திருமாவளவனின் சத்தியப் போராட்டம் வெற்றிபெற சுவிஸ் தமிழர் பேரவை வாழ்த்து

ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் மேற்கொள்ளவுள்ள சத்தியப் போராட்டம் வெற்றிபெற சுவிஸ் தமிழர் பேரவை வாழ்த்து தெரிவித்துள்ளது.

ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக சென்னையில் உள்ள சேப்பாக்கம் விருந்தினர் மாளிகைக்கு எதிரில் இன்று வியாழக்கிழமை காலை 8:00 மணியளவில் தொல். திருமாவளவன் உண்ணாநிலைப் போராட்டத்தினை தொடங்கவுள்ளார்.

இப்போராட்டம் வெற்றிபெற வேண்டும் என வாழ்த்தி சுவிற்சர்லாந்து பேர்ணை தலைமையகமாகக் கொண்டு இயங்கும் சுவிஸ் தமிழர் பேரவையின் தலைவர் சண். தவராஜா, செயலாளர் தம்பிப்பிள்ளை நமசிவாயம் ஆகியோர் இணைந்து கையொப்பமிட்டு இன்று வியாழக்கிழமை தொல். திருமாவளவனுக்கு கடிதம் அனுப்பியுள்ளனர்.

அக்கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

திரு. தொல் திருமாவளவன்
தலைவர்
விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பு
தமிழ்நாடு


அன்பார்ந்த அய்யா,

ஈழத் தமிழர் ஆதரவு உண்ணாநிலைப் போராட்டம்

ஈழத் தமிழர் நல்வாழ்வுக்காக, அவர்களின் உயிர்கள் அழிவில் இருந்து காப்பாற்றப்பட வேண்டும் என்பதற்காக தாங்கள் மேற்கொண்டுள்ள உண்ணாநிலைப் போராட்டம் எங்களை மெய்சிலிர்க்கச் செய்கிறது.

காலத்தால் செய்யப்படுகின்ற ஒவ்வொரு செயலும் ஞாலத்தில் என்றென்றும் நினைவு கூரப்படவே செய்யும். அந்த வகையில், சிங்களப் பேரினவாதத்தினதும், ஏனைய பிராந்திய வல்லரசுகளினதும் கூட்டுச் சதி காரணமாக வன்னியில் கொடூர இன ஒழிப்பு போரை எதிர்கொண்டு, சாவின் விளிம்பில் நிற்கும் எமது உறவுகளின் உயிர்காக்க தாங்கள் புரிந்து வரும் தியாகத்தை சுவிஸ் தமிழர் பேரவை மதித்து நிற்கிறது.

இன்று அச்சுறுத்தலுக்கு ஆளாகியிருப்பது தனியே ஈழ தேசிய விடுதலைப் போராட்டம் மட்டும் அன்று. மாறாக, உலகம் எங்கும் பரந்து வாழும் எட்டு கோடித் தமிழர்களினதும் மானமும் மரியாதையும்தான்.

இன்றைய தருணத்தில் உலகத் தமிழினம் ஒன்றுபட்டால் ஒழிய வன்னியில் அழிவின் விளிம்பில் இருக்கும் தமிழ் மக்களையும், தமிழீழ விடுதலைப் போராட்டத்தையும் காக்க முடியாது.

ஈழத் தமிழ்ச் சமூகத்தை கரு அழிப்பதற்காகவே சிங்கள அரசு மிகத் தீவிரமாகச் செயற்பட்டு வருகின்றது. இதற்கு இந்திய மத்திய அரசாங்கமும் கூட முண்டு கொடுத்து வருகின்றது என்பது வெளிப்படையான உண்மை.

இத்தகைய பின்னணியில், இந்திய மண்ணில் இருந்து கொண்டு ஈழத் தமிழ் மக்களுக்காய்க் குரல் கொடுப்பது ஒன்றும் இலகுவான விடயமல்ல. மாறாக, துணிச்சலும், தியாகமும் நிறைந்த ஒரு விடயம்.

ஈழத் தமிழர் விடயத்தில் தங்களின் துணிச்சலையும், அன்பையும் பல தடவைகளில் கடந்த காலங்களில் நீங்கள் நிரூபித்திருக்கின்றீர்கள். கொண்ட கொள்கையில் பிடிப்பும், அதனைச் செய்து முடிப்பதற்கான அர்ப்பணிப்பும், நேர்மையும் கொண்டவர்களால் மாத்திரமே இத்தகைய பணியைச் செய்ய முடியும்.

அந்த வகையில், எமக்காக நீங்கள் தொடங்கியுள்ள சத்தியப் போராட்டம் வெற்றிபெற வேண்டும் என சுவிஸ் தமிழர் பேரவை வாழ்த்துகின்றது. தமிழ் தாய் வாழ்த்து

உலகத் தமிழினமே எண்ணிப்பார்! - நீ
உறங்கினால் யார் உன்னை மன்னிப்பார்?


இவ்வாறு அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



Comments