ஈழக்கவிஞர் புதுவை இரத்தினதுரையின் அன்பு வேண்டுகோள்...
சிங்கள ராணுவத்துக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையேயான போர் உக்கிரமாகத் தகித்துக் கொண்டிருக்கிறது. 'வாழ்வா... சாவா...' என்ற முனைப்பில் பல்முனை யுக்திகளோடு காணிகளைத் தக்க வைக்கக் கடுமையாகப் போராடிக் கொண்டிருக்கிறார்கள் புலிகள். ஏவுகணை, துப்பாக்கி என சீறிக் கொண் டிருக்கும் புலிகளுக்கு எழுத்து வெடிகுண்டுகளின் மூலம் எழுச்சியையும் ஊக்குவிப்பையும் ஒருசேரக் கொடுத்துக் கொண்டிருக்கிறார் கவிஞர் புதுவை இரத்தினதுரை.
கவிஞர் காசி ஆனந்தன் தமிழகத்துக்கே வந்து நிரந்தரமாக தங்கிவிட்ட பிறகு, புலிகள் அமைப்பின் கலை, பண்பாட்டுக் கழகப் பொறுப்பாளராக இயங்கி வரும் இரத்தினதுரை, முல்லைத்தீவில் புதுக்குடியிருப்பில் இருந்தபடி, 'பூவரசம் வேலியும் புலுனிக் குஞ்சுகளும்' என்ற கவிதைத் தொகுப்பை 'விடியல்' பதிப்பகம் மூலம் தமிழகத்தில் வெளியிட்டிருக்கிறார்.
நரம்புகளைப் புடைக்கச் செய்யும் அவருடைய கவிவரிகள் ஈழ எழுச் சியை தமிழகப் படைப்பாளர்கள் மத்தியிலும் பந்தி வைத் திருக்கின்றன. 'புலிகளுக்கு சறுக்கலான நேரம்' என்று இலங்கையின் போர் நிலவரங்கள் பரபரப்பு கிளப்பிக் கொண்டிருக்கும் நிலையில்,
நாம் முல்லைத்தீவில் இருக்கும் இரத்தினதுரையை தொடர்பு கொண்டு பேசினோம்.
''கிளிநொச்சியைப் போலவே பள்ளை, ஆனையிறவு உள்ளிட்ட ஏரியாக்களையும் சிங்கள ராணுவம் வளைத்து விட்டதாகச் சொல்கிறார்களே?''
''ஊடகங்கள் வாயிலாக சிங்கள அரசு எத்தனையோ தவறான கருத்துகளைப் பரப்பிக் கொண்டிருக்கிறது. எப்பாடுபட்டாவது கிளிநொச்சியைப் பிடித்துவிட வேண்டும் என்பதுதான் சிங்கள ராணுவத்தின் திட்டம். போர் மரபுகளைக்கூடக் கடைப்பிடிக்காமல் 'கிளஸ்டர்' குண்டுகளைப் பயன்படுத்தியும்,பலநாட்டு ராணுவ அதிகாரிகளின் துணையோடும் கிளிநொச்சிக்குள் கால் பதித்தது சிங்கள ராணுவம்.
பிறவிப் பயனையே அடைந்ததுபோல் கொண்டாட்டம் போட்ட ராணுவ அதிகாரிகள், கிளிநொச்சிக்குள் நுழைந்து பார்த்ததும் வெட்கத்தால் பொசுங்கிப் போனார்கள். யாருமற்ற வெறும் நிலப்பரப்பைத்தான் தாங்கள் பிடித்திருக்கிறோம் என்பதுதான் வெட்கத்துக்குக் காரணம். இக்கட்டான காலகட்டங்களில் நிலப்பரப்பை கைவசம் வைத்திருப்பது யானையைக் கட்டித் தீனி போடுகிற கதை. அதை உணர்ந்த புலிகளின் போர் தந்திரக் குழு கிளிநொச்சியை விட்டு அனைவரையும் பத்திரமாக வெளியேற்றிவிட்டது. ஆள் அரவம்கூட இல்லாத கிளிநொச்சியைப் பிடித்துவிட்டு சிங்கள ராணுவம் கொக்கரித்துக் கொண் டிருக்கிறது. போர்க்கூறுகளை மிக நுணுக்கமாக அறிந்தவர்களுக்கு புலிகளின் சாமர்த்தியங்கள் புரியும்.''
''ஆனால், சிங்கள ஆதரவாளர்களோ பிரபாகரனின் நாட்கள் எண்ணப்படுகின்றன என்கிறார்களே?''
''தம்பியைப் பற்றி பரப்பப்படும் எந்தக் கருத்துகளையும் புலிகளின் திடம் அறிந்தவர்கள் நம்ப மாட்டார்கள். ஆரம்ப கட்டப் போராட்டங்களின்போதும், இந்திய அமைதிப்படை இலங்கையில் இருந்த காலகட்டத்தின் போதும் அனுபவித்த இக்கட்டுகளோடு ஒப்பிட்டால், இப்போதைய நிலைமை சாதாரணம்.
இக்கட்டுகள் நீங்கி திக்கெட்டும் புலிகளின் சக்தி புலப்படும் நாள் விரை விலேயே வரும். சிங்கள ராணுவமோ, அவர்களின் ஆதரவுத் தரப்பினரோ பரப்பிவிடும் கருத்துகள் எல்லாம் திட்டமிட்ட அவதூறுகள்... வெல்ல முடியாத வெட்கத்தை வார்த்தைகளால் கொட்டித் தீர்த்துக் கொண் டிருக்கிறார்கள். எத்தகைய இக்கட்டிலும் தம்பியின் தடங் களைக்கூட யாராலும் தொட முடியாது!''
''இத்தகைய இக்கட்டான நேரத்திலும் 'பூவரசம் வேலியும் புலுனிக் குஞ்சுகளும்' கவிதைத் தொகுப்பைத் தமிழகத்தில் வெளியிட்டிருக்கிறீர்களே?''
''பதினான்கு வயதில் கவிதை எழுத ஆரம்பித்து, முப்பத்தேழாவது வயதில் புலிகளுடன் என்னை இணைத்துக்கொண்டேன். என்னுடைய கவிதைகளும் பாடல்களும் ஏராளமான போராளிகளை ஈழப் போராட்டத்தில் இணைத்ததாகச் சொல்வார்கள். புலிகள் அமைப்பில் இணையும் புதிய அங்கத்தவர்களுக்கான படிவத்தில், 'புதுவை அண்ணனின் கவிதைகளால் உணர்வு பெற்று இயக்கத்தில் இணைகிறோம்' என எழுதிக் கொடுத்தவர்கள் பலர்.
புதுக்குடியிருப்பில் ஒன்பது வயதுப் பெண் பிள்ளை கிணற்றுக்குள் தவறி விழுந்து விடுகிறது... மயக்க நிலையில் மருத்துவமனைக்கு தூக்கிச் செல்லும்போது, 'எதிரிகளின் பாசறையைத் தேடிப் போகிறோம்... தமிழீழ மண்ணை மீட்டெடுக்க ஓடிப் போகிறோம்' என்ற என்னுடைய பாடல் வரிகளை அந்தப் பிள்ளை உச்சரித்தபடியே சென்றதாக பத்திரி கைகள் செய்தி வெளியிட்டிருக்கின்றன. என் கவிதைகளின் கொந்தளிப்பும் நர்த்தனமும் அப்போதுதான் எனக்கே புரிந்தன.
மக்களுடைய நுகத்தடிகளை உடைத்தெறியும் பணிதான் புலிகள் அமைப்பில் எனக்கு இடப்பட்டது. அந்த விதத்தில் பேனாதான் எனக்கு கிடைத்த பீரங்கி. அது உமிழ்கிற ஒவ்வொரு வார்த்தையும் ஈழ உணர்வை உண்டாக்கும்... எங்களின் ரணங்களும் ரத்தக்குளத்தில் சாகும் பிணங்களும் உங்களின் ஓட்டத்தை ஒரு கணமாவது நிறுத்தும்.
எங்களுக்கு உங்களின் உறுதுணையும் அன்பும் அபரிமிதமாகக் கிடைக்கவேண்டிய நேரமிது. 'இரு மொழி ஒரு நாடென்று இதுவரை இருந்த நீதி தெருவினில் கிடக்குதம்மா... தேசியம் என்ற பிள்ளை கருவிலே சிதைந்த காட்சி கண்களில் தெரியுதம்மா...' என என் தொகுப்பில் எழுதியிருப்பது எங்கள் மீது தெறிக்கும் ரத்த வாடையை உங்களின் நாசிக்கும் கொண்டுவரத்தான். என் எழுத்துகள் துப்பாக்கிகளுக்கு ஈடான விளைவை உண்டாக்குமானால், தனி ஈழத்துக்கான போராட்டத்தில் மிகுந்த தன்னிறைவை அடைவேன்!''
''தம்பி பிரபாகரனுக்கு இலக்கிய ஆர்வம் உண்டா?''
''வீரத்தில் மட்டுமல்ல... இசை தொடங்கி எழுத்து வரை தம்பி ஆர்வம் காட்டாத திசைகளே இல்லை. தமிழின் அடையாளங்களில் புகுந்து புறப்படும் தேடல் மிகுந்த காற்று அவர். வரலாற்றில் இலக்கியங்கள் அமர்ந்திருக்கும் நாற்காலிகளின் மதிப்பை அறிந்திருப்பவர்.
அதனால்தான் கவிதைகள் மூலமாகவும் பாடல்கள் மூலமாகவும் உணர்வுகளைப் பரப்பும் உன்னத வேலைகளை எங்களுக்குக் கொடுத்திருக்கிறார். தமிழ்ப் படைப்பாளர்கள் மீதும் திரைத் துறையினர் மீதும் அவர் கொண்டிருக்கும் ஆர்வம் அலாதியானது. சுதந்திர தனி ஈழத்தில் இலக்கியங்களும் கலைகளும் ராஜமரியாதைகளோடு போற்றப்படுகிற நாள் விரைவிலேயே வரும்!''
''ஈழ ஆர்வத்துக்கு எதிராக தமிழகத்தில் இருந்தே சில குரல்கள் கிளம்புகின்றனவே... அவற்றை எப்படி எடுத்துக் கொள்கிறீர்கள்?''
''உங்களுடைய கேள்வியிலேயே எங்களின் பதிலும் இருக்கிறது. தாய்மடி எங்களைத் தட்டிவிடக் கூடாது. ஒரு சிலருடைய தவறான பரப்புதலால் சிலர் புலிகளைத் தவறாக நினைக்கலாம். ஆனால், தனி ஈழத்துக்காக புலிகள் படும் துயரங்கள் தமிழனின் நெஞ்சுரம் எத்தகையது என்பதை இன்றைக்கும் நிரூபித்துக் கொண்டிருக்கிறது. கலைஞர்களுக்கு இயல்பாகவே உணர்ச்சியும் வேகமும் அதிகமிருக்கும். அந்த விதத்தில் தமிழகத் தலைவர்கள் சிலர் தனி ஈழம் குறித்து தவறாகப் பேசும்போது வேதனையில் துடித்துப் போய் விடுவேன்.
சிங்கள அரசுக்கு பலதரப்பட்ட நாடுகள் ஆயுதங்களையும் ஆலோசனைகளையும் வழங்கி வருகின்றன. வெந்து தணிகிற காட்டில் கொஞ்சமும் குறையாத வேட்கையுடன் இனம் காக்கப் போராடும் நாங்கள் எங்களின் உயிர் உறவுகளான உங்களிடம் எதிர்பார்ப்பது அன்பை மட்டும்தான்.
நீங்கள் தலைகோதி விடுங்கள்... எதையும் எதிர்கொள்கிற சக்தியை உங்களின் விரல்களே எங்களுக்குள் விதைத்துவிடும்!'' -இரத்தினதுரையின் வார்த்தைகளில் அன்பு கொப்பளிக்கிறது!
- இரா.சரவணன்-
Comments