன்னுரிமை கொடுத்திருப்பார்கள். ஆனால் அது நடக்காததால் அவர்களின் தெரிவு படையினருக்கு எந்தளவுக்கு இழப்பை அதிகளவில் ஏற்படுத்த முடியுமோ அதற்கான உத்திகளைக் கையாள்வதாகவே இருக்கும். புலிகளின் பலம் விசுவமடு, புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு பகுதிகளில் ஒன்று குவிக்கப்பட்டிருக்கின்ற நிலையில் அடுத்த கட்டமாக அவர்கள் தற்காப்புச் சமர்களைத் தொடரப் போகிறார்களா அல்லது வலிந்த சமர்களை செய்வார்களா என்ற கேள்வி எழுகிறது.
நீண்டகாலத் தற்காப்புச் சமர் என்பது படையினருக்குச் சலிப்பை ஏற்படுத்தும் யுத்தமாக இருந்தாலும் தமது போராளிகளையும் கட்டுப்பாட்டுப் பகுதியில் வாழும் மக்களையும் உளவியல் ரீதியாக பலமான நிலையில் வைத்திருக்க அது உதவமாட்டாது, படைத்தரப்பு எப்படியாவது புலிகளின் பிரதேசத்தை கைப்பற்றும் இலக்குடன் முன்னேறி வரும் நிலையில் புலிகளின் அடுத்த முன்னரங்க எல்லைக் கோட்டை அவர்கள் தொடும்போது வெடிக்கப் போகின்ற சமரே சண்டைகளுக்கெல்லாம் தாய்ச் சமராக இருக்கும். அது பலத்த உயிரிழப்புகளை ஏற்படுத்தும் ஒன்றாகவோ ஈழப்போரில் திருப்புமுனைகளை ஏற்படுத்தக் கூடியதொன்றாகவோ அமையலாம். இந்தச் சமரில் வெற்றியீட்டப் போகின்ற தரப்புக்கு, இலகுவில் தட்டிப் பறிக்க முடியாத இராணுவ மேலாதிக்க நிலை மிகச் சுலபமாகக் கிடைத்துவிடும்.
- சுபத்திரா
Comments