நாம் எமது நாட்டுக்காக எவற்றை எந்தெந்த வழியில் செய்யவேண்டும் என்ற கேள்வியை உங்களை நீங்களே கேட்டுப் புரிந்துகொண்டு பங்காற்றிக் கொண்டிருக்கின்றீர்கள். இது இவ்வாறிருப்பினும் ஏன் எமக்கான தேசம் இன்னும் பிரசவிக்கப்படவில்லை??? என்ற அங்கலாய்ப்பும் ஏக்கமும் எம்மினிய உறவுகளின் மனங்களில் பெரும் சுமையாகக் கனக்கின்றது.
எம் பாசத்திற்குரிய மக்களே! எம் மனங்களில் என்றோ பிரசவமான தமிழீழம் ஏன் இன்னும் சர்வதேச அங்கீகாரம் பெறவில்லை? இதற்கான தேடலில் நாம் ஒவ்வொருவரும் அதிசிரத்தை எடுத்து சிந்திப்போமேயானால் ஒரு மறைக்கவோ மறுக்கவோ முடியாத கசப்பான உண்மை வெளிவரும். அதாவது இதற்கு முழுக்காரண கர்த்தாக்களும் மக்களாகிய நாங்களேதான் என்பதை மிக வருத்தத்தோடு உங்கள் முன் கொண்டுவருகின்றோம். இந்தக் கருத்து பல மக்களைத் தொடர்பு கொண்டு அவர்களின் கருத்துக்களிலிருந்து எடுக்கப்பட்ட வெளிப்படை உண்மையாகும்.
எமது தேச விடுதலைப் போராட்டம் இன்று பல தசாப்தங்களைக் கடந்து வந்துவிட்ட வேளையிலும் கடந்த 7 முதல் 8 ஆண்டுகளே சர்வதேச மயப்பட்டுள்ளது. இந்தக் காலத்திற்தான் எமது மண்மீட்பைப் பல உலக வல்லாதிக்க நாடுகள் நசுக்கி மண்ணோடு மண்ணாக்கப் பல வழிகளிலும் தம்மாலான உச்ச வலுவைப் பிரயோகித்தனஇ பிரயோகித்துக் கொண்டிருக்கின்றன. இதை எம் பாசத்திற்குரிய மக்களே! நீங்கள் சிந்தித்துப் புரிந்து கொள்ளவேண்டும்.
இன்று மண்மீட்புப் போருக்காய் ஒட்டுமொத்தத் தமிழினமும் களத்தில் போராட வேண்டிய நேரம்! ஆனால் நம் துர்ப்பாக்கியம்! நாம் புலம் பெயர்ந்து அன்னியப்பட்டு நிற்கின்றோம். நாம் ஒவ்வொருவரும் சிந்திக்க வேண்டிய காலம் இது.
இன்று வன்னியில் வாழுகின்ற ஏறத்தாழ மூன்று இலட்சம் மக்களே எட்டுக்கோடி தமிழுறவுகளின் விடுதலைக்காகக் களமாடிக் கொண்டிருக்கின்றார்கள்.
• குண்டுமழைக்கு முகம்கொடுத்துக் குருதி சிந்துகிறார்கள்
• இயற்கை அனர்த்தங்களினாலும் பாதிக்கப் பட்டுக்கொண்டிருக்கின்றார்கள்
• களமுனைப் போராளிகளுக்குத் தம் உணவைத் தாரைவார்க்கின்றார்கள்
• களமாடி விழுப்புண் அடைந்த வீரர்களுக்குத் தம்முடலில் எஞ்சியிருக்கும் இரத்தத்தைத் தானம் செய்கிறார்கள்
• போர்க்களத்தில் நிற்கும் மறவர்களுக்கு ஆயுத வழங்கல்களை மேற்கொள்கிறார்கள்
• முன்னரங்கப் போர்முனைகளில் பாதுகாப்பு அகழிகளைத் தோண்டுகிறார்கள்
• ஊர், உறவுகள், உடைமைகளை இழந்தும் உறுதி தளராது எமக்காகப் போராடிக்கொண்டிருக்கிறார்கள்.
இயற்கை அனர்த்தங்கள் ஏற்படுத்திய வெள்ளப் பெருக்கிலும் இலங்கை அரசு விளைத்த குருதிப் பெருக்கிலும் சிக்குண்டு தவித்தும் சலிக்காமல் போராடிக் கொண்டிருக்கும் எம் மக்களுக்காக நாம் என்ன செய்யப் போகின்றோம்???
