வரலாறு காணாத அவலங்களை தமிழ்மக்களுக்குக் கொடுக்கின்ற வன்னிப் பெரும் போர் நாளுக்கு நாள் மூர்க்கமடைந்து வருகிறது.
இந்தப் போர் இப்போது சுமார் 800 ச.கி மீற்றருக்கும் உட்பட்ட குறுகிய சுற்றுவட்டமொன்றுக்குள் குறுகி நிற்கிறது.
இந்தநிலையில் குறிக்கப்பட்ட புள்ளியை நோக்கி ஒன்று குவிக்கப்பட்ட தாக்குதல்களை அரசபடைகள் ஆரம்பித்திருப்பதால் பொதுமக்கள் மத்தியில் ஏற்படும் சேதங்கள் அதிகரித்து வருகின்றன.
குறிப்பாக டிசம்பர் 20ம் திகதிக்குப் பின்னர் வன்னிக் களத்தில் ஏகப்பட்ட மாற்றங்கள் நிகழ்ந்திருப்பதோடு- பொதுமக்கள் பெரும் உயிரிழப்புகளையும் அவலங்களையும் சந்தித்துக் கொண்டுடிருக்கின்றனர்.
இவற்றுக்கு மத்தியில் இடம்பெயர்வு அவலம் அவர்களை ஓட ஓடத் துரத்துகிறது. ஓன்றுக்குப் பத்து இடங்களுக்கு இடம்பெயர்ந்த மக்களின் முன்னைய வரலாற்றை முறியடிக்கின்ற வகையில்- அதைவிட இரட்டிப்பான இடங்களுக்குக் கூட இடம்பெயர்ந்திருக்கின்ற மக்களின் துன்பத்தை களத்துக்கு வெளியே இருக்கின்ற எவராலும் இலகுவில் புரிந்து விடமுடியாது.
அடுத்த மாதம் நடுப்பகுதிக்கு முன்னர் போரை முடிவுக்குக் கொண்டு வரும் காலக்கெடுவோடு முல்லைத்தீவை நோக்கி அரசபடைகள் ஏவி விடப்பட்டிருக்கின்றன.
முல்லைத்தீவின் மையப்பகுதியை அரசபடைகள் நெருங்க நெருங்க சண்டைகளைப் போன்று பொதுமக்களுக்கு ஏற்படும் இழப்புகளும் அதிகரித்து வருகின்றன.
தொடர்ச்சியான ஷெல் தாக்குதல்களும், நேர காலம் பாராமல் குண்டுகளை வந்து கொட்டி விட்டுப் போகும் போர் விமானங்களும் இப்போது பொதுமக்களையே இரைதேடி வருகின்றன.
இத்தனைக்கும் காரணம் என்ன?
வன்னியில் உள்ள தமிழ்மக்களையும் புலிகளையும் பிரித்து விடவேண்டும் என்பதே அரசாங்கத்தினது ஒரே நோக்கம். அரசபடைகளின் ஒரே திட்டம்.
வன்னியில் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் பொதுமக்கள் இருப்பதை அரசாங்கமும் அதன் படைகளும் விரும்பவில்லை.
தமிழ்மக்களின் உதவியுடன்- ஒத்துழைப்புடன் அவர்களின் ஆதரவுடன் தான் புலிகள் போராட்டம் நடத்துகிறார்கள் என்ற அடிப்படை யதார்த்தத்தை புரியாதளவுக்கு இலங்கை அரசு முட்டாள் அல்ல.
எனவே தமிழ்மக்களிடத்தில் இருந்து புலிகளைப் பிரித்து விட்டால் மிகச் சுலபமாக அவர்களை வீழ்த்தி விடலாம் என்றும்- முல்லைத்தீவை முழுமையாகக் கைப்பற்றி விடலாம் என்றும் அரசாங்கம் கனவு காண்கிறது.
தொடர்ச்சியான இடம்பெயர்வு அவலங்களைச் சந்தித்து நொந்து போயிருக்கும் மக்களை- கிலேசமூட்டி அங்குமிங்கும் சிதறி ஓட வைக்கும் தந்திரத்தை இராணுவமும் விமானப்படையும் இப்போது கையாள்வதற்குக் காரணமே, அங்குள்ள மக்கள் தமது பக்கம் ஓடி வருவார்கள் என்ற எதிர்பார்ப்பில் தான்.
மாங்குளம் கைப்பற்றப்பட்ட போதே ஒரு இலட்சம் மக்கள் வரை இடம்பெயர்ந்து இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் வருவார்கள் என்று இராணுவம் எதிர்பார்த்தது.
பூநகரியின் பின்னர், கிளசெநாச்சியின் பின்னர், ஒட்டுசுட்டானின் பின்னர் கூட அது நடக்கவில்லை.
சிலநூற்றுக்கணக்கான மக்கள் இராணுவப் பிடியில் அகப்பட்டிருப்பதையும்- அவர்களின் பிரதேசத்துக்குள் வேறு வழியின்றிச் சென்றிருப்பதையும் ஏற்கத் தான் வேண்டும்.
ஆனால் 3இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் தொகையுள்ள புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் இருந்து- படைக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் சென்றவர்களின் மொத்த எண்ணிக்கை மூவாயிரத்தைக் கூட தாண்டவில்லை.
இந்தநிலையில் தொடர்ச்சியான வான் தாக்குதல்கள், கண்மூடித்தனமான ஷெல் தாக்குதல்களின் மூலம் மக்களுக்கு இழப்புக்களையும் அச்சத்தையும் ஏற்படுத்தி அவர்களை தமது பகுதிக்குள் வரச் செய்ய முயற்சிக்கிறது படைத்தரப்பு.
2009 ம் ஆண்டில் இரண்டு வாரங்களில் மட்டும் மூன்று டசினுக்கும் அதிகமான பொதுமக்கள் படையினரின் தாக்குதல்களில் கொல்லப்பட்டிருக்கிறார்கள். நூற்றுக்கணக்கில் காயமுற்றிருக்கிறார்கள்.
ஆனால் அரசாங்கம் என்ன சொல்கிறது?
பொதுமக்களுக்கு எந்த இழப்புகளும் இல்லாமல் வன்னியில் புலிகளுக்கு எதிரான போர் நடத்தப்படுவதாக கூறிவருகிறது.
அப்படியானால் வன்னியில் வான் தாக்குதலிலும், ஷெல் தாக்குதலிலும் கொல்லப்பட்ட 5 மாதக் குழந்தையும், 86 வயது மூதாட்டியும் யார்?
அவர்களும் புலிகள் தானா?
வன்னியில் வாழும் தமிழ்மக்களை அழித்தொழிக்கின்ற நோக்கில் நடத்தும் இப்போதைய தாக்குதல்களின் போது பொதுமக்களுக்கு பாதிப்பே ஏற்படவில்லை என்று அரசாங்கம் கூறுகின்ற கதையின் பின்னால் உள்ள ஒரு விடயம் ஆபத்து மிக்கது.
புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் வாழுகின்ற மக்கள் அனைவரையுமே புலிகளாகத் தான் அரசாங்கம் பார்க்கிறது.
அங்குள்ள மக்கள் ஏதோ ஒரு வகையில் புலிகளுடன் தொடர்புபட்டிருக்கிறார்கள் என்பதை அரசாங்கம் நன்கு தெரிந்து வைத்திருக்கிறது.
அதனால் தான் அவர்களுக்கு ஏற்படுகின்ற இழப்புகளை அரசாங்கம் பொதுமக்களுக்கு ஏற்பட்ட இழப்புகளாகவே கருதுவதில்லை.
இந்தக் கட்டத்தில் அரசாங்கத்தின் பொய்யான வாக்குறுதிகளை நம்பி அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வரும் மக்களின் பாதுகாப்புக்கு யாராலும் உத்தரவாதம் கொடுக்க முடியாது.
இந்தநிலை அரச கட்டுப்பாட்டில் வாழுகின்ற அனைத்து தமிழ்மக்களுக்கும் உரியதொன்று. கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் மட்டக்களப்பில் மாத்திரம் 10 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். 50 பேர் காணாமல் போயிருக்கிறார்கள்.
