மரண பள்ளத்தாக்கில் பரிதவிக்கும் முல்லைத்தீவு மக்களை காப்பாற்றுங்கள்: மன்மோகன் சிங்குக்கு வைகோ கடிதம்

மரண பள்ளத்தாக்கில் பரிதவிக்கும் முல்லைத்தீவு மக்களை காப்பாற்றுமாறு இந்திய பிரதமர் மன்மோகன் சிங்குக்கு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் வைகோ வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக மன்மோகன் சிங்குக்கு நேற்று செவ்வாய்க்கிழமை வைகோ அனுப்பிய கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

தாங்க முடியாத மனவேதனையுடன் இந்த கடிதத்தை உங்கள் உடனடிக் கவனத்திற்கும், நடவடிக்கைக்கும் எழுதியுள்ளேன். இலங்கை தீவில் இரத்தவெறி பிடித்த இனவதா சிறிலங்கா அரசு தமிழ் இனத்தையே படுகொலை செய்து பூண்டோடு அழிக்க தன் முப்படைகளையும் ஏவி இன அழிப்பு போர் நடத்துகிறது. விடுதலைப் புலிகளுடன் போர் என்ற பெயரால் இந்த இனக்கொலையை நடத்துகிறது.

இன்றைக்கு 6 லட்சம் ஈழத்தமிழர்கள் முல்லைத்தீவில் மரண பள்ளத்தாக்கில் தவிக்கின்றனர். சிறிலங்கா இராணுவம் இடைவிடாத பீரங்கித்தாக்குதலும், வான் குண்டுவீச்சும் அங்கு நடத்துகிறது. அப்பாவி தமிழர்கள், பெண்கள், குழந்தைகள், வயதானோர், நோயாளிகள் இராணுவக் குண்டுவீச்சில் மடிகின்றனர். உணவும், மருந்தும் இன்றி சாகின்றனர்.

மிகுந்த வருத்தத்தோடு இந்தியாவின் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசை நான் குற்றம் சாட்டுகிறேன். இந்திய அரசு திட்டமிட்டு தொடர்ந்து சிங்கள அரசின் இராணுவ தாக்குதலுக்கு முழு அளவில் உதவி செய்து வருகிறது. சிறிலங்கா வான்படைக்கு கதுவீகளை தந்தது. சிறிலங்கா இராணுவத்தினருக்கு இந்தியாவில் பயிற்சி அளித்தது. இந்திய இராணுவ, வான்படை நிபுணர்களை இலங்கைக்கு அனுப்பி இராணுவ நடவடிக்கைகளுக்கு உதவியது.

தமிழ் மக்களை குண்டு வீசிக்கொன்று குவிக்கும் சிங்கள வான்படை, வானூர்திகள் பயன்படுத்தும் பலாலி வான்படை தளத்தை இந்திய அரசின் செலவில் பழுது பார்த்து கொடுத்தது. இலங்கைக்கு வட்டியில்லா கடனாக ஆயிரம் கோடி ரூபாயும் கொடுத்தது. அந்தப் பணத்தை கொண்டு சிறிலங்கா, பாகிஸ்தான், சீனாவிடம் இருந்து ஆயுதங்கள் வாங்க உதவியது. பசுமை நிறைந்த ஈழத்து வயல்வெளிகளில் தமிழர்களின் இரத்தம் வெள்ளமாக பாய்கிறது.

இலங்கையில் சிங்கள அரசு போர் நிறுத்தம், செய்வதற்கான நடவடிக்கைகளை இந்திய அரசு மேற்கொள்ள வேண்டும் என்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டும், தமிழகத்தின் அரசியல் கட்சிகள் கலைத்துறையினர், இலக்கியத்துறையினர் ஊர்வலங்கள், அறப்போராட்டங்கள், மனித சங்கிலிகள் நடத்தியும் இந்திய அரசு அவற்றை அவமதித்து அலட்சியம் செய்தது.

மாறாக வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் சிறிலங்காவுக்கு தொடர்ந்து இராணுவ ரீதியான உதவிகளை செய்து வருகிறது. உலகம் எங்கும் உள்ள தமிழர்களின் சார்பில் உங்களை கரம் கூப்பி, மன்றாடி வேண்டுகிறேன். முல்லைதீவில் மரணத்தின் கோரப்பிடியில் சிக்கியிருக்கும் ஆறு லட்சம் ஈழத்தமிழர்களின் உயிர் காக்க நடவடிக்கை எடுங்கள்.

ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் உதவியால் ராஜபக்ச அரசு நடத்தும் தமிழின கொலையை தடுத்து நிறுத்துங்கள். இந்த நியாயமான கோரிக்கையை நீங்கள் நிராகரித்தால் தமிழர்களும், எங்கள் சந்ததிகளும் இந்திய அரசின் இந்த வஞ்சகமான துரோகத்தை எந்நாளும் மன்னிக்க மாட்டார்கள் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



Comments