இந்தநிலை களைய போராடத்தான் வேண்டும்

"ஹலோ...ஹலோ... ஆர் தம்பியே கதைக்கிறாய்" "ஒமக்கா எப்படியக்கா இருக்கிறியள் செய்தியைக் கேக்கக் கேக்க கவலையாக்கிடக்கு" "ச்சீச்சீ இஞ்ச பிரச்சினைதான் ஆனா நீ நினைக்கிற மாதிரியில்ல" "அக்கா பிள்ளையள் கவனமக்கா... அதுகளுக்காகத்தான் பாடுபடுகிறன் என்ன நடந்தாலும் படிப்புக்கு முதலிடம் குடுங்கோ" பள்ளிக்கூடம் பிரச்சினையில்லையடா ரியூசனுகளும் நடக்குது அதுகள் படிக்கிறது"

“கட்டைக்காட்டில் செல்விழுகுது என்று செய்தியில கேட்டன் கவனம் சிலவுகளப் பாராத பத்திரமான இடத்துக்கபோ மாலா எங்க நிக்கிறாள்” “களத்திலதான் நிக்கிறாளாம் உதெல்லாம் உதுக்கால கதையாம் பிறகு கடிதத்தில் எழுதலாம்விடு” “சரியக்கா அம்மா என்னசெய்யிறா சுகமாக இருக்கிறாவே படிப்புக் கவனம் பிள்ளையளின்ர படிப்பு.. ஏலுமண்டா தனி மாஸ்டர் வச்சு படிப்பி.. கவனம் பங்கரவெட்டி வையுங்கோ “வங்கரோ உங்க மன்னாரில் நிண்டு இதுவரைக்கும் வெட்டின வங்கர் காசிருந்தா இவள் பொட்டையின்ர சீதனத்துக்குக் காணும்” “சரிசரி உனக்கும் உதுக்கால கதைக்க ஞாயமான காசாக்கும்” “விசமேறின மாதிரி எறிநிக்குது எல்லாம்” அனுப்பப் பார்க்கிறன் வைக்கட்டேன்..” ம்…

வையன்…ம்.. படிப்பு, படிப்பு. படிப்பு, இளமையிற் கல்வி சிலையில் எழுந்து என்பர் வன்னிப்பகுதியின் பல்லாயிரக்கணக்கான சிறுவர்கள் இன்று கற்றுவரும் பாடமானது மிக அதிகம் ஒரே வருடத்துள் நேர்ந்துவிட்ட பல இடப்பெயர்வுகள் இருக்கும் இடமெங்கும் கூவி வந்து உயிர்குடிக்கும் எறிகணைகள் நள்ளிரவிலும்; உறக்கத்திலிருக்கும் போதும் குண்டுகளை வீசிக்கொல்லும் கோரவிமானங்கள் குடல் கலங்கும்படியான பேரிரைச்சலுடன் வரும் கிபிர்கள், மிக்குகள் என எல்லாவற்றையும் சமாளித்து வாழும் சகித்து வாழும் பக்குவம் அவர்களுக்குக் கைவந்துகொண்டிருக்கிறது.

அமைதியான சூழலில் அவர்கள் பிறக்கவுமில்லை அமைதியான சூழலில் வாழவுமில்லை ஆதிவாசிகள் போல சூழவுள்ள எதிரிகளை எதிர்த்தும் முடியாதபோது இடம்பெயர்ந்தும் அவ்வப்போது கிடைப்பதை உண்டும் கிடைக்காத போது பகிர்ந்துண்டும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஏதிலிகளாக வெளிநாடுகளில் வாழ்ந்து கொண்டிருக்கும் உறவுகளை உடையோர்மட்டும் இரண்டு வேளை வயிறார உண்ணக்கூடியதாகவுள்ளது. இரண்டு வேளைதான் நாளுக்கு மூன்று வேளை உணவு, மூன்றுவேளை தேநீர் இடையில் சிற்றுண்டி இவையெல்லாம் எட்டாத கனவுகள், இந்தநிலையில் எழுத்துக்களைப் பயிலும் இளம் வயதில் பாடசாலை செல்ல முடியாத பிள்ளைகளைப் பற்றிப்பேசவும் வேண்டுமா? எழுதவும் வாசிக்கவும் கற்றுக்கொண்டே எட்டுவயதுக்கு மேற்பட்டோர் தாமாக எதையும் வாசித்தறிய எப்போதும் முடியும். சின்னஞ்சிறு மழலைகள் என்னசெய்யும் பெற்றவர்கள் வீடு பிடுங்கி ஏற்றவும் மீளப் பதியவைக்க முயன்றும், எதிலும் வேர்பிடிக்காமல் துவண்டு போயிருக்கின்றனர். கால் நீட்டிப் படுக்க ஓரிடம் இல்லை. ஈரமின்றிச் சமைத்துண்ண ஓரிடம் இல்லை பிள்ளையள் விளையாடாத தளமில்லை இதில் பாடம், படிப்பு, பள்ளிக்கூடம்,

