"சுகம் வரும். ஆள் தப்பாது" என்ற பேச்சு மொழி நம் மத்தியில் அடிக்கடி பாவனையில் உண்டு.
ஈழத் தமிழர் விவகாரத்தை ஒட்டி தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி எடுக்கும் குயுக்தித் தன நடவடிக்கைகளும் அறிவிப்புகளும் இத்தகைய பேச்சு மொழியைத்தான் நமக்கு நினைவூட்டுகின்றன.
இவ்விவகாரத்தைத் தமிழக முதல்வர் கையாளும் மெத்தனப் போக்கை நோக்கும்போது, பிரச்சினைக்குத் தீர்வு என்ற "சுகம்" கிட்டும், ஆனால் ஈழத் தமிழ் மக்கள் தான் இங்கு "தப்பவே மாட்டார்கள்" என்பது நமக்கு உறுதியாகின்றது.
ஈழத் தமிழரைக் காப்பாற்றுவதற்காக இலங்கையில் யுத்த நிறுத்தத்தை ஏற்படுத்துவதற்கு இந்திய மத்திய அரசுக்கு ஒரேயொரு நாள் காலக்கெடு விதித்துத் துடிப்புடன் கலைஞர் கருணாநிதி அறிவித்த போது நாமெல்லாம் மகிழ்ந்துதான் போனோம்.
"நன்றே செய்; அதை இன்றே செய்!" என்பது போல இலங்கையில் யுத்த நிறுத்தத்தை ஏற்படுத்துவதற் கான நடவடிக்கை எடுப்பதாயின் அதை ஒருநாளில் செய்து முடி என்று மத்திய அரசுக்கு கலைஞர் "வெட்டு ஒன்று; துண்டு இரண்டாக" காலக்கெடு விதித்தபோது உலகத் தமிழரெல்லாம் புளங்காகிதமடைந்துதான் போனார்கள்.
ஆனால்
அந்தக் காலக்கெடுவுக்குள் அதைச் செய்ய மத்திய அரசு தவறினால் தி.மு.க. பொதுக்குழு கூடி அடுத்த கட்டம் குறித்து ஆராயும் என்று அவர் "இழுத்த" போது தான் வழமைபோல இவ்விவகாரத்தில் அவரின் பித்தலாட்டப் போக்கு மாறவேயில்லை என்பது வெளிப்படையாயிற்று.
மத்திய அரசுக்கு இறுதிக் காலக்கெடு விதிப்பது போல ஒரு நாள் கால அவகாசம் வழங்கிய முதல்வர் கருணாநிதி, அதை மத்திய அரசு நிறைவேற்றாவிட்டால் பதில் நடவடிக்கை என்ன வென்பதைத் தீர்மானிப்பதற்கான காலக்கெடுவை மட்டும் மூன்று வாரங்கள் தள்ளிப் போட்டு பெப்ரவரி 15 ஆம் திகதியளவில் தீர்மானிப்பாராம்! யாரின் காதில் பூச்சுற்ற முயல்கிறார் தமிழக முதல்வர்.....?
இலங்கையில் ஈழத் தமிழினம் வாழ்வா, சாவா என்ற உயிர்ப் போராட்டத்தில் சிக்கித் தவிக்கின்றது. ஒரு மிகக் குறுகிய பிரதேசத்துக்குள் சிக்கித் தவிக்கும் மூன்று முதல் நான்கு லட்சம் அப்பாவித் தமிழர்கள் மீது குரூர யுத்த அரக்கன் தன் கொலை வெறிப் பார்வையைத் திருப்பியிருக்கின்றான். தினசரி டசின் கணக்கானோர் உடல் பிய்ந்து உயிரிழக்கும் பேரவலம்.
பலடசின் கணக்கானோர் அவயவங்கள் சிதறி, குற்றுயிரும் குலையுயிருமாகத் துடிக்கும் பரிதாபம். கணத்துக்கு கணம் கோரக் கொடூரம் குரூரமாக அரங்கேறும் பெருந்துயர் நிலைமை.
வன்னியில் ஒருபுறம் உணவு மற்றும் மருந்து, சுகாதார வசதிகள், உடை, உறையுள் போன்ற அடிப்படைத் தேவைகளை நிறைவு செய்யக்கூட வசதியின்றி சிக்கியிருக்கும் மக்கள் மீது யுத்த அனர்த்தம் ஏவி விடப்பட்டிருக்கையில், அந்த மக்கள் அடுத்த நாள் வரை அடுத்த வாரம் வரை உயிரோடு தாக்குப் பிடிப்பார்களா என்ற பெரும் சந்தேகம் எழுந்துள்ளது. இந்நிலையில் யுத்தத்தை நிறுத்த உரிய நடவடிக்கை எடுப்பதற்கு இந்திய மத்திய அரசுக்கு ஒருநாள் காலக்கெடுவைக் கொடுத்த கலைஞர் கருணாநிதி, அதை மத்திய அரசு செய்யத் தவறும்போது அது குறித்து எடுக்கப்பட வேண்டிய பதில் நடவடிக்கை குறித்துத் தீர்மானிப்பதை மட்டும் மூன்று வாரம் தள்ளிப்போட்டு நீண்ட கால அவகாசம் வழங்குகின்றார் எனக் கயிறு விடுகின்றார்.
கலைஞர் கருணாநிதி மூத்த அரசியல்வாதி. சாணக்கியமும் இராஜதந்திரமும் மிக்க தலைவர். உலகத் தமிழினத்தின் தலைவராகத் தம்மை அடையாளப்படுத்த முனைபவர். அப்படிப்பட்டவர் வாழ்வா, சாவா என்ற உயிர்ப் போராட்டத்தில் சிக்கி மடிந்து கொண்டிருக்கும் ஈழத்தமிழினத்தின் விடயத்தில் தமது அரசியல் சித்து விளையாட்டையும், சாணக்கிய இராஜதந்திர அரசியலையும் காட்ட முயல்வது வெட்கக் கேடானது; பேர பத்தம் நிறைந்தது.
இந்த வகையில் பார்த்தால்
ஈழத் தமிழர்களுக்காகக் குரல் கொடுப்பவர்களைப் போலத் தம்மைக் காட்டிக்கொண்டு அதில் அரசியல் குளிர் காயும் தென்னிந்திய அரசியல் தலைவர்களை விடத், தாங்கள் ஈழத் தமிழர்களின் போராட்ட சக்திகளுக்கு எதிரானவர்கள் என்பதை வெளிப்படையாகக் காட்டிக்கொண்டும், கூறிக்கொண்டும் தென்னிந்தியாவில் அரசியல் நடத்தும் எதிர்க்கட்சித் தலைவர் செல்வி ஜெயலலிதா போன்றோர் எத்தனையோ மடங்கு தேவலை......!
ஈழத் தமிழர் விடயத்தை ஒட்டி கடந்த ஆறு மாதங்களாகத் தமிழக முதல்வர் கலைஞரும் அவரது கட்சியும், அவரது தமிழக மாநில அரசும் மேற்கொண்டுவரும் போராட்டப் பிரகடனங்கள் வெத்து வேட்டுப் புஸ் வாணங்கள்தாம்
அர்த்தமற்ற அரசியல் பித்தலாட்டங்கள்தாம் என்பது அவற்றை ஆழமாக சீர்தூக்கிப் பார்த்தால் இலகுவில் புரிந்து கொள்ள முடியும்.
இவையெல்லாம் வெறும் பொம்மலாட்ட நடிப்புகளின்றி வேறில்லை.....!
Comments