களத்திலே கொழுத்தும் வெயிலிலும், கொட்டும் மழையிலும், பொழியும் பனியிலும், குண்டு மழையிலும், வாட்டும் பசியிலும் உயிரையே வேலியாக்கித் தமக்கென்று ஏதும் எண்ணாமல் எமக்காக இடியென எதிரி மீது பாயும் எம் சகோதர சகோதரிகளுக்கு நாம் செய்யப்போகும் கைமாறு என்ன?
சிந்தியுங்கள் உறவுகளே.......
இன்று நாம் எதிர்கொண்டு நிற்கும் இந்த யுத்தம் யாருடன் செய்கின்றோம்? வெறும் இலங்கை அரசுடன் மட்டுமா செய்கின்றோம்? இல்லவே இல்லை!!!!
“சீனா, பாகிஸ்தானிடம் கருவிகள் வாங்கி
ரஸ்யா, இஸ்ரேலிடம் விமானங்கள் வாங்கி
அமெரிக்கா, இந்தியாவிடம் உளவுத் தகவல்கள் வாங்கி
ஈரான், ஜப்பானிடம் பணம் வாங்கி
பிரித்தானியாவிடம் ஆலோசனை வாங்கி...”
சிங்கள இனவெறிக் குண்டர்களை ஏவிவிட்டு நடத்தப்படும் ஒரு இன அழிப்புப்போர். ஆக, ஒருபுறம் அரசியல் சதிவலை பின்னும் உலக நாடுகளும், மறுபுறம் இனவெறி பிடித்த இலங்கை அரசும் தமிழினத்துக்கு எதிராக நடத்தும் உலக மகா யுத்தத்தைத்தான் நாம் இன்று எதிர்கொண்டுள்ளோம். இதை நாம் சரியாகப் புரிந்துகொள்ள வேண்டும்.
இதைக் கருத்திற்கொள்ளத் தவறிய எம்முறவுகளிற் சிலர் கேட்கும் கேள்விகள்:...........
• "நாங்கள் நெடுக செய்து கொண்டுதானே இருக்கிறோம்"
• "நாங்களும் ஊரிலிருந்து பல இடப்பெயர்வுகளை சந்திச்சுத்தான் வந்தனாங்கள்"
• "எல்லா இடத்திலயும் தான் போர் நடக்குது ஆனா நீங்க மட்டும்தான் இவளவு காலமா இழுத்தடிக்கிறீங்க"
• “நாங்கள் எங்களால செய்ய முடிஞ்சதை செய்திட்டம்”
• "நீங்க எல்லா இடத்தயும் விட்டிட்டுப் போனா உங்கள எப்பிடி நம்புறது"
• "முதல்ல அடியுங்கோ பிறகு யோசிப்பம் என்ன செய்யிறதெண்டு"
• "நாங்க அங்க போக மாட்டம் பிறகு எதுக்கு இதுக்க மூக்க நுளைக்க வேணும்"
• "உங்கட கஸ்ரம் விளங்குது ஆனா இங்க பாத்தீங்க எண்டா கிரெடிற் கிரஞ்ச் (Credit Crench) அதால எங்களுக்கு அதவிடக் கஸ்ரம்"
என் பாசத்திற்குரியவர்களே! உங்கள் வார்த்தைகள் எம்மினத்தையும் தேசவிடுதலையையும் எவ்வளவு கொச்சைப் படுத்துகின்றது என்பதைப் பார்த்தீர்களா? தயவுசெய்து சிந்தியுங்கள்! இரவு பகலாக சிந்தியுங்கள்!
ஈழப்போர் ஒன்றும் குதிரைப் பந்தயமல்ல.
விடுதலை போராடிப் பெறவேண்டிய ஒன்று. யாசித்துப் பெறுவதல்ல. விடுதலை நெருப்பில் ஒவ்வொரு தமிழனும் குளித்து எழவேண்டும்.
அன்பிற்குரியவர்களே!
நீங்கள் தாமதிக்கும் ஒவ்வொரு விநாடியும் எம் தேசவிடுதலையை வரித்துக் கொண்டவர்களில் ஒருவர் விடுதலைக்கு வித்தாகிறார் என்பதை உங்கள் உள்ளங்களிலே பதித்துக் கொள்ளுங்கள்.
“காய்த்த மரத்துக்கே கல்லடி அதிகம்” நாமும் விடுதலை வேள்வியில் பூத்துக் காய்த்துக் குலுங்கும் ஒரு இனம். அதனாற்றான், உலகமே சேர்ந்து எம்மை அடிக்கிறது. அதற்கு வேலிகட்டிக் காத்துக் கனிய வைத்துச் சுவைக்க வேண்டியவர்கள் நீங்களே. அந்தக் கடமை உங்களுக்கானது. அதை மறந்துவிடாதீர்கள் எம்முறவுகளே.
எம் மறவர்கள் மறிப்புச் சமராடும்போது அவர்களுக்கே இழப்பதிகம். ஆனால் வலிந்து தாக்கும்போது எதிரிக்கே இழப்பதிகம். இதை உணர நாம் தலைப்பட வேண்டும். ஜெயசிக்குறு முறியடிப்புச் சமரில், வீரகாவியமான மாவீரர்கள் 49 மட்டுமே. ஆனால், இன்று நாளுக்கு 20 முதல் 25 மாவீரர்கள் விதையாகின்றார்கள். ஏன்?......
நாம் விரைவிலே பாய்ச்சலைச் செய்ய வேண்டும். இல்லையேல் நம் அண்ணன்மார்கள், அக்காமார்கள் வீணாக இழக்கப் படுவார்கள். எதிரி நிலை எடுத்து நின்று தாக்குவதால் எமக்கே இழப்புகள் அதிகம். மறுபுறத்தில் எதிரியை நிலை தடுமாறி ஓடவைக்கும்போது அவனுக்கே இழப்புகள் அதிகம். இதை நாம் தெளிவாகப் புரிந்துகொண்டு, எம் தேசத்திற்கான பணியை விரைவுபடுத்துவோம்.
ஏன் எமது ஈழவிடுதலை தள்ளிச்செல்கிறது? இதற்கான விடையை சிறிய வாக்கியத்தில் சொல்ல முடியும். அதாவது,
“ஊர் கூடித் தேர் இழுத்தால்...”
இது நம்மிடையே புழக்கத்திலுள்ள ஒரு சொல்லாடல். இதன் மூலமாக எம்மிலிருக்கும் சில குறைகளை வெளிக்கொணர முடியுமென எண்ணுகிறோம். நாம் எல்லோருமே தேசவிடுதலை என்கின்ற தேரின் வடக்கயிற்றைப் பற்றிப் பிடித்திருக்கின்றோம். இதில் எந்தவித மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால்.......
அதை இழுக்கும்போது ஒரு சிலரே அத்தருணத்தில் தேர் அசையும் என்ற உறுதியோடு இழுக்கின்றார்கள். மற்றையவர்களோ பற்றியவாறே மெதுவாக நகர்கின்றார்கள். இதனால், உறுதியோடும் நம்பிக்கையோடும் பற்றியிழுத்த அந்த மக்கள், நம்பிக்கையீனமும் களைப்புமுற்று, இத்தேரை நகர்த்த எம்மால் முடியாது என முடிவெடுத்து விலகிச் செல்கின்றார்கள். இவ்வாறே ஒவ்வொரு தடவையும் வடத்தைப் பற்றி நிற்பவர்கள் சலிப்படைந்து அதனின்றும் விலகி வெறும் பார்வையாளர்களாக மாற்றப்படுகின்றார்கள். இது எம்மை அறியாமலேயே நாம் எமக்குத் தோண்டும் ஓர் மரணப் புதைகுழி. எம் தேசவிடுதலைத் தேரின் நகர்வைத் தடுக்க உலக, பிராந்திய வல்லரசு நாடுகளின் அழுத்தங்கள், தடைகள் எனப்படும் ‘சறுக்காக் கட்டைகள’; போடப்படுகின்றன.
நம்பிக்கைக்குரியவர்களே! இதிலிருந்து மீண்டெழ நாம் என்ன செய்ய வேண்டும்?
எங்கள் ஒவ்வொருவரது கரங்களாலும் தேசவிடுதலைத்தேரின் வடக்கயிற்றைப் பற்றிப்பிடித்து "நாம் முதற் செய்தோம்", "நாம் கஸ்ரப்ப் பட்டுள்ளோம்", நாம் அங்கு போக மாட்டோம்", "நாம் பிறகு செய்வோம்", "இவர்கள் இப்படித்தான் சொல்வார்கள்" என்ற வீணான எண்ணங்களைக் களைந்து யாவரும் ஒரே தருணத்தில் ஒரே தடவையில் எம்மின விடிவிற்காய் உரக்கக் குரலெழுப்பி, விடுதலை உணர்வோடும், வேட்கையோடும் உந்தியிழுப்போம்.
பின்பு, பிறகு என்ற வார்த்தைகள் மறந்து, இங்கு, இப்போது என்று செயற்பட்டு;, போடப்பட்ட சர்வதேச முட்டுக்கட்டைகள் யாவையும் காலினடியில் மிதித்து அதன் மீதேறி, எம்மினத்தின் பலத்தை உலகிற்குப் பறை சாற்றுவோம்.
புறப்படுங்கள் விடுதலைக்காய்...........
-அனற்கதிர்-
Comments