இலங்கைத் தீவில் பேரழிவை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்ற போருக்கு காரணம் யார் என்ற உண்மை இப்போது அவர்களின் வாயாலேயே வெளிவரத் தொடங்கியிருக்கிறது.
அண்மையில் கிளிநொச்சி அரச படைகளால் வெற்றிகொள்ளப்பட்ட பின்னர்- தென்னிலங்கையில் இருந்து வருகின்ற கருத்துக்கள் முற்றிலும் இனவாத விஷம் கலந்ததாகவும்- போருக்கான தமது பங்களிப்புக்கு உரிமை கோருவதாகவும் இருப்பதைக் காணக் கூடியதாகவுள்ளது.
கிளிநொச்சியின் வெற்றியில் உரிமைகோரி பிரதான கட்சிகள் தமக்கிடையே மோதிக் கொண்டிருக்கின்றன.
இந்த மோதலின் காரணமாக ஒரு உண்மை அவர்களின் வாயாலேயே வெளிவந்தும் இருக்கிறது. ‘நுணலும் தன் வாயால் கெடும்’ என்பது போன்று- தென்னிலங்கையின் அநாகரீக அரசியல் சக்திகளின் அழுக்குத் தோற்றத்தை அவர்களே வெளிக்கொண்டு வந்திருக்கிறார்கள்.
2002ம் ஆண்டு போர்நிறுத்த உடன்பாட்டை செய்து கொண்டு பேச்சுவார்த்தையைத் தொடங்கிய ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கம், விடுதலைப் புலிகளுடன் நியாயமாக- உண்மையாக- நடந்து கொள்ளவில்லை என்பது இப்போது நிரூபணமாகியிருக்கிறது.
ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்தின் இரட்டை வேடத்தையும் அவர்களின் சூழ்ச்சியையும் புலிகள் அப்போது எடுத்துச் சொன்னபோது அதை வெளிநாடுகள் பலவும் - தமிழ்மக்களில் சிலரும் நம்பவில்லை.
ஏன் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவைப் புலிகள் ஆதரித்திருந்தால் இன்றைய நிலை வந்திருக்காது என்று புலம்புபவர்கள் பலர் இன்னமும் இருக்கவே செய்கின்றனர்.
ஆனால் அவரது ஆட்சியில் புலிகளை அழிக்கப் போட்ட அநாகரீகமான சதித்திட்டத்தை இப்போது அவரது கட்சியே ஒப்புக்கொண்டிருக்கிறது.
எல்லாம் இந்தக் கிளிநொச்சியின் வெற்றியில் பங்கு கேட்பதற்காகத் தான்.
“2002 பேச்சுவார்த்தை காலத்தில் புலிகள் இயக்கத்துக்குள் பிளவை ஏற்படுத்தி கருணாவுடன் 6000 பேரை அதிலிருந்து விலகச் செய்தோம்.
எமது திட்டப்படி ஒரு துளி இரத்தம் கூடச் சிந்தாமலேயே புலிகளைத் தோற்கடித்திருப்போம். ஆனால் இடையில் எமது ஆட்சி கலைக்கப்பட்டு விட்டது.
சமாதான காலத்தில் புலிகளைப் பலவீனப்படுத்தியதால் தான், இப்போதைய அரசாங்கத்தால் அதை வெற்றிகொள்ள முடிந்தது.
கிளிநொச்சி வெற்றியில் எமக்கு முக்கிய பங்கு இருக்கிறது” என்று ஐதேக தெரிவித்திருக்கிறது.
இதிலிருந்து, போர்நிறுத்த காலத்தை ரணில் விக்கிரமசிங்கவி;ன் அரசாங்கம் சமாதானத்தை ஏற்படுத்தவோ- அரசியல் தீர்வு காண்பதற்காகவோ பயன்படுத்திக் கொள்ளவில்லை என்பது உறுதியாகியிருக்கிறது.
புலிகளைப் பிளவுபடுத்தி ஒரு துளி இரத்தம் கூடச் சிந்தாமல் அவர்களை அழிப்பதற்கு ஐதேக முயன்றிருக்கிறது என்ற உரிமை கோரல்- சமாதான காலத்தில்- பேச்சுவார்த்தை காலத்தில் எத்தனை அழுக்குத்தனமான தோற்றத்தோடு வஞ்சகச் சதியோடு உலாவியிருக்கிறது என்பதை உணர்த்தியிருக்கிறது.
இந்தக் கட்டத்தில் ஐதேக அரசாங்கத்துக்காக- ரணிலை ஜனாதிபதியாக்கும் முயற்சியில் புலிகள் இறங்கியிருந்தால் அது எத்தகைய அபாயகரமான விளைவுகளைத் தோற்றுவித்திருக்கும் என்பது இப்போதை உணரமுடிகிறது அடுத்து- போருக்கு மூலகாரணமாகத் தாமே இருந்தாக உரிமை கோரியிருக்கிறது ஜேவிபி.
அதிகாரப்பகிர்வு மூலம் பிரச்சினைக்குத் தீர்வு காணமுடியாதென்றும் புலிகளைப் போரில் வெற்றி கொள்வதன் மூலமே பிரச்சிiனைக்குத் தீர்வு காணமுடியும் என்றும்- தாமே அரசாங்கத்தை போரை நோக்கிக் தள்ளியதை ஜேவிபி ஒப்புக்கொள்கிறது.
