ஈழத்தமிழர்களை அழித்தொழிக்கும் இறுதி யுத்தத்தை உக்கிரமாக நடத்திவரும் இலங்கை அதிபர் ராஜபக்சே, முல்லைத் தீவினை பிடிப்பதற்காக மட்டுமே 50 ஆயிரம் ராணுவத்தினரை களமிறக்கியுள்ளார்.
"ஏப்ரலுக்குள் முல்லைத்தீவை கைப்பற்றி, பிரபாகரன் உள்ளிட்ட புலிகளை முற்றிலுமாக அழித்துவிட வேண்டும்' என்பது ராணுவத்தினருக்கு ராஜபக்சே விடுத்துள்ள கட்டளை!
ஏப்ரல் என்கிற டெட்லைன் எதற்காக என்று இலங்கை அரசு அதிகாரி கள் வட்டாரங்களில் விசாரித்தபோது புதிய தகவல்கள் கிடைக்கின்றன.
""இலங்கையின் அதிபராக 2006-ல் பதவிக்கு வந்தார் ராஜபக்சே. இவரது பதவிக்காலம் 6 வருடங்கள். அதன்படி ராஜபக்சேவின் பதவிக்காலம் 2012-ல் முடிகிறது. அதேசமயம், இலங்கையில் ஒருவரே தொடர்ந்து இரண்டுமுறை அதிபராக பதவி வகிக்க முடியும்.
ஆனால், இலங்கை நாடாளுமன்றத்திற்கு 5 வருடத்திற்கு ஒருமுறை தேர்தல் நடக்கும். கடந்த 2004-ல் தேர்தல் நடந்தது. ஐந்து வருட காலம் முடிந்து 2009 மே-ல் நாடாளுமன்றத் தேர்தல் நடக்க விருக்கிறது. தற்போதைய நாடாளுமன்றத்தில் ராஜபக்சேவிற்கு மெஜாரிட்டி இல்லை. சிங்கள பேரினவாத கட்சிகளின் ஆதரவோடுதான் ஆட்சி நடத்தி வருகிறார். மே மாதத்தில் நடக்கவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் மிக வலிமையான மெஜாரிட்டியை (ஸ்வீப்) தனது கட்சி பெற வேண்டும் என்பது ராஜபக்சேவின் திட்டம்.
மிக அபரிமிதமான மெஜாரிட்டியை பெற்றுவிட்டால், 2012-ல் தனது அதிபர் பதவிக்காலம் முடியும்போது மீண்டும் அதிபராகி விடலாம் என்பது அவரது எண்ணம்.
பிரபாகரன் உள்ளிட்ட புலிகளை அழிப்பது, தமிழர்களிடமுள்ள ஒட்டுமொத்த நிலங்களையும் மீட்பது, அதன்மூலம் இலங்கை என்பது முழுமைக்கும் சிங்கள நாடுதான் என அறிவிப்பது ஆகியவை மட்டுமே சிங்கள மக்களின் 100 சதவீத ஆதரவை பெற்றுத்தரும் என்று கணக்கிட் டுள்ளார் ராஜபக்சே. அதற்காகத்தான், இந்த டெட்லைன்'' என்கின்றன அரசு அதிகாரிகள் வட்டாரம்.
""சிங்களர்களின் ஆதரவை பெறும் முன்னோட்டமாகத்தான் "பிரபாகரன் தப்பி ஓடிவிட்டார், அவரை உயிருடன் பிடிப்போம்' என்றெல்லாம் பொய்யான பரப்புரைகள் செய்யப்பட்டு வருகிறது. பிரபாகரன் முல் லைத்தீவினுள்தான் இருக்கிறார் என்பதும் தமிழீழ விடுதலை போராட்டத்தை கைவிட்டு விட்டு ஓடிவிடமாட்டார் என்பதும் ராஜபக்சேவிற்கு தெரியும்.
ஆனாலும் இந்த பொய்யான செய்திகளை பரப்புவதில் 2 வித கணக்குகளை போட்டிருக்கிறார் அவர். பிரபாகரனை பற்றிய எதிர்மறை கருத்துக்களை பரப்புவதன் மூலம் சிங்களர்கள் மகிழ்ச்சி கொள்வார்கள். அடுத்து, களத்தில் எங்கோ நிற்கும் புலிகளின் தளபதிகளும் போராளிகளும் "நமது தலைவருக்கு என்னாச்சு? எங்கே இருக்கிறார்?' என்று குழம்பிப் போவார்கள். அப்படிப்பட்ட சூழலில், குழப்பத்தை தீர்க்க புலிகளின் தலைமை இதற்கு பதில் சொல்ல நேரிடும். அதன்மூலம் பிரபாகரன் எங்கிருக்கிறார் என்று கண்டுபிடித்து விடலாம். மொத்தத்தில் புலிகளின் தளபதிகளின் மனஉறுதியை குலைப்பது. இதுதான் ராஜபக்சேவின் இரண்டுவித ஸ்டேடஜி'' என்று மேலும் சில தகவல்களை சுட்டிக்காட்டினர் அரசு அதிகாரிகள்.
