விடுதலைப் புலிகளை அழிக்கும் போரை இயக்கி தமிழினத்தை வேரறுக்க இந்திய அரசு திட்டம்: வைகோ சீற்றம்

தமிழர்களை அழிக்க சிங்கள அரசாங்கம் நடத்தும் இனப் படுகொலையை இந்திய அரசாங்கம் தான் தேவையான அனைத்தையும் வழங்கி இயக்கி வருகின்றது. இந்திய மத்திய அரசாங்கம் - தற்போது இறுதி கட்டமாக - தமிழினத்தை வேரறுப்பதற்காக, தமிழீழ விடுதலைப் புலிகளை அழிக்கும் திட்டத்தை அரங்கேற்றுகின்றது என்று மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் வைகோ சீற்றம் வெளியிட்டுள்ளார்.

ஊடகவியலாளர்களுக்கு நேற்று ஞாயிற்றுக்கிழமை வைகோ அளித்த பேட்டியின் போது மேலும் தெரிவித்துள்ளதாவது:

ஈழத் தமிழர்களை அழிக்கும் சிங்கள அரசாங்கம் நடத்தும் இனப் படுகொலைக்கு இந்திய அரசாங்கம் ஆயுத பயிற்சி மற்றும் நிதி உதவி உட்பட தேவையானவற்றை வழங்கி இயக்கி வருகின்றது.

மத்திய அரசாங்கம் தற்போது இறுதி கட்டமாக தமிழினத்தை வேரறுக்க, விடுதலைப் புலிகளை அழித்து திட்டத்தை அரங்கேற்ற முனைந்து உள்ளது.

விடுதலைப் புலிகளை போரில் வெல்ல யாராலும் முடியாது. மேலும் மேலும் வெல்வார்கள். 50 ஆண்டுகளாக போராடி வரும் தமிழர்களுக்கு நாம் ஆதரவு அளிக்க வேண்டும்.

தமிழினத்தை அழித்து, ஈழப் பகுதியிலேயே பிரபாகரனை பிணமாக்க அல்லது கைது செய்ய திட்டமிட்ட சிறிலங்கா அரச தலைவர் ராஜபக்சவுக்கு விடுதலைப் புலிகள் சரியான மரண அடி கொடுத்து வருகின்றனர்.

சிங்கள இராணுவத்திடம் இழந்த யாழ்ப்பாணத்தை விடுதலைப் புலிகள் மீண்டும் விரைவில் மீட்பார்கள்.

முதலமைச்சர் கருணாநிதி, இலங்கை தமிழர்களுக்காக நாடாளுமன்ற உறுப்பினர்களை பதவி விலகுவோம் என்று கூறினார், பின்னர் பதவியை துறக்க தயார் என்று கூறினார், இப்போது ஆட்சியை இழக்க தயார் என்று நாடகம் நடத்தி வருகின்றார்.

தமிழர்களுக்கு எதிராக செயற்படும் மத்திய அரசாங்கத்துக்கு கருணாநிதி துணை நிற்பது தமிழர்களுக்கு செய்யும் துரோகம் ஆகும்.

ஈழப் போரில் தமிழர்கள் வெற்றி பெறுவார்கள். ஈழத் தமிழர்களுக்காக மாணவர்கள் போராட்டம் நடத்தி இருப்பது இருட்டில் வெளிச்சமாக உள்ளது.

எந்த கட்சியின் தூண்டுதலும் இல்லாமல் மாணவர்கள் போராட்டத்தை தொடங்கி உள்ளனர். இந்த போராட்டத்தை மாணவர்கள் தீவிரப்படுத்தவேண்டும்.

ஏனெனில் 1942 ஆம் ஆண்டு சுதந்திர போராட்டத்திலும், 1965 ஆம் ஆண்டு மொழி போராட்டத்திலும் மாணவர்கள் உறுதுணையாக இருந்து உள்ளனர். ஈழத் தமிழர்களுக்கு இந்த போராட்டத்தின் மூலம் நிம்மதி கிடைத்து உள்ளது. ஈழத்தமிழர்களுக்கு அனைத்து தமிழர்களும் உதவ முன்வரவேண்டும்.

எதிர்வரும் 12 ஆம் நாள் புதுடில்லியில் ம.தி.மு.க. சார்பில் உண்ணாநிலைப் போராட்டம் போராட்டம் நடைபெறவுள்ளது என்றார் அவர்.



Comments