இலங்கைத் தமிழர்களுக்காக முதலைக் கண்ணீர் வடிப்போரை தமிழகம் தாங்கிக்கொள்ளுமா?


கேள்வி எழுப்புகிறது

வன்னியில் தமிழ்மக்கள் இடம்பெயர்வதற்கு ஓரிருவாரம் போர்நிறுத்தம் அவசியம். இதனை நிறைவேற்ற தமிழக அரசு தனது பலத்தை காட்டாவிடில் அதற்குப் பின் வாய்ப்பே இல்லாமல் போய்விடும் என்று சுட்டிக்காட்டியிருக்கும் தமிழகத்தின் முன்னணி நாளேடான "தினமணி', இதனை அறிந்தும் மௌனம் சாதித்து கடைசி சந்தர்ப்பத்தையும் நழுவவிட்டுவிட்டு இலங்கைத் தமிழருக்காக முதலைக் கண்ணீர் வடித்து தமது பதவியை காப்பாற்றிக்கொள்ள நினைப்பவர்களை தமிழகம் தாங்கிக்கொள்ளுமா? என்று கேள்வி எழுப்பியுள்ளது.

"கடைசி வாய்ப்பு' என்று மகுடமிட்டு "தினமணி' நேற்று வியாழக்கிழமை தீட்டியிருக்கும் ஆசிரியர் தலையங்கத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது;

""வெளியுறவுத் துறைச் செயலர் சிவ்சங்கர் மேனன் இலங்கை சென்று ராஜபக்ஷவை சந்தித்துப் பேசிவிட்டு வந்துள்ளார். அதன் விபரங்கள் சரியாக வரவில்லை. ஒருவேளை பிறகு வரக்கூடும்' தமிழக முதல்வர் கருணாநிதியின் அறிக்கையில் இடம்பெற்ற இந்த வரிகளைப் படிக்கும் அரசியல் தெரிந்த தமிழர் எவருமே அதிர்ச்சி அடைவார்கள்.

மத்திய அரசில் திராவிட முன்னேற்றக் கழகம் மிக முக்கிய இடம்பெற்றுள்ள நிலையில், தமிழகத்தின் முதல்வராக தி.மு.க. தலைவர் கருணாநிதி இருக்கின்ற வேளையில், அவர் நினைத்தால் சிவ்சங்கர் மேனன் நேரடியாக இலங்கையிலிருந்து கோபாலபுரத்துக்கு வந்து, ராஜபக்ஷவிடம் தான் பேசிய விபரங்களை தெரிவித்துப் பிறகே டில்லி செல்லும்படியான கட்டாயத்தை உருவாக்கியிருக்க முடியும்.

சிவ்சங்கர் மேனன் டில்லி சென்று திரும்பிய பிறகும் முதல்வர் முன்பு சொன்னதைப் போலவே ""சில நாட்கள் பொறுத்திருப்போம்' என்று காத்திருந்த பின்னரும் இலங்கைத் தமிழர் விவகாரத்தில் மத்திய அரசு என்ன செய்யப்போகிறது என்பது பற்றி வெளிப்படையாக எந்த அறவிப்பும் வரவில்லை.

ஆனால்,இலங்கை இராணுவத்தின் தாக்குதல் மேலும் மேலும் தீவிரமாகிக் கொண்டே இருக்கிறது. இலங்கைத் தமிழர்களைக் காப்பாற்றும் கடைசி வாய்ப்பை தமிழக அரசு, குறிப்பாக தி.மு.க. இழந்து வருகிறதோ என்று தோன்றுகிறது.

இந்நிலையில், இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவான அமைப்புகளின் அதீத ஆவேசம் தமிழக அரசின் மெத்தனப் போக்கை நியாயப்படுத்துவதாக அமைந்துவிடுமோ என்ற அச்சம் ஏற்படுகிறது. பேருந்துகளை அடித்து நொருக்குவதும் தமிழகத்தை ஒரு வாரம் ஸ்தம்பிக்கச் செய்யும் போராட்டமும் அவசியமா? இவை இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு எதிரான மனநிலையை உருவாக்காதா?

அதற்கு மாறாக, மத்திய அரசின் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள தி.மு.க., பா.ம.க. இரு கட்சிகளும் மத்திய அரசுக்கு நெருக்கடி தரவேண்டுமே தவிர, தமிழக மக்களுக்கு அல்ல.

சிவ்சங்கர் மேனன் சுமார் 90 நிமிடங்கள் இலங்கை ஜனாதிபதி ராஜபக்ஷவுடன் பேசியதில், "தீவிரவாதத்தை இராணுவத்தின் மூலம் உறுதியாக எதிர்கொள்ள வேண்டும்' என்ற அரிய கருத்தை அமைதியாகக் கேட்டுவிட்டு வந்திருக்கிறார். அதாவது, போரைநிறுத்தமாட்டோம் என்பதை இதைவிட எளிமையாக யாரும் சொல்லிவிட முடியாது.

தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்புக்கு அண்மையில் தான் இலங்கை அரசு தடை விதித்தது. புலிகள் பலம் இழந்துவிட்டார்கள்; அவர்களுடன் எந்தப் பேச்சுவார்த்தைக்கும் இனி அவசியமில்லை என்ற நம்பிக்கை வந்த பிறகுதான் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதையும் மிகத் தெளிவாக, "மனிதக் கேடயம் அமைத்து போரிடும் விடுதலைப்புலிகள்' என்று அடைமொழியுடன் தான் இலங்கை அரசு இந்தத் தடையை அறிவித்துள்ளது. இதன் மூலம் இலங்கை அரசு உலக நாடுகளுக்கு இப்போதே அறிவித்துக்கொள்கிறது; தமிழர்கள் பல ஆயிரம் பேர் இறந்தால் அதற்கு நாங்கள் பொறுப்பல்ல என்று காஷ்மீர் பிரச்சினையை வைத்துக்கொண்டு, தமிழீழத்துக்கு ஆதரவு தெரிவிக்க இந்திய அரசால் முடியாது என்றும் தீவிரவாதிகள் மீது பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று வலியுறுத்தும் இந்திய அரசு, விடுதலைப்புலிகள் மீது போர் தொடுக்கக்கூடாது என்றும் சொல்ல முடியாது என்பதுமான வாதங்களை சிலர் முன்வைக்கின்றனர். ஆனால், இலங்கைத் தமிழர்களைப் பாதுகாப்பான பகுதிக்கு இடம்பெயரச் செய்வதும் அவர்களுக்கு மருந்து, உணவு கிடைக்கச் செய்வதும் அவை ஒழுங்காக கிடைக்கிறதா என்பதைக் கண்காணிப்பதும் இந்திய அரசால் செய்யக்கூடிய ஒன்று என்பதை இவர்கள் ஏன் உணர மறுக்கின்றனர்?

இலங்கைத் தமிழர்கள் இடம்பெயர்ந்துள்ள பகுதிக்குள் இம்மாதம் ஜனவரி 9 ஆம் திகதிக்குப் பிறகு செல்லவே முடியவில்லை என்று செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது. ஏறக்குறைய 12 நாட்கள் ஓடிவிட்டன.

போர்நிறுத்தம் என்ற கோரிக்கையை விடுதலைப்புலிகளுக்கு ஆதரவான விடயமாக இலங்கை அரசு கருதக்கூடும். ஆனால், தமிழர்கள் பாதுகாப்பான பகுதிக்கு இடம்பெயர்வதை உலக நாடுகள் அனைத்தும் மனிதநேயமாக மட்டுமே பார்க்கும். இவர்கள் இடம்பெயர்வதற்கு ஓரிரு வாரம் போர்நிறுத்தம் அவசியம். இதைச் செய்து முடிக்க தமிழக அரசு தனது அரசியல் பலத்தைக் காட்டாவிட்டால் பிறகு அதற்கு வாய்ப்பே இல்லாமல் போகும்.

இதெல்லாம் தெரிந்தும் வாய்மூடி மௌனம் சாதித்து, கடைசி வாய்ப்பையும் நழுவவிட்டுவிட்டு,

ஈழத் தமிழர்களுக்காக முதலைக்கண்ணீர் வடித்து தங்களது பதவியைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டும் என்று நினைப்பவர்களை,

"ஏ, தாழ்ந்த தமிழகமே...' நீ தாங்கிக்கொள்வாயா!


Comments