வரலாற்றுப் பழிக்கு துணைபோகுமா சர்வதேசம்?

தமிழ் மக்களுக்கு சோதனைகளையும் துன்பங்களையுமே கொடுத்த 2008ம் ஆண்டு; இரத்தப் பலியோடு விடைபெற்றுச் சென்றிருக்கிறது.
வன்னியில், மகிந்த ராஜபக்ஸ அரசாங்கத்தின் ‘மனிதாபிமானப் போர்’ தமிழ்மக்களை ஓட ஓடத் துரத்திக் கொண்டிருக்கிறது.

மன்னாரில் இருந்து, வவுனியாவில் இருந்து மக்கள் ஒவ்வொரு இடமாகப் பின்னகர்ந்து பின்னகர்ந்து இப்போது கடைசிக் கட்டத்துக்கு வந்து நிற்கிறார்கள்.
மன்னார், வவுனியா, கிளிநொச்சி என்று ஒரு புறத்திலும்- செம்மலை, நெடுங்கேணி, முல்லைத்தீவு, முள்ளியவளை என்று இன்னொரு புறத்திலும் பொதுமக்களின் இடப்பெயர்வு என்பது சர்வ சாதாரணமான நிகழ்வாகி விட்டது.

1995ம் ஆண்டின் யாழ்ப்பாண இடப்பெயர்வை விடவும்- ஜெயசிக்குறு காலத்து இடப்பெயர்வுகளை விடவும் மோசமான அவலங்கள் அங்கு நிகழ்ந்து கொண்டிருப்பது- உலகின் கண்களில் இருந்து மறைக்கப்பட்டுக் கிடக்கிறது.

இடப்பெயர்வு கொடுமைகளின் மத்தியில் விமானப்படையும் இராணுவமும்- மக்களின் வாழ்விடங்களின் மீது தொடர்ச்சியாக நடத்தும் தாக்குதல்கள் கொடூரத்தின் உச்சக் கட்டம் எனலாம்.

2008ம் ஆண்டில் இறுதி நாளான நேற்று (டிசம்பர் 31) முரசுமோட்டைப் பகுதியில் விமானப்படையின் கோரமான குண்டுவீச்சில் 5 பொதுமக்கள் உடல் சிதறிப் பலியாகியிருக்கின்றனர். மேலும் 16 பேர் காயமடைந்திருக்கின்றனர். இந்த நரபலியோடு தான் தமிழ்மக்களுக்கு தீராத துயரத்தைக் கொடுத்த 2008ம் ஆண்;டு விடைபெற்றிருக்கிறது.

கிறிஸ்மஸ் மற்றும் புதுவருடத்தை முன்னிட்டு 5 நாட்களுக்கு தற்காலிக போர்நிறுத்தம் செய்யுமாறு கத்தோலிக்க- அங்கிலிக்கன் ஆயர்கள் விடுத்த வேண்டுகோளை நிராகரித்த அரசாங்கம், வன்னி மீது குண்டு மழையாகப் பொழிந்து வருகிறது.

டிசம்பர் 20ம் திகதிக்கும் 31ம் திகதிக்கும் இடைப்பட்;ட 12 நாட்களில் மட்டும் வன்னிப் பகுதியில் விமானக் குண்டுவீச்சுக்களிலும், ஷெல் தாக்குதல்களிலும் கொல்லப்பட்ட பொதுமக்களின் தொகை 9ஆகும். காயமுற்றோரின் எண்ணிக்கை 39. அதிலும் கிறிஸ்மஸ் தினத்துக்கும் புதுவருட தினத்துக்கும் இடைப்பட்ட ஒரு வாரத்தில் ஆறு பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். காயமுற்றவர்கள் 34 பேர். பண்டிகைக் கால யுத்தநிறுத்தம் நடைமுறைக்கு வந்திருந்தால் இந்த இழப்புகள் தவிர்க்கப்பட்டிருக்கும்.