அமைச்சர்கள் பலரே போரில் நம்பிக்கையற்றிருந்தபோது- அதனை நோக்கி உந்தித் தள்ளியது தாமே என்று, இப்போது தமது சுயரூபத்தை வெளிப்படுத்தியிருக்கிறது ஜேவிபி. எல்லாம் இந்த கிளிநொச்சி வெற்றியில் பங்கு போட்டுக் கொள்வதற்காகாத் தான்.
சந்திரிகாவுடன் கூட்டணி சேர்ந்து ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியை உருவாக்கி போர்நிறுத்தம்- சமாதான சூழலில் இருந்து நாட்டை படிப்படியாகப் போரை நோக்கித் தள்ளிச் சென்றது ஜேவிபி தான்.
இடைக்கால நிர்வாக அலகு தொடர்பான புலிகளின் யோசனை பற்றிய பேச்சுக்களையும்- சுனாமி நிர்வாகப் பொதுக்கட்டமைப்பையும்- செயலிழக்கச் செய்திவதிலும்- வடக்கு- கிழக்கு பிரிப்புக்கும் காரணமாக இருந்தது ஜேவிபி தான்.
புலிகளை போருக்குள் இழுத்து வந்ததில் ஜேவிபிக்கு இருக்கின்ற பங்கு சற்றும் குறைதது; மதிப்பிடக் கூடியதொன்றல்ல.
அதேவேளை ஆளும் கட்சியோ ‘மகிந்த சிந்தனை’யின் அடிப்படையினல் ஒரு புதிய நாட்டை உருவாக்குவோம் என்று ஜனாதிபதி மகிந்த தேர்தல் பிரசாரத்தின் போது கொடுத்த வாக்குறுதியை இப்போது நிறைவேற்றியிருக்கிறார் என்கிறது.
அப்படியானால் அவர் புலிகளை அழிப்பதை நோக்கமாக பதவிக்கு வர முன்னரே கொண்டிருந்தார் என்பது உறுதியாகியிருக்கிறது.
புலிகளுடன் சமாதானப் பேச்சு நடத்தி தீர்வு காணும் எண்ணம் மகிந்தவிடம் இருந்திருந்தால் உருப்படியான அவசியல் தீர்வுத்திட்டம் ஒன்றை அடிப்படையாக வைத்து பேச்சு நடத்தியிருந்திருப்பார்.
அல்லது புலிகள் முன்வைத்த இடைமக்கால நிர்வாக தீர்வு யோசனையையாவது பரிசீலனைக்கு எடுத்துக் கொண்டிருப்பார்.
ஏன் கடைசியாக போர்நிறுத்த உடன்பாட்டை முறித்துக் கொண்டது, இப்போது புலிகளைத் தடை செய்திருப்பது எல்லாமே மகிந்த அரசாங்கத்தின் யுத்த நிகழ்ச்சி நிரலின் கீழ் தான் நடந்து கொண்டிருக்கின்றன.
இப்படியாகப் புலிகளை பேச்சுவார்தை மேசையில் இருந்து அகற்றுவதில் -அவர்களைப் போரை நோக்கித் தள்ளுவதில் தென்னிலங்கையின் பிரதான கட்சிகள் அனைத்துமே முக்கிய பங்காற்றியிருக்கின்றன.ஆனால் புலிகள் தான் பேச்சுக்களை குழப்புவதாகவும்- சமாதான முயற்சிகளில் அவர்கள் அர்ப்பணிப்புடன் செயற்படவில்லை என்றும் சர்வதேசத்தை நம்ப வைப்பதில் அரசாங்கம் வெற்றி பெற்றிருந்தது.
தென்னிலங்கையின் சூழ்ச்சிக்கு சர்வதேசம் பலியாகியிருக்கிறது. இங்கு ஏமாற்றப்பட்டது சர்வதேசம் தான்.
ரணில் பின்னிய அரசியல் சதி வலையையும் -மகிந்தவின் பொறியையும் புலிகள் முன்னரே புரிந்து கொண்டு அதற்கு வெளியே வந்திருந்தனர்.
இந்தக் கட்டத்தில் தென்னிலங்கையின் பிரதான அரசியல் கட்சிகள் தமிழ்மக்களுக்கு நியாயமான அரசியல் தீர்வு ஒன்றை வழங்கும் என்ற நம்பிக்கையில் இருக்கின்ற சர்வதேசம் தான் ஏமாந்து போய் நிற்கிறது.
பொய்யான பிரசாரங்களின் மூலம் சர்வதேசத்தை ஏமாற்றியே தென்னிலங்கை அரசியல் சக்திகள் இந்தப் போருக்குள் நாட்டை கொண்டு சென்றிருக்கின்றன. இதற்கு தெரிந்தோ- தெரியாமலோ சர்வதேசம் துணைபோயிருக்கிறது.
பொருளாதார ஒத்துழைப்புகள், உததவிகளின் மூலமும், அரசியல் ரீதியான உதவிகளின் ஊடாகவும் இலங்கை அரசை- தென்னிலங்கைப் பேரினவாத சக்திகளை- பலப்படுத்தியிருப்பதற்காக சர்வதேசம் வெட்கித் தலைகுனிய வேண்டிய காலம் இப்போது வந்திருக்கிறது.
தாமே போருக்கு மூல காரணம் என்றும் புலிகளைத் தோற்கடிப்பதற்கு சமாதான காலத்தைத் தந்திரமாகப் பயன்படுத்தினோம் என்றும் பகிரங்கங்கமாக- தென்னிலங்கையின் பிரதான அரசியல் சக்திகள் மார்தட்டுகின்றன.
இதைப் பார்த்துக் கொண்டு சர்வதேசம் சும்மா இருந்து விடப் போகிறதா?
Comments