இலங்கைத் தமிழர்களைப் பொறுத்தவரை ஏன் உலகம் வாழ் தமிழர்களைப் பொறுத்தவரை இந்திய வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜியின் மூன்று மணிநேர கொழும்பு விஜயம் முதுகில் குத்தும் செயல் போல மரத்தால் விழுந்தவனை மாடேறி மிதித்த கதை போல அமைந்து விட்டது.
இலங்கையில் யுத்த நிறுத்தத்தை உடன் ஏற்படுத்தி, ஈழத் தமிழர்களின் அவலச் சாவுகளையும் அழிவுகளையும் தடுத்து நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுங்கள் என்ற தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி தலைமையிலான தமிழக அனைத்துக் கட்சிக் குழுவினர் கோர, அதற்குத் தமது வெளிவிவகார அமைச்சரைக் கொழும்புக்கு அனுப்பி இது குறித்துப் பேசுவோம் என்று பதிலளித்தார் இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங்.
ஆனால், அப்படி உறுதியளித்து சுமார் இரண்டு மாத காலமாக ஏதும் நடக்கவில்லை யுத்த முனையில் தமிழர்கள் கொத் துக் கொத்தாகக் காவு கொள்ளப்பட்டமையைத் தவிர.
அதன் பின்னர் திடீரென திடுதிப்பென கடந்த செவ்வாயன்று பிரணாப் முகர்ஜி வந்தார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் பேசினார். யுத்த நிலைமை குறித்து இலங்கை இராணுவத் தளபதி கொடுத்த விளக்கங்களைச் செவிமடுத்தார். புறப்பட்டார். அவ்வளவுதான்.
யுத்தத்தை நிறுத்தச் சொல்லி வற்புறுத்துவார் என்று பார்த்தால் "இலங்கை இராணுவத்தின் வெற்றிகள், சுமுக வாழ்க்கையை ஏற்படுத்துவதற்கான அரசியல் சூழ் நிலையை வழங்கியுள்ளன.' என்று கூறி இலங்கைப் படைகளின் இராணுவ நடவடிக்கைகளை மெச்சிப் பாராட்டும் விதத்தில் கருத்துத் தெரிவித்துவிட்டுப் போயிருக்கின்றார் அவர்.ஈழத் தமிழர்களின் அவலம் பற்றி புதுடில்லி அலட்டிக்கொள்ளப் போவதில்லை என்பது அவரது கருத்தில் தெளிவாகப் பிரதிபலிப்பதை இலகுவாக உணர்ந்து கொள்ள முடியும். அதுதான் உண்மை; யதார்த்தம்.
ஈழத் தமிழர்களின் பேரவலம் கண்டு தமிழகமே கொதித்துப் போயிருக்கின்றது. ஈழத் தமிழர் விரோதக் கருத்துகளைக் கூறி வரும் ஜெயலலிதா கும்பலும், ஈழத் தமிழர் விடயத்தில் ஆக்கபூர்வமான நடவடிக்கை எடுக்காமல் தமக்கேயுரிய வழமையான அரசியல் சித்து விளையாட்டுகளை நடத்திவரும் தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதியும், தற்போது தமிழகத்தில் கிளர்ந்து வரும் ஈழத் தமிழர் ஆதரவுப் பேரெழுச்சியுடன் ஒத்துப் போகாமல் தொடர்ந்து முரண்டு பிடித்தால், மாநில அரசியலில் அவர்கள் அடிபட்டு, அரசியல் அநாதைகளாகிவிடும் அளவுக்கு தமிழகத்தின் எழுச்சி காணப்படுகின்றது.
ஆனால் புதுடில்லியில் தற்போதைய காங்கிரஸ் ஆட்சிப்பீடம் நீடிக்கும்வரை ஈழத் தமிழர்களுக்கு விமோசனம் கிடைக்கும் நடவடிக்கைகளை தமிழகத்தில் எத்தகைய கிளர்ச்சி வந்தாலும் இந்திய நடுவண் அரசு எடுக்காது என்பது நிச்சயம்.
