மோசடி நாடகம் ஆடுகிறார் மகிந்த: வைகோ குற்றச்சாட்டு

முல்லைத்தீவில் இருந்து மக்கள் வெளியேறுவதற்கு சிறிலங்கா அரசாங்கம் அறிவித்திருக்கும் 48 மணிநேர காலக்கெடுவானது ஒரு மோசடி நாடகம் என மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் வைகோ குற்றசம் சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக இன்று வெள்ளிக்கிழமை வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது:

"இலங்கையின் முல்லைத்தீவு பகுதியில், ஐந்தரை லட்சம் தமிழ் மக்கள் சிறிலங்கா இராணுவத்தின் இடைவிடாத வான் தாக்குதலுக்கும், ஏவுகணைத் தாக்குதலுக்கும் உள்ளாகி, ஆயிரக்கணக்கில் கொல்லப்படும் கொடுமையைத் தடுக்க வேண்டும் என்பதற்காக, ஐக்கிய நாடுகள் சபை தாக்குதலை நிறுத்தும்படிக் கூறியது.

'பாதுகாப்பான பகுதி' என்றும், அங்கு தாக்குதல் நடைபெறாது என்றும் சிங்கள அரசு அறிவித்ததை நம்பி, அந்தப் பகுதிக்குச் சென்ற தமிழ் மக்கள், பெண்கள், குழந்தைகள் உள்பட 800 பேர்களை சிங்கள இராணுவம் தாக்கிக் கொன்றது. அதனை அடுத்து, அரசின் நலன்புரி நிலையங்களில் தஞ்சம் புகுந்த தமிழர்களுள், இளைஞர்கள் பிரித்து எடுக்கப்பட்டு, காடுகளுக்கு வாகனங்களில் ஏற்றிக்கொண்டு சென்று, அங்கே சுட்டுக்கொன்று உள்ளனர்.

இளம்பெண்களைத் தனியாகப் பிரித்து, அவர்களைப் பாலியல் கொடுமைக்கு ஆளாக்கிக் கற்பழித்து, அதன்பிறகு, அவர்களை உயிரோடு எரித்துக் கொன்றனர். தமிழர்களின் இளந்தலைமுறையை, பிள்ளைகளைக் கொன்று ஒழித்து தமிழ் இனத்தையே அழிக்க ராஜபக்ச அரசு திட்டமிட்டு இருப்பது நன்றாகத் தெரிகிறது.

லட்சக்கணக்கான தமிழ் மக்களுக்கு உணவு இல்லை. காயம்பட்டுக் கிடப்பவர்களுக்கு மருத்துவ உதவிகள் இல்லை; மருந்துகள் இல்லை என்று ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் சிறிலங்கா அரசுக்குக் கண்டனம் தெரிவித்து உள்ளார்.

எனவே, உலக நாடுகளை ஏமாற்றுவதற்காக, இரண்டு நாட்களுக்கு இராணுவத் தாக்குதலை நிறுத்துவதாக சிங்கள அரசு அறிவித்து உள்ளது. இராணுவத் தாக்குதலை மேலும் கொடூரமாகத் தீவிரப்படுத்துவதற்காகவே, சிங்கள அரசு மோசடி நாடகம் நடத்துகிறது.

2001 டிசம்பரில், நத்தார் பண்டிகையை முன்னிட்டு, 30 நாட்களுக்குப் போரை நிறுத்துவதாக முதலில் விடுதலைப் புலிகள் தாம் அறிவித்தனர். அதனை, மேலும் 30 நாட்களுக்கு நீட்டித்த பின்னரே, நோர்வே உள்ளிட்ட உலக நாடுகள் வலியுறுத்தலால், சிறிலங்கா அரசு போர் நிறுத்தம் அறிவித்தது.

ஆனால் அந்தப் போர் நிறுத்தத்தை முறிப்பதாக, கடந்த ஆண்டின் தொடக்கத்தில் சிறிலங்கா அரசுதான் அறிவித்தது. தற்போதும், போர் நிறுத்தத்துக்குத் தயார் என்று இரண்டு மாதங்களுக்கு முன்பே விடுதலைப் புலிகள் அறிவித்து இருந்தபோதிலும், சிறிலங்கா அரசு அதை ஏற்கவில்லை.

போரை நிறுத்த வேண்டும் என்று இதுவரையிலும் இந்திய அரசு கேட்கவே இல்லை. எனவே, சிறிலங்கா அரசின் இந்த அறிவிப்புக்கு இந்தியா காரணம் அல்ல.

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளரின் கண்டனம்தான், தற்போது சிங்கள அரசின் அறிவிப்பு ஆகும். ஆனால், அதுவும் உலகை ஏமாற்றுவதற்காகவே!

நிபந்தனை அற்ற நிரந்தரப் போர் நிறுத்தம் செய்வதாக சிங்கள அரசு அறிவித்தால் அன்றி, தற்போதைய அறிவிப்பு சிங்கள அரசு நடத்தும் தமிழர் இன அழிப்புப் போரை மேலும் தீவிரப்படுத்துவதற்கும், உலக நாடுகளை ஏமாற்றுவதற்கும் செய்யப்பட்டு உள்ள அறிவிப்பு ஆகும்.

இந்த நயவஞ்சக அறிவிப்பைக் கேட்டுத் தமிழர்களும், உலக நாடுகளும் ஏமாந்துவிட வேண்டாம்! என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



Comments