அரசியல் வாழ்வு நாசமானாலும் பரவாயில்லை - ஈழத் தமிழர்களை காக்க போராடுவோம்: வைகோ



சென்னை: எங்கள் அரசியல் வாழ்வு அடியோடு நாசமாகி போனாலும் பரவாயில்லை, ஈழத் தமிழர்களை காப்பதற்கு நாங்கள் போராடுவோம் என்று மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

இலங்கையில் தமிழர்கள் கொல்லப்படுவதை கண்டித்து மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் சென்னை ஆட்சியர் அலுவலகம் அருகே நேற்று புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கிய வைகோ பேசியதாவது:

இலங்கையில் படுகொலை செய்யப்படும் தமிழர்களை எப்படி காப்பது என்று வழி தெரியாமல் தவித்து கொண்டிருக்கிற நிலையில் இந்திய அரசின் துரோகத்தை கண்டிப்பதற்கு, ஈழத் தமிழ் இனத்திற்கு ஆதரவாக தமிழகத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு இந்த போராட்டத்தை இங்கே நடத்திக்கொண்டிருக்கின்றோம்.

செங்கல்பட்டு சட்டக்கல்லூரி மாணவர்கள் 14 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் 7 ஆவது நாளாக உண்ணாநிலைப் போராட்டத்தை தொடர்ந்து கொண்டிருக்கின்றனர். அவர்கள் 14 பேரும் கைது செய்யப்பட்டு தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

1965 மொழிப் போராட்டம் வந்த போது லட்சக்கணக்கான மாணவர்கள் வீதிக்கு வந்து போராடினர். அவர்கள் சிந்திய இரத்தத்தில் உருவானதுதான் இந்த ஆட்சி. அண்ணா உருவாக்கிய ஆட்சி.

அன்றில் இருந்து இன்று வரை காங்கிரஸ் எட்டிப்பார்க்க முடியவில்லை என்றால், அதற்கு காரணம் அவர்கள் சிந்திய இரத்தம். நடத்திய போராட்டம். இப்போது இந்த போராட்டம் இயல்பாக வந்துள்ளது. நானோ, கம்யூனிஸ்டுகளோ, விடுதலை சிறுத்தைகளோ, பா.ம.க.வோ யாரும் தூண்டிவிடவில்லை. போராட்டத்தை தொடர்ந்து நீட்டிக்கச் சொல்லவில்லை.

குண்டு சத்ததுக்கு நடுவே நடேசன் குரல்...

நான் இந்த போராட்டத்திற்கு வருவதற்கு சில நிமிடங்களுக்கு முன்னால், முல்லைத்தீவில் இருந்து நடேசன் என்னிடம் பேசினார். அவர் பேசிக்கொண்டிருக்கும் போதே, தொலைபேசியில் குண்டுகள் வெடிக்கும் சத்தம் கேட்கிறது. பச்சிளம் குழந்தைகளும், பெண்களும், வயது முதிர்ந்தவர்களும் செத்து ஆங்காங்கே வீதிகளில் கிடக்கின்றனர். பக்கத்தில் ஆடுகள், மாடுகள், நாய்கள் செத்துக்கிடக்கின்றன.

பாதுகாப்பு பகுதி என்று சிறிலங்கா அரசாங்கம் அறிவித்த உடையார்கட்டு, சுதந்திரபுரம், வல்லிபுனம் கோவில், மூங்கிலாறு பகுதிகளில் இடைவிடாத பீரங்கி தாக்குதல் நடத்தி, 800 பேர் செத்து கிடக்கின்றனர். மரியாதை இல்லை.

இந்த நிலையில், மத்திய மந்திரி பிரணாப் முகர்ஜி இலங்கைக்கு போனார். போகும் போது, என்னை இலங்கைக்கு அனுப்புவதாக பிரதமர் சொல்லியிருந்தார். ஆகையினால் இலங்கைக்கு போகிறேன். அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் நடக்கும் சண்டையில் தமிழ் மக்கள் பாதிப்புக்கு ஆளாகிவிட கூடாது என்பதற்காக அது தொடர்பாக கருத்துக்கள் பரிமாறி கொள்ள போகிறேன் என்று சொன்னார்.

அவர் சொன்ன ஒரு மணி நேரத்தில் சிறிலங்கா அரசின் வெளியுறவுத்துறை அமைச்சகம், நாங்கள் அழைத்து பிரணாப் முகர்ஜி வருகிறார் என்று தெரிவித்துள்ளது. மேலும் இராணுவ வெற்றியை கொண்டாடுவதற்கு, அந்த கொண்டாட்டத்தில் பங்கேற்க அழைத்திருப்பதாக தெரிவித்திருக்கிறான்.

இன்றைய முதல்வரையும், முன்னாள் முதல்வரையும் ராஜபக்ச அழைக்கிறார். நீ முதலில் சண்டையை நிறுத்து. அனைத்துலக பிரதிநிதிகளை அழைத்து செல். அங்குள்ள ஐந்தரை லட்சம் மக்கள் சொல்லட்டும்.

இலங்கையில் இத்தனை தமிழ் மக்கள் சாவுக்கும் மத்திய அரசு பொறுப்பேற்க வேண்டும். நீங்கள் ஆயுதம் கொடுத்து இவற்றையெல்லாம் செய்திருக்கின்றீர்கள்.

உயிரைப் பணயம் வைத்தாவது...

நாங்கள் உயிரை பணயமாக வைத்தாவது, எங்கள் அரசியல் வாழ்வு அடியோடு நாசமாகி போனாலும் பரவாயில்லை, ஈழத் தமிழர்களை காப்பதற்கு நாங்கள் போராடுவோம். போராட்டம் தொடரும். ராஜபக்ச நினைப்பது போல், தமிழர்களின் விடுதலை போராட்டத்தை அழித்து விடமுடியாது. நிச்சயமாக நடக்காது.

விடுதலைப் புலிகளை ஒழித்து விடுவோம் என்று நினைத்தால் அதுவும் நடக்காது. இன்று இத்தனை நாடுகளின் ஆயுத பலத்தை எதிர்த்து நிற்க கூடிய வீரர்களாக, தமிழினம் அவர்களால் பெருமை பெருகிறது. தமிழன் என்று சொல்லக்கூடிய தகுதியை அவர்கள்தான் தந்திருக்கின்றனர். ஆகவே எங்களை பொறுத்தவரை இந்த போராட்டம் தொடரும். அங்கு புலிகளை வெல்ல முடியாது.

இந்த சோதனையான நேரத்தில் தாய் தமிழகம் விழித்தெழட்டும். மாணவர்கள் போராட்டம் இன்னும் வளர வேண்டும். பள்ளி, கல்லூரி மாணவர்கள் வீதிகளில் வந்து போராடுங்கள். வைகோ தூண்டி விடுவதாக வழக்கு போட்டால் போடட்டும், நான் கவலைப்படவில்லை என்றார் அவர்.


Comments