இப்படிப்பட்ட திட்டமிடலில்தான் முல்லைத் தீவிற்கான யுத்தம் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தரைவழித் தாக்குதலையும் விமான தாக்குதலையும் உக்கிரமாக நடத்தி வருகிறது ராணுவம். இதனைத் தடுத்து தற்காப்பு தாக்குதல் நடத்தி வருகின்றனர் புலிகள். முதன்முதலாக பீரங்கி டாங்கிகளை பயன்படுத்தி தாக்குதலை நடத்தியுள்ளனர். இதில் 50-க்கும் மேற்பட்ட ராணுவத்தினர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
புலிகள் தரப்பு நிலவரம் பற்றி அறிய தமிழ்த் தேசிய கூட்டமைப்பு எம்.பி.க்களிடம் பேசியபோது, ""போராளிகளா? நிலமா? எது முக்கியம் என்கிற கேள்வி வருகிறபோது போராளிகளையும் மக்களையும் இழந்து நிலத்தை தக்க வைத்துக் கொள்வது போரியியல் தந்திரம் அல்ல. இதற்காக பின்வாங்கிய நிலையில், தற்போது எல்லோரும் இருப்பது முல்லைத் தீவினுள்தான். இதனைத் தாண்டி வேறு எங்கும் போக முடியாது. இதுதான் நிஜம்.
அந்த வகையில், சிங்கள ராணுவத்தினரை எதிர்கொள்ளும் இறுதி யுத்தத்தை புலிகளும் மேற்கொள்வார்கள். இது தவிர்க்க முடியாத ஒன்று. பிரபாகரன் பற்றிய எதிர்மறை கருத்துக்களை ராஜபக்சே அரசு பரப்பினாலும், போராளிகளும் ஈழத் தமிழர்களும் நம்ப தயாராக இல்லை. இதற்கு முகம் கொடுக்கவும் இல்லை. காரணம், சிங்கள அரசின் பொய் பரபரப்புரைகளை பலமுறை கேட்டு விட்டனர்.
அத்துடன், களத்தில் நிற்கும் போராளிகளுக்கு தளபதிகளிடமிருந்து உறுதியான தகவல்கள் போய்ச் சேர்கிறது. அந்த வகையில், "இறுதி வரை போராடுவது, இறுதி வெற்றி நமக்குத்தான்' என்கிற மன உறுதியில் நிற்கிறார்கள் போராளி கள். அவர்களின் மன உறுதியை சிங்கள ராணுவத்தினரால் கலைத்து விட முடியாது.
அதேபோல, தகவல் தொடர்பு சாதனங்கள் மூலம் முக்கிய தளபதிகளுடன் ஆலோசிப்பதை தவிர்த்து விட்டு, அவர்களுடன் நேரடி ஆலோசனை நடத்துவதைத்தான் வழக்கமாக வைத்திருக்கிறார் பிரபாகரன். தகவல் தொடர்பு சாதனங்கள் பயன்படுத்தியதால்தான் தமிழ்ச்செல்வனின் மறைவிடத்தை சிங்கள ராணுவம் அறிந்து கொள்ள முடிந்தது. அதனாலேயே தகவல் தொடர்பு சாதனங்களை பயன்படுத்துவதில்லை பிரபாகரன்.
அதேபோல, பிரபாகரனின் பதுங்கு குழிகள் என்று சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளது ராணுவம். அது, முல்லைத் தீவினுள் இருக்கும் பதுங்கு குழிகளே அல்ல. கிளிநொச்சியிலிருந்து முல்லைத் தீவுக்கு செல்லும் ஒருவழியில் உள்ள பதுங்கு குழி அது. இதுபோன்ற பதுங்கு குழிகள் கிளிநொச்சிப் பகுதியில் நிறைய இருக்கிறது. அதில் ஒன்றை படம் பிடித்து, "இதோ இங்குதான் பிரபாகரன் இருந்தார். தப்பி ஓடிவிட்டார்' என்று பொய் செய்திகளை பரப்புகிறது ராணுவம்.
முல்லைத் தீவில் பிரபாகரன் பத்திரமாக இருக்கிறார். மக்களை பாதுகாக்கவும் முல்லைத் தீவை நோக்கி முன்னகரும் ராணுவத்தினரை தடுத்து நிறுத்தவுமான ராணுவ நடவடிக்கைகளில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார். இறுதிவரை போராடுவது. இறுதியில் வெற்றி நமக்குத்தான் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை வைத்துள்ளார். அதேசமயம், ஐரோப்பிய நாடுகளின் ஆதரவை பெறும் முயற்சிகள் வலிமை அடைந்து வருகிறது. ஐரோப்பிய நாடுகளுக்கும் அமெரிக்காவிற்கும் அழுத்தம் கொடுக்கும் கவன ஈர்ப்பு போராட்டங்களை நடத்தி வருகின்றனர் தமிழர்கள். இதுவரை அமைதியாக இருந்த ஐரோப்பிய நாடுகள் தற்போது இலங்கை பிரச்சனையில் தலையிட துவங்கியுள்ளன. யுத்தத்தை நிறுத்த சர்வதேச நாடுகள் எடுக்கும் நடவடிக்கைகளுக்காக பிரபாகரன் அமைதியாக இருக்கிறார். அந்த நடவடிக்கைகளை பொறுத்து புலிகளின் போரியியல் நடவடிக்கைகளை மாற்றுவார் பிரபாகரன். அப்போதுதான் வலிமையான யுத்தம் நடத்த திட்டமிடுவார் அவர்'' என்று விரிவாக விவரிக்கின்றனர் எம்.பி.க்கள்.
-கொழும்பிலிருந்து எழில்
[நன்றி நக்கீரன்]
Comments