தமிழகத்தினாலும் எதுவும் செய்ய முடியாது, புதுடில்லியும் சரிப்பட்டு வராது என்றால் இந்நிலைமையை ஒட்டி ஈழத் தமிழர்கள் இனி என்ன செய்வது என்ற கேள்வி எழுகின்றது.
இலங்கைத் தமிழர் விடயம் இந்தப் பிராந்தியத்தின் வல்லாதிக்க சக்தியான இந்தியாவுக்குரிய விடயம், இந்தியப் போக்கை அனுசரித்தே மேற்குலகமும் சர்வதேச சமூகமும் இதில் பங்காற்ற வேண்டும் என்ற கருத்து நிலைப்பாடு சர்வதேச மட்டத்தில் பிரதிபலிக்கப்பட்டு வருகின்றது.
அந்தக் கருத்துருவாக்கத்தைத் தமிழர் தரப்பு உடைக்க வேண்டும். இந்தியாவைத் தாண்டி, இவ்விடயத்தை சர்வதேச மயப்படுத்த வேண்டும். சர்வதேச சமூகங்களும், நாடுகளும் இலங்கை சம்பந்தப்பட்ட விடயங்களில் தலையிட்டு அவலப்படும் ஈழத் தமிழர்களுக்கு நியாயம் செய்யவேண்டிய கடப்பாடும், பொறுப்பும் உண்டு என்பதை நிலைநிறுத்தும் வகையில் தமிழர் தரப்பினால் காய்நகர்த்தல் மேற்கொள்ளப்படவேண்டும்.
எனவே, இலங்கைத் தீவில் தமிழினம் அனுபவிக்கும் கொடூரங்களை இந்திய உபகண்டப் பரப்புக்கு வெளியே சர்வதேசத்தின் பார்வையில் ஆழமாகப் பதிக்கத்தக்க வகையில் வெளிப்படுத்தி, அம்பலப் படுத்தி, பூகோளப் பரப்புரையை முடுக்கி விடவேண்டிய தருணம் இது.
ஏற்கனவே, புலம் பெயர் தேசங்களில் வாழும் தமிழர்கள் இவ்விடயத்தில் காத்திரமான நடவடிக்கைகளை விரைந்தும், முன்னுரிமை அளித்தும் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
ஆனால் அவர்கள் முன்னெடுக்கும் ஆர்ப்பாட்டங்கள், பேரணிகள், வழிமறிப்புகள், ஹர்த்தால்கள் போன்ற பரப்புரை நடவடிக்கைகள், அதன் நோக்கத்துக்கு இழுக்கு ஏற்படுத்தும் வகையில் திசை திரும்பாமல் பார்த்துக் கொள்வது மிக முக்கியமாகும்.
ஏற்கனவே தமிழர் தரப்பில் விடுதலை உரிமைக்காகப் போராடும் புலிகள் இயக்கம் "பயங்கரவாத இயக்கமாக" மேற்குலகால் அடையாளம் கண்டு அறிவிக்கப்பட்டிருக்கின்றது.
இச்சமயத்தில் ஈழத் தமிழர் உரிமைகளை வலியுறுத்தி மேற்கு நாடுகளில் போராட்டம் மேற்கொண்டு ஆர்ப்பாட்டம் நடத்தும் ஈழத் தமிழ் ஆதரவாளர்கள், தமது ஆர்ப்பாட்டம் போன்ற நிகழ்வுகள் குறித்து மிகக் கவனமாக இருக்கவேண்டும்.
அவையும் வன்முறை நிகழ்வுகளாக சித்திரிக்கப்பட்டு, பயங்கரவாத செயற்பாடுகளாக அடையாளம் குத்தப்படும் ஆபத்து உண்டு. பொங்கியெழுந்துள்ள புலம் பெயர் தமிழர்கள் இதில் மிகவும் எச்சரிக்கையாக இருப்பது அவசியம்.
Comments