அமெரிக்க இலங்கை தமிழ்ச் சங்கத்தின் தலைவரினால் கையெழுத்திடப்பட்டு தொல். திருமாவளவனுக்கு நேற்று வியாழக்கிழமை அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய அய்யா!
தமிழீழத் தமிழர்களுக்குத் துணிவையும், எதிர்காலம் பற்றிய அசையாத நம்பிக்கையையும் தரும் ஒரு தலைவனாக நீங்கள் என்றும் இருக்கின்றீர்கள்.
தமிழீழத் தமிழர்களின் அரசியல் விடுதலை பற்றிய கொள்கையில், வளைவுகளற்ற ஒரே நேர்கோட்டில் நீங்கள் நடந்து கொண்டேயிருக்கின்றீர்கள். "தமிழீழம்" என வரும் போது, கட்சிக்கும் அரசியலுக்கும் அப்பால் இனத்தின் சுய மரியாதையை முன்னிறுத்திய ஒரு எடுத்துக்காட்டாக நீங்கள் திகழ்கின்றீர்கள்.
எமக்காக உணவைத் துறக்கும் போராட்டத்தை தொடங்கும் போது, எங்கள் இதயங்களிலே இமயத்திற்கு நிகரானவனாய் நீங்கள் அமர்கின்றீர்கள்.
உங்கள் உணர்வுக்கும், உறுதிக்கும் முன்னால், தமிழீழத் தமிழர்களின் சார்பில் அமெரிக்க இலங்கை தமிழ்ச் சங்கத்தினராகிய நாங்கள் தலை தாழ்த்தி வணங்குகின்றோம்.
தமிழீழ மக்களுக்கு எதிராக இன்று முன்னெடுக்கப்படும் பெரும் போரில் இந்தியா ஆற்றுகின்ற பங்கு மிகப் பெரியது. இந்தியா நினைத்தால், போரை நிறுத்துவது மட்டுமல்லாது, தமிழர்கள் தமது உரிமைகளை வென்றெடுக்கவும் வழி செய்ய முடியும்.
இதை நீங்கள் தெளிவாக உணர்ந்துள்ளீர்கள் என்பதன் வெளிப்பாடு தான், உங்கள் உயிரையே பணயம் வைத்து நீங்கள் தொடங்கியுள்ள போராட்டம்.
இந்தப் போராட்டத்தில் வெற்றி பெற்று, தமிழர்களின் உரிமைகளைப் பெற்றெடுத்து, கம்பீர நடை போட்டு நீங்கள் எழுந்து வரவேண்டும்.
தூரத்தில் இருந்தாலும், உணர்வுகளால் நாம் உங்கள் அருகிலேயே அமர்ந்துள்ளோம். வாழ்த்துக்கள்! என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments