தமிழக முதல்வர் கருணாநிதி உடனடியாக பிரதமர் மன்மோகன் சிங்கை வலியுறுத்தி பிரணாப் முகர்ஜியை இலங்கைக்கு உடனடியாக அனுப்பி போரை நிறுத்த ஏற்பாடு செய்ய வேண்டும் என்று தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழுவின் அமைப்பாளர் பழ.நெடுமாறன் வலியுறுத்தியுள்ளார்.
ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக குரல் எழுப்பினோம். ஈழத் தமிழர்கள் மீதான சிங்கள ராணுவத் தாக்குதலை உடனடியாக நிறுத்தக் கோரி தமிழக சட்டமன்றத்திலும் அனைத்துக்கட்சிகள் இணைந்து தீர்மானம் நிறைவேற்றியது. தமிழக மக்களும் ஒன்றுபட்ட போராட்டங்களை நடத்தினர்.
முதலமைச்சர் தலைமையில் அனைத்துக்கட்சி குழுவினர் டெல்லி சென்று டிசம்பர் 4ஆம் தேதி பிரதமரிடம் மனு கொடுத்தனர். மத்திய அயலுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜியை இலங்கைக்கு அனுப்பி ஈழத் தமிழர்கள் மீதான சிங்கள ராணுவத் தாக்குதலை உடனே தடுத்து நிறுத்த வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.
பிரதமர் மன்மோகன் சிங்கும், இலங்கைக்கு மத்திய அயலுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜியை உடனடியாக அனுப்பி வைப்பதாக உறுதி அளித்தார். ஆனால் அந்த உறுதிமொழி இதுநாள் வரை காப்பாற்றப்படவில்லை. அதே நேரத்தில் இலங்கை அதிபர் ராஜபக்சே, இவற்றையெல்லாம் சட்டை செய்யாமல் தமிழர்கள் மீது தாக்குதலை தீவிரப்படுத்தினார்.
அதன் விளைவாக நூற்றுக்கணக்கான அப்பாவித் தமிழர்கள் பலியாகி உள்ளார்கள். இத்தனைக்குப் பிறகும் ராஜபக்சேயின் கோரத்தாண்டவம் எந்த வகையிலும் தணியவில்லை. விடுதலைப்புலிகளால் காலி செய்யப்பட்ட கிளிநொச்சியை எந்த ஒரு எதிர்ப்பும் இன்றி கைப்பற்றி விட்டதாக கொக்கரிக்கிறார்.
கிளிநொச்சியை பிடித்து விட்டதனாலேயே ஈழத் தமிழர்களின் விடுதலைப் போராட்டம் ஓய்ந்து விடாது. முன்பு யாழ்ப்பாணத்தை சிங்கள ராணுவம் பிடித்த பிறகுதான் முல்லைத் தீவு ஆணையிறவு ஆகிய இடங்களில் இருந்த வலிமை வாய்ந்த சிங்கள ராணுவ முகாம்களை அடியோடு தகர்த்தும் கட்டுநாயகா விமானத் தளத்தையும் அதில் இருந்த போர் விமானங்களையும் விடுதலைப்புலிகள் முற்றிலுமாக அழித்து ஒழித்துவிட்டனர்.
அதைப்போல இனி வரும் காலத்திலும் பல பெரும் வெற்றிகளை விடுதலைப்புலிகள் அடைவார்கள் என்பதில் ஐயம் இல்லை. 6 கோடி தமிழ் மக்களின் ஒட்டுமொத்த உணர்வை புறக்கணித்து சிங்கள இனவெறியர்கள் வெற்றி வெறுவதற்கு துணை நின்ற இந்திய அரசை வரலாறு ஒருபோதும் மன்னிக்காது.
இனியும் தமிழக முதலமைச்சர் கருணாநிதி இந்தப் பிரச்சனையில் பொறுமை காப்பதில் அர்த்தம் எதுவும் இல்லை. இனிமேல் காலம் கடத்தும் ஒவ்வொரு நாளும் அது ஈழத் தமிழர்களின் உயிருக்கும், உரிமைக்கும் பாதுகாப்பாக இருக்காது. தமிழக முதலமைச்சர் கருணாநிதி உடனடியாக பிரதமர் மன்மோகன் சிங்கை வலியுறுத்தி பிரணாப் முகர்ஜியை உடனடியாக இலங்கைக்கு அனுப்பி போரை நிறுத்த ஏற்பாடு செய்ய வேண்டும் என்று பழ.நெடுமாறன் வலியுறுத்தியுள்ளார்.
Comments