வன்னி - இந்தியாவின் இன்றைய தேவை என்ன?



உளவு விமானம் அடிக்கடி வன்னியின் வான்பரப்பில் பறக்கிறது என்றொரு செய்தி, அந்த விமானத்தில் ஏவுகணை இருப்பதாக இன்னொரு செய்தி, வன்னிக்கு சிவிலுடையில் இந்திய உளவு நிறுவன அதிகாரிகள் சென்றார்கள் என்றொரு செய்தி என பல செய்திகளால் நாங்கள் பலமாகக் குழம்பி இந்தியாவை சந்தேகக் கண்கொண்டு பார்க்கத் தொடங்கியாகி விட்டது.

இந்தியா தான் இந்தப் போரை நடத்துகிறது என்றுகூட நம்புமளவிற்கு சென்றுள்ள இந்த நிலைக்கான நிஜமான காரணங்களில் முக்கியமானது விடுதலைப் புலிகளின் மரபு வழிப் பலம் அல்லது விடுதலைப் புலிகளின் இராணுவ நேர்த்தி பற்றிய இந்தியாவின் அச்சமே என்பதை அலசி அதற்கான மாற்று வழி காணும் களமாக இன்றைய இந்த ஆய்வை நாங்கள் எடுத்துக் கொள்வோம்.

கிழக்கில் இருந்து பின்வாங்கிய விடுதலைப் புலிகள் வன்னியிலேயே தாக்குப்பிடிக்க போரிடுகிற நிலையில் மேற்கூறப்பட்ட 'பலம்" அல்லது 'இராணுவ நேர்த்தி" என்ற சொற்பதங்கள் ஏன் 2007 இன் ஆரம்பத்தில் இந்தியாவிற்கு சிரத்தையானதாக இருந்திருக்கும் என்பதற்கான விடை விடுதலைப் புலிகளின் படைக்கட்டுமாணத்தின் வளர்ச்சியான வான்புலிகளே.

இந்தியாவானது ஒரு அணுவாயுத நாடு. சந்திரனிற்கு விண்கலத்தை அனுப்புகிற அளவிற்கு அபரிமிதமாக வளர்ந்து விட்ட நாடு. தென்னாசியாவின் பொருளார மையம். எந்தவிதத்திலும் மேற்குலகால் புறந்தள்ள முடியாத ஒரு நாடு. எனவே, இந்தியாவின் இறையாண்மை என்பது அதனால் எந்தவித விட்டுக் கொடுப்பிற்கும் உள்ளாக முடியாத ஒரு விடயம்.

எனவே, அதன் கடல் எல்லைக்குள்ளோ வான் எல்லைக்குள்ளோ அந்நியரின் அத்துமீறிய பிரவேசம் நடந்தால் அது இந்தியாவின் இறையாண்மையை அது பாதுகாக்கத் தவறிவிட்டது என்றே கருதப்படும். எனவே, அப்படி ஏதும் நடக்காமல் இருப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அது வன்னி நடவடிக்கைக்கு முண்டு கொடுக்கிறது.

கடற்புலிகளையே ஒரு கட்டுமாணம் கொண்ட கடற்படையாகவே இந்தியா கருதி வந்தது. இந்நிலையில் வான்புலிகளின் பிரவேசம் இந்தியாவிற்கு சிம்மசொப்பனமாக மாறிவிட்டது. ஏனெனில் வான்புலிகளின் விமானம் இந்தியாவின் வான் எல்லைக்குள் தவறுதலாக நுழைந்தால் கூட அதனால் இந்தியாவிற்கு ஏற்படப் போகும் அவமானம் மிக மிகப் பெரியதாகவே இருக்கும். அதன் இறையாண்மைக் கண்காணிப்பு வலைப்பின்னலின் மீதான நம்பிக்கை இழக்கப்பட்டு விடும்.

தர்க்கீக ரீதியாக விடுதலைப் புலிகளையும் இந்தியாவிற்கான பாதுகாப்பு அச்சுறுத்தலாகக் கருதுவதற்கு அதன் பாதுகாப்பு கொள்கை வகுப்பாளர்கள் அடுக்கிய வாதப்பிரதிவாதங்களை 'சாத்தியமற்றவை" என்று ஒதுக்குகிற அளவிற்கு ஈழத்தமிழர்களுடனான உறவு இந்தியாவிற்கு இல்லாதமையால் அதுவே இந்தியாவின் தேவைகளை மாற்றி இந்தப் போரிற்கான தொழில்நுட்ப உதவிகளைச் செய்யுமளவிற்கு மாறியிருக்கிறது.

எனவே தான் அது தனது கரையோரப் பகுதிகளில் ராடர் கண்காணிப்பு நிலைகளை வான்புலிகளைக் கவனிக்கவென்றே அமைத்ததுடன் கடற்கண்காணிப்பு கப்பலொன்றையும் மேலதிகமாக இச் சேவையிலீடுபடுத்தியது.

மேலதிகமாக சிங்களத்தின் உசாத்துணையாக வவுனியா மன்னாரில் கூட ராடார்களை நிறுவியது. நிழற்போரங்கில் அதன் முக்கிய பணி இந்த வான்புலிகளைக் கண்காணிப்பதாகவே இருந்தது.

அதுபோலவே வான்புலிகளின் ஏழு தாக்குதற் பறப்புக்களும அச்சொட்டானதாக அமைந்திருந்தன. நேர்த்தியான அனுபவமிக்க பறப்புக்கள் அவை. நவீன தொழில்நுட்பத்தின் உதவிகளற்று தாக்குதல் இலக்குகளை துல்லியமாகத் தாக்கிவிட்டுத் தளம் திரும்புவதற்கு இந்த இலகுரக விமானங்களால் முடிந்ததென்பது அவர்களின் அனுபவத்தை வெளிக்காட்டியது.

அதுவும் பகல் நேரப் பறப்புக்களால் கூட இயலாத இலக்குக்களை கரிய இருட்டில் சென்று தாக்கிவிட்டு சிறிலங்கா வான்வெளித் தாக்குதலிகளிலிருந்து தப்பி வருமளவிற்கு அவை அனுபவமாக செயற்பட்டிருக்கினறன. எனவே இத்தகையதொரு படையை அது தனது இறையாண்மைக்கான பாதகமாக கருதத் தொடங்கிவிட்டது.

வான் புலிகளின் விமானப் பறப்புக்களை கட்டுப்படுத்தியாக வேண்டிய தேவைக்காகவே கிளிநொச்சி கைப்பற்றப்பட வேண்டும் என்பதும் கடற்புலிகள் முடக்கப்பட வேண்டும் என்பதற்காகவே முல்லைத்தீவு முற்றுகையிடப்பட வேண்டுமென்பதும் அதன் மௌனத்தின் அர்த்தமாகக் நாங்கள் அடையாளப்படுத்திக் கொள்ளலாம்.

எனவே உளவு விமானம் பறப்புக்களை இந்தியா மேற்கொண்டதாகச் செய்தி வந்தால் அது வான்புலிகளின் விமானங்களின் தரை வழி நகர்த்தல்களையே அறிய முனைந்திருக்கும் என்றே நாம் கருதிக் கொள்ள வேண்டுமே தவிர நாமே ஒரு அரைகுறைச் செய்திக்கு வாலும் தலையும் வைத்து பூதாகரமாக்குகிற முயற்சியில் இறங்கக்கூடாது. முக்கியமாக செய்திகள் மூலம் பூச்சாண்டி காட்டுகின்ற முரண்பட்ட வேலையில் ஈடுபடக்கூடாது.

முக்கியமாக இந்தியாவை நட்பு சக்தியாக மாற்றியே ஆக வேண்டும் என்கிற நோக்கில் எந்த மாறுதலும் ஏற்படக்கூடாது. அந்த முயற்சியொன்றே தான் நமக்கான மாற்றுவழியாக அமையும். மத்திய அரசையும் அதன் கொள்கை வகுப்பாளர்களையும் ஈழத்தமிழர்களின் நேச சக்தியாக மாற்ற வைக்கமுடியும் என்பதில் உறுதியாக இருக்க வேண்டும். ஏனெனில் உறவுகள் என்றுமே தேவை சார்ந்தவையே.

ஏனெனில் எமது பலமே இப்போது எமக்கான பகையாக இருக்கிறது. விமான ஓடுபாதைகளற்ற, விமானப்பலமற்ற புலிகளை இந்தியா பார்க்க விரும்புகிறது. அதனை சிறிலங்கா தனக்கு மிகவும் சாதகமாகப் பயன்படுத்துகிறது. இதுபோலவே விடுதலைப் போரின் ஒவ்வொரு வளர்ச்சியின் போதும் அழுத்தங்கள் தாரளமாகப் பிரயோகிக்கப்பட்டன.

ஆனால் இன்றைய நிலையில் ஈழத்தமிழர்களை நேச சக்தியாக ஏற்க வைக்க வேண்டிய தேவையை தாய்த் தமிழகமும், புலம்பெயர்ந்த தமிழர்களும் உடனடியாக நிறைவேற்ற வேண்டும். இதற்காகப் பலரும் முயன்று கொண்டிருக்கும் இவ்வேளை அதன் ஒரு கட்டமாக நாங்கள் இலகுவாகக் செய்யக்கூடிய விடயங்களில் ஒன்று டெல்லி அரசியலில் எளிதாகச் சாதிக்கும் வல்லமை படைத்த மூவரைச் செயற்பட வைப்பதேயாகும்.

கனிமொழி, அன்புமணி, தயாநிதி மாறன் ஆகியோர் இப் பணியின் நாயகர்களாக டில்லியில் செயற்பட புலம்பெயர்ந்த தமிழர்களும் தமிழகத் தலைவர்களும் ஒருமித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த யுகம் முயற்சி திருவினையாக்கும் என்ற ஒபாமாவின் யுகம். இந்த யுகத்தில் இந்த இளையவர்கள் மூவரும் சாதிக்க நினைத்தால் ஈழத்தமிழனுடனான இந்திய உறவுக்கான தூரம் அதிகமில்லை.

இவர்கள் மூவரும் மத்திய அரசுடனான பேரம் பேசு திறன் அதிகம் மிக்கவர்கள் என்பதோடு தேவை ஏற்படுகின்ற போது பல அரிய செயற்பாடுகளை மத்திய அரசினூடாக சாதித்த சாதனையாளர்கள். அதைவிட தங்கள் கட்சித் தலைவர்களிடம் பலமாகச் செல்வாக்குச் செலுத்துபவர்கள்.

எனவே, இப்போது பேரம்பேசு பொருளாக இவர்கள் ஈழத்தமிழனின் விவகாரத்தை இராஜதந்திரத்துடன் எடுத்தாள நாங்கள் வழியமைக்க வேண்டும்.

தமிழ்நாட்டைச் சுற்றி அல்லது தமிழர்களைச சுற்றி வலம் வரும் அறிக்கைகள், ஆர்ப்பாட்டங்களுக்கும் அப்பால் இராஜதந்திரம் சார்ந்த அரசியற் செயற்பாடு என்கிற களத்தில் நாற்பது பாரளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட தமிழ்நாட்டின் பலம் இறங்கும் போது அதுவே இந்தியாவின் இன்றைய வன்னிக்கான தேவையை இதுபோன்ற நடவடிக்கைகளே தலைகீழாக மாற்றமடைய வைக்கும்.

-எ.இராஜவர்மன்-


Comments