சர்வதேசத்தின் கண்களுக்கு தெரியாத மனித அவலங்கள்

மேற்குலகின் கண்காணிப்பில், 2002 பெப்ரவரியில் உருவான சமாதான ஒப்பந்தம் ஜனவரி 2008 இல் இலங்கை அரசாங்கத்தினால் கிழித்தெறியப்பட்டது.அதனைத் தொடர்ந்து செப்டம்பர் 2008 இல் ஐ.நா. அமைப்புக்களும், சர்வதேச தொண்டு நிறுவனங்களும் வெளியேற்றப்பட்டன.

2002 இலிருந்து 2008 ஜனவரி வரை, மேற்குலக நாடுகள் வகித்த முக்கிய பாத்திரத்தை, ஒப்பந்த கிழிப்போடு இந்தியா கையேற்றது. அதன் பணி இன்னமும் வன்னியில் தொடர்கிறது.

இந்நிலையில் பிரித்தானிய அரசிடமிருந்து, பேரினவாதத் தொனியில், அறிக்கையொன்று வெளிவந்து புலம்பெயர் தமிழ் மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

பலமுடன் இருந்தால் மதிப்பார்கள், நிலத்தில் கிடந்தால் மிதிப்பார்கள் என்கிற சமூக இயங்கியல் தத்துவமே இந்த அதிரடி அறிக்கையை விளக்கும்.
சமாதானம் பேசச் சொல்லி, தடையும் விதித்தவர்களே இந்த ஜனநாயகக் குத்தகைக்காரர்கள்.

45 நிமிட நேரத்தில் பிரித்தானியாவைத் தாக்கும் வல்லமை, சதாம் ஹுஸைனுக்கு இருப்பதாக மக்களை ஏமாற்றி, ஜோர்ஜ் புஷ்ஷின் போர் வெறிக்கு காவடி தூக்கிய தொழிற் கட்சியே விடுதலைப் புலிகளைப் பயங்கரவாத இயக்கமாக பிரகடனம் செய்கிறது.

பயங்கரவாதத்தை வேரோடு அழிக்கும் இலங்கை அரசின் நடவடிக்கையை அங்கீகரிப்பதாக மேலும் அவ்வறிக்கை விளக்கமளிக்கிறது.

கிளிநொச்சி படையினர் வசமாகி, முல்லைத்தீவு வரை இராணுவம் நகர்ந்தவுடன், பிரித்தானியாவின் வெளியுறவுக் கொள்கையும் மாற்றமடைகிறது. தமிழர்கள் பலமாக இருந்தால் மட்டுமே அவர்களின் கோரிக்கையை செவி மடுப்போம் என்பது போலிருக்கிறது மேற்குலகின் எதிர்பார்ப்பு.

65 வீத மக்களால் ஜனநாயகத் தேர்தல் முறை மூலம் தெரிவு செய்யப்பட்ட ஹமாஸ் இயக்கத்தினை பயங்கரவாத அமைப்பாக முத்திரை குத்தியது மேற்குலகம்.

அதிபர் அப்பாஸ் தலைமையிலான மேற்குக் கரை ஆட்சியை அங்கீகரித்து, நிலத் தொடர்பற்ற, காஸாவில் ஆட்சி புரியும் ஹமாஸ் இயக்கத்தை நிராகரிக்கும் புதிய உத்தியை, இதுவரை மேற்குலகு கடைப்பிடிக்கிறது.

அடிக்கடி கிழக்கு மாகாணத்திற்கு விஜயம் செய்யும் மேற்குலகம் அதன் நடப்பு நாடுகளும், பலஸ்தீன பிரித்தாளும் நிகழ்ச்சி நிரலை நினைவூட்டுகின்றன. ஆனாலும், இலங்கையைப் பொறுத்தவரை இந்தியா, சீனா என்கிற இரு வல்லரசுகளின் நலன்களும் இங்கு பரவிக் கிடப்பதை மேற்குலகு உணராமலில்லை.

இஸ்ரேலை பயன்படுத்தி, ஹமாஸின் இராணுவ பலத்தை அடியோடு சிதைத்து, மிதவாதி அப்பாஸின் துணையோடு தீர்வொன்றை திணிப்பதே மேற்குலகின் திட்டம். நடந்து முடிந்த இஸ்ரேலின் ஆக்கிரமிப்பில், இந்நோக்கம் நிறைவேற்றப்பட்டு விட்டதாகவே இவர்கள் நம்பிக்கை கொண்டுள்ளார்கள்.