இது தான் கிழக்கின் விடியலின் இலட்சணம். இதேநிலை தான் வன்னிப்பகுதியில் அரச கட்டுப்பாட்டுக்குள் வரும் மக்களுக்கும் நடக்கப் போகிறது,
மட்டக்களப்பில், திருகோணமலையில், யாழ்ப்பாணத்தில், வவுனியாவில் நடக்கின்ற அத்தனை அராஜகங்களையும் சந்திக்கின்ற துணிவோடு தான் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள மக்கள் அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் வரவேண்டியிருக்கும்.
புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் வசிக்கின்ற மக்கள் அனைவரையுமே புலிகளாகப் பார்க்கின்ற அரசாங்கத்திடம் இருந்து - அங்கிருந்த வரும் மக்களுக்கு பாதுகாப்பு உத்தரவாதம் வழங்குமாறு எந்தவொரு தரப்பினாலும் கோர முடியாது.
அதைவிட பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸ அண்மையில் ஒரு பேட்டியின் போது- புலிகளை ஆதரிப்பவர்கள் அனைவரும் தேசத் துரோகிகள் என்றும் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் என்றும் பகிரங்கமாகக் கூறியிருக்கிறார்.
இது புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வரும் மக்களுக்கு இருக்கின்ற ஆபத்தை -அச்சுறுத்தலை படம் போட்டுக் காண்பிக்கிறது.
அங்குள்ள மக்கள் அனைவரையும் ‘அரசபடைகளுக்கு எதிராக ஆயுதம் ஏந்தியவர்கள்’ என்ற ஒற்றைவரிக் குற்றச்சாட்டில் தேசத் துரோகிகளாகத் தண்டிப்பதற்கு அரசாங்கம் தயாராகி விட்ட தென்பதையே கோத்தபாயவின் கருத்து சுட்டிக் காட்டுகிறது.
தேசத்துரோகிகளுக்கு கோத்தபாயவின் ‘பிசாசுப் படை’ கொடுக்கின்ற தீர்ப்பு- தண்டனை என்ன என்பதை உலகமே அறியும்.
அத்தகைய தண்டனைகளை ஆயிரக்கணக்கான மக்களுக்குக் கொடுக்கின்ற திட்டத்தோடு தான்- வன்னியில் வாழும் பொதுமக்களை அச்சுறுத்துகின்ற அழிக்கின்ற தாக்குதல்களை அரசபடைகள் அரங்கேற்றி வருகின்றன.
இந்தக் கட்டத்தில் பாரிய இனஅழிப்பின் விளிம்புக்கு வந்திருக்கின்ற 3 இலட்சத்துக்கும் அதிகமான மக்களுக்காக குரல் கொடுக்க யாருமற்ற நிலையே காணப்படுகின்றது.
சில மாதங்களுக்கு முன்னர் பொதுமக்களுக்கு சேதங்கள் ஏற்படாத வகையில் இராணுவ நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்று இந்தியாவிடம் உறுதியளித்திருந்தது இலங்கை அரசு.
ஆனால் அந்த வாக்குறுதிக்கு என்ன நிகழ்ந்தது?
காற்றில் பறக்க விடப்பட்ட வாக்குறுதி குறித்து இந்தியா மௌனமாகவே இருக்கிறது.
இலங்கையில் தமிழினம் அழிக்கப்படுவதை வேடிக்கை பார்க்க முடியாதென்ற இந்திய அரசின் பசப்பான கருத்துகள் மட்டும் தமிழ்மக்களின் பாதுகாப்புக்கு உதவப் போவதில்லை.
போரை நிறுத்துகின்ற வல்லமை தான் இந்தியாவுக்கு இல்லாவிட்டாலும்- பொதுமக்களுக்குப் பாதிப்புகள் ஏற்படுவதையேனும் தடுக்கின்ற வல்லமை கூடவா இந்தியாவிடம் இல்லாது போய்விட்டது?
இன்போதமிழ்
Comments