சின்னவயதில் பள்ளிக்கூடம் போகும் கனவு என்பது எவ்வளவு இனிமையானது. அண்ணா, அக்கா என முன்பே பாடசாலை செல்வோருடன் சேர்ந்து செல்லும் சிறு குழந்தைகளை முன்பள்ளிக்கு களிப்போடு சென்று வரும் பாலகர்கைளப் பெற்றோர் அக்கறையோடு அணைத்துத் தேற்றுவார்கள்.

“பாலர் கூடி ஆடிடும் பாடசாலை பாருமே” என்ற பாலர் பாடல் அர்த்தமற்றுப்போய் அந்தப் பாடசாலைகள் அகதிமுகாம்களாகவும் ஆக்கிரமிப்புப் படைகளால் அழித்தொழிக்கப்படுபவையாகவும் மாறியுள்ளன. எங்கள் குழந்தைகளுக்கு கல்வி மறுக்கப்பட்டுவிட்டது. பல்கலைக்கழகக் கல்வியை வைத்து உரிமைகோரிப் பிறந்தது இந்தப் போராட்டம் இன்று பலர் கல்வியையும் தடைசெய்யப்பட்டுள்ளது. இலவசப் பாடப்புத்தகங்கம் கொடுக்கத் தொடங்கியபோது பழைய புத்தகங்களைப் பின்வரும் மாணவர்களுக்குக் கைமாற்றினார்கள் அதை ஒரு கல்விச் சமூகத்தினர் மறுத்துரைத்து சிறுவர்கள் மனதில் புதுப்புத்தகம் என்பதும் ஒரு ஆசைக்குரியது. அதன் புத்தம் புதுத்தாள்கள் அதன் மணம், கவர்ச்சி என்பன மாணவர்களை மகிழ்விக்கும். இந்த மகிழ்ச்சி ஒவ்வொரு மாணவருக்கும் வழங்கப்படவேண்டுமென வற்புறுத்தி அனைவரும் புதுப்புத்தகம் கிடைக்கச் செய்தனர்.

தைமாதம் புதிய வகுப்பில் அமரப்போகும் புளகாங்கிதம் ஒவ்வொரு மனிதருள்ளும் இருந்தது. இருக்கிறது. இருக்கும். அது இன்றைய வன்னிக் குழந்தைகளுக்கும் இருக்கிறது. அவர்கள் மனதிலிருந்த அற்புதமான கனவுகள் சிதைக்கப்பட்டுள்ளன. புதிய வகுப்புக்கள் என்ன பாடசாலையே இல்லை எங்கே போகிறோம்? ஏன் போகிறோம்? என்பது கூட அநேகமான சிறார்களுக்குப் புரியாது. சீருடையணிந்து முதலாம் ஆண்டில் கால் பதிக்கக் காத்திருந்த பிள்ளைகள் இருப்பிடங்களையும் இழந்து பாடசாலையையும் இழந்து பாதையோரங்களில் கொண்டுண்டு போன வாழ்க்கைக்குள் தள்ளப்பட்டுள்ளனர்.

