சிறிலங்க இராணுவத்தின் கண்மூடித்தனமாக தாக்குதலில் தொடர்ந்து பாதிப்பிற்குள்ளாகிவரும் ஈழத் தமிழர்களைக் காக்க போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்துவார் என்று ‘மிகவும் எதிர்பார்க்கப்பட்ட’ அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி, அப்படி எந்தக் கோரிக்கையையும் விடுக்காதது மட்டுமின்றி, அவர் கொழும்புவில் இருந்து திரும்பியதும் விடுத்துள்ள அறிக்கையும், இந்திய-சிறிலங்க உறவில் தமிழர்களோ அல்லது அவர்களின் பிரச்சனைகளோ ஒரு பொருட்டல்ல என்பதையே தெள்ளத் தெளிவாக காட்டியுள்ளது.
கொழும்பு புறப்படுவதற்கு முன்னர், அமைச்சர் பிரணாப் முகர்ஜி தமிழக முதலமைச்சரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார் என்று வந்த செய்தியால், நிச்சயம் இவர் போர் நிறுத்தம் பற்றித்தான் பேசுவார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்ததில் எந்த ஆச்சரியமும் இல்லை. ஆனால், கொழும்பு சென்று சிறிலங்க அதிபர் ராஜபக்சயை சந்தித்த அமைச்சர் பிரணாப், “விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் அப்பாவித் தமிழர்கள் அதிகம் கொல்லப்படாமல் பார்த்துக்கொள்ளுங்கள்” என்று கூறியதாக வந்த செய்தியைத் தவிர, போர் நிறுத்தம் பற்றி ஏதும் பேசியதாக எங்கும் கோடிட்டுக் கூட காட்டப்படவில்லை.
தனது இலங்கைப் பயணம் குறித்து அமைச்சர் பிரணாப் முகர்ஜி விடுத்துள்ள அறிக்கையிலும் சரி, அவர் சிறிலங்க அதிபருடன் நடத்திய பேச்சுவார்த்தை குறித்து இந்திய அயலுறவு அமைச்சகம் விடுத்த அறிக்கையிலும் சரி, ‘போரினால் அப்பாவித் தமிழர்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் பார்த்துக் கொள்ளுங்கள்’ என்று கேட்டுக் கொண்டதாக எந்த இடத்திலும் சொல்லப்படவில்லை.
போர் நடக்கும் இடத்தில் ஒப்புக்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்புப் பகுதிகளில் தாக்குதல் நடத்தக்கூடாது என்று உறுதிமொழியை மட்டும் பெற்றுக் கொண்டதாகத்தான் அயலுறவு அமைச்சக அறிக்கை கூறுகிறது.
பலமான சிறிலங்க-இந்திய உறவு
இந்தியா, சிறிலங்கா இடையே ஆழமான, வலிமையான, இதமான உறவு மலர்ந்துள்ளதாக அயலுறவுச் செயலர் சிவ் சங்கர் மேனன் தனது பயணத்தில் குறிப்பிட்டதைப் போலவே, அமைச்சரின் இந்தப் பயணத்திலும் ‘இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு பலமாக மேம்பட்டு வருவதாக’க் கூறப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்ல, “தற்பொழுது ஏற்பட்டுவரும் மாற்றங்கள் மற்றும் உருமாற்றங்களுக்கு இடையே இந்த உறவு பலப்பட்டு வருவது மிக முக்கியமானது” என்று அயலுறவு அமைச்சக அறிக்கை அழுத்தமளித்திருப்பது, இந்த வார்த்தைகளில் பொதிந்து கிடக்கும் பொருளென்ன என்று ஆழமாக சிந்திக்கத் தூண்டுகிறது.
முற்றிலும் மாறிவிட்ட அணுகுமுறை!
இலங்கை இனப் பிரச்சனை தொடர்பாக இதுவரை மத்திய (மன்மோகன்) அரசு கடைபிடித்துவந்த நிலையென்பது: போரினால் தீர்வு காண முடியாது. பேச்சுவார்த்தையின் மூலம்தான் நிலைத்த, நீடித்த அரசியல்ரீதியான தீர்வு காண முடியும் என்பது. ஆனால் அந்த நிலை மாறிவிட்டது என்பதையே அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி வெளியிட்ட தனித்த அறிக்கை காட்டுகிறது.
''I stressed that military victories offer a political opportunity to restore life to normalcy in the Northern Province and throughout Sri Lanka, after twenty-three years of conflict. The President assured me that this was his intent. We will work together with the Government of Sri Lanka to enable all Sri Lankans, and particularly the Tamil community who have borne the burnt of the effects of the conflict, to lead normal lives as soon as possible,'' the Minister said in the statement which was also released here by the External Affairs Ministry.
