இலங்கையின் ரத்தக் கண்ணீர் என்று இலங்கைத் தமிழர்களின் நிலையைப் பற்றி 1983-லேயே இரா.செழியன் எழுதியிருக்கிறார். தமிழர்களின் அந்த ரத்தக் கண்ணீர், இன்றைக்கு ரத்தக் கடலாக ஓடிக் கொண்டிருக்கிறது'' என்று `சமுதாய நீதியில் அரசியல் அடிப்படை' என்ற இரா.செழியனின் நூல் வெளியீட்டு விழாவில் கண்கள் கசிந்தார், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய கட்டுப்பாட்டுக் குழு உறுப்பினர் ஆர்.நல்லகண்ணு.
கிளிநொச்சியைக் கைப்பற்றிய திமிரில் வன்னி தர்மாபுரம் பகுதியில் சிங்களப் பேரினவாத ராணுவம் நடத்திய கிளஸ்டர் குண்டுத் தாக்குதலில் ஒரு கைக் குழந்தை உள்பட ஏழு பேர் பலியாகியிருக்கிறார்கள். இந்தச் சூழ்நிலையில், இலங்கைத் தமிழர்களின் நிலை கண்டு நூல் வெளியீட்டு விழாவில் மனம் நொந்து பேசிய நல்லகண்ணுவைச் சந்தித்தோம்.
``இலங்கையில் அந்த மண் தோன்றிய காலத்தில் தோன்றிய, அந்த மண்ணுக்குச் சொந்தமான பூர்வீகக் குடிமக்களான தமிழர்களை அழிக்கும் முயற்சியில் இலங்கை ராணுவம் ஈடுபட்டிருக்கிறது. இதில் பிரபாகரனா? விடுதலைப்புலிகளா? என்கிற பேச்சுக்கு இடமே இல்லை. நம்மைப் போல் தமிழ் பேசும் மக்கள் கொல்லப்படுவதைத் தடுக்க வேண்டும் என்பதுதான் அவசர, அவசியம்.
`கிளிநொச்சியைப் பிடித்துவிட்டோம்' என்கிறார்கள். அப்படியென்றால் அங்கு நடப்பது போர் என்பது உறுதியாகிவிட்டது. அதுவும், தமிழ் மக்கள் மீதான போர். இலங்கையின் இந்தப் போரினால் பாதிக்கப்பட்டு, உலகம் முழுவதும் ஐந்து கண்டங்களில் பல ஆண்டுகளாக தமிழ் மக்கள் புகலிடம் தேடி தஞ்சம் புகுந்துள்ளனர். இந்தியாவில் உள்ள ஏழு கோடித் தமிழர்களும், உலகத் தமிழர்களும் அண்டை நாடான இலங்கையில் தமிழர்கள் மீதான போரை நிறுத்த இந்திய குடியரசுக்குக் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.
சார்க் பிரதேசங்களில் அமைதி ஏற்பட, இந்திய அரசு தலையிட்டே ஆக வேண்டிய நிர்ப்பந்தம் உண்டாகியிருக்கிறது. இந்திய அரசோ, அந்த முயற்சியைச் செய்யத் தவறிவிட்டது; தயக்கம் காட்டுகிறது. இதன் மூலம், நேரு பாரம்பரியத்துக்கு எதிரான விரோதமான போக்கை இந்திய அரசு கடைப்பிடிக்கிறது. அரசியல் நேர்மையை இழந்து விட்டது'' என்றவரிடம், `அது என்ன நேரு பாரம்பரியம்?' என்று கேட்டோம்.
``1960-ம் ஆண்டு மார்ச் மாதம் சார்ப்வில்லா, லங்கா நகரமைப்பு ஆகிய இடங்களில் காவல்துறையினரால் சுடப்பட்டு இறந்த ஆப்பிரிக்கர்களுக்கு இந்திய நாடாளுமன்ற அவையில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. அப்போது இந்தப் பிரச்னையை உள்நாட்டுப் பிரச்னையாக ஏற்று, ஒதுக்கிவிட பண்டித நேரு மறுத்தார். காரணம், உலகத்தில் எந்த நாட்டிலும் ஜனநாயகத்துக்கு விரோதமான நிலை உருவானால், அதைத் தடுத்து நிறுத்த வேண்டியது ஒரு நாட்டின் கடமை. ஆனால், `இலங்கை உள்நாட்டு விவகாரத்தில் தலையிட மாட்டோம்' என்று கூறிக் கொண்டே இந்திய அரசு, இலங்கைக்கு ராணுவ உதவிகளைச் செய்து வருவது வேதனையாக இருக்கிறது.
மும்பையில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளைக் கண்டித்து பாகிஸ்தான் மீது போர் தொடுக்க வேண்டும் என்று அமெரிக்காவின் வெளியுறவுத்துறை அமைச்சர் காண்டலிஸாரைஸ் இந்தியாவை வற்புறுத்தி வருகிறார். போர் தேவையா? இல்லையா? என்பது ஒருபக்கம் இருக்கட்டும். ஆனால் அதே பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகளோடு கைகோத்துக் கொண்டு இந்திய ராணுவ அதிகாரிகள் கிளிநொச்சியைப் பிடிக்க இலங்கை ராணுவத்துக்கு வியூகம் அமைத்துக் கொடுக்கிறார்களே, இது எந்த வகையில் நியாயம்? பாகிஸ்தான்-இந்தியாவுடன், இங்கிலாந்து, அமெரிக்கா, ஜப்பான், பங்களாதேஷ், மாலத்தீவு ஆகிய ஏழு நாட்டு ராணுவ அதிகாரிகளும் கூட்டுச் சேர்ந்த செய்தியே வேதனையாக இருந்தது.
