போர்க்களத்தில் புலிகளுடன் இணைந்து நிற்கும் மக்கள்


""ஹலோ தலைவரே... ... தமிழர் திருநாளான பொங்கலுடன் தமிழ்ப்புத்தாண்டும் சேர்ந்து கொண்டாடப்பட்ட இந்த ஆண்டில் ஒரேயொரு விஷயம் மட்டும் தமிழர்களை உறுத்திக் கொண்டேதான் இருந்தது.''

""ஈழநிலவரத்தைத்தானே சொல்றே!''

""ஆமாங்க தலைவரே... முதல்வர்கூட தமிழக அரசின் விருதுகள் வழங்கும் விழாவில் இதை வருத்தத்துடன் குறிப்பிட்டு, அடுத்த ஆண்டு அமெரிக்க சுதந்திர தினவிழா போல வாணவேடிக்கையுடன் தமிழ்ப்புத்தாண்டைக் கொண்டாடணும்னு சொல்லியிருக்கிறார். ஈழ நிலவரம் தொடர்பா கொழும்பு சோர்ஸ்களிடமிருந்து புதிய தகவல்கள் கிடைத்திருக்கு. யாழ்ப்பாணம் மாவட்டத்தை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் முழுமையாகக் கொண்டு வந்துவிட்டதாகச் சொல்லும் சிங்கள அரசு, ஏ-9 நெடுஞ்சாலையை க்ளியர் பண்ணி போக்குவரத்துக்கான ஏற்பாடுகளையும் செய்து கிட்டிருக்கு. இதை தேசிய வெற்றியாகக் சிங்களப் பகுதிகளில் கொண்டாடுவதற்கான ஏற்பாடுகளும் நடந்துக்கிட்டிருக்காம்.''

""முல்லைத்தீவு?''

""கிளிநொச்சியையடுத்து அதைத்தான் சிங்கள ராணுவம் கைப்பற்றப்போகுதுங்கிற எதிர்பார்ப்பு இந்திய ஊடகங்களில் அதிகளவில் இருக்குது. கொழும்பு பத்திரிகையாளர்களோ, அது அவ்வளவு சுலபமல்லன்னு சொல்றாங்க. ஏன்னா, முல்லைத்தீவில் சுமார் 5 லட்சம் தமிழர்கள் இப்ப இருக்காங்க. வாழ்வா, சாவாங்கிற இறுதிக்கட்டத்தில் இருக்கும் அவர்கள், விடுதலைப்புலிகளோடு இணைந்து சிங்கள ராணுவத்தை சந்திக்கத் தயாராயிட்டாங்களாம். 5 லட்சம் தமிழர்களில் 1 லட்சம் ஆண்களும் பெண்களும் நேரடியா போர்க்களத்தில் இறங்கிட்டால் அது சிங்கள அரசுக்கு பெரும் சவாலான விஷயமாக மாறிவிடும்.''

""அதுமட்டுமில்லப்பா... வீரமரணத்திற்கு மக்கள் தயாராகி, ஆயுதங்களை கையில் எடுக்க ஆரம்பித்துவிட்டால் எவ்வளவு பெரிய ராணுவமும் எதிர்நிற்க முடியாதுங்கிறதுதான் வரலாறு. சோவியத் யூனியனாகட்டும், செஞ்சீனமாகட்டும், வியட்நாம் போரில் அமெரிக்காவுக்கு கிடைத்த அடியாகட்டும்.. மக்கள்தான் வெற்றி பெறுவார்கள் என்பது உலக வரலாறு.''

""இப்போதுள்ள நிலையில், முல்லைத்தீவில் தஞ்சமடைந்துள்ள ஈழமக்கள் மீது சிங்கள விமானங்கள் குண்டு வீசித் தாக்குதல் நடத்தினால் அது உலகளாவிய மனித உரிமைப் பிரச்சினையாகவும் மாறக்கூடிய நிலைமை இருக்குது. அதனால, புலிகளோடு இணைந்து நிற்கும் மக்களின் சக்தியை எதிர்கொள்ள சிங்கள அரசு தயங்குது. கிளிநொச்சி வரைக்கும் போனதுபோல இனி போக முடியாது என்பதால், முல்லைத்தீவுக்குள் நேரடியாக நுழைவதில்லைங்கிற நிலைப்பாட்டை ராஜபக்சே அரசு எடுத்திருக்குதாம். அதற்குப் பதிலாக, விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த நிர்வாகத்தை முற்றிலுமாக கைப்பற்றிவிட்டோம் என்பதை பெரியளவில் பிரச்சாரம் செய்து, தேசியத் திருவிழாவாகக் கொண்டாடுவதுன்னு முடிவு செய்யப்பட்டுள்ளதாம்.''"

"ஆளரவமில்லாத் கிளிநொச்சியைப் பிடித்ததற்கு தேசியக் கொண்டாட்டமா?''

