‘தாய்ச்சமர்’ முடிந்துவிட்டாதா!

விடுதலைப்புலிகளுக்கு எதிரான போரில் ‘தாய்ச்சமர்’ அதாவது இறுதிப் பெரும் போர் முடிவடைந்துவிட்டது என்ற ஒரு நிலை சிறிலங்கா அரசாங்கதரப்பாலும், படைத்தரப்பாலும் மேற்கொள்ளப்பட்டுவரும் பிரச்சாரம் மூலம் வெளிப்படுத்துவதாய் உள்ளது.

இத்தகையதொரு பிரசாரத்திற்கு கிளிநொச்சிக்கு அரசாங்கதரப்பால் கொடுக்கப்பட்டு அந்தப் பிரசார ரீதியிலான முக்கியத்துவமும், கிளிநொச்சிக்காகப் படைத்தரப்பில் கொடுக்கப்பட்ட விலையும் காரணமாகஇருக்கலாம். அதவாது விடுதலைப்புலிகளின் அரசியற் தலைநகரம் எனவும் தமிழீழத் தேசியத்தலைவர் வே.பிரபாகரன் அவர்கள் கிளிநொச்சியில் தங்கியுள்ளதாகவும், செய்யப்பட்ட பிரசாரமும் கிளிநொச்சிவீழ்ந்துவிட்டால் புலிகள் வீழ்ந்துவிட்டதான பிரசாரமும் கூட இதற்குக் காரணமாக இருக்கலாம். இதேசமயம் கிளிநொச்சிக்காகப் படைத்தரப்பு கொடுத்துவிட்ட அதிகவிலையும் அதற்குக் காரணமாக அமைந்திருத்தல்கூடும். அதாவது கொடுத்தவிலை அதிகமாகையால் அதற்கான முக்கியத்துவம் விலையின் அளவிற்கு உயர்த்தப்படுதல் வேண்டும் என்பதாகும்.

தற்பொழுது அரச தரப்பால் கூறப்படும் தகவல்களின் படியே கிளிநொச்சிக்கான சமரில் 3000 துருப்புக்கள் கொல்லப்பட்டும் 12,000 இற்கும் அதிகமான துருப்புக்கள் காயமடைந்துள்ளனர். ஆனால் இத்தொகையானது நிச்சயமாக இதனைவிட அதிகமானதாகும்.

ஏனெனில் இராணுவத்தினரின் இழப்புக் குறித்துத் தகவல்வெளியிட்டவர் பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளர் அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல ஆகும். இவர் இன்று சிறிலங்கா அரசதரப்பிலுள்ள அதியுச்சமாகப் பொய்பேசுவதில் பெயர் பெற்றவர். இராணுவத்தினரின் காயங்கள் குறித்துப் பேசியிருப்பவர் இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் சரத்பொன்சேவா ஆகும். அவர் இன்று அரசியல் ரீதியில் அபிலாசை கொண்டு செயற்பட்டு வருபவர். ஆகையினால் அவரின் பேச்சிலும் உண்மை வெளிவரமாட்டாது. மேலும் இராணுவத்தினரின் காயம் குறித்து தகவல் வெளியிட்ட அவரால், கொல்லப்ட்ட படையினரின் எண்ணிக்கை தெரிவிக்கப்பட்டதாக இல்லை. ஏனெனில் இராணுவ இழப்பு அதிகமானதே காரணமாகும். இத்தகைய அதிகரித்த விலையும் ஆளும் கட்சியின் அரசியல் தேவைகளுக்குமான பிரசாரமுமாக கிளிநொச்சி ஆக்கிரமிப்புத் தொடர்பான பிரசாரம் உச்சகட்டத்தை அடைந்ததோடு வெற்றி குறித்துப் பெரும் கொண்டாட்டங்களும் நடத்தப்பட்டன. இதன் உச்சமாகவே சமர்களுக்கெல்லாம் “தாய்ச்சமர்” அதாவது இறுதிப்பெரும் சமர் முடிந்துவிட்டதான பிரசாமும் முன்னெடுக்கப்பட்டது.

இதன் வெளிப்பாடாக சிறிலங்காப் படைத்தரப்பிலும் சில தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டன. சுருக்கமாகச் செல்லப்போனால், கடந்த ஆண்டில் நிறுத்தப்பட்ட யுத்தத்தை முடிவிற்குக் கொண்டுவருவதான காலக்கெடு விதித்தல் குறித்த பேச்சு முன்னைப்புப் படுத்தப்பட்டது. இதன் அடிப்படையில் யுத்தத்தை முடிவிற்குக் கொண்டுவர இன்னமும் ஓராண்டு தேவையில்லை என்பது இராணுவத்தரப்பின் பேச்சாக மாறியிருந்தது. இராணுவத்தளபதி சரத்பொன்சேகா இவ்வாண்டின் இறுதிக்குள் யுத்தம் முடிவிற்கு வந்துவிடும் எனத்தெரிவித்தார். ஆனால், இராணுவ உயர் அதிகாரி ