அன்றும் சரி, இன்றும் சரி, தமிழரின் உணர்வுகளை, அவர்களது வாழ்நிலை அவலங்களை, அவர்களது தேசிய அபிலாசைகளைச் சிங்களப் பெரும்பான்மை இனம் புரிந்து கொள்ளவில்லை. புரிந்து கொள்ள எத்தனிக்கவுமில்லை. புரிந்து கொள்ளும் ஆற்றலும், அறிவுத் திறனும், ஆன்ம பக்குவமும் அவர்களிடம் இருப்பதாகவும் தெரியவில்லை...
சிங்கள மக்களின் மகாவம்ச மனவமைப்பில், அவர்களது சமூகப் பிரக்ஞையில், அவர்களது அரசியற் கருத்துலகில் அடிப்படையான மாற்றம் நிகழுமென நாம் எதிர்பார்க்கவில்லை. சிங்கள - பௌத்த மேலாண்மை வாதத்தின் வீச்சும் வலுவும் தணிந்து போகவில்லை. மாறாக, அது புதிய, புதிய வடிவங்களை எடுத்துப் புத்துயிர் பெற்று வருகிறது...
-தமிழீழத் தேசியத் தலைவர்-
வன்னி நிலப்பரப்பிலே சிறி லங்காப் படையினரால் நாள்தோறும் அப்பாவிப் பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டு வருகின்றனர். இது தொடர்பில் பன்னாட்டினுடைய நிலைப்பாடு என்ன, ஐ.நா.வினுடைய நிலைப்பாடு என்ன என்ற பெரும் கேள்வி இருக்கின்றுத. காசாவிலே பாலஸ்தீன மக்கள் கொல்லப்பட்ட போது பன்னாடுகள் காட்டிய அக்கறை ஐ.நா. காட்டிய போர் நிறுத்த அக்கறை தமிழ் மக்கள் விடயத்திலே காட்டப்படவில்லை என்பது வெட்ட வெளிச்சமாகத் தெரிகின்றது.
சிறி லங்கா அரசாங்கம் மிக கொடூரமாக வன்னிப் பகுதியிலே மக்களை பெரும் அவலப்படுத்திக் கொண்டிருக்கின்றது. 4 இலட்சத்துக்கு அதிகமாக மக்கள் வாழுகின்ற வன்னிப் பகுதியிலே இந்த மக்களில் பெரும்பான்மையானவர்கள் - 90 விழுக்காடானாவர்கள் - சிறி லங்காப் படையினரால் மிகக் கொடூரமாக அவலப் படுத்தப்படுகின்ற சூழ்நிலை காணப்படுகின்றது.
இந்த அவலங்களுக்கு மத்தியில் தமிழ் மக்கள் அன்றாடம் படுகொலை செய்யப்படுவதும் தொடர்கின்றது. குறிப்பாக மருத்துவமனைகள், பொதுஇடங்கள், இடம்பெயர்ந்து வாழுகின்ற இடங்கள், மக்கள்; நகர்கின்ற இடங்கள், இடம்பெயர்ந்து நகர்கின்ற இடங்கள் எல்லாம் சிறி லங்காப் படையினரின் தாக்குதல்கள் இலக்குகளாக மாறி இருக்கின்றன.
நாள் தோறும் சிறி லங்காப் படையினரால் மக்கள் படுகொலை செய்யப்பட்டு வருகின்றனர். சிறி லங்காப் படையினரால் மக்கள் இவ்வாறு படுகொலை செய்யப்படுகின்ற சூழலிலே சிறி லங்கா அரசாங்கத்திற்கு ஆதரவளிக்குமாற் போன்றே உலகத்தினுடைய பார்வை இருப்பதாக தமிழ் மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
குறிப்பாக ஐ.நா. சிறி லங்கா அரசாங்கத்தினுடைய இந்த மனித உரிமை மீறல்களை நிறுத்துவதற்கு எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்கின்ற ஒரு பெரும் கேள்வி எழுகின்றது. காசாவிலே போர் நிறுத்தத்தைக் கொண்டு வருவதற்கு ஐ.நா. வினுடைய சகல தரப்புகளும் முனைப்பாகச் செயல்பட்டன.