ஆனால் தமிழ்மக்களுக்கு பண்டிகைக் காலம் என்ற ஒன்றே இருக்கக் கூடாதென்ற நோக்கில்- அவர்களை துன்பத்துக்குள் தள்ளும் ஒரே நோக்கில்- செயற்படும் அரசாங்கமும், அதன் படைகளும் தமது இரத்தப் பசியை தீர்த்துக் கொள்ளவே இந்தப் பண்டிகைக் காலத்தைப் பயன்படுத்தியிருக்கின்றன.

இலங்கையில் நாளுக்கு நாள் மனித உரிமைகள் மோசமாக மீறப்பட்டு வருகின்ற போதும்- தமிழ்மக்கள் மீதான வன்முறைகள் உச்சமடைந்து வருகின்ற போதும்- சற்றேனும் இது பற்றிக் கவலைப்படாத சர்வதேசத்தின் போக்கு இலங்கை அரசாங்கத்துக்கு சார்பான நிலையையே ஏற்படுத்தியிருக்கிறது.

போரை நிறுத்தக் கோரியோ, மனித உரிமை மீறல்களை கட்டுப்படுத்தக் கோரியோ சர்வதேசம் உருப்படியான அழுத்தங்களை அரசாங்கத்தின் மீது கொடுக்கத் தவறியதால் தான்- இலங்கை அரசாங்கம் தான்தோன்றித்தனமான செயலில் ஈடுபட்டு வருகிறது.

அதிலும் இந்தியாவின் நிலை குறிப்பிட்டுச் சொல்லத்தக்கது.

போரை நிறுத்த வழி செய்யுமாறு தமிழகத்தில் இருந்து குரல்கள்- அழுத்தங்கள் எழுந்த போது அதை தணிக்கும் நோக்கில் உணவு நிவாரணத்தை அனுப்புவதாக மத்திய அரசு அறிவித்தது.

அத்துடன் இலங்கை அரசுடன் நடத்திய பேச்சுக்களின்போது பொதுமக்களுக்கு சேதங்கள் ஏற்படாமல் போரை நடத்துமாறு இந்தியா வலியுறுத்தியது.
போரை நிறுத்துமாறு வலியுறுத்தாமல்- பொதுமக்களுக்கு சேதம் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளுமாறே இந்தியா கேட்டுக் கொண்டது.

இவ்வாறு இந்தியாவின் மறைமுக ஆசியோடு போரை நடத்தும் இலங்கை அரசு, இந்தியாவின் வேண்டுகோளை செவிசாய்த்திருந்தால்- இந்தக் குறுகிய காலத்தில் இத்தனை உயிர்கள் இழக்கப்பட்டிருக்காது.

இலங்கை அரசாங்கத்தைப் பொறுத்தவரையில் இந்தியா என்ன, எந்த நாட்டின் ஆலோசனையையும் ஏற்றுக் கொள்ளும் நிலையில் இல்லை என்பதே உண்மை.

தமிழ்;மக்கள் அனைவரையும் புலிகளாகவே பார்க்கின்ற அரசபடைகள் கண்மூடித்தனமான ஷெல், வான் தாக்குதல்களை நடத்துகின்றன.
பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் இந்த வான், பீரங்கித் தாக்குதல்களை நடத்த முடியாது. ஏனென்றால் இது எல்லைப்புறச் சண்டையல்ல.

இதை இந்தியா புரிந்து கொள்ளவில்லையோ அல்லது ஏதோ பெயருக்கான கண்டிப்பதாக கூறியதோ தெரியவில்லை.
போரை நிறுத்தி இனப்பிரச்சினைக்கு பேச்சுக்கள் மூலம் தீர்வு காணுமாறு இந்தியா வலியுறுத்த தயாராக இல்லை.

வெறுமனே அது இராணுவத்தீர்வு சாத்தியமில்லை. அரசியல் தீர்வு தான் சாத்தியம் என்று ஒதுங்கி நின்று வேதம் ஓதிக் கொண்டிக்கிறது.
தமிழகத் தலைவர்களின் வேண்டுகோளின்படி இந்திய வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜியை கொழும்புக்கு அனுப்புவதாக இந்தியப் பிரதமர் வாக்குறுதி கொடுத்து ஒரு மாதம் கடந்து விட்டது.

ஆனால் அவரது பயணத் திட்டம் இன்னமும் கிடப்பில் தான் கிடக்கிறது. கிளிநொச்சியோ முல்லைத்தீவோ கைப்பற்றப்படும் வரையில் அவர் கொழும்பு செல்லமாட்டார் என்பது உறுதி.

ஏற்கனவே இந்தியாவும் இலங்கையும் இணங்கிக் கொண்டதன் படியே இந்தியா செயற்படுகிறது. புலிகளுக்கு எதிரான போரை நடத்துவதில் இலங்கைக்கு இந்தியா உதவுவது வேறு விடயம். ஆனால் இந்தப் போரின் பெயரால் தமிழ்மக்கள் கொல்லப்படுவதை இந்தியா வேடிக்கை பார்க்;கிறது.

அதுவும் இந்தியாவின் வேண்டுகோளைப் புறக்கணித்தே வன்னியில் பொதுமக்களின் குடியிருப்புகள் தாக்கப்படுகின்றன.
இது இந்தியாவின் கருத்தை வேண்டுமென்றே மீறுகின்ற செயலா? அல்லது அதன் ஆசீர்வாதத்தோடு அரங்கேற்றப்படும் படுகொலைகளா? என்ற சந்தேகம் இந்தக் கட்டத்தில் எழுகிறது.

அரசாங்கத்துக்கு சர்வதேசம் நெருக்கடி கொடுக்காத வரையில் இலங்கைத் தீவில் தமிழ்மக்களின் பாதுகாப்புக்கு யாரும் உத்தரவாதம் கொடுக்க முடியாது. தமிழ்மக்களின் அழிவுகளைத் தடுக்க முடியாது.

இலங்கை அரசுக்கு நெருக்குதல் கொடுக்க 2008ம் ஆண்டில் ஜிஎஸ்பி பிளஸ் உள்ளிட்ட பல வாய்ப்புகள் இருந்தபோதும்- அதையெல்லாம் நழுவவிட்ட சர்வதேசம், இனிமேலும் அதே மென்போக்கை கடைப்பிடிக்குமானால் இலங்கையில் தமிழ்மக்கள் அழிக்கப்படும் நிலை தான் தொடரும்.

புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பிரதேசங்கள் கைப்பற்றப்பட்டாலும் கூட- போர் முடிவுக்கு வந்தாலும் கூட- தமிழ்மக்களின் பாதுகாப்பை உத்தரவாதப்படுத்த முடியாது. அதைச் செய்யும் ஒரு சிங்களத் தலைமையாவது தென்னிலங்கையில் இல்லை.

போரினால் மட்டும் தான் தமிழ்மக்கள் அழிக்கப்படவில்லை.

போர் முடிவுக்கு வந்தால் தமிழ்மக்களின் உயிருக்கு பாதுகாப்பு வந்துவிடும் என்பது உண்மையானால்- புலிகளிடம் இருந்து விடுவித்து விட்டதாக அரசு கூறும் கிழக்கில் படுகொலைகளும், ஆட்கடத்தல்களும் ஓய்வுக்கு வந்திருக்க வேண்டும்.

ஆனால் விடுவிக்கப்பட்டதாகச் சொல்லப்படும் பிரதேசங்களில் நடக்கின்ற படுகொலைகள், ஆட்கடத்தல்கள், காணாமல் போதல்கள் என்பன போருக்கு அப்பால் நடக்கின்ற இன அழிப்பின் அடையாளங்களே என்பதை சர்வதேசம் உணர்ந்து கொள்ளவேண்டும.
இதேநிலை தான் வடக்கை இராணுவம் கைப்பற்றினாலும் தொடரப்போகிறது.

போர் மூலம் புலிகள் தோற்கடிக்கப்பட்டு விட்டால் இலங்கையில் இனப்பிரச்சினைக்கு தீர்வு வந்து விடும் என்ற கற்பனையில் சர்வதேசம் இருக்குமேயானால் ஒரு இனத்தின் அழிவுக்கு துணைபோனதான வரலாற்றுப்பழி அவர்களுக்கே வந்து சேரும்.



Comments