அதாவது, ““23 ஆண்டுகளாக நடந்த மோதலில் பெற்ற இராணுவ வெற்றிகள் வடக்கு மாகாணத்தில் இயல்பு வாழ்க்கையை நிலைநிறுத்தும் ஒரு அரசியல் வாய்ப்பை அளித்துள்ளதாக நான் வலியுறுத்தினேன். தனது எண்ணமும் அதுதான் என்று அதிபர் (ராஜபக்ச) கூறினார். சிறிலங்க அரசுடன் இணைந்து, போரினால் கடும் பாதிப்பிற்குள்ளான தமிழர்கள் உட்பட இலங்கையில் வாழும் அனைத்து மக்களும் இயல்பு வாழ்வைப் பெற விரைந்து பணியாற்றுவோம்” என்று பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார்.
இதுவரை இராணுவ நடவடிக்கைகள் தீர்வைத் தராது என்று கூறிவந்த நிலைமாறி, இராணுவ வெற்றிகள் வடக்கு மாகாணத்தில் இயல்பு வாழ்க்கையை நிலைநிறுத்தும் என்று கூறியுள்ளார். எந்த அடிப்படையில் இதனைக் கூறுகிறார் அமைச்சர் பிரணாப் என்று தெரியவில்லை. சிறிலங்க அரசிற்கும், அதன் இராணுவத்திற்கும் எதிரான போராட்டம் முறியடித்து பெறும் வெற்றி இயல்பு வாழ்வை (வடக்கில்) உறுதி செய்யுமா?
இதைத்தானே சிறிலங்க அதிபர் ராஜபக்சவும் கூறினார்! போர் நிறுத்த ஒப்பந்தத்தை தன்னிச்சையாக முறித்துக்கொள்ளும் அறிவிப்பை வெளியிடுவதற்கு முன்னர், “இராணுவ நடவடிக்கைகள் மூலம் அரசியல் தீர்வு காணும் வழி பிறந்துள்ளது” என்று ராஜபக்ச கூறினாரே? அதனை அன்றைக்கு எதிர்த்த மன்மோகன் அரசு, இன்றைக்கு ஏற்றுக் கொள்கிறதா?
அது மட்டுமா? போரினால் கடும் சீரழிவிற்கு உள்ளான வடக்குப் பகுதியின் மறுபுரணமைப்பிற்கும், உள்கட்டுமானம் உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்துவதற்கும் சிறிலங்க அரசுடன் இணைந்து பணியாற்றுவோம் என்று பிரகடனமே செய்துள்ளார் பிரணாப் முகர்ஜி. திரிகோணமலையில் இந்தியாவின் தேச அனல் மின் கழகம் அமைத்துவரும் 500 மெகா வாட் மின் நிலையம் பெருமையளிப்பதாகவும் கூறியுள்ளார்.
இதிலிருந்து புரிந்துகொள்ள முடிவது என்னவென்றால்: இலங்கையின் உள்நாட்டுப் பணிகளில் இந்தியா நேரடியாக இறங்கும். எப்படி ஆஃப்கானிஸ்தானில் அந்நாட்டு அரசின் ஒப்புதலுடன் எல்லைப் பகுதிகளில் சாலை அமைப்பது உள்ளிட்ட பல்வேறு உள்கட்டமைப்பு பணிகளில் இந்தியாவின் பொதுத் துறை நிறுவனங்கள் ஈடுபடுகின்றனவோ அதைப்போன்ற ஒரு பணி கூட்டாண்மையை சிறிலங்க அரசுடன் செய்துகொள்ள மன்மோகன் அரசு முடிவு செய்துள்ளது என்பதே.
இதற்கு தமிழர்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் பட்சத்தில் அதனை ஒடுக்க இந்தியா நேரடியாகவோ, மறைமுகமாகவோ உதவும். அது இராணுவத் தலையீடாகவும் ஆகலாம்.
ஆக போர் நிறுத்தம் செய்ய தமிழர்கள் விடுத்த வேண்டுகோளை பயன்படுத்திக்கொண்டு, தமிழர்களின் வாழ்வுரிமை உள்ளிட்ட அரசியல் அபிலாஷைகளை புறந்தள்ளிவிட்டு, தமிழனைத் தாண்டிய ஒரு உறவை சிறிலங்க அரசுடன் ஏற்படுத்திக் கொண்டுள்ளது மன்மோகன் அரசு.
அப்படியானால் தீர்வைப் பற்றி பேசியதெல்லாம் என்ன ஆனது என்ற கேள்வி எழுகிறதா? அதுதான் அறிக்கையில் கூறப்படுள்ளதே... இந்திய சிறிலங்க ஒப்பந்தத்தின்படி, 13வது அரசமைப்பு திருத்தத்தை நடைமுறைப்படுத்த உறுதி பெறப்பட்டுவிட்டதே!
தமிழினத்தின் தலைவர்களே, தமிழக. ஈழத் தமிழர்களே... என்ன செய்யப் போகிறீர்கள்?
Comments