முதன் முதலில் இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்படவேண்டும் என்று வலியுறுத்தி உண்ணாவிரதத்தைத் துவங்கி அதன்மூலம் தீவிரமாக ஒரு பிரச்சாரத்தை ஆரம்பித்தீர்கள். அதற்குப் பிறகு பல்வேறு போராட்டங்களிலும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி பங்கேற்றது. இன்றைக்கு ஒரு கட்டம் வந்துள்ளது. கிட்டத்தட்ட இதற்குமேல் இலங்கையில் போர் நிறுத்தம் செய்ய இந்திய அரசு வலியுறுத்தாது என்பது போன்ற ஒரு சூழ்நிலை உருவாகியுள்ளது. இந்தப் பிரச்சனையை இதற்கு மேல் எப்படி அணுகலாம
|
ஒரு இனரீதியிலான அணுகுமுறையை இப்பிரச்சனையில் கையாளவேண்டும் என்கிற எண்ணம் இருக்கிறதா?
இது இனப்பிரச்சனை என்பதில் சந்தேகமே இல்லை. இலங்கையிலும் சரி வேறுபல நாடுகளிலும் இனச் சிக்கலாகத்தான் அது எழுகிறது. ஆனால், இதைவிட அதிகமான இனங்கள் ஒரே நாட்டில் வாழுகிற நாடுகளும் இருக்கின்றன. வாழ முடியாமல் பிரிந்து சென்றுவிட்ட நாடுகளும் இருக்கின்றன. உலகத்திற்கே ஜனநாயகத்திற்கு வழிகாட்டி என்று சொல்லக்கூடிய இங்கிலாந்து நாட்டிலே அயர்லாந்து- எத்தனையோ ஆண்டுகளுக்குப் பிறகு ஸ்காட்லாந்து தனியாகப் பிரிய வேண்டும் என்று பிரிகிறார்கள். இந்தோனேஷியாவில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரையில் ஒன்றாக இருந்த திமூர்... சுனாமி பாதிப்பிற்குப் பிறகு தனியாகப் பிரிந்துள்ளது. அது ஒரு பெரிய நாடுகூட இல்லை... சிறு குட்டித் தீவு. அது ஒரு தனி நாடாகப் பிரித்து வழங்கப்பட்டிருக்கிறது. அதேபோல பிளவுபட்டிருந்த ஜெர்மனி இப்போது ஒன்றாகவும் ஆகியிருக்கிறது. பிளவுபட்டுக்கிடந்த வியட்நாம் இப்போது ஒன்றாகவும் ஆகியிருக்கிறது. ஆகவே, இரண்டிற்கும் உலகம் முழுமையிலும் உதாரணங்கள் இருக்கின்றன. எனவே அதற்கு ஒரே பதில் என்பது, மனிதர்களுடைய வாழ்வுரிமை, அரசியல் உரிமைகள் ஆகியவற்றைச் சமமாகப் பாவித்து, அவற்றை உறுதி செய்யக்கூடிய அரசியல் தீர்வு என்பதுதான் சேர்ந்து வாழ்வதா அல்லது பிரிந்து போவதா என்பதைத் தீர்மானிக்கும்.
இப்போது இந்தப் பிரச்சனையைப் பொறுத்தவரை, ஈழத் தமிழரின் நலன், உரிமை ஆகியவற்றைவிட விடுதலைப் புலிகள் என்கின்ற ஒரு பார்வை வேறுபட்டதாகக் காட்டப்பட்டு, அதன் அடிப்படையில் தமிழ்நாட்டில் ஒரு ஒத்த கருத்து, ஒத்த அழுத்தம் ஏற்படுவதற்கு ஒரு பெரும் தடையாக உள்ளதையும் தாங்கள் உணர்ந்துள்ளீர்கள் அல்லவா? அதை எப்படிப் பார்ப்பது? எப்படிச் சமாளிப்பது?
நேற்றைக்குக்கூட தமிழக முதலமைச்சர் அதை மேற்கோள் காட்டியிருக்கிறார். இலங்கையில் சிறுசிறு குழுக்களாக பலவகைப் போராளிகள்- விடுதலையை முன்வைத்துத்தான் போராடினார்கள்.ஆனால் அவர்களுக்குள் இருந்த பகைமை காரணமாக ஒருவரை ஒருவர் பகைத்துக்கொண்டு, அது சில நேரங்களில் கொலைகளில் போய் முடிந்தது. இது கடந்தகால வரலாறு, அதை யாரும் மறைக்கவோ மறுக்கவோ முடியாது. நடந்தது என்பது உண்மை. இன்னும் மோசமானது என்னவென்றால், அது தமிழ் மண்ணிலேயே நடந்துவிட்டது. எனவே அது ஒரு ஆழமான காயத்தையும், பலவிதமான அழுத்தமான வெறுப்புக்களையும் கூட பலர் மத்தியில் உருவாக்கியிருக்கிறது.
ஆனால், இப்போது இலங்கையில் நடந்துகொண்டிருப்பது அந்த பயங்கரவாதிகளை, கொலைகாரர்களைத் தேடித் தண்டிப்பதற்கான யுத்தம் அல்ல. இதைக் காரணம் காட்டி தமிழ் மொழி பேசும் இலங்கைக் குடிமக்களைக் கொன்று அழிக்கும் போர் நடக்கிறது. இதைப் பிரித்துப் பார்க்க முடியாமல் பழையபடியும், அன்று நடந்தது என்று 1991இல் நடந்தது அல்லது அதற்குப் பிறகு நடந்தவைகளை உதாரணம் காட்டி, ராஜீவ் காந்தி அல்லது பத்மநாபா அல்லது அமிர்தலிங்கம் வரையில் பட்டியல் போட்டுச் சொல்லலாம். அப்படிச் சொல்லுவதிலே தவறுகூட இல்லை. ஆனால் அதற்காகவா இன்றைய ராஜபக்ச போராடிக்கொண்டு இருக்கிறார். ராஜீவ் காந்தியினுடைய உயிர் போய்விட்டது என்பதற்காகத் துடித்து ராஜபக்ச இன்றைக்குப் போர் நடத்துகிறார் என்று சொன்னால், ராஜீவ் காந்திக்காகத் துடித்துப் போர் நடத்த வேண்டிய இந்திய அரசு, 1991இல் இருந்து இதுவரை ஏன் நடத்தவில்லை என்ற கேள்விக்கும் பதில் சொல்லவேண்டியது இருக்கிறது அல்லவா? எனவே முதலில், பிரபாகரன் கொலைகாரரா இல்லையா என்பதைவிட ராஜீவ் காந்தியின் உண்மையான நண்பர்கள் நீங்கள்தானா என்பதைச் சோதித்தாக வேண்டும். ஏனென்றால் 1991லிருந்து 2009 வரையில், அவரைக் கொன்றதாக இவர்கள் சந்தேகப்படுகிறவர்களைப் பிடிப்பதற்கோ தண்டிப்பதற்கோ இதுவரை எதுவும் செய்யவில்லை.
இலங்கையில் உள்ள அரசு அங்குள்ள தமிழ் மக்களைக் கொல்வதற்காக ஒரு போரை நடத்துகிறது. சொந்தக் குடிமக்கள்மீது இராணுவத்தையும் விமானத்தையும் ஏவக்கூடிய ஒரு அரசு எத்தகைய அரசாக இருக்கும் என்பதற்கு ஒரு இலக்கணம் சொல்வது ஒன்றும் கடினமல்ல. அது ஒரு பாசிஸ்ட்டு அரசாங்கம். இனவெறி அரசாங்கம். இதற்கு ஆதாரம் அல்லது பெரிய ஆய்வுகள் எல்லாம் தேவையில்லை. எனவேதான் இவ்வளவுபேர் சொன்ன பிறகும் போர் தொடர்கிறது. முதலில் கிளிநொச்சியைப் பிடித்த பிறகு என்றார்கள்... பிறகு முல்லைத்தீவைப் பிடித்த பிறகு என்கிறார்கள்... இதற்கு அடுத்தபடியாக பிரபாகரன் எங்கோ ஒளிந்திருக்கிறார். அவரைத் தேடிக்கொண்டு இருக்கிறோம் என்பார்கள். எனவே ஒரு முடிவற்ற, தொடர் கதையாக காரணங்களைக் காட்டி அவர்கள் தமிழ் மக்களை அழித்து ஒழிக்க முற்பட்டிருக்கிறார்கள். அதைப் புரிந்துகொண்டு அதைத் தடுப்பதற்கு நாம் முயற்சிக்க வேண்டும். எனவே விடுதலைப் புலிகளையும் தமிழ் மக்களையும் பிரித்துப் பார்க்கக்கூடிய ஒரு போக்கு வேண்டும்.
விடுதலைப் புலிகள் பல தவறுகளை அந்த இயக்கத்தின் போக்கிலே செய்திருக்கிறார்கள் எனறு கருதினால், தமிழ் மக்களையும் வைத்துத்தான் அதற்குத் தீர்ப்புக் கூற வேண்டும்.
