'தேவை ஒரு தேஷ்முக்!'

லங்கையில் சிங்கள ராணுவம் விமானங்கள் மூலம் குண்டு வீசியும் பீரங்கிகள் மூலம் குண்டுமழை பொழிந்தும் தமிழ் மக்களைக் கொன்று குவித்து வருகிறது. அவர்களின் வாழ்விடங்கள் தரைமட்டமாக்கப்பட்டுள்ளன. உயிர் தப்பிய மக்கள்... காடுகளில் ஓடி ஒளிந்து வாழ்கிறார்கள். அங்கேயும் விதி அவர்களை விரட்டுகிறது. பாம்பு கடிக்கும், காட்டு விலங்குகளுக்கும் இரையாகி மடிகிறார்கள்! இந்த மனித அவல நிலையை அண்டை நாடான இந்தியா வேடிக்கை பார்க்கிறது.

தமிழ்நாட்டில் உள்ள அனைத்துக் கட்சியினரும் பல்வேறு வகையான போராட்டங்களை நடத்தியாகி விட்டது. தமிழக சட்டமன்றத்தில் அனைத்துக் கட்சிகளின் ஆதரவோடு போர்நிறுத்தத்தை வலியுறுத்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

முதலைமைச்சர் தலைமையில் அனைத்துக் கட்சி தூதுக்குழு டெல்லிக்குச் சென்று பிரதமர் மன்மோகன்சிங்கிடமும் மன்றாடியது. இத்தனைக்கும் பிறகும், போர்நிறுத்தம் செய்யும்படி இலங்கையை வற்புறுத்த, இந்திய அரசு தயாராக இல்லை!

வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜியை அனுப்பி இலங்கை அதிபர் ராஜபக்ஷேவுடன் பேசுவதற்கு ஏற்பாடு செய்வதாக பிரதமர் கூறி, ஒரு மாதத்துக்கும் மேலாகிவிட்டது. அவர் அங்கு போவதற்கான அறிகுறியே தென்படவில்லை!

'இலங்கைக்கு, இந்திய அரசு ஆயுத உதவி செய்கிறது!' என்ற குற்றச்சாட்டை பிரதமர் இதுவரை மறுக்கவில்லை. ஏன் இந்த நிலை? தமிழ்நாட்டின் ஒன்றுபட்ட குரலை டெல்லி மதிக்க மறுப்பதன் பின்னணி என்ன? இந்தக் கேள்விகள் தமிழர்களின் நெஞ்சங்களைக் குடைந்து கொண்டிருக்கின்றன.

இந்தியாவின் பிற மாநில மக்கள், தங்களுடைய கோரிக்கைகளை எப்படி நிறைவேற்றிக் கொள்கிறார்கள் என்பதை நாம் எண்ணிப் பார்த்தால்... நமக்கு ஏற்பட்டுள்ள பின்னடைவுக்கான காரணம் புரியும்.

இந்தியாவில் மொழிவாரியாக மாநிலங்கள் திருத்தியமைக்கப்பட வேண்டும் என்பதற்கான போராட்டங்கள் 1950-களின் தொடக்கத்தில் நடந்தன. மக்கள் போராட்டங்களின் விளைவாக மத்திய அரசு மொழிவாரி மாநில ஆணையத்தை 1953-ம் ஆண்டு அமைத்தது. இதன் அறிக்கை 1955-ம் ஆண்டு வெளியிடப்பட்டது. கேரளம், கர்நாடகம் ஆகிய மாநிலங்கள் அமைப்பதற்கு அது பரிந்துரை செய்தது.

இதற்கு முன்பாகவே 1954-ல் ஆந்திரா அமைக்கப்பட்டு விட்டது. ஆனால், மராட்டியர்களையும் குஜராத்தியர்களையும் உள்ளடக்கிய இரு மொழி மாநிலமாக மும்பை மாநிலம் விளங்கும் என்று அது கூறியது. இதற்கு எதிராக மராட்டியத்தில் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டது. மும்பை நகரைத் தலைநகரமாகக் கொண்ட மராட்டிய மாநிலம் அமைக்கப்பட வேண்டுமென அவர்கள் போராடினர். மும்பை நகரில் உள்ள பெரும்பாலான தொழிற்சாலைகளும், வணிக நிலையங்களும் குஜராத்தியர்களுக்கும் வேறு பல மாநிலத்தவர்களுக்கும் சொந்தமானதாக இருந்தன.

எனவே, அவர்களும் மும்பை நகரத்தை மராட்டியத்தோடு சேர்க்க, பெரும் எதிர்ப்புத் தெரிவித்தனர். இந்தப் பிரச்னைக்குத் தீர்வு காண நினைத்த அப்போதைய இந்திய பிரதமர் நேரு, 1955-ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில், 'மும்பை நகரைத் தனி மாநிலமாக்கலாம்!' என்ற யோசனையைக் கூறினார். இதற்கு எதிராக மராட்டிய மக்களின் போராட்டம் மேலும் தீவிரமடைந்தது.

மும்பை மாநிலத்தின் முதலமைச்சர் மொரார்ஜி தேசாய் ஒரு குஜராத்தி. எனவே, மராட்டியர்களின் போராட்டத்தை மிகக் கடுமையாக ஒடுக்கினார். போலீஸ் நடத்திய துப்பாக்கி சூட்டின் விளைவாக 300-க்கும் மேற்பட்ட மக்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இது குறித்து நீதிவிசாரணை நடத்த மொரார்ஜி பிடிவாதமாக மறுத்துவிட்டார்.

அப்போது இந்தப் பிரச்னையில் ஒரு திடீர் திருப்பம் ஏற்பட்டது. நேருவின் அமைச்சரவையில் நிதி அமைச்சராக இருந்த சிந்தாமணி தேஷ்முக் ஒரு மராட்டியர். எனவே, மராட்டிய மக்கள் ஒடுக்கப்படுவதற்குக் கடும் எதிர்ப்புத் தெரிவித்தார். மும்பை நகரம் நியாயமாக மராட்டியர்களுக்குச் சொந்தமானது என்பதை வலியுறுத்தி, தன் மக்கள் கொல்லப்படுவதைக் கண்டித்து அமைச்சர் பதவியில் இருந்து விலகுவதாகக் கடிதம் எழுதினார்.

இவ்வளவுக்கும் சிந்தாமணி தேஷ்முக் ஒரு அரசியல்வாதி அல்ல. அவர் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தைய ஐ.சி.எஸ் அதிகாரி ஆவார். ரிசர்வ் வங்கியின் ஆளுநராக இருந்த அவரிடம் நேரு நிதி அமைச்சர் பதவியை ஒப்படைத்திருந்தார். நேருவுக்கு அவர்மீது அளவு கடந்த மதிப்பும் நம்பிக்கையும் இருந்தது. ஆனால், நேருவின் நம்பிக்கையைவிட மராட்டிய மக்களின் நம்பிகையையே பெரிதாகக் கருதினார் தேஷ்முக். எனவே, அமைச்சர் பதவியில் இருந்து விலகினார்.

சிந்தாமணி தேஷ்முக் என்ற தனிமனிதர் தன்னுடைய பதவியைத் துறந்து செய்த தியாகம்தான், மராட்டியர்களுக்கு மும்பை நகரைப் பெற்றுத் தந்தது. தமிழர் பிரச்னைக்காகப் பதவியைத் துறக்க மத்திய அரசில் உள்ள எந்தத் தமிழனும் முன்வராத காரணத்தால்தான், இன்றைக்கு இந்திய அரசு தமிழகத்தின் குரலை மதிக்க மறுக்கிறது. காவிரிப் பிரச்னையாக இருந்தாலும்... முல்லை பெரியாறு பிரச்னையாக இருந்தாலும்... ஈழத்தமிழர் பிரச்னையாக இருந்தாலும் அவற்றைத் தீர்க்க நமக்குத் தேவை ஒரு சிந்தாமணி தேஷ்முக்.

கிடைப்பாரா அந்த சிந்தாமணி தேஷ்முக்?

- பழ.நெடுமாறன்

நன்றி: ஜீனியர் விகடன்



Comments