'இலங்கை இனப்பிரச்னைக்கு உரிய தீர்வு காணும் வகையில் ஒரு வடிவமைப்பை நாங்கள் ஏற்படுத்தி னோம். தனிச்சிறப்பு மிக்க இனப்பிரிவாக ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்ற தமிழர்களின் போராட்டத்தின் அடிப்படை ஆவலை நிறைவேற்றுவது; அவர்களுடைய அரசியல் எதிர்காலத்தை நிர்வகிக்கும் வகையில் அரசியல் சுயாட்சி; இந்தக் குறிக்கோள்களை நிறைவேற்றத் தேவையான அரசு சக்தி; இலங்கையின் வடக்கு, கிழக்குப் பகுதிகளைத் தமிழர்களின் வரலாற்றுப் பெருமை வாய்ந்த இடமாக அறிவித்தல்; இலங்கை ஜனநாயக சோஷலிஸக் குடியரசில் தமிழை ஒருஆட்சி மொழியாக ஏற்றுக்கொள்ளுதல் ஆகியவற்றை உள்ள டக்கிய ஒப்பந்தம் இது.' - இவை இந்திய இலங்கை ஒப்பந்தம் குறித்து 1987 ஜூலை 31-ம் நாள், அன்றைய பிரதமரான ராஜீவ்காந்தி மாநிலங்களவையில் சமர்ப்பித்த அறிக்கையில் இருந்த வாசகங்கள்.
ஒப்பந்தம் உருவாக இலங்கை அதிபர் ஒத்துழைத்ததில் மகிழ்ந்த ராஜீவ்காந்தி,
'ஜெயவர்த்தனாவின் அறிவுக்கூர்மை, தைரியம், ராஜதந்திரம் ஆகியவற்றுக்கு நான் மரியாதை செலுத்துகிறேன்' என்று மாநிலங்களவையில் புகழாரம் சூட்டினார். 'இந்த உடன்பாடு கடந்த காலத்தில் நிலவிய பதற்ற நிலைகளையும் அவநம்பிக்கைகளையும் போக்கி உறவுகளை வலிமைப்படுத்தும் என்று உறுதியாக நம்புகிறேன்' என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார். எல்லா நல்ல நம்பிக்கைகளையும் போலவே ராஜீவின் நல்ல நம்பிக்கையும் பொய்யாகிப் போய்விட்டது.
ஈழத்தமிழர்களின் தந்தையாகப் போற்றப்படும் செல்வநாயகம், தன்னுடைய தமிழரசுக் கட்சியின் சார்பில் இலங்கை அரசிடம் நான்கு முக்கியக் கோரிக்கைகளை வைத்தார். 'சிங்களம், தமிழ் இரண்டும் இலங்கையின் ஆட்சிமொழிகளாக இருக்கவேண்டும்; சுதந்திரம் பெற்றபோது இலங்கையின் குடிமக்களாக விளங்கிய இந்திய வம்சாவளித் தமிழர் அனைவருக்கும் குடியுரிமை வழங்கப்படவேண்டும். வடக்கு, கிழக்கு மாநிலங்களில் சிங்களக் குடியேற்றம் உடனே நிறுத்தப்படவேண்டும்; வடக்கு, கிழக்கு மாநிலங்கள் அடங்கிய ஒரு சமஷ்டி ஆட்சிமுறை அமைக்கப்பட வேண்டும்' என்ற கோரிக்கைகளின் அடிப்படையில் 1956 தேர்தலுக்குப் பிறகு இலங்கைப் பிரதமர் எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயகாவுடன் செல்வநாயகம் பேச்சுவார்த்தை நடத்தினார். பண்டா - செல்வா ஒப்பந்தத்தில் வடக்கு, கிழக்கு மாநிலங்களில் நேரடித் தேர்தல் மூலம் பிரதேச சபைகள் அமைப்பது என்றும் இந்த இரு மாநிலங்களிலும் நிர்வாக மொழியாகத் தமிழைப் பயன்படுத்துவதுஎன்றும் முடிவு செய்யப்பட்டது.