மேற்குலகமும் அமெரிக்காவும் கூட இதில் முனைப்புக் காட்டியிருந்தன. இந்த வகையிலே காசாவிலே 3 கிழமை கடும் போர் நிறுத்தப் பட்டிருக்கின்றது. நிலையான ஓர் போர் நிறுத்தத்தைக் கொண்டு வருவதற்கான நகர்வுகள் அங்கு உலகளவால் மேற்கொள்ளப்பட்;டு வருகின்றன. இந்த வகையிலே சிறி லங்கா அரசாங்கம் தமிழ் மக்களுக்கு எதிராக புரிந்து வருகின்ற இன அழிப்பு நடவடிக்கைகள் காரணமாக தமிழ் மக்கள் வரலாற்றில் இல்லாத கொடுந்துயரத்தை அனுபவித்துக் கொண்டிருக்கின்றனர்.
இங்கு 90 விழுக்காடான மக்கள் தங்கள் சொந்த இடங்களில் இருந்து இடம்பெயரப்பட்டு நாள் தோறும் ஏதிலிகளாக அலைந்து கொண்டிருக்கின்ற அல்லது நாடோடிகளாக தெருவில் அலைகின்ற ஓரு சூழ்நிலை காணப்படுகின்றது. நாடோடிகளாக தெருவில் அலைந்து கொண்டிருக்கின்றார்கள் தமிழ் மக்கள். தமிழ் மக்கள் இருப்பதற்கு ஓர் இடமில்லை. அவர்கள் குடியமர்வதற்கு இடைக்காலமாக குடியமர்வதற்கு ஒரு தரப்பால் துண்டைக்கூட சிறி லங்கா அரசாங்கம் அனுமதிக்கவில்லை.
பன்னாட்டு தொண்டு நிறுவனங்கள் யாவும் சிறி லங்கா அரசாங்கத்தால் வன்னியிலிருந்து வெளியேற்றப்பட்டு விட்டன. இதில் ஐ.நா.வினுடைய நிறுவனங்களும் அடங்குகின்றன. பன்னாட்டு செஞ்சிலுவைச் சங்கத்தை விட வேறு எந்த தொண்டு நிறுவனமோ பொது அமைப்புகளோ வெளி நாட்டு பொது அமைப்புகளோ வன்னியில் இயங்குவதற்கு சிறி லங்கா அரசாங்கம் அனுமதிக்கவில்லை. இவற்றை எல்லாம் ஏற்றுக் கொண்டு அதாவது இங்கே மிகப்பெரிய மனித உரிமை மீறல் கொடூரத்தை சிறி லங்கா அரசாங்கம் கட்டவிழ்த்து விட்டிருக்கின்றது என்று தெரிந்த போதிலும் கூட இதனை தடுத்து நிறுத்த முயற்சி எடுக்காமல் இந்த நிறுவனங்கள் வன்னியை விட்டு வெளியேறியிருக்கின்றன.
தொடர்ச்சியாக சிறி லங்கா அரசாங்கம் வன்னியை விட்டு இந்நிறுவனங்களை வெளியேற்றிய பின்னர் தமிழ் மக்களுக்கு எதிரான கொடூரப் போரை நடத்திக் கொண்டிருக்கின்றது. தமிழ் மக்கள் நாள்தோறும் கொன்றொழிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். இந்த மாதத்தில் இதுநாள் வரையான நாட்களில் 600 க்கும் அதிகமான மக்கள் படுகொலை செய்யப் பட்டிருக்கின்றார்கள். 1000 க்கும் அதிகமான மக்கள் படுகாயமடைந்து இருக்கின்றனர்.
நாள் தோறும் மக்கள் குறைந்தது 10 பேராவது படுகொலை செய்யப்படுகின்ற நிலைமை காணப்படுகின்றபோது கடைசியாக சிறி லங்கா அரசாங்கத்தால் பாதுகாப்பு வலயம் என்று பிரகடனப்படுத்தப்பட்ட பகுதிக்குள் அடங்குகின்ற இருட்டுமடு இடம்பெயர்ந்த மக்கள் குடியிருப்பு மீது சிறி லங்காப் படையினர் எறிகணைத் தாக்குதலை நடத்தியதில் 300 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளார்கள். 634 பேர் காயமடைந்திருக்கின்றனர். ஏனைய பகுதிகளிலும் சிறி லங்காப் படையினரின் எறிகணைத் தாக்குதலால் மக்கள் காயமடைந்தும் கொல்லப்பட்டும் இருக்கின்றார்கள். இப்பத்தி எழுதப்பட்டுக் கொண்டிருக்கும் இத்தருணத்தில் கிடைத்த செய்தியின்படி கொல்லப்பட்டோர்களின் எண்ணிக்கை 33 காயப்பட்டோரின் எண்ணிக்கை 46 ஆகும்.
இவ்வாறு நாள்தோறும் சிறி லங்காப் படையினரால் மக்கள் கொன்றொழிக்கப் பட்டிருக்கின்ற சூழ்நிலை தொடர்ந்து வருகின்ற நிலையிலே அனைத்துலகத் தரப்பு அமைதியாக காய்களை நகர்த்துகின்றது. அந்தக் காய்கள் எத்தகைய காய்கள் என்பது தான் கேள்விகளாக இருக்கின்றன. தமிழ் மக்களை கொல்கின்ற சிறி லங்கா அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுத்து இந்த மனித உரிமை மீறல்களைத் தடுத்து நிறுத்துவதற்கு எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பது இங்கு முதன்மையாகப் பார்க்கத் தக்கதாகும். குறிப்பாக காசாவில் ஐ.நா. உட்பட உலகம் காட்டிய அக்கறை தமிழ் மக்கள் கொன்றொழிக்கப்படுகின்ற போது உலகத்தால் காட்டப்படவில்லை என்பது முதன்மையானதே. இந்த இக்கட்டான நேரத்தில்தான் தாயகத்துக்கான பணிக்கு புலம்பெயர்ந்த தமிழ் மக்களுடைய செயற்பாடு தேவையாக இருக்கின்றது.
மருத்துவமனைகள் மீது தாக்குதல் நடத்துவது, இடம்பெயர்ந்த மக்கள் மீது தாக்குதல் நடத்துவது, மக்களுக்கான எரிபொருள் மருந்து ஆகியவற்றை ஆயுதங்களாக பயன்படுத்துவது என்று மக்களை சிறி லங்கா அரசாங்கம் மிக கொடூரமாக வதைத்துக் கொண்டிருப்பதை பன்னாடுகளுக்கு அழுத்தம் கொடுக்கின்ற வகையிலே தெரிவிக்கின்ற கடப்பாடு புலம்பெயர்ந்த தமிழ் மக்களுக்கு இருக்கின்றது. ஏனென்றால், பன்னாட்டு தொன்று நிறுவனங்கள் யாவற்றையும் சிறி லங்கா அரசாங்கம் வன்னியிலிருந்து வெளியேற்றியிருக்கின்ற சூழலிலே நிலைமையை உலகுக்கு ஆணித்தரமாக எடுத்துச் சொல்லக்கூடிய தகைமை புலம்பெயர்ந்த மக்களுக்கு இருக்கின்றது.
ஐ.நா. உட்பட உலகத் தலவைர்களுக்கும் உலக நாடுகளுக்கும் புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் மிகவும் அழுத்தம் கொடுக்கின்ற வகையிலே தங்களுடைய செயற்பாடுகளை மேற்கொள்ள வேண்டிய ஒரு கட்டாயம் ஏற்பட்டிருக்கின்றது.
இந்த அழுத்தமானது அவர்கள் கவனத்தை ஈர்க்கக்கூடிய வகையிலே மாற்றம் பெற வேண்டுமென்பது தான் இங்கு முதன்மையானது. சிறி லங்கா அரசாங்கம் புரிகின்ற மனித உரிமை மீறல் கொடூரங்கள் எந்தளவு மக்களைத் தாக்குகின்றது என்பதை உலகநாடுகளுடைய செவிகளுக்கு அறைந்தாற் போல் சொல்ல வேண்டிய தேவை இப்போது ஏற்பட்டிருக்கின்றது.
அந்த வகையிலே அழுத்தம் கொடுக்கின்ற வகையிலான செயற்பாடுகள் தான் இப்போது தேவையாக இருக்கின்றன என்பதை தமிழ் மக்களுடைய கொடூர அவலம் வெளிப்படுத்தி நிற்கின்றது. இதைக் கவனத்தில் எடுத்து புலம்பெயர் வாழ் தமிழ்ச் சமூகம் எமது மக்களின் இன்றைய அவல வாழ்வைப் போக்கும் பணிகளில் தம்மை முழுமையாக அர்ப்பணித்து செயற்கரிய பணி புரிதல் காலம் எமக்கு இட்ட கட்டளை.
ஒன்றுபட்டால் உண்டு விடுதலை!
-துருவாசன் -
Comments