தாங்கள் கூறும்போது ஒன்றைக் குறிப்பிட்டீர்கள். தற்போது இந்திய அரசை வலியுறுத்தி ஒரு போர் நிறுத்தம் என்பதெல்லாம் சாத்தியமில்லை, காலம் கடந்துவிட்டது என்று கூறுகிறீர்கள். தேர்தல் மூலம்தான் இதற்குப் பதிலளிக்க வேண்டும் என்று நீங்கள் கூறியுள்ளீர்கள். ஆனால், அந்தத் தேர்தலில் கூட அப்படி ஒரு தெளிவான தீர்ப்பைத் தமிழக மக்கள் வழங்குவதற்குச் சாத்தியம் உள்ளதா? ஏன் இந்தக் கேள்வி என்றால், தாங்கள் தற்போது அ.இ.அ.தி.மு.க.தலைமையிலான ஒரு கூட்டணிக்குச் சென்றுள்ளீர்கள். ஆனால் அதனுடைய பொதுச் செயலர் அவர்கள், இப்பிரச்சனையில் தாங்கள் எடுத்துள்ள நிலைக்கு நேர் எதிரான ஒரு நிலையை எடுத்துள்ளார். இப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில் எப்படித் தமிழ்நாட்டு மக்கள் ஒரு தெளிவான தீர்ப்பை அளிக்க முடியும் என்று நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள்?
மாநில அரசியலைப் பொறுத்தவரையில் நீங்கள் சொல்வது முழுக்க உண்மை. இங்கு ஒரு தெளிவான தீர்ப்பு வரும் என்று சொல்ல முடியாது. ஆனால், இலங்கையோடு உறவா அல்லது நடவடிக்கையா என்பதைத் தீர்மானிக்க வேண்டியது மத்திய அரசு. மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதைத் தீர்மானிக்கப்போவது தமிழகத்தில் உள்ள ஒரு கட்சியோ அல்லது இரண்டு கட்சிகளோ அல்ல. ஏனென்றால், இது 31 மாநிலங்களில் ஒரு மாநிலம். எனவே இந்தியா முழுவதிலும் இடதுசாரிகளும் முற்போக்காளர்களும் மதசார்பற்ற சக்தியினரும் எந்த அளவில் வெற்றி பெறுகிறார்களோ அதை வைத்து இலங்கைக்குக் கட்டாயம்- அவர்களை நேர் வழிக்குக் கொண்டுவருவதற்கு எல்லா நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.
அப்படிப்பட்ட ஒரு நிலைக்கு இன்னும் சற்றேறக்குறைய நான்கு மாதங்கள் உள்ளன. இந்த இடைப்பட்ட காலத்தில், தாங்கள் (இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி) உட்பட, தமிழர்களின் நலன் காப்பாற்றப்பட வேண்டும் என்றும் பாதுகாப்பப்பட வேண்டும் என்றும் கூறக்கூடிய இயக்கங்களும் கட்சிகளும் எப்படிப்பட்ட அடுத்தகட்ட நடவடிக்கையை எடுக்கலாம் கருதுகிறீர்கள்?
மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகப் பிரச்சாரம் செய்ய வேண்டும். ஏனெனில், நான் பல நண்பர்களுடன்- இலங்கைக்கு உதவவேண்டும் என்பதில் ஆர்வமாக உள்ளவர்களுடனும், தமிழ் மக்களுடைய உரிமைகளை மீட்பதற்காக நாங்கள் தியாகம் செய்யத் தயார் என்று சொன்னவர்களுடனும், நீங்கள் குறிப்பிட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலர் அவர்களிடமும்கூட- நான் இதை விவாதித்தேன்.
”விடுதலைப் புலிகள் செய்த சில காரியங்களை எங்களால் மறக்க முடியவில்லை. நீங்கள் அதைத் தாண்டி இலங்கைத் தமிழ் மக்களுக்குப் பாதுகாப்புக் கொடுக்க வேண்டும் என்று சென்ற அளவிற்கு எங்களால் வர இயலவில்லை. ஏனென்றால் எங்கள் கண் முன்னால் நடைபெற்ற கொலைகள் மட்டுமல்ல, அவர்கள் இங்கே இருந்த பயங்கரவாதிகளுக்கு உதவினார்கள் என்பதற்கும் அவர்களோடு தொடர்புகொண்டு ஆயுதங்கள் கொடுத்தார்கள் என்பதற்கும் எங்களிடம் ஆதாரங்கள் இருக்கின்றன. எனவே அதிலிருந்து அவர்கள் திருந்திவிட்டார்கள் என்பதை எங்களால் ஒப்புக்கொள்ள முடியவில்லை.