சிங்கள இனவெறியர்கள் இந்த ஒப்பந்தத்தைத் கிழித் தெறிந்தனர். பின்னாளில் ராஜீவ்காந்தியை ஏமாற்றிய ஜெயவர்த்தனே அப்போது பண்டா - செல்வா உடன் படிக்கையை எதிர்த்து கண்டி யாத்திரை நடத்தி, சிங்கள இனவாதத்தை வெறியாக வளர்த்தார்.
இலங்கை முழுவதும் தமிழர்கள் தாக்கப்பட்டனர். கொழும்பில் இருந்து பத்தாயிரம் தமிழர்கள் அகதிகளாக் கப்பட்டு யாழ்ப்பாணம் அடைந்தனர். நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட பலர் சிறைப்பட்டனர்பண்டார நாயகா ஒரு புத்தத் துறவியால் படுகொலை செய்யப் பட்டார். இலங்கை இறையாண்மைக்கு உட்பட்டு மாநில சுயாட்சிக்கு மனுப் போட்ட முதல் ஒப்பந்தம் முறிந்துபோனது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி 1960-ல் நடைபெற்ற நாடாளு மன்றத் தேர்தலில் வென்றதும், சிங்களம் மட்டுமே ஆட்சி மொழி என்ற சட்டத்தை நடைமுறைப்படுத்தியது. யாழ்ப் பாணம், வவுனியா, மட்டக்களப்பு, திருகோணமலைப் பகுதிகளில் 1961 பிப்ரவரி மாதம் காந்திய வழியில் சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டது தமிழரசுக் கட்சி. ஈழமண்ணில் மக்கள் தழுவிய முதல் மகத்தான போராட்டமாக அந்த அறப்போர் மலர்ந்தது. சிங்கள அரசு, எமர்ஜென்சி பிறப்பித்தது. முதல்முறையாக ராணுவம் தமிழீழப் பகுதிகளில் நுழைந்து வேட்டை நடத்தியது. அரசின் அடக்குமுறை எல்லை மீறியது. எங்கே சமத்துவம் மறுக்கப்பட்டு அடக்குமுறை கட்டவிழ்த்து விடப்படுகிறதோ, அங்கே கிளர்ச்சியும் விடுதலைப் போராட்டமும் எழுச்சியுறுவது இயற்கை.
ஈழத் தமிழர்கள் இதயங்களில் தனிநாடு தாகம் பிறந்தது. செல்வநாயகம், 'தமிழரசு தபால் சேவை' என்று தமிழினம் தனக்கெனத் தபால் தலைகளை வெளி யிட வழிவகுத்தார். அவசர காலச் சட்டத்தின் கீழ் தமிழரசு கட்சி தடை செய்யப்பட்டது. தமிழ் நாடாளு மன்ற உறுப்பினர்கள் சிறையில் தள்ளப்பட்டனர். ராணுவம் தமிழ்ப் பகுதிகளில் நிலைகொண்டது. மக்கள் அச்சுறுத்தலுக்கு ஆளாயினர். 1965-ல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலின்போது, ஆட்சிக்கு எதிரான போராட்டங்களைக் கைவிட்டு, தமிழரசுக் கட்சி வேட்பாளர்களை நிறுத்திப் பதினேழு இடங்களை வென்றது. செல்வாவின் ஆதரவோடு ஐக்கிய தேசியக் கட்சி அதிகாரத்தில் அமர்ந்தது. டட்லி சேனநாயகா - செல்வநாயகம் ஒப்பந்தம் உருவானது. ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்தவும் தமிழர் - சிங்களரிடையே சமரசம் பேணவும் அமைக்கப்பட்ட ஆலோசனைக் குழுவில் செல்வா, பொன்னம்பலம் தொண்டமான், ஜெயவர்த்தனே போன்றோர் அங்கம் வகித்தனர். சிங்களரோடு சகோதரத்துவமும் சமவுரிமையும் இனி வாய்க்கும் என்று தமிழர் நம்பினர்.