கடந்த ஆகஸ்ட் மாதம் தமிழக சட்டப் பேரவையில் இலங்கையில் போர் நிறுத்தத்தை வலியுறுத்தி, எதிர்க்கட்சிகள் இசைவுடன் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நவம்பர் மாதமும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் இதே தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, டிசம்பர் நான்காம் தேதி அனைத்துக் கட்சிக் குழுவினர்களுடன் டெல்லி சென்ற முதல்வர், பிரதமரைச் சந்தித்தார். அப்போது அயலுறவுத் துறை அமைச்சர் பிரணாப்முகர்ஜியை இலங்கைக்கு அனுப்பி, போர் நிறுத்தம் பற்றி பேசுவதாக அறிவித்தது, மத்திய அரசு. ஒரு மாதத்துக்கு மேலாகியும், பிரணாப் முகர்ஜி இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படவில்லை. காரணம் கேட்டால், `அழையா விருந்தாளியாக அவரை அங்கு அனுப்ப முடியாது' என்கிறார், மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு.
பிரணாப் முகர்ஜி என்ன விருந்து சாப்பிடவா அங்கு போகிறார்? செத்துக் கொண்டிருக்கும் தமிழ் மக்களைக் காப்பாற்றத்தானே போகச் சொல்கிறோம். இங்கிருந்து 18 கிலோ மீட்டர் தொலைவு; விமானத்தில் அரை மணி நேரப் பயணம். இருந்தும் தமிழர்களைக் காப்பாற்ற இலங்கைக்குப் போக முடியாது என்கிறார்கள்.
உண்மையில் இந்திய அரசை இலங்கை அரசு மதிப்பதே இல்லை. கச்சத்தீவு ஒப்பந்தப்படி அங்கு மீன் வலைகளை உலர்த்தவும், ஓய்வெடுக்கவும், அந்தோணியர் ஆலயத்துக்குப் போய் வரவும் இந்திய மீனவர்களுக்கு உரிமை உண்டு. ஆனால், நடப்பது என்ன? இதுவரை இந்திய மீனவர்கள் 400 பேரை இலங்கை கடற்படை சுட்டுக் கொன்றிருக்கிறது. நேற்றுக் கூட பதினொரு மீனவர்களைத் தாக்கியிருக்கிறார்கள். இலங்கை அரசின் இந்தத் துணிச்சலுக்கு இந்திய அரசின் போக்குதான் காரணம்.
அமெரிக்கா, பாகிஸ்தான் என்று உலக நாடுகளுடன் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டு இந்தியாவைத் தனிமைப்படுத்தும் முரண்பட்ட போக்கை இலங்கை அரசு கடைப்பிடித்து வருவதையும் கவனிக்க வேண்டிய நேரமிது.
எனவேதான் கச்சத்தீவு ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் நாடாளுமன்றத்தில் வலியுறுத்தியது. பல்வேறு இனம், மொழி, மக்கள் வாழும் இந்தியாவில் எந்தப் பாரபட்சமும் இல்லாத ஆட்சி நடக்கிறது. ஆனால், இலங்கையில் மூன்றில் ஒரு பங்கு உள்ள தமிழர்களின் நிலையைப்பற்றி சொல்லி மாளாது. அங்குள்ள, அரசுத்தேர்வுகளில் சிங்களவர்களைவிட தமிழர்கள் கூடுதல் மதிப்பெண்கள் பெற வேண்டும் என்கிற பாரபட்சம் முதன்மையானது. யாழ் நூலகத்தைத் தீயிட்டுக் கொளுத்திய இலங்கை அரசு, திட்டமிட்டே தமிழர்களுக்கு எதிரான இனப் படுகொலையைச் செய்து வருகிறது'' என்றவரிடம், `அப்படியென்றால், பிரபாகரனின் தமிழீழப் போராட்டத்தை கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆதரிக்கிறதா?' என்றோம்.
``இலங்கையில் தமிழர்கள் கொன்றொழிக்கப்பட்டு வரும் நிலையில், பிரபாகரனை மையப்படுத்திப் பேசுவது தேவையற்றது. இப்போதைய உடனடித் தேவை, தமிழ் மக்கள் மீதான போர் நிறுத்தம். கிறிஸ்துமஸ் பண்டிகை நாளன்று கூட தமிழர்கள் வழிபாடு நடத்தும் தேவாலயங்களில் தாக்குதல் நடத்தியது, இலங்கை ராணுவம். புலிகளின் அரசியல் பிரிவுத் தலைவர் நடேசனும், `போரைத் தவிர்த்து, அரசியல் தீர்வு வேண்டும்' என்றே கூறியிருக்கிறார். எனவே, அண்டை நாட்டில் நம்மொழி பேசும் தமிழர்களைப் பாதுகாக்க வேண்டிய தார்மீகப் பொறுப்பு நமக்கிருக்கிறது என்பதை மறுக்க முடியாது'' என்று சொல்லி முடித்தார் தோழர் நல்லகண்ணு.
படம்: ஞானமணி
Comments