இது தொடர்பாக இன்று வியாழக்கிழமை வைகோ வெளியிட்ட அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது:
"முத்துக்குமார் எனும் வீரத் தமிழ் இளைஞன், ஈழத் தமிழர்களின் துயரத்தைத் தாங்கிக்கொள்ள முடியாமல், தன்னையே நெருப்புக்குத் தாரை வார்த்தான் எனும் செய்தி நம் இதயத்தைச் சுட்டு எரிக்கிறது.
முத்துக்கள் விளையும் தூத்துக்குடி மாவட்டத்துக் கடலோரக் கிராமமான கொல்லுவைநல்லூர் எனும் கிராமத்தைச் சேர்ந்த இலட்சிய வேங்கை முத்துகுமார், கலைத்துறையிலும், எழுத்துத்துறையிலும் சிறந்த இந்த இளைஞன், ஈழத் தமிழரைக் காக்கக் கதியற்றுப் போனோமே என்ற வேதனையில், தன் உடம்பில் பெற்றோலை ஊற்றி நெருப்பு வைத்துக் கொண்டார்.
தனக்கு ஏற்படும் மரணத்தை மருத்துவர்கள் தடுத்துவிடக் கூடாது என்பதற்காக, பெற்றோல் டின்னை உடைத்து, பெற்றோலை தலைமுதல் உடல் எங்கும் முழுக்க ஊற்றி நனைத்துக்கொண்டு நெருப்பு வைத்துத் தணலுக்குத் தன்னை தந்து உள்ளார். தீயின் கோர நாக்குகளுக்குத் தன் உடலைத் தந்து உள்ளார்.
'இவ்வளவு அறிவுக்கூர்மை உள்ள புத்திசாலியான இளைஞனான நீ இப்படிச் செய்யலாமா?’ என்று மருத்துவர்கள் கேட்டபோது, என்னைப் போன்ற ஆயிரமாயிரம் புத்திசாலி இளைஞர்கள் ஈழத்தில் மடிகிறார்களே? என் உயிர் பெரிதா? என்று கேட்டு இருக்கிறார்.
ஏற்கனவே, முத்துக்குமாரின் உடன்பிறந்த சகோதரன் விபத்தில் மறைந்த துக்கம் அந்தக் குடும்பத்துக்கு நேர்ந்து உள்ளது. இன்று காலையில்தான் அவரது தந்தையிடம் தொலைபேசியில் பேசி உள்ளார். வாழ்க்கையில் வசந்தம் எதையும் தேடாமலேயே இந்த வாலிப வயதில் தமிழர்களுக்காகத் தன்னையே தீயில் கருக்கிக் கொண்டு, தன் சாம்பலும் தமிழ் மணக்க மறைந்து விட்டார்.
இதயத்தைப் பிளக்கும் இந்த வேதனையைத் தாங்க முடியவில்லை.
முத்துக்குமாரை இழந்து துன்பத்தில் துடிதுடிக்கும் அவரது பெற்றோருக்கும், உற்றார் உறவினர்களுக்கும் என் கண்ணீர் வணக்கத்தைத் தெரிவிக்கிறேன்.
ஈழத் தமிழரின் தியாக வரலாற்றில், முத்துகுமாரின் தியாகமும், புகழும் நிலைத்து நிற்கும். தாய்த் தமிழகத்தின் இளந்தமிழ் மனங்கள், எரிமலையாகச் சீறத் தொடங்கிவிட்டதை இப்போதாவது தமிழருக்குத் துரோகம் செய்யும் மத்திய அரசு உணரட்டும்.
சிங்கள அரசு நடத்தும் இனக்கொலைப் போரைத் தடுக்க முன்வரட்டும். செய்து வரும் துரோகத்தை இனியாவது நிறுத்தட்டும். தமிழர் நலனுக்காக வாழ்ந்து போராட வேண்டிய வாலிபர்கள், இப்படித் தங்களையே அழித்துக் கொள்ளும் செயல்களில் ஈடுபட வேண்டாமென மன்றாடிக் கேட்டுக் கொள்கிறேன்".
இவ்வாறு வைகோ தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
Comments