வன்னியில் உச்சக் கட்டத்தை அடைந்திருக்கும் இரா ணுவ நடவடிக்கையினால் அப்பாவித் தமிழ் மக்கள் சின்னாபின்னப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில் இலங்கை சமாதான முயற்சிகளில் தொடர்புபட்ட இந்திய, ஜப்பான் பிரதிநிதிகளின் இலங்கை விஜயம் "வெற்றியாளன் பக்கமே சர்வதேசம் அதில் நீதி, அநீதி இல்லை' என்ற நிலையை உறுதிப்படுத்துவதாகவே அமைந்துள்ளது.
இலங்கை வந்த இந்திய பிரதிநிதியான இந்தியாவின் வெளியுறவுச் செயலர் சிவ்சங்கர்மேனன் இலங்கையில் போர் நிறுத்தத்தை ஏற்படுத்துவார், அவரையடுத்து வந்த ஜப்பானின் விசேட தூதுவர் யசூசி அகாசி மீண்டும் சமாதான முயற்சிகளை தொடங்கும் வேலைத் திட்டத்தை முன்னெடுப்பார் என்று தமிழ் மக்களுக்கிருந்த ஒரு சிறு நம்பிக்கை ஒளியும் தற்போது அணைக்கப்பட்டுவிட்டது.
இலங்கை வந்த பிரதிநிதிகள் சமாதான முயற்சிகளைத் தவிர்த்து இலங்கையரசின் போர்வெறிக்கு உரமூட்டிவிட்டு தமிழ் மக்கள் மீதான போருக்குத் தேவையான சகல உதவிகளையும் வழங்கத் தயாரென கூறியுள்ளனர். இதன் மூலம் தமிழ் மக்களை அழிக்கும் முயற்சியில் தற்போது இந்தியாவுடன் ஜப்பானும் கூட்டுச் சேர்ந்துள்ளது.
தமிழினத்திற்கெதிரான தமது சொந்த நிகழ்ச்சித் திட்டத்தின் அடிப்படையில் இலங்கைக்கு இந்தியா, ஜப்பான், பாகிஸ்தான், சீனா, அமெரிக்கா போன்ற நாடுகள் உதவிபுரிய போட்டிபோடும் நிலையில் இந்த நாடுகள் தமிழ் மக்களுக்கு உதவி செயவே இங்கு வருவதாக சில பேரினவாதக் கட்சிகள் கூக்குரலிடுவதுதான் வேடிக்கையானது.
கடந்த வாரத்தில் இலங்கைக்கு விஜயம் செத அமெரிக்க, இந்திய, ஜப்பான் பிரதிநிதிகளின் வருகை தொடர்பில் தமிழ் மக்களுக்கு ஏற்படவேண்டிய சந்தேகத்திற்குப் பதிலாக இம்முறை தென்பகுதி அரசியல் கட்சிகளுக்கு சந்தேகமும் அச்சமும் ஏற்பட்டுள்ளது.
இந்தப் பிரதிநிதிகளின் விஜயம் தொடர்பாக அரசுடன் இணைந்திருக்கும் விமல் வீரவன்ஸ தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணியும் ஹெல உறுமயவும் உள்ளுக்குள் புழுங்கிக் கொண்டிருக்க ஜே.வி.பி., தனது சந்தேகங்களையும் அச்சத்தையும் பாராளுமன்றத்தில் வெளியிட்டு அது தொடர்பில் இடைக்கால நிவாரணத்தையும் பெற்றுக் கொண்டது.
இந்திய வெளியுறவு செயலர் சிவ்சங்கர் மேனன் இலங்கைக்கு வந்தபோது போர்நிறுத்தம் ஏற்படப்போகுதென்றும் அமெரிக்க இராணுவத்தின் பசுபிக் பிராந்தியத்திற்கான தளபதி மேஜர் ஜெனரல் தோமஸ் எல்.கொனன்டின் தலைமையிலான குழு இலங்கை வந்தபோது திருகோணமலை பறிபோகப்போகிறதென்றும் ஜப்பானின் விசேட தூதுவர் யசூசி அகாசி இலங்கை வந்தபோது மீண்டும் சமாதானப் பேச்சுகள் ஏற்படப் போகுதென்றும் இந்தப் பேரினவாதக் கட்சிகள் அச்சமடைந்தன.