""தலைவரே.. முல்லைத்தீவுக்குள் சிங்கள ராணுவம் நுழைவதில்லைங்கிற நிலைப்பாட்டை எடுத்திருந்தாலும், பிரபாகரனின் இருப்பிடம் எது என்பதை கண்டறியும் முயற்சிகளை மட்டும் நிறுத்தப்போவதில்லை. இந்தியா போன்ற அண்டை நாடுகளின் உதவியுடன் பிரபாகரன் எங்கெங்கே தங்குவார்னு தெரிந்துகொண்டு அங்கெல்லாம் குண்டு வீசுவதுங்கிறதுதான் இலங்கை அரசின் புதிய திட்டம்.''

""ஒட்டுமொத்தமாக இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்படணும்ங்கிறதுதான் தமிழகத்தின் உறுதியான குரல். இதற்கு மத்திய அரசிடமிருந்து இதுவரை சாதகமான நடவடிக்கைகள் இல்லை. மீண்டும் இதுபற்றி பிரதமரிடம் வலியுறுத்தணும்னு முதல்வரிடம் ராமதாஸ், கி.வீரமணி, திருமாவளவன் மூவரும் 12ந் தேதி நேரில் சந்தித்துக் கேட்டுக்கிட்டாங்க. இந்த நிலையில், 15ந் தேதியன்னைக்கு திருமாவளவன் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கியதால் தமிழக அரசியல் களம் சூடாகிவிட்டதே!''

""பெரியார் திடலுக்கு அதிகமா வராத ராமதாஸ், ஈழத்தமிழர் பிரச்சினையில் தமிழகத் தலைவர்கள் எல்லோரும் ஒன்றிணைந்து நிற்கணும்ங்கிற அக்கறையுடன் பெரியார் திடலுக்கு திருமாவோடு வந்து, வீரமணியை சந்தித்துப் பேசியதோடு, மூவரும் முதல்வரை சந்தித்தும் பேசினாங்க.

அப்ப, இலங்கைத் தமிழர்களின் பிரச்சினை தீரணும்ங்கிறதில் கலைஞர் இவ்வளவு தீவிரமா இருப்பாருங்கிறதை ராமதாசும் திருமாவும் எதிர்பார்க்கலையாம். அவர்களிடம் முதல்வர், இப்ப நான் என்ன பண்ணனும்? பிரச்சினை தீரும்னா ஆட்சியை இழக்கவும் நான் தயார். எப்படி செயல்படணும்னு சொல்லுங்கன்னு திரும்பத் திரும்பக் கேட்டிருக்கிறார்.''

""அவங்க என்ன சொன்னாங்களாம்?''

""எங்களுக்கும் என்ன செய்வதுன்னு தெரியலை. மத்திய அரசிடம் நேரில் சென்று வலியுறுத்தினீங்க. மீண்டும் அதை நீங்க வலியுறுத்தும் முயற்சிகளை மேற்கொள்ளணும்னு சொல்லியிருக்காங்க. அதற்கு கலைஞர், அண்ணா சமாதி முன்னால் உண்ணாவிரதம் இருக்கட்டுமான்னு கேட்டிருக்கிறார். அதற்கு வீரமணி, உங்க உடல்நிலையைக் கருதி இதை யெல்லாம் செய்ய வேண்டாம்.

மத்திய அரசை வலியுறுத்துங்கன்னு சொல்லியிருக்காங்க. சந்திப்பு முடிந்து வெளியே வந்ததும், எல்லோரும் சேர்ந்து உண்ணா விரதம் இருக்கலாம்ங்கிற ஐடியாவை முன்வைத்த ராமதாஸ், ஒரு 2 மணிநேரம் மட்டும் முதல்வர் கலந்துகொண்டால் போதும்னும் சொல்லியிருக்கிறார். தமிழகத்தின் முக்கிய தலைவர்கள் அனைவரும் ஈழத்தமிழர் பிரச்சினைக்காக ஒரே மேடையில் குரல் கொடுக்கணும்ங்கிறதுதான் ராமதாசின் விருப்பம்.''

""மற்ற தலைவர்களிடமும் பேசினாரா?''

""அடுத்தகட்ட நடவடிக்கைகள் பற்றி ஆலோசிப்பதற்காக வைகோ, நெடுமாறன் ஆகியோரைத் தொடர்புகொண்டபோது, எங்ககிட்டே சொல்லாமல் நீங்கள் ஏன் கலைஞரைப் போய்ப் பார்த்தீங்க? அவர் என்ன செய்யப் போறார்னு கேட்டு, ஆலோசனை கூட்டத்துக்கு வரமறுத்துட்டாங்களாம். இதையடுத்து, ஆலோசனை கூட்டமும் நடக்கலை.

எல்லோரும் சேர்ந்து உண்ணா விரதமிருப்பதுங்கிற திட்டமும் கைவிடப்பட்டது. இந்த நிலையில், புலிகள் அமைப்பின் முக்கிய தலைவர் ஒருவர் இங்குள்ள தலைவர்களைத் தொடர்புகொண்டு, நெருக்கடி அதிகமாகிறது. எப்படியாவது போரை நிறுத்தச் செய்யுங்கள்னு சொல்லியிருக்கிறார். இதையடுத்துதான், திருமாவளவன் தனியா உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்து 15ந் தேதி உட்கார்ந்துவிட்டார். இது அரசுக்கு நெருக்கடியை உண்டாக்கிடக்கூடாதுங்கிறதால, தொடர்ந்து சமாதான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது.''