எங்கள் பிள்ளைகளுக்கு ‘ஈமெயில்’ தெரியாது. எஸ்.எம்.எஸ் புரியாது. ஆனால் வாகனத்தில் பறப்பது பருந்தா வண்டா? என்பது தெரியும். பறப்பின் திசை அறியத் தெரியும் குண்டுபுறப்படும் தூமும் அது விழுந்த தூரமும் கொண்டு எங்கேயென்று துல்லியமாகக் குறித்துச் செல்ல முடியும். ஆயுதங்களை அடுக்கி வைத்தால் அதன் வகை சொல்லத்தெரியும். அதை ஆட்டுவிக்கவும் தெரியும் தற்காலிகமாகவீட்டைப் போடவும் தெரியும்புடுங்கவும் தெரியும் எதிலும் எங்கும் ஒட்டாமல் வாவும் முடியும். எதைநீ கொண்டு வந்தாய் அதை நீ இழப்பதற்கு என்ற கீதைவாக்கும் “யாதுஊரே யாவரும் கேளிர்; ‘ என்ற பூங்குன்றன் வாக்கும் வன்னி மக்களின் வாழ்விற்கோர் உதாரணங்கள்தான்.

மாவீரன் நெப்போலியன் ஒரு பதுங்கு குழியுள்தான் பிறந்தானாம் ஜோன் ஒவ் ஆர்க்கின் தந்தை ஒரு போர்க்கைதியாக இருந்தான். ஹிட்லர் சிறையிலிருந்த போதுதான் ‘மெயின்காம்ப்’ என்ற தனது கனவு எண்ணங்களை நூலாக்கினான். இவையெல்லாம் இரவல் வரலாறுகள். தேவகி வயிற்றில் கண்ணன் சிறையில் பிறந்ததும் அவன் கம்சனை அழித்ததும் கூட எமது புராணங்களிலுள்ளது. மகாபாரதப் போரிலே கிருஷ்ணன் உபதேசித்த பகவத்கீதை போரியலுக்கு ஒரு நீதியாக விளங்குகின்றது. இவையெல்லாவற்றினதும் அடிப்படையில் நோக்கினால் இங்கு பள்ளிக்கூடம் போகாமலே! பாடசங்களைக் கற்காமலே! எமது பிள்ளைகள் பெருங்கல்வியைக் கற்கத் தொங்கிவிட்டனர் என்றுதான் கூறவேண்டும். எந்தக் காலத்திலும் அழியாத வடுவாக எமது சிறார்களின் மனங்களில் விழுந்துவிட்ட இந்த அடிகளுக்குக் காரணம் யார்? என்பதை மட்டும் நாம் சொல்லிவைக்கவேண்டும். மீதியை அவர்கள் பார்த்துக்கொள்வார்கள்.

தமது வாழ்க்கையின் அடிநாதமான கல்வி மறுக்கப்பட்ட போது அடிப்படை வசதிகள் மறுக்கப்பட்டபோதும் அசையாத மனஉறுதியோடு நின்ற அவர்களது உள்ளங்களின் அடித்தளத்தே கருகிப்போயிருக்கும் கனவின் தாக்கம் மீண்டும் தீப்பற்றி எதிரியைக் தாக்கும் எங்கள் தாய்மண் இன்னலுறக்கண்டும் எமது சந்ததி அல்லற்பட்டு அவமாகிப் போதல் கண்டும் பாதைகளையும் வனங்களையும் பற்றைகளையும் வாழ்விடமாக்கிய கோரத்தைக் கண்டும் இன்னமும் வாழாவிருப்பது மடமை.

எழுந்துபோராட்டத்துணியாத இன்றைய இளையோர்கள் எதிர்காலத்தை எதிர்கொள்ள முடியாத அளவுக்கு இவர்களால் அலட்சியப்படுத்தப்படுவார்கள். அந்நிலைவருமுன் இந்நிலை களைவோம்.

சிறார்களை அவர்தம் கல்வியைக்காக்க நாம் போராடித்தான் ஆகவேண்டும் அது இன்றைய தலையாய கடமை.

- மாயா -

- தமிழ்க்கதிர் -



Comments