டட்லி - செல்வா ஒப்பந்தத்தின்படி தமிழர் தம் தாய்மொழியை நிர்வாக மொழியாகப் பயன்படுத்த தமிழ்மொழி சிறப்பு விதிகள் சட்டம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இதைக் கடுமையாக எதிர்த்தது. புத்த பிக்குகளும் சிங்கள வெறியர்களும் கலவரத்தில் ஈடுபட்டனர். நாடாளு மன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டம், நடைமுறைக்கு வரவில்லை. டட்லி - செல்வா ஒப்பந்தம் கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. நாடாளுமன்ற ஜனநாயக முறையின் மூலம் இனப் பிரச்னைக்குத் தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையின் ஆணிவேர் அறுக்கப்பட்டது. இந்த இரண்டுஒப்பந்தங்களுக்கும் ஏற்பட்ட கதிதான் ராஜீவ் - ஜெயவர்த்தனே ஒப்பந்தத்துக்கும் ஏற்பட்டது. ஆயுத மேந்திய விடுதலைப்புலிகளின் தவறுகளை மட்டும் கணக்கில்கொண்டு இலங்கைத் தமிழர்களின் நியாயமான தேசிய இன உரிமைகளைப் புறக்கணிக்கும் மௌனப் பார்வையாளராக இந்தியா இருந்துவிட முடியாது.
சிங்களர்கள், சிங்கள பௌத்த தேசிய வாதத்தை ஒருபக்கமும் தமிழின ஒழிப்பு யுத்தத்தை மறுபக்கமும் கைக் கொண்டுள்ளவரை இனப் பிரச்னைக்கு ஒன்றுபட்ட இலங்கையில் தீர்வு எப்படி வரும்? 'சிங்களமே ஆட்சி மொழி; பௌத்தமே அரசு மதம், சிங்களர்களுக்கே இலங்கை தேசம்' என்ற நிலையில் சமத்துவம்எவ்விதம் கைகூடும்? சகோதரத்துவம் எவ்வழியில் வலுப்பெறும்? ஐனநாயக வழியில், சாத்விக நெறியில் அடையமுடியாத உரிமைகளை வேறெப்படித்தான் அடைவது? இளைஞர் களையும் பெண்களையும் சின்னஞ்சிறுவர்களையும் போரில் ஈடுபடுத்தி, எண்ணற்ற தமிழர்களை உயிர்பலி கொடுக்கும் விடுதலைப்புலிகளை விமர்சிப்பதுடன் நம் கடமை முடிந்துவிடுமா? சிங்கள அரசுக்கும் ஈழத் தமிழர் தலைவர்களுக்கும் இடையில் உருவான ஒப்பந்தங்கள் உருக்குலைந்ததால்தான், இலங்கை அரசின் மீது நிர்ப்பந்தம் செலுத்திய இந்திய - இலங்கை ஒப்பந்தம் காண ராஜீவ்காந்தி முன்வந்தார். விடுதலைப்புலிகளின் இமாலயத் தவறால் இழக்கக் கூடாத இளம் தேசியத் தலைவரை இந்தியா இழந்தது. அதற்காக லட்சக்கணக்கான இலங்கைத் தமிழர்கள் ரத்த நதியில் குளிப்பதை இன்னும் எவ்வளவு காலம் மன்மோகன் சிங் அரசுவேடிக்கை பார்க்கப் போகிறது?
தனி ஈழம் இந்திய அரசுக்கு உடன்பாடில்லை யெனில், அது தமிழருக்கு முன்வைக்கும் தீர்வுதான் என்ன? ஈழத் தமிழருக்கும் மலையகத் தமிழருக்கும் முஸ்லிம் தமிழருக்கும் ஏற்ற ஓர் உடன்பாட்டை இலங்கை அரசு உருவாக்க, அதன் மீது அதிகபட்ச அழுத்தத்தை இந்தியா செலுத்துவதற்கு ஏராளமான வாய்ப்புகள் உண்டு. முதலில் சிங்களப் பேரினவாதப் பிற்போக்கு சக்திகளின் பிடியிலிருந்து இலங்கை அரசு விடுபடவேண்டும். சிறுபான்மையினரின் அடிப்படை உரிமைகளுக்கு உத்தரவாதமளிக்கும் வகையில் அரசியலமைப்புச் சட்டம் மாற்றப்படவேண்டும். சுயநிர்ணய உரிமை அடிப்படையில் முழுமையான அதிகாரம்கொண்ட வடக்கு, கிழக்கு இணைந்த மாநிலம் சுயாட்சி பெறவேண்டும். கிழக்கிலுள்ள முஸ்லிம்களின் நலன்கள் பாதுகாக்கப்பட வழி காணவேண்டும். இவற்றோடு மலையகத் தமிழர்களுக்குரிய நியாயம் தேடும் தார்மீகப் பொறுப்பு இந்தியாவுக்கு நிச்சயம் உண்டு.