""தமிழகத்தில் இப்படியொரு சூழல் நிலவுகிற நிலையில், வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி இலங்கைக்குப் போவார்னு முதல்வர் உள்ளிட்ட தமிழகத் தலைவர்களிடம் உறுதியளிக்கப்பட்டதற்கு மாறாக, வெளியுறவுத்துறைச் செயலாளர் சிவசங்கரமேனனை அனுப்பி வைத்ததே இந்திய அரசு?''

""ராமதாஸ் உள்ளிட்ட தலைவர்களுடனான சந்திப்புக்குப் பிறகு, மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலுவை பிரதமர் மன்மோகன்சிங், சோனியாகாந்தி, பிரணாப் முகர்ஜி ஆகி யோரை நேரில் பார்க்கச் சொன்னார் கலைஞர். பாலு நேரில் சந்தித்து வலியுறுத்தியபிறகுதான் மேனனை கொழும்புக்கு அனுப்பியது மத்திய அரசு. அதுவும், சார்க் மாநாடு பற்றிப் பேசுவது தான் மேனன் பயணத்தின் முக்கிய நோக்கம். இலங்கையில் போரை நிறுத்துச் சொல்வது சம்பந்தமா எந்த அஜண்டாவுமில்லை. இலங்கைத் தமிழர் விஷயத்தில் மத்திய அரசு எதுவும் செய்யலைங்கிற வருத்தம் தி.மு.க. தரப்புக்கு இருக்கு.''

""இலங்கையில் நெருக்கடியான சூழல் நிலவுகிற நேரத்தில், புலிகள் இயக்கத்திலிருந்து பிரிந்து சென்ற கருணாவின் குரல் திடீர்னு ஒலிக்க ஆரம்பித்திருக்குதே!''

""தலைவரே... ... கருணா எப்படி சிங்கள அரசுக்கு ஆதரவாக மாறினாருங்கிற உண்மையை ஈழத்தமிழர்கள் விவரமா சொல்றாங்க. கிழக்குப் பகுதியில் தனக்கு இயக்கம் கொடுத்திருருந்த அதிகாரத்தை கருணா தவறாகப் பயன்படுத்தி, விடுதலைப் புலிகள் அமைப்பில் இருக்கும் பெண் புலி ஒருவரோடு கருணா நெருக்கமாக இருந்திருக்கிறார்.

இதனால் அந்த பெண் புலி கர்ப்பமாகி விட்டார். 5 மாத கர்ப்பம். இது இயக்கத் தலைமைக்குத் தெரிந்தால் பிரச்சினையாகிவிடும்ங்கிறதால முஸ்லிம் எம்.பி. ஒருவரின் துணையோடு அந்த பெண் புலியை கொழும்புக்கு அழைத்துச் சென்று கருக்கலைப்பு செய்திருக்கிறார் கருணா.''

""ஓ..''

""அதுமட்டுமில்லை... கொழும்பு ஆஸ்பத்திரிக்கு பெண்புலியைக் கூட்டிக்கிட்டுப் போன கார் டிரைவரும் ஒரு புலிதான். அவருக்கு கூல்டிரிங்ஸில் சயனைடு கலந்துகொடுத்து கொன்றுவிட்டார் கருணா. இதெல்லாம் பிரபாகரனுக்கு தெரியவந்ததும் அவர் விசாரித்திருக்கிறார். நம் இயக்கக் கொள்கைகளுக்கு விரோதமா பெண்புலியிடம் நடந்துகொண்டதோடு, நம்ம ஆளையே கொன்றிருக்கும் நபரை மன்னிக்கக்கூடாது. தண்டனை தரணும்னு பிரபாகரனிடம் இயக்கத்தினர் சொல்லியிருக்காங்க. தண்டனை நிறைவேற்றப்படலாம்ங்கிற பயத்தில்தான் சிங்கள அரசிடம் சரணடைந்து உயிர் பிழைத்திருக்கிறார் கருணா. இதுதான் கருணாவின் நிலைப்பாட்டுக்கு உண்மையான காரணம்னு ஈழத்தமிழர்கள் சொல்றாங்க.''

""தமிழ்நாட்டுத் தகவல் ஒன்று நான் சொல்றேன்... 7 நாட்கள் நடந்த சென்னை சங்கமம் நிகழ்ச்சிக்கு எல்லா இடங்களிலும் பொதுமக்களின் வரவேற்பு கிடைத்தது. தமிழக அரசின் செய்தித்துறையும் தமிழ் மையம் அமைப்பும்தான் இணைந்து நடத்துது. ஆனா, இந்த ஆண்டு நடந்த நிகழ்ச்சி களில் செய்தித்துறை அதிகாரிகள் போதிய ஒத்துழைப்புத் தரலையாம். சங்கமம் நிகழ்ச்சிகள் தொடர்பான விளம்பரங்களையும் சரியா கொடுக்கலையாம்.''

நன்றி: நக்கீரன்



Comments