இந்தியா இரை மீட்பதால் இடைவெளி நீங்காது! - இந்திய மத்திய அரசில் மாற்றம் வேண்டும் என வேண்டுவதும் தீண்டத் தகாத விடயமா?



சுதந்திர இந்தியாவை அமைப்பதற்காகப் போராடியவர்கள் சுதந்திரத் தமிழீழம் அமைவதை ஏன் ஆதரிக்கக் கூடாது? சரி, ஆதரிக்கத் தேவையில்லை ஏன் தமிழீழத்தில் தமிழரை அழிப்பதற்கு முனைப்புடன் செயற்படும் சிங்களப் பேரினவாதிகளுக்கு துணைபுரிய வேண்டும்?

குறிப்பிட்ட இந்தக் கேள்விகளுடன் தமிழ் நாட்டிலுள்ள தமிழ்த் தேசிய உணர்வாளர்கள் தமிழீழ மக்களிற்காகத் தாராளமாகவே குரல் கொடுக்கின்றனர். ஆனால்…. கட்சி வேறுபாடுகளைக் கடந்து ஓட்டுமொத்தமாகச் செயற்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இருப்பதும் இந்திய மத்திய அரசில் மாற்றம் வேண்டும் என வேண்டுவதும் தீண்டத் தகாத விடயமா?

தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் பின்தள அமைவிடம் சுருங்கி விட்டதென தமிழரெல்லாம் நெஞ்சில் இடிவிழுந்தது போல திகைத்திருக்கும் இன்றைய நிலையில், தமிழகத்தில் இருந்து வரும் செய்திகள் நிலைதடுமாறச் செய்பவையாகத் தெரிகின்றன. காங்கிரசின் தங்கபாலு குமுதம் இணையத்தளமூடாக நேயர்களின் கேள்விகளிற்கு பதிலளிக்கையில் 'இந்திய மத்திய அரசு சிறி லங்காவிற்கு பேராயுத உதவி செய்யவில்லை" என்று உறுதியாகக் கூறினார். 'அமைதி வழியில் ஈழத் தமிழரின் பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட வேண்டும்" எனவும் வேண்டுகோள் விடுத்தார்.

இந்திய - இலங்கை கடற்படைகளின் கூட்டுப் பயிற்சி, ஏற்கனவே செய்யப்பட்ட ஒப்பந்தத்தின்படி தூத்துக்குடியில் இருந்து கொழும்புத் துறைமுகத்திற்கு வெடிபொருட்கள் அனுப்புவது (ஒரு தடவை தமிழகப் பொலிசார் வெடிபொருட்கள் ஏற்றிய பாரவூர்தியை சோதனை செய்த போது தகவல் வெளியாகியது) சிறி லங்காப் படைகளிற்குச் சிறப்புப் பயிற்சி, லெப். ஜென்ரல் சரத் பொன்சேகாவிற்கு செங்கம்பள வரவேற்பு, ராடர்களை வழங்கியது (வவுனியா ஜோசப் படைத்தளம் தாக்குதலின் போது இந்திய வான்படைப் பொறியியலாளர்களும் காயமடைந்தனர்). இவை உட்பட போரைக் கொண்டு நடத்துவதற்கான இரகசியமான உதவிகள் ஏராளம்.

இப்பொழுது விடுதலைச் சிறுத்தைகளின் தலைவர் தொல். திருமாவளவன், 'முல்லைத்தீவுக் கடலில் சீருடையணியாத இந்தியக் கடற்படையினர் நிற்கின்றனர்" என்று கூறுகின்றார். தங்கபாலு அவர்களே இவை எல்லாம் என்ன?

தமிழரை அழிப்பதற்கு சிறிலங்காப் பேரினவாத அரசிற்கு துணை போவதில் எத்தனை பேர் முண்டியடிக்கின்றீர்கள். அப்படி என்ன கொடுமையைத் தான் தமிழர் இழைத்தனர்? மாலைதீவின் கேணல் அகமட் சநீர், ஜப்பானின் கப்ரன் மசகருமுரை, பங்களாதேசின் கொமாண்டர் இமாம் குசைன், பாகிஸ்தானின் கேணல் சையத் ஹ_ரம் ஹஸ்னைன்;, பிரித்தானியாவின் கேணல் லோறன்ஸ் ஸ்மித், இந்தியாவின் கப்ரன் பிரதீப்சிங். இவ்வளவு பேரும் இலங்கையில் எதற்காகச் சுற்றுலாச் சென்றனர். சிறிலங்காப் படையதிகாரிகளுடன் இவர்கள் அனைவரும் கூட்டாக ஆலோசித்தது என்ன?

குறிப்பிட்ட இந்த நாடுகள் அனைத்துமே ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் போரின் வலியைச் சந்தித்தவர்கள் தான். அப்படியிருந்தும் ஏன் சிறி லங்காவுக்குப் போரிற்குத் துணை போகின்றனர்? சிறி லங்காப் படையதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தும் போது இந்தியாவின் கப்ரன் பிரதீப்சிங்கும் சென்றார். போரிற்கு உதவவில்லையென்றால் ஏன் ஒரு படையதிகாரி சிறி லங்காவிற்குச் செல்ல வேண்டும்?

'அமைதிவழியில் உரிமைக்காகப் போராடுவார்களென்றால் எமது முழுமையான உதவிகள் இருக்குமெனவும்" தங்கபாலு கூறினார். அமைதிவழியில் தான் எழுபதுக்கு முந்திய காலத்தில் ஈழத் தமிழர் போராடினர். சிங்களப் பேரினவாதிகள் வன்முறையால் அடக்கினர். இது தமிழர் தரப்பால் தொடராகக் கூறிச் சலித்துப் போன செய்தியாகவுள்ளது. சிங்களப் பேரினவாதிகளே வன்முறையைத் தமிழரிடம் திணித்தனர்.

பலாத்காரம் தண்ணீரைப் போன்றது. தான் வெளியேறச் சிறுவழி கிடைத்து விட்டால் போதும் கரையை உடைத்துக் கொண்டு ஓடும் - மகாத்மா காந்தி

அமைதி வழியென்பதில் பலாத்காரம் திணிக்கப்பட்டால் என்ன செய்ய முடியும்? காந்தி சொன்னது சிங்களப் பேரினவாதிகளுடன் சரிப்பட்டு விடவில்லை.

உண்மையைச் சொல்லுவதற்காக தூக்குமரம் ஏற வேண்டி வந்தாலும் தயாராக இருங்கள். - காந்தி

இப்படிச் சொன்னவரின் தேசத்தவரிடம் கோரிக்கை வைத்து தியாகதீபம் திலிபன், அன்னை பூபதி ஆகியோர் அமைதி வழியில் போராடினர் என்ன கிடைத்தது? சிங்களப் பேரினவாதிகளிடம் அமைதி வழியில் போராடி எதுவுமே கிடைக்கவில்லை. அதேபோன்று தானே இந்தியாவும் அசையாமல் இருந்தது. ஈழத் தமிழர் இனி யாருடன் அமைதி வழியில் போராடுவது? எனவே, தமிழ்த் தேசிய உணர்வோடு தமிழ்நாட்டிற்குள் போராட வல்லவர்கள் முன்னெடுக்கும் நல்ல நடவடிக்கைகளுடன், வேறுபாடுகளைக் களைந்து, இந்தியா சிறி லங்காவிற்கு செய்யும் உதவிகள் தமிழினத்தை அழிப்பதற்கே என்பதை உணர்ந்து அதனைத் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்தியா வீரமறவனாகக் கொண்டாடும் மதன்லால் திங்க்ரா ஆங்கிலேய அமைச்சரவையில் இந்திய விவகாரங்களை மேற்பார்வையிட்ட அமைச்சரின் அரசியல் உதவியாளர். லெப். கேணல் சேர் கர்சன் வில்லி, கப்ரன் கவாஸ் லால்காக்கா (பாதுகாவலர்) ஆகிய இருவரையும் 1909 ஜூலை 01 அன்று லண்டனில் ஜஹாங்கீர் மண்டபத்தில் சுட்டுக் கொன்றார். லண்டனில் பொறியியல் பட்டப் படிப்பில் முதல்வகுப்பில் தேறியவர் மதன்லால். இந்தியாவின் சுதந்திரம் பற்றிய எண்ணத்துடன் துணிவுடன் துப்பாக்கியை இயக்கினார். இவரை 1909 ஆகஸ்ட் 17 அன்று ஆங்கிலேயர் தூக்கிலிட்டனர். அன்று இவரை ஆங்கிலேயர் பயங்கரவாதி என்றனர். அதேவேளை, 1976 டிசம்பர் 13 அன்று லண்டனில் புதைக்கப்பட்ட மதன்லாலின் உடலெச்சங்களை எடுத்துக் கொண்டு போய் இந்திய மண்ணில் புதைப்பதன் மூலம் இந்தியா பெருமைப்பட்டுள்ளது.

இவற்றை பிரித்தானியா மறக்க வேண்டும். இந்தியா புனிதமாக பார்க்க வேண்டும். ஆனால், ஈழத் தமிழர் விவகாரத்தில் குறைந்தளவான மக்கள் தொகையைக் கொண்ட தமிழர், உரிமைப்போர் ஈடுபடுகின்ற போது ஏன் இந்தியா தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளக் கூடாது?

காந்தியின் அமைதிவழிப் போராட்டம் வெள்ளையரிடம் வென்றது. அதேபோல் 1953 ஆம் ஆண்டு ஆந்திர மாநிலம் அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து பொட்டி சிறி ராமுலு உண்ணாவிரதம் இருந்து உயிர் துறந்தார். இவரின் உண்ணாவிரதப் போராட்டத்தின் பின் 02.10.1953 அன்று ஜவகர்லால் நேரு நாடாளுமன்றத்தில் ஆந்திர மாநிலக் கோரிக்கையை ஏற்பதாக அறிவித்தார். அதனை ஏற்ற இந்தியா ஏன் திலீபன் பூபதி ஆகியோரின் போராட்டத்தை, உயிர்த் தியாகத்தை ஏற்கவில்லை?

இந்தியா அமைதியாகவும், அமைதியை விரும்பும் நாடாகவும், தனது நாட்டிற்குள் அமைதியை மதிக்கும் நாடாகவும் இருந்து விட்டால் போதுமா? சுதந்திர இந்தியாவை அடைய வேண்டும் என்பதற்காக ஆயத ரீதியிலும் அமைதி வழியிலும் போராடியவர்கள் இந்தியர்கள். எனவே போராட்டம் பற்றிய அறிவு புகட்ட வேண்டியவர்களாக இந்தியர்கள் இருக்க மாட்டார்கள் என்ற ஈழத் தமிழரின் நம்பிக்கையை ஏன் வீணாக்கினீர்கள் என்று ஈழத் தமிழர் எழுப்பும் கோரிக்கைக்கு என்ன தான் பதில்?

மும்பையில் குண்டு வைக்கின்றனர். ஈவிரக்கமின்றி பொதுமக்களை பணயமாக வைத்தும் சுட்டும் கொலை நடக்கின்றது. இப்படிச் செய்யாதீர்கள் என்று உண்ணாவிரதம் இருக்க முடியுமா? எதிர் நடவடிக்கையைச் செய்வது தவிர்க்க முடியாது. சிறி லங்கா அரசாங்கம் மிகையொலிக் குண்டு வீச்சு வானூர்தி அடங்கலாக மிக நவீன போர்த் தளபாடங்களை வைத்துக் கொண்டு ஈழத் தமிழரை நாளாந்தம் பலியெடுக்கின்றது. இந்த நிலைமைக்கு முன்னால் எப்படி அமைதி வழியில் போராடுவது? 'புலிகள் தாக்குவதற்கு பதில் நடவடிக்கை செய்கின்ற போது மக்களும் இலக்காகி விடுகின்றனர். இது தவிர்க்க முடியாது" என சிலர் கூறுகின்றனர்.

எழுபதுகளுக்கு முன்னர் தமிழரைக் கொதிக்கும் தாரிற்குள் போட்டும் கொன்றனரே! இதிலிருந்து சிறி லங்கா இனவெறி அரசின் அடிப்படைத் திட்டம் புரியவில்லையா?

நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ் 1943 ஒக்டோபர் 23 அன்று சிங்கப்பூரில் சுதந்திர இந்திய அரசைப் பிரகடனம் செய்தார். பாரதத்தின் விலங்கொடிக்கப் படை திரட்டினார். சுதந்திர இந்தியப் பிரகடனம் செய்யப்பட்டதும் பிறநாட்டில் படைக்கான ஆளணியைத் திரட்டி பயிற்சிகள் வழங்கிய போதும், சுதந்திரம் வேண்டும் என்று பிறநாடுகளில் போராடிய போதும் போது இந்தியாவிற்கு சரியெனத் தெரிந்தவையெல்லாம். தமிழர் சுதந்திரம் வேண்டும் என்று போராடுகின்ற போது பிழையாகி விடலாமா? இந்தியாவின் விடுதலைக்காக இந்திய தேசியப் படைக்கு வீரர்களைத் திரட்டி ஜேர்மனியில் பயிற்சி வழங்கி களமிறக்கியவர்கள். அதனை இன்றும் பெருமையாகப் பேசுகின்றவர்களிற்கு சுதந்திரத்திற்காக விடுதலைக்காகப் போராடுவதன் தேவையும் அவசியமும் பற்றி தெரியாத ஒன்றல்ல.

எண்பதுகளில் தமிழீழ விடுதலைப் போராளிகளிற்குப் பயிற்சி கொடுத்த இந்தியா. அதன் படைகளை அனுப்பி ஈழத் தமிழர் ஆறாயிரத்திற்கும் அதிகமானோரைப் படுகொலை செய்ததை மறப்பதற்கு ராஜீவ் காந்தியின் படுகொலை பற்றிப் பேசுவதை விட்டுவிட்டு புதிய பாதையில் பயணிக்க வேண்டும். ஏனெனில், பழைய, கசப்பான சம்பவங்களை, வரலாற்றைத் தொடர்ந்தும் இரைமீட்பதால் இடைவெளிகளே அதிகரிக்கும்.

ஆபத்துக்கு உதவாப் பிள்ளை, அரும் பசிக்கு உதவா அன்னம்;, தாகத்தை தீராத் தண்ணீர், தரித்திரம் அறியாப் பெண்டீர், கோபத்தை அடக்கா வேந்தன், குருமொழி கொள்ளாச் சீடன், பாவத்தைத் தீர்க்காத் தீர்த்தம். பயனிலை ஏழும் தானே! (விவேக சிந்தாமணி)

இது இந்தியாவிற்கே படையல்.

தனித்து நின்று போராடும் ஈழத் தமிழரின் விடுதலைப் போராட்டத்திற்கு தமிழ்நாட்டின் உறவுகள் குரல்கொடுப்பதை இன்னும் காத்திரமாகச் செய்கின்ற போது இந்திய அரசு எதைச் செய்தாலும் செவி சாய்த்தே ஆக வேண்டும் என்ற நிலை நிச்சயமாக வரும்.

வேறுபாடுகளைக் களைந்து தமிழ்நாடு எழுச்சியுற வேண்டும். இந்தியா மாற வேண்டும்.

கனகரவி

Comments