காடும் மேடுமாக இருந்த இலங்கைத் தீவின் தெற்குப் பகுதியைத் தேயிலை, காபி, ரப்பர் தோட்டங்களின் வளம் செறிந்த நிலமாக மாற்ற ரத்தமும்வியர்வையும் சிந்தியவர்கள்தான், இங்கிருந்து வயிற்றுப் பிழைப்புக்காக இலங்கை சென்று சீரழிந்த மலையகத் தமிழர்கள். வெள்ளையர் ஆதிக்கத்திலிருந்து விடுபட்டு இலங்கை 1948-ல் விடுதலை அடைந்தவுடன், '120 ஆண்டுகளுக்கு முன்புதான் இவர்கள் இலங்கை மண்ணில் குடியேறினர்' என்று சொல்லி, சிங்கள அரசு மலையகத்தமிழர் களின் குடியுரிமையைப் பறித்தது. இதை ஈழத்தமிழர் பெரிதாக எதிர்க்கவில்லை.தமிழி னத்துக்கும் ஒற்றுமைக்கும் என்றைக்கு சம்பந்தம் இருந்தது? மலையகத் தமிழர்கள் குடியுரிமை பறிக்கப்பட்டபோது, அரசுக்கு உடந்தையாக இருந்த ஜி.ஜி.பொன்னம்பலம் அமைச்சரானார். ஒரு கணத்தில் மலையகத் தமிழர்கள் நாடற்றவர் களாக்கப்பட்டனர். அவர்களுக்காக ஆதரவுக் குரல் கொடுத்த செல்வா, பொன்னம்பலத்தின் தமிழ் காங்கிரஸிலிருந்து வெளியேறினர்.புதிதாக தமிழரசுக் கட்சி உதயமானது. ஆனாலும், மலையகத் தமிழர் நலனுக்காக யாரும் போராட் டத்தை நடத்தவில்லை. இன அடிப்படையில் ஒதுக்கப்பட்டு, வர்க்க அடிப்படையில் சுரண்டப்பட்டு, மனித உரிமைகள் மறுக்கப்பட்ட ஒரு கூட்டம்தான் தோட்டத் தொழிலாளர்கள் என்று மிகச் சரியாகக் கணித்திருக்கிறார் சமுத்திரன். புலிகளுக்குக் குரல் கொடுக்கும் தமிழகத்து இனவுணர்வாளர்கள்கூட மலையகத் தமிழரை மறந்துவிட்டதுதான் கொடுமை. சொல்லப்போனால், மலையகத் தமிழர்கள்தான் மிக நெருக்கமான தொப்புள்கொடி உறவுகள்.
ஈழத் தமிழர்களுக்காக இல்லாவிடினும் இலங்கையில் குடியேறி, எந்த உரிமையுமின்றி வாழ்வே போராட்டமாக வறுமையில் வீழ்ந்து கிடக்கும் இந்தியத் தமிழர்களின் நலன் காக்க வாவது மத்திய அரசுகள் மௌனத்தைக்கலைக்க வேண்டாமா? சாஸ்திரி - சிரிமாவோ ஒப்பந்தத் தினால் அகதிகளாக இந்திய மண்ணில் வந்து இறங்கிய ஐந்து லட்சத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் இன்று எந்த நிலையில் இருக்கின்றனர் என்று யாராவது கவலைப்பட்டதுண்டா? புலிகள் போராடி ஈழத்தைப் பெற்றுவிட்டாலும், சிங்களர்களுக்கு நடுவே சீரழியும் ஒன்பது லட்சம் தோட்டத் தொழிலாளர்கள் இரண்டாம் தரக் குடிமக்களாகத்தானே சிங்கள அரசால் கொடுமைக்கு ஆளாவார்கள்? இந்தியா, பாகிஸ் தான் பிரிவினையின்போது ஜின்னா எல்லா இந்திய முஸ்லிம்களையும் ஏற்க முன்வரவில்லை என்பது தானே வரலாறு! ஈழம் தனிநாடாகிவிட்டால், இந்த ஒன்பது லட்சம் தமிழர் ஈழம் செல்வதா? இந்தியாவுக்குத் திரும்புவதா? சிங்களரின் தோட்டங்களில் தொடர்ந்து சிறுமைப்படுவதா? இந்தக் கேள்விகளுக்கெல்லாம் சரியான பதிலை யார் தருவது?