இரண்டாவதாக இலங்கையில் உள்ள தமிழர்களிலே பல கட்சியினரும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் இருக்கிறார்கள். ஆனால், இவர்கள் எடுக்கிற முடிவை விடுதலைப் புலிகள் ஏற்க மறுத்துவிட்டால், இவர்களால் அதை நிறைவேற்ற முடியாத நிலையில் இருக்கிறார்கள். எனவே, இறுதி முடிவை எடுப்பது விடுதலைப் புலிகளாகத்தான் இருக்கிறார்கள். எனவே, அவர்களிடம் மனமாற்றம் ஏற்பட்டுவிட்டது, அரசியல் தீர்விற்கு ஒப்புக்கொள்ள வருகிறார்கள் அல்லது யார் சொன்னால் கேட்பார்கள் என்பதற்கான பதிலை நீங்கள் கொடுத்தால் நாங்கள் நிலையை மாற்றிக்கொள்ளத் தயார்.
ஏனென்றால் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகத்தான் ராஜீவ் காந்தி ஒப்பந்தத்தையும் போட்டார், மாநில அரசை அமைப்பதற்கும் ஒப்பந்தங்கள் போடப்பட்டு- அமைக்கப்பட்டது; தேர்தல் நடத்தப்பட்டது. ஆனால் அது கலைக்கப்பட்டதற்கும், இதை வேட்டையாடுவதற்கே காரணமாகவும் இவர்கள்தான் (புலிகள்) இருந்தார்கள்" என்று வாதங்களை அவர்கள் முன்வைக்கிறார்கள்.
இந்த வாதங்களைச் சந்திப்பதில், பதில் கூறுவதில் எங்களுக்கு ஒரு சிரமம் இருக்கிறது. ஏனென்றால் விடுதலைப் புலிகள் சார்பில் நாங்கள் வாதிட முடியாது. விடுதலைப் புலிகள் இதுதான் நினைக்கிறார்கள் என்பதைத் தெரிந்துகொள்வதற்கும், அவர்களைத் தொடர்புகொள்வதற்கும் எங்களுக்கு வாய்ப்புக்கள் இல்லை. எனவே, இதற்கு விடுதலைப் புலிகள் தரப்பில் இருந்து- இப்படிப்பட்ட ஒரு சந்தேகம், தேவையற்ற ஒரு விவாதம் நீடிக்கிறதே, இது நீடிப்பதால் அது இலங்கைத் தமிழ் மக்களுக்கு பெற வேண்டிய ஆதரவைப் பெற விடாமல் கெடுத்துக்கொண்டு இருக்கிறதே என்று கருதி- ஏதாவது ஒரு வழியில் இந்தச் சந்தேகங்களைப் போக்குவதற்கு உதவினால், அது எங்களுக்குப் பேருதவியாக இருக்கும்.
மாறாக நான் இப்போது விடுதலைப் புலிகள் சார்பிலே வாதிடுவது என்பதை ஏற்க மாட்டார்கள். என்னதான் சொன்னாலும், நீ என்ன தீர்மானிக்கப்போவது, இறுதியில் தீர்மானிக்கப்போவது பிரபாகரன்; அவருக்கு மாறுபட்ட கருத்தைச் சொன்னால் உன்னையும்கூடக் கொன்றுவிடுவார்கள் என்று நேரில் சொல்கிறார்கள். டெல்லியில் உள்ள தலைவர்களும் என்னிடம் அப்படிச் சொன்னார்கள். தமிழ்நாட்டிலே இருக்கிற தலைவர்களும் அதைச் சொல்கிறார்கள். ஆளும் கட்சியினுடைய தலைவர்கள்; பிரதமர் உட்படச் சொல்கிறேன்.
இப்பிரச்சனையில் தமிழக முதலமைச்சர், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் இதுவரை எடுத்து வரும் நடவடிக்கைகள், அணுகுமுறைகள் எல்லாம் உங்களுக்கு ஏற்புடையதாக, திருப்தியளிப்பதாக இருக்கிறதா?
முதல் நாளில் இருந்து நான் சொல்லி வருகிறேன். சர்வ கட்சிக் கூட்டத்திலும் சொன்னேன். சட்டசபைத் தீர்மானம் வந்தவுடனும் சொன்னேன். டெல்லிக்கு அவருடன் சென்றேன். மனிதச் சங்கிலியிலே பங்கெடுத்தேன். அப்போதும் சொன்னேன். நம் கையில் ஒரு ஆயுதம் இருக்கிறது. அந்த ஆயுதத்தை மட்டும் பிரயோகிக்காமல், மீதி எல்லா சண்டைகளையும் போடுவது என்பது காலம் தாழ்த்துவதற்கு உள்ள ஒரு வழியே அன்றி, தீர்ப்பதற்கு உள்ள ஒரு வழி அல்ல. இதை முதலமைச்சரிடமும் நேரில் கூறியிருக்கிறேன். எழுதியும் இருக்கிறேன். மீண்டும் நூறு மேடைகளிலும் சொல்லுவேன்.
திராவிட முன்னேற்றக் கழகம் முதன் முதலாக 1956இல் ஒரு தீர்மானம் நிறைவேற்றியது. அந்தத் தீர்மானத்தை முன்மொழிந்ததே முதலமைச்சர்தான். அப்போது அவர் முதலமைச்சரும் இல்லை- மத்திய மந்திரி சபையில் அவரது கட்சி பங்கேற்கவும் இல்லை. இப்போது 53 ஆண்டுகள் கழிந்த பிறகு, மத்தியிலும் அவரது கட்சி ஆட்சியில் இருக்கிறபொழுது, மாநிலத்திலும் அவர் முதலமைச்சராக நான்காவது தடவையாக வந்துவிட்ட பிறகும், தமிழகமே திரண்டு அவருக்குப் பக்கபலமாக நின்று- மனிதச்சங்கிலி, சட்டப்பேரவைத் தீர்மானம் ஆகியவற்றை நிறைவேற்றிய பிறகும், இவரது கட்சி இருக்கிற மத்திய மந்திரி சபையையே 'போரை நிறுத்து' என்ற இரண்டு சொற்களைச் சொல்லவைக்க முடியவில்லை என்றால், அவர்தான் ஆழமாக யோசிக்க வேண்டும். எனவே, தமிழ் மக்களுக்காக நான் என்ன தியாகத்தையும் செய்யத் தயாராக இருக்கிறேன் என்று அவர் 1956இல் நிறைவேற்றிய தீர்மானம் உண்மையானால், இப்போது தியாகத்தைச் செய்ய வேண்டும்.
அவர் உயிரையாவது கொடுக்கிறேன் என்கிறாரே ஒழிய, பதவியை விடுகிறேன் என்று சொல்லவில்லை. எனவே நாம் சொன்னால் அவர் அதை ஏற்பாரா என்பது தெரியவில்லை. தமிழ் மக்களுக்கு உதவக்கூடிய தியாகம் எது என்று அவர் நினைக்கிறாரோ அதைச்செய்ய வேண்டும்.
இப்போது இருக்கிற பிரச்சனையில், சமீபத்தில் அங்கே சென்ற இந்திய அயலுறவுச் செயலர் சிவசங்கர் மேனன் என்ன ராஜபக்சவிடம் பேசினார் என்பது குறித்து அங்குள்ள இந்தியத் தூதர் ஒரு அறிக்கையை வெளியிட்டார். அதில், தமிழர்கள் அமைதியுடனும் கெளரவத்துடனும் வாழக்கூடிய ஒரு நிரந்தர அரசியல் தீர்வை பேச்சுவார்த்தையின் மூலம் விரைவில் காண வேண்டும் என்று அவர் (சிவசங்கர் மேனன்) ராஜபக்சவிடம் வற்புறுத்தியதாகக் கூறியிருக்கிறார். ஆனால், தாங்கள் கூறியபடி, இந்த ராஜபக்ச அரசு, இப்படி சொந்த நாட்டு மக்கள் மீதே குண்டு வீசிக்கொண்டு இருக்கக்கூடிய ஒரு அரசாக உள்ள நிலையில் - இதற்கு முன்பிருந்த அரசுகளும்கூட இதிலிருந்து மாறியிருந்தது வித்தியாசமாக இருந்தார்கள் என்று கூறமுடியாது என்றாலும் கூட- அரசியல் தீர்வு; அதுவும் பேச்சுவார்த்தையின் மூலம் ஒரு அரசியல் தீர்வு என்பது சாத்தியமானது என்று நீங்கள் கருதுகிறீர்களா?
இந்திய நாடு உறுதியாக நின்று வற்புறுத்தினால் அது சாத்தியம். இல்லை என்றால் அதனுடைய விளைவுகளை இலங்கை சந்திக்க நேரிடும் என்ற இரண்டு சொற்களைச் சொல்ல வேண்டும். ஆனால், போரை நிறுத்து என்பதைக் கூடச் சொல்லாதவர்கள் அதைச் சொல்வார்களா என்பது சந்தேகம். எனவேதான் இந்த அரசியல் தீர்வையும் வலியுறுத்தக்கூடிய ஒரு ஆட்சி இந்தியாவில் அமைய வேண்டும். இடதுசாரிகள் இருந்தால் அன்றி அந்த வலியுறுத்தல் வராது. இதை இந்திய மக்கள் தெரிந்துகொள்ள வேண்டும், தமிழக மக்களும் புரிந்துகொள்ள வேண்டும்.
அந்த அறிக்கையிலேயே மற்றொன்று கூறப்பட்டுள்ளது. ராஜீவ் காந்தி- ஜெயவர்த்தனே ஒப்பந்தத்தின் அடிப்படையிலான 13ஆவது அரசமைப்புத் திருத்தத்தின் அடிப்படையில் அதிகாரப் பரவல் வழங்கப்பட்டு அந்தத் தீர்வு காண வேண்டும் என்று அதில் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளதே?
இந்தப் பொழிப்புரை, விளக்கவுரை அனைத்துமே அர்த்தமற்றது. போரை நிறுத்தாமல், உனக்கு பிரயாணி போடப்போகிறேன், உனக்கு நளபாகம் சமைக்கப்போகிறேன் என்று பேசுவதெல்லாம், வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது மாதிரி ஆகும். கொல்வதை முதலில் நிறுத்த வேண்டும். குண்டு போடுவதை நிறுத்த வேண்டும். இதையே நிறுத்தாதவன், அங்கே ஆட்சியமைத்து அரியணை அமைத்து நம்மைத் தூக்கி உட்கார வைத்து மாலை போடுவான் என்பதை எல்லாம் பேசுவது என்பதே வெட்டிப்பேச்சு. இது இந்திய மக்களை ஏமாற்றுவதற்காக இந்திய அரசு நடத்துகிற நாடகம்.
இந்தப் பிரச்சனையில் தமிழ்நாடு இன்றைக்கு புறக்கணிக்கப்பட்டுவிட்டது என்றுகூடக் கூறலாம். இந்நிலையில் இங்குள்ள அரசியல் கட்சிகளும், தங்களைப் போன்ற தலைவர்களும் ஐ.நா.வை அணுகுவது அல்லது மற்ற உலக நாடுகளை நேரடியாக அணுகுவது போன்ற சாத்தியக்கூறுகள் ஏதேனும் உள்ளதா?
முயற்சிக்க வேண்டும். நாம் இதுவரையில் தமிழ்நாட்டிற்கு உள்ளேயே குரல் எழுப்பிக்கொண்டு இருந்துவிட்டோம். உலகத்தில் உள்ள மனித உரிமைக் கழகங்கள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், பிற நாட்டு அரசியல் தலைவர்கள், அனைவரையும் தொடர்பு வைத்து பிறர் வெளியில் இருந்தும் குரல் கொடுக்க வைக்க வேண்டும். காஸாவிலே குண்டு போடாதே என்று எழுந்த குரல், இலங்கையிலே போடாதே என்று எழவில்லை என்பதைத் தமிழர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
தற்போது ஏற்பட்டுள்ள உலகளாவிய பொருளாதாரப் பின்னடைவு இந்தியாவை நிதி ரீதியாகவும் உற்பத்தி ரீதியாகவும் ஏற்றுமதி ரீதியாகவும் பாதித்துள்ளது. இப்படிப்பட்ட ஒரு சூழலில் மூன்றாவது அணி என்கின்ற ஒரு அணியை உருவாக்குவதில் ஆழமாக நீங்கள் தீவிரம் காட்டி வருகிறீர்கள். தேர்தலிற்குப் பிறகு மூன்றாவது அணியின் தலைமையில் மத்தியில் அரசு அமைந்தால் பொருளாதாரப் பின்னடைவை எந்த அளவில் எந்த அடிப்படையில் சந்திப்பீர்கள்?
இது மிக எளிதான காரியம். இன்றைக்கே கூட ஒரு இடதுசாரி அரசாங்கம் அல்ல. தேசப்பற்றுள்ள ஒரு தேசியவாதியின் தலைமையில் ஒரு அரசு அமையுமானால்- ஒரு நேஷனலிஸ்ட் அரசு.
நேஷனலிஸ்ட் என்று சொல்லுகிறபோது இன்னொரு அடைமொழியையும் சேர்க்க வேண்டியிருக்கிறது; ட்ரூ நேஷனலிஸ்ட் (True Nationalist)- அவர் சோசலிஸ்டாக இருக்க வேண்டாம். கம்யூனிஸ்டாக இருக்க வேண்டாம். எந்த இஸ்டும் வேண்டாம்- இந்திய நாட்டின் நலனைத் தவிர வேறு எதையும் நினைக்க மாட்டேன் என்று அவர் நினைப்பாரானால், இந்தியாவில் இன்றைக்குள்ள, ஏற்கெனவே கட்டப்பட்டுள்ள பொதுத்துறைத் தொழிற்சாலைகள், வங்கிகள், ஆயுள் காப்பீட்டுக் கழகங்கள், சுரங்கங்கள், இந்திய விவசாயம் ஆகியவற்றை இன்றுள்ள நிலையில் இருந்து ஒரு 10 விழுக்காடு மேலே முன்னேறக்கூடிய அளவிலே முன்னுக்குத் தள்ளினாலும், இந்த நெருக்கடிகள் அமெரிக்காவை பாதித்திருப்பதைப்போல இந்தியாவை பாதிக்காது.
அமெரிக்கப் பொருளாதாரம் முழுக்க முழுக்க ஏற்றுமதி இறக்குமதியை அடிப்படையாகக்கொண்ட பொருளாதாரம். பங்குச்சந்தையையும் சூதாட்டத்தையும் அடிப்படையாகக்கொண்ட பொருளாதாரம். இந்தியப் பொருளாதாரம் தொடக்கக் காலத்தில் இருந்து -இன்றும்தான்- சிறிய சிறிய விவசாயிகளை நம்பி அமைந்துள்ளது. இதை நம்பிக் குடும்பங்கள் வாழ்கின்றன. அவர்களுக்கும் இந்தப் பங்குச்சந்தை சரிவிற்கும் சம்பந்தமே இல்லை. எனவே, 80 விழுக்காடு இந்திய மக்கள் பங்குச்சந்தை இல்லாமல் போனாலும் கவலைப்பட மாட்டார்கள். காய்கறிச் சந்தை மட்டும்தான் இருக்க வேண்டும். ஆகவே, அமெரிக்கப் பொருளாதார நெருக்கடியானது இந்தியாவை நேரடியாகப் பாதிக்க வழியில்லை.
பொதுத்துறை இந்த நெருக்கடி காலத்திலும் லாபம் சம்பாதித்து மத்திய அரசிற்குத் தந்துகொண்டு இருக்கிறது. அவர்கள் யாரும் நெருக்கடி பற்றி இப்போது அறிவிக்கவில்லை. லெமான் பிரதர்ஸ் திவாலாகி இருக்கிறது. இந்தியன் வங்கியோ ஸ்டேட் வங்கியோ திவாலாகவில்லை. மாறாக உலகில் மூன்றாவது இடத்திற்கு உயர்ந்திருக்கிறது. எனவே நம்முடைய பொதுத் துறைகள் வலிமையுள்ளவை என்பது நிரூபிக்கப்பட்டுவிட்டது. அவைகளை முறைப்படுத்த வேண்டும். அவைகளின் பங்குகளை விற்கிறேன் என்று கூறும் மந்திரிகளை முதலில் வீட்டிற்கு அனுப்ப வேண்டும்.
உலகளாவிய ஒரு வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ள ஒரு நாடு, உலகளாவிய பொருளாதாரத்தில் பங்கேற்று வந்துள்ள ஒரு நாடு, சற்றேறக்குறைய 1992க்குப் பிறகு 17 ஆண்டு காலமாக நாம் அதில் ஈடுபட்டு இருக்கிறோம். இந்தச் சூழலில் இடதுசாரி ஆதரவுடனோ அல்லது இடதுசாரித் தலைமையில் அமையக்கூடிய ஒரு அரசோ இந்தியாவில் ஏற்படுமானால், இந்தப் போக்கில் மாற்றத்தைக் கொண்டு வருவீர்களா அல்லது இந்தப் போக்கிலேயே சென்று உங்களின் திட்டங்களை செயல்படுத்துவீர்களா?