இஸ்ரேலின் இருப்பை பாதுகாப்பதற்கே தாம் முன்னுரிமை கொடுக்கப்போவதாக அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா , வெளியுறவு அமைச்சுக் குழுவினரை அறிமுகம் செய்யும் நிகழ்வில் தெளிவாக குறிப்பிட்டுள்ளார்.

வெள்ளை மாளிகையிலிருந்து புறப்படும் புதிய உலக கோட்பாட்டுக் கரங்கள், ஐரோப்பா, மத்திய கிழக்கினைக் கடந்து பாகிஸ்தான் வரை நீட்சியடைந்துள்ளது.
இந்தியாவைத் தாண்டி கிழக்கு ஆசியாவரை அது வியாபிக்க முன்பாக,பொருளாதாரச் சீரழிவு புகுந்து அடுத்த கட்ட நகர்வுகளைத் தடுத்து விட்டது.

பிரித்தானியாவின் இந்த புலி எதிர்ப்பு அறிக்கைக்கும், புதிய அமெரிக்க ஆட்சிக்கும் உறவு இருப்பதாகத் தெரியவில்லை. விடுதலைப் புலிகளைப் பயங்கரவாத மென்கிற வட்டத்துள் பொருத்திப் பார்க்க முடியாதென முன்பு கூறிய ஹிலாரி கிளின்டன் அம்மையாரே தற்போதை அமெரிக்க வெளியுறவு அமைச்சர் என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்.

ஜனநாயக ரீதியாக மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஹமாஸ் அமைப்பையே பயங்கரவாத இயக்கமாக அடையாளப்படுத்தும் பிரித்தானியா, விடுதலைப் புலிகளை பயங்கரவாத அமைப்பென்று கூறுவதையிட்டு ஆச்சரியப் படத் தேவையில்லை.

ஆனாலும், மேற்குலகைப் பொறுத்தவரை இஸ்ரேல், இலங்கை குறித்த பார்வைகள் வெவ்வேறானவை. மத்திய கிழக்கில் இஸ்ரேலுக்கு நிரந்தர நண்பர்கள் கிடையாது. ஆகவே அந்நாடு எப்போதும் அமெரிக்காவிற்கு விசுவாசமாக இருக்கும். இலங்கையின் நிலைமை முற்றிலும் மாறுபட்டது.

சீனாவும் பாகிஸ்தானும் இலங்கையின் நீண்ட நிரந்தர நட்பு நாடுகளென்பதும் மேற்குலகிற்கு புரிந்தாலும், இந்தியவல்லரசின் பார்வையும் பங்களிப்பும் அங்கு குவிந்து கிடப்பதே இஸ்ரேலில் இருந்து இலங்கையை வேறுபடுத்துகிறது.

சகல வல்லரசுகளும் தமிழ் மக்களின் தேசிய விடுதலைப் போராட்டத்திற்கு எதிரான போக்கினைக் கொண்டிருப்பதுபோல் தோற்றப்படுவதும், இலங்கை அரசிற்கு ஆதரவு வழங்குவது போல் தெரிவதும் நிர்ந்தரமானதல்ல. இலங்கைக்கு ஆதரவு தெரிவிக்கும் இவ்வல்லரசுகளுக்கிடையே சந்தைப் போட்டியும், கடலாதிக்க போக்குகளும் ஏராளமாகவே உண்டு.

திருமலைக்கு அமெரிக்காவும், ஜப்பானும் வருகை தந்த நிலையில், வன்னி வான் பரப்பில், இனந்தெரியாத விமானங்கள், ஏவுகணைகள் எட்டாத தூரத்தில் பறந்ததாக செய்திகள் வெளியாகின்றன.

ஆனாலும், இவர்களில் எவருமே, எறிகணை வீச்சுக்களால் சாவினை எதிர்கொள்ளும் வன்னி மக்களை பற்றியும் அவர்களின் அவல நிலை குறித்தும் பேச முன்வரவில்லை.

ஏனெனில் ஏகாதிபத்தியங்கள் மானுடம் பற்றிப் பேசாது. மனிதர்கள் அச்சிடும் கரன்சி நோட்டுக்களும், இயற்கை தரும் கனியவளங்களும், நிலத்தடி கறுப்புத் தங்கங்களும் இவர்களைப் பேச வைக்கும்.

வள்ளிபுனம், தேவிபுரம் தெருக்களில் இரத்த வெள்ளம் பாய்கிறது. பல்குழல் எறிகணை வீச்சுக்களால், கழுத்து முறியும் குழந்தைகள் பற்றிய கவலை ஏதுமில்லாமல், சிறுவர் படையணி குறித்து அக்கறை கொள்கிறார் ஐ.நாவின் சிறுவர் நலன் பேணும் உயர் அதிகாரி.

யுத்தத்தை நிறுத்தும்படி அழுத்தம் கொடுக்க வக்கில்லாத அகில உலக மனிதாபிமானக் காவலர்கள், ஐ.நா.வின் மனித உரிமைச் சரத்துக்களை, பிரிவுகள் பிசகாமல் ஒப்புவிக்கிறார்கள்.

விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு, எத்தனை ஆயிரம் மக்கள் கொல்லப்பட்டாலும், அது சர்வதேச தர்மமாக ஏற்றுக் கொள்ளப்படுமென்பதே இவர்களின் நினைப்பு.
வன்னி மக்களைத் தமது பாதுகாப்பிற்கான கேடயமாக விடுதலைப் புலிகள் பயன்படுத்துகிறார்களென்று, பல சர்வதேச மனித உரிமைச் சங்கங்களும் கூக்குரல் எழுப்பத் தொடங்கியுள்ளன.

போர் நடவடிக்கையின் போது இடையில் அகப்பட்டு, வவுனியாவிற்கு கொண்டு வரப்படும் மக்களைப் பார்வையிட, இச்சங்கங்களுக்கு அனுமதியில்லை என்கிற விடயத்தை இவர்கள் மறைத்து விடுகிறார்கள்.

யாழ். குடாவிலிருந்து ஆறு இலட்சம் மக்கள் வன்னிக்கு முன்பு இடம்பெயர்ந்த போது, இந்த மனிதக் கேடய விவகாரம் பேசப்படவில்லை. மனிதக் கேடயம் பற்றிப் பேசுவோர் ஐ.நா. மனித உரிமை கண்காணிப்புக்குழுவினரையோ அல்லது சுயாதீன சர்வதேச ஊடகத்தாரையோ, முல்லைத்தீவிற்கு செஞ்சிலுவைச் சங்கத்தினூடாக அனுப்பி, உண்மை நிலைவரத்தை தெரிந்து கொள்ளலாம்.

சமூக, மனித நேயப் பொறுப்புள்ள சர்வதேச மன்னிப்புச் சபையும், ஆசிய மனித உரிமைக் கண்காணிப்பகமும் இதனை முன்னெடுக்க வேண்டும். இந்நகர்வு தடுக்கப்பட்டால், ஐ.நா. மன்றில் வீற்றிருக்கும் நவநீதம் பிள்ளை அம்மையாரிடம் ராதிகா குமாரசாமியிடமும் இவர்கள் முறையிடலாம்.

2006 ஆகஸ்ட் 14 அன்று வள்ளிபுனஞ் செஞ்சோலையில் 61 பள்ளிச் சிறார்கள் கொல்லப்பட்டு 129 பேர் படுகாயமடைந்தபோது, உரிய காத்திரமான நடவடிக்கைகள் இச்சங்கங்கள் மேற்கொண்டிருந்தால், தற்போது நிகழும் கோரச் சாவுகளை தடுத்திருக்கலாம்.

அங்கவீனமுற்ற குழந்தைகளின் புகலிடமான "இனிய வாழ்வு இல்லத்தின் மீதும் எறிகணைகள் விழுந்து வெடித்துள்ளன. மக்களோடு சேர்ந்து இடம்பெயரும் வைத்தியசாலைகளையும் இவ்வெறிகணைகள் விட்டு வைக்கவில்லை.
பாதுகாப்பு வலயமென அரசால் பிரகடனப்படுத்தப்பட்ட பிரதேசங்களிலும் எறிகணைகள் பாய்கின்றன.

புலம்öபயர் தமிழ் மக்களிடையே அண்மைக்காலமாக காணப்பட்ட சோர்வு நிலை, கொதிநிலையாக மாற்றமடைகிறது. வரலாறு காணாத எழுச்சிப் பேரதிர்வுகளும், தொடர் போராட்டங்களும் தீவிரமடைந்து, சர்வதேசப் பார்வையின் இறுக்க நிலையை தளர்த்த முற்படுகிறது. அரசாங்கத்தின் பரப்புரைகள் யாவும், எதிர்மறையான விளைவுகளை தமிழ் மக்கள் மத்தியில் உருவாக்கியுள்ள தென்பதே உண்மை நிலையாகும்.

- சி.இதயச்சந்திரன் -

Comments