இலங்கைக்கு விஜயம் செத மூன்று நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகளும் இலங்கை அரசின் போர்வெறிக்கும் ஜனாதிபதியின் இராணுவத் தீர்வு என்ற அசையாக் கொள்கைக்கும் மரியாதை செலுத்திவிட்டு உங்கள் இராணுவத் தீர்வுக்குத் தேவையான சகல ஒத்துழைப்பையும் ஆலோசனைகளையும் உதவிகளையும் வழங்கத் தயார் என்று கூறியுள்ளனர்.
சமாதான முயற்சிக்காகவே ஜப்பானின் விசேட தூதுவர் யசூசி அகாசி இலங்கை வந்துள்ளதாக வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகம கூறியிருந்தார். ஆனால், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைச் சந்தித்த அகாசியோ பயங்கரவாதத்தை பூண்டோடு அழிக்கும் மஹிந்த ராஜபக்ஷவின் அரசுக்கு ஜப்பான் முழுமையான ஆதரவு வழங்கும் என்று தெரிவித்ததுடன் ஜனாதிபதியின் நடவடிக்கைகளைப் பாராட்டியுமுள்ளார்.
அத்துடன் வடக்கு, கிழக்கில் இடம்பெறும் மனிதப் படுகொலைகள் தொடர்பில் எதனையும் தெரிவிக்காத அகாசி, ஜனாதிபதிக்கு அடுத்ததாக இனவாத அரசியல் செயும் விமல் வீரவன்ஸவை சந்தித்துள்ளார். அப் போது புலிகளுடன் மீண்டும் பேச்சுகளை ஆரம் பிப்பதற்கு ஜப்பான் எந்த உதவியும் செயாதென உறுதியளித்ததாக வீரவன்ச தரப்பினர் கூறுகின்றனர்.
இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்படுத்தப்பட வேண்டுமென்ற தமிழக கட்சிகளின் ஒட்டுமொத்த கோரிக்கைக்காக இந்திய அரசினால் இலங்கைக்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜிக்குப் பதிலாக அனுப்பிவைக்கப்பட்ட இந்திய வெளியுறவு செயலர் சிவ்சங்கர் மேனன் வழக்கம் போலவே இலங்கை அரசின் இரா ணுவ நடவடிக்கைக்கும் இன ஒடுக்கலுக்கும் இந் திய அரசின் தார்மீக ஆத ரவை தெரிவித்துவிட்டு திரும்பியுள்ளார்.
சிவ்சங்கர் மேனனின் இலங்கை விஜயம் தொடர்பாக அறிக்கை யொன்றை வெளியிட்ட இலங்கையிலுள்ள இந்தி யத் தூதரகம் "தமிழர் உட்பட இலங்கையில் வாழும் அனைத்து இன மக்களும் அமைதியுடனும் கௌரவத்துடனும் வாழ வழிவகுக்கும் அரசியல் தீர்வை பேச்சுவார்த்தை மூலம் காண வேகமாகச் செயற்படுமாறு இந்திய அரசின் சார்பாக இலங்கை யிடம் வலியுறுத்தப்பட்டது' எனத் தெரிவித்திருந்தது.
ஆனால், இலங்கை அரசோ சார்க்மாநாடு தொடர்பான பேச்சுகளை நடத்தவே சிவ்சங்கர் மேனன் இலங்கை வந்தார். அது தொடர்பாக மட்டுமே பேசினார். இலங்கைக்கான இந்தியாவின் தார்மீக ஆதரவு என்றைக்கும் இறுக்கமாகத் தொடரு மென்றும் அவர் உறுதி வழங்கினார் என்றும் தெரிவித்தது.