உலகமயத்தில் இருந்து வெளியேற வேண்டும் என்பது அவசியமில்லை. உலகமயத்தையும் தன்வயப்படுத்திக்கொள்ள முடியும். அதைச் செய்ய வேண்டும். அங்கோலா என்பது ஒரு சிறு நாடு. அந்தச் சின்னஞ்சிறு நாட்டில் இன்றைக்கு உலக வங்கியோ சர்வதேச நிதி நிறுவனமோ கிளை விரிக்க முடியாது, கால் வைக்க முடியாது. வெளியேற்றி விட்டார்கள். ஒரு நாள் உத்தரவில் இவர்கள் இரண்டு பேரையும் அலுவலகங்களை மூடிவிட்டு வெளியே போகச்சொல்லிவிட்டார்கள். அங்கோலாவால் அது முடியுமானால் இந்தியாவால் அது கட்டாயம் முடியும். அதைச் செய்யும் மனம் இருக்கிறவர்கள் ஆட்சியில் இருக்கிறார்களா என்பதுதான் கேள்வி. அங்கோலா அனுப்பிக்கொண்டு இருக்கிறது. இவர்கள் வரவேற்றுக்கொண்டு இருக்கிறார்கள். எனவே அந்தக் கொள்கை மாற்றத்திற்குத்தான் முயற்சிக்க வேண்டும்.
இடதுசாரிகள் வந்தால் மிகவேகமாக இதை மாற்றுவதற்கு உள்ள வாய்ப்பு இந்தியாவில் மற்ற எந்த நாட்டையும்விட அதிமாகவே இருக்கிறது.
இடதுசாரிகள் ஆட்சிக்கு வந்தால் முதலீடுகள் வருவதில் சுணக்கம் ஏற்படும். அதன் காரணமாக வேலை வாய்ப்பு பாதிக்கப்படும் என்கின்ற ஒரு சிந்தனை பொதுவாக நகரவாழ் மக்கள் மத்தியில் இருக்கிறதே?
போலித்தனமான ஒரு பிரச்சாரம் நடைபெற்றது. வெளிநாட்டு முதலீடு வருகிறது. அது வந்ததினால் வேலை வாய்ப்புக்கள் கிடைத்துவிட்டது என்று அடையாளம் காட்டியது இந்த தொலை தொடர்புத் துறை. வேறு அடிப்படைத் துறைகளிலேயும் உற்பத்தித் துறைகளிலேயும் அவர்கள் முதலீடு செய்யவும் இல்லை; பல்லாயிரக்கணக்கான லட்சக்கணக்கான தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தவும் இல்லை. அன்றும் அதுதான், இன்றைக்கும் அதுதான். இந்தியாவில் வேலை வாய்ப்பைக் கொடுத்துக்கொண்டு இருப்பது, கொடுத்து இருப்பது என்பது பொதுத்துறை. இப்பொழுதும் திருச்சியில் பாய்லர் ஃபேக்டரியில் வெளியில் விளம்பரம் போட்டிருக்கிறார்கள். வேலைக்கு ஆள் வரலாம் என்று. ஓய்வுபெற்றுச் சென்றவர்களும் வேலைக்கு வந்து சேரலாம் என்றும் அதில் போட்டிருக்கிறார்கள். ஆனால், அசோன் லேலண்டில், சிம்சனில், டி.வி.எஸ்.சில் ஆட்குறைப்புச் செய்கிறார்கள். எனவேதான் பொதுத் துறைக்கும் தனியார் துறைக்கும் உள்ள வேறுபாட்டைப் புரிந்துகொள்ள வேண்டும்.
எனவே, இந்தியாவில் இடதுசாரிகள் வருவார்களானால், இவர்கள் சொல்வதைப் போல அன்னிய நாட்டு முதலீடு வராது. முதலீடே வர வேண்டாம். இந்தியாவில் இருக்கிற பணத்தையும், இந்தியாவில் இப்போது அமைப்பட்டிருக்கிற தொழிற்சாலைகளையும் முழுமையாக இயக்கினால் போதும். நாம் உலகத்தில் முதலிடத்திற்கு முந்திவிடலாம். எனவே பிறர் கையை ஏந்த வேண்டும் என்று எதிர்பார்ப்பதும், அந்த எண்ணத்தை மக்கள் மனதிலே பதிப்பதும் இந்தியாவிற்கு விரோதமான செயல். Dependence on foreign countries for your growth itself is against independent spirit. இந்தியா சுயமாக முன்னேற வேண்டும். முன்னேறுவதற்கு உள்ள சக்தி இந்தியாவிற்கு இருக்கிறதா? உலகிற்கே உற்பத்தி செய்யக்கூடிய மனிதர்களைக் கொடுக்கக்கூடிய நாடு, சொந்தமாக அவற்றைப் பயன்படுத்த முடியாமல் இருப்பதுதான் குறை. எனவே அதைப் பயன்படுத்தத் தொடங்கினால் இந்தத் தொல்லைகள் தீர்ந்துவிடும்.
Comments