ஈழத் தமிழர், தோட்டத் தமிழர், தமிழ் முஸ்லிம் என்று பிரிந்து கிடக்கும் அனைவருக்கும் ஒன்றுபட்ட இலங்கையில் சிங்களருக்குச்சமமான உரிமைகள் சாத்தியப்படுமெனில், இந்தியஅரசு அதற்கு முயன்று பார்க்கட்டும். ஆனால்,சிங்கள பௌத்த வெறியர்கள் அந்த அமைதியான சூழலுக்கு அடித்தளமிடுவார்களா என்பதுதான் கேள்வி. தமிழரைத் தென்னிந்திய ஆக்கிரமிப்பாளர்களின் வாரிசுகளாக,சிங்கள புத்த நாகரிகத்தை விருந்தாளிகளாகக்கருதி நெஞ்சில் வஞ்சம் வளர்த்துவிட்டபெரும்பான்மை சிங்களர்களோடு சமத்துவமும், சகோதரத்துவமும் காண்பது அரிதினும் அரிது என நம் ஆட்சியாளர்கள் உணரட்டும். அது சரி... ஈழத்தமிழர்கள் ரத்தத்தில் சிவந்து கிடக்கும் கிளிநொச்சியில் வான்வழி, நீர்வழி, தரைவழி என்று தொடர்ந்து தாக்குதல் நடத்தும் சிங்கள ராணுவம் போர் நிறுத்தம் செய்ய மத்திய அரசு நிர்ப்பந்திக்க வேண்டும் என்று தமிழ்நாடு சட்டமன்றம் ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றியதே... முதல்வர் கலைஞர் தலைமையில் பல கட்சித் தலைவர்கள் பாரத பிரதமரைச் சந்தித்துப் போர் நிறுத்தம் காண்பதற்கு உடனே பிரணாப் முகர்ஜியை இலங்கைக்கு அனுப்பி வைக்கும்படி வற்புறுத்தினார்களே... அந்தத் தீர்மானத்துக்கும் வற்புறுத்தலுக்கும் மன்மோகன் சிங் அரசு தந்த மரியாதை என்ன?
ஈழத்திலுள்ள தமிழர்கள் அனைவரும் ஒருவர் விடாமல் வெறிபிடித்த சிங்கள ராணுவத்தின் வெடிகுண்டு வீச்சில் உயிரிழந்து ஓர் இனமே முற்றாக அழித்தொழிக்கப்பட்ட பின்பு அந்திமக் கடனாற்ற நம் அயல்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி அழுத கண்ணீருடன் இலங்கை செல்ல முடிவெடுத்துவிட்டாரோ! மத்திய அரசின் மௌனத்தில் ஆயிரம் அர்த்தங்கள் மறைந்து கிடக்கின்றன. போகட்டும்... நம் தலைவர்கள் அனைவரும் ஏன் தொடர்ந்து மன்மோகன் சிங்கையும் சோனியா காந்தியையும் இலங்கைப் பிரச்னையில் விரைந்து செயலாற்ற அதிகபட்ச நிர்ப்பந்தம் தராமல் நின்றுவிட்டார்கள்? திருமங்கலம் இடைத்தேர்தல் வந்துவிட்டது. நாடாளுமன்றத் தேர்தல் வரவிருக்கிறது. இப்போது இலங்கைத் தமிழர் பிரச்னையா அவர்களுக்கு முக்கியம்?!
நன்றி: ஜூனியர் விகடன், Jan 07, 2009
Comments