இலங்கை அரசின் கருத்தை உறுதிப்படுத்துவது போலவே சிவ்சங்கர் மேனனும் செயற்பட்டுள்ளார் என்பதை அதன்பின்னர் தற்போது வன்னியில் மிக மோசமாக இடம்பெற்றுவரும் தாக்குதல்களும் பொதுமக்களின் உயிரிழப்புகளும் உறுதிப்படுத்தப்படுகின்றன. தமிழ் மக்களின் உயிர் பாதுகாப்புத் தொடர்பில் சிவ்சங்கர் மேனன் எந்தவித அழுத்தத்தையும் இலங்கை அரசுக்கு கொடுக்கவில்லையென்பதை இதன் மூலம் புரிந்துகொள்ள முடியும்.
தமிழக கட்சிகளை திருப்திப்படுத்துவதற்காக இலங்கை வந்த சிவ்சங்கர் மேனன் அதே நோக்கத்திற்காகவே, தமிழ் மக்களின் ஆதரவு பெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்சியினரைச் சந்தித்து சில வார்த்தைகளை பேசிவிட்டு சில உறுதி மொழிகளையும் வழங்கிவிட்டுச் சென்றுள்ளார். இலங்கையில் தமிழர்களுக்குச் சார்பாக எதனையும் பேசாததாலேயே சிவ்சங்கர் மேனன் சென்னையில் காத்திருந்த ஊடகவியலாளர்களையும் சந்திக்க மறுத்தார்.
சிவ்சங்கர் மேனன் இலங் கைக்கு வந்து போரை நிறு த்தி விடுவாரோ என்ற கலக்கத்திலிருந்த பேரினவாத கட்சிகளுக்கு அவரின் நடவடிக்கைகள் மேலும் உத்வேகத்தை கொடுப்பவையாகவேயிருந்த நிலையில் இலங்கைக்கு வந்த அமெரிக்காவின் பசுபிக் பிராந்திய தளபதி மேஜர் ஜெனரல் தோமஸ் எல். கொனன்டின் விஜயம் திருகோணமலை பறிபோகப் போகின்றதென்ற அச்சத்தைக் கொடுத்தது.
இலங்கைக்கு மேஜர் ஜென ரல் தோமஸ் எல்.கொனன்டின் தலைமையில் வந்த இக்குழு வில் தெற்காசிய நாடுகள் தொடர்பான இயக்குநர் லெப் ஜெனரல் பெட்ரிக்கோ, இலங்கைக்கான அமெரிக்க தூதரகத்தின் இலங்கை மற்றும் மாலைதீவுகளின் பாதுகாப்பு ஆலோசகர் லெப்டினன்ட் கொமாண்டர் லோரன்ஸ் ஸ்மித் உட்பட இன்னும் சிலர் இடம் பெற்றிருந்தனர். இந்தக் குழுவினர் திருகோணமலை சென்றதும் கிழக்கு முதலமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தனை சந்தித்ததுமே பேரினவாதிகளுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியது.
இக்குழுவின் விஜயம் தொடர்பாக சந்தேகத்தை கிளப்பிய ஜே.வி.பி.திருகோணமலையில் ஏவுகணைத் தளமொன்றை அமைக்க அமெரிக்கா முடிவு செதிருப்பதாக புரளியொன்றையும் பகிரங்கமாக பாராளுமன்றத்திலேயே வெளியிட்டது. இது தொடர்பில் அரசிடமும் விளக்கம் கேட்டது. ஏற்கனவே 1978 ஆம் ஆண்டு இலங்கையை யுத்த நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தும் திட்டம் அமெரிக்காவுக்கு இருந்தது. திருகோணமலையில் ஏவுகணை பொருத்துவதற்கு அப்போது முயற்சித்தது அது நிறைவேறவில்லை.
1985 இல் மீண்டும் திருகோணமலை துறைமுகத்தை அண்மித்து முகாமொன்றை அமைக்க அமெரிக்கா முயற்சித்தது. மக்கள் எதிர்ப்பால் அது கைவிடப்பட்டது. தெற்காசியாவில் தனது ஆதிக்கத்தை நிலை நாட்டுவதற்காக "பிரம்ம புத்திர திட்டம்' என்ற பெயரில் ஒரு திட்டம் வகுக்கப்பட்டது. சி.ஐ.ஏ. அமைப்பினால் தயாரிக்கப்பட்ட இத்திட்டத்தில் திருமலை துறைமுகம் அமெரிக்க இராணுவத்தை நிலைநிறுத்தக் கூடிய இடமாக குறிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியானதன் பின்னர் இலங்கைக்கும் அமெரிக்காவுக்குமிடையில் பாதுகாப்பு ஒப்பந்தமொன்று கைச்சாத்திடப்பட்டது. இதில் இலங்கை சார்பில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதாபய ராஜபக்ஷவும் அமெரிக்க சார்பில் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ரொபேர்ட் பிளக்கும் கையொப்பமிட்டுள்ளனர். இவ்வாறான நிலையில் இந்த தளபதி தலைமையிலான குழு வந்திருப்பது ஏன் என்பது ஜே.வி.பி.யின் சந்தேகம்.
இந்த அமெரிக்க இராணுவத் தளபதி கிழக்கு மாகாணப் பாடசாலைகளை புனரமைக்கும் திட்டத்தைத் தொடக்கி வைக்க வந்ததாகவும் அதனால் தான் கிழக்கு மாகாண முதலமைச்சரையும் சந்தித்ததாக சிறுவர்களுக்கு அம்புலிமாமா கதை சொல்வது போல் அரசு விளக்கமளித்தது.
இந்தப் பிரச்சினை அடங்குவதற்குள் ஜப்பானின் விசேட தூதுவர் யசூசி அகாசியின் இலங்கை வருகை ஜே.வி.பி.யை மீண் டும் கலக்கமடைய வைத்தது. இலங் கையில் சமாதான பேச்சுக்களை ஏற்படுத்து வதற்காகவே ஆரம்பத்தில் இலங்கை வந்த யசூசி அகாசி பின் னர் சமாதான பேச்சில் முக்கிய பங்கு வகித்தார். தற்போது இராணுவம் வெற்றிகளை பெற்றுள்ள நிலையில் மீண்டும் ஏன் இவர் இலங்கை வந்துள்ளார் என்பதே ஜே.வி.பி.யின் கேள்வி.
இந்திய வெளியுறவு செயலர், அமெரிக்க இராணுவத் தளபதி ஆகியோரின் விஜயம் தொடர்பில் ஜே.வி.பி.யின் சந்தேகங்களை மறுத்த வெளிநாட்டமைச்சர் ரோஹித போகொல்லாகம, யசூசி அகாசியின் விஜயம் தொடர் பில் ஜே.வி.பியின் சந்தேகத்துடன் இணங்கியது போல் பதிலளித்தார். இலங்கையில் சமாதானத்தை ஏற்படுத்துவதற்கான உதவிகளை வழங்கும் நடவடிக்கை குறித்த மதிப்பீடொன்றை செயவே யசூசி இலங்கை வந்ததாக குறிப்பிட்டார்.
வெளிநாட்டு பிரதிநிதிகளின் விஜயம் தொடர்பில் கூக்குரலிடும் விமல் வீரவன்ஸ இம்முறை அரசில் அங்கம் வகிப்பதால் தனது நாட்டுப்பற்றையெல்லாம் மூட்டை கட்டி வைத்து விட்டு இனவாதத்தை மட்டும் கக்கிக் கொண்டிருக்கிறார். அது போலவே ஹெல உறுமயவும் நாட்டுப் பற்றை அரசுக்காக ஒதுக்கி வைத்து விட்டு அமைதி காக்கிறது.
அதனால் வெளிநாட்டுப் பிரதிநிதிகளின் விஜயம் குறித்த ஜே.வி.பி.யின் கேள்விகளையோ, சந்தேகங்களையோ அரசு பெரிதாகக் கருதவில்லை.
இந்த வெளிநாட்டுப் பிரதிநிதிகளின் விஜயங்கள் தமக்கு எந்தவிதத்திலும் நன்மை தரப்போவதில்லையென்பதில் தமிழ் மக்கள் தெளிவுடன் இருக்கின்றார்கள்.
சிங்களக் கட்சிகள் தான் உலக நாடுகள் அதுவும் குறிப்பாக இந்தியா, ஜப்பான், அமெரிக்கா போன்ற நாடுகள் தமிழ் மக்களுக்கு ஏதாவது உதவி செது விடுவார்களோ என்ற சந்தேகத்தில் இன்னும் உள்ளனர். அதனால் தான் அரசுக்கு உதவவரும் வெளிநாட்டுப் பிரதிநிதிகளைக் கூட எதிரிகளாகப் பார்க்கின்றனர்.
இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் போன்ற நாடுகள் தமக்கான நிகழ்ச்சிநிரல் ஒன்றை வைத்துக் கொண்டு இலங்கை விடயத்தில் தலையிடுகின்றன என்பது யதார்த்தமான விடயம். ஜே.வி.பி.யின் சந்தேகம் இதில் நியாயமானது. ஆனால் அந்த நாடுகளை தமிழர்களுக்கு ஆதரவானவர்களாக ஜே.வி.பி.நினைப்பது தான் முட்டாள்தனமானது.
அத்துடன் எந்தநாடு இலங்கை வந்து எதைத்தான் சொன்னாலும் அதைக் கேட்கும் நிலையில் இலங்கை அரசு இல்லையென்பதை ஜே.வி.பி. இன்னும் புரிந்து கொள்ளாமல் உள்ளதா? அல்லது இந்த விடயங்களை தனது அரசியல் நிகழ்ச்சி நிரலின் அடிப்படையில் கையாள்கிறதா என்பதே மக்களிடம் ஜே.வி.பி.தொடர்பாகவுள்ள கேள்வி.
வெளிநாட்டுப் பிரதிநிதிகளின் இலங்கை விஜயம் தொடர்பாக விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப்பொறுப்பாளர் பா.நடேசன் தெரிவித்துள்ள கருத்துக்களை ஜே.வி.பி.யினர் தெரிந்து வைத்திருப்பது அவர்களின் சந்தேகத்தையும் அச்சத்தை போக்கும்.
வெளிநாட்டுப் பிரதிநிதிகள் தொடர்பாக நடேசன் பின்வருமாறு கூறுகின்றார்...
"இங்குள்ள தமிழர்கள் இந்தியாவிலிருந்து கொழும்பிற்கு யார் வந்தாலும் ஒரே மாதிரியாகவே பார்க்கிறார்கள். இன்னும் விளக்கமாக சொல்வதானால் எவ்வளவு திறமை வாந்த இராஜதந்திரிகள் இங்கு வந்தாலும் அவர்களை சிங்கள இராஜதந்திரிகள் ஏமாற்றி விடுவார்கள் என்ற கருத்துப்படவே பார்க்கின்றனர்.
கடந்த முப்பது ஆண்டு காலமாக எமது மக்களின் விடுதலைப் போராட்டத்தின் போது பல இராஜதந்திரிகள் இலங்கை வந்து சென்றுள்ளனர். தமிழ் மக்களின் பிரச்சினைகள் அவர்கள் எதிர்கொள்ளும் அழிவுகள் அதிகரித்து செல்கின்றனவே தவிர குறையவில்லை.
இம்முறை சிவ்சங்கர் மேனன் வந்திருந்த காலகட்டத்தில் கூட ஒரு போதும் இல்லாத அளவுக்கு எமது மக்கள் மீது கண்மூடித்தனமான விமானக் குண்டு வீச்சுக்கள், ஷெல்தாக்குதல்கள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன. இந்த நூற்றாண்டின் மிகப் பெரிய மனித அவலத்தின் சின்னமாக தமிழ் தேசம் காட்சியளிக்கின்றது. சிவ்சங்கர் மேனனின் வருகையின் போதோ அல்லது அதன் பின்னரோ எந்த மாற்றமும் நிகழ்ந்ததாக தெரியவில்லை.'
-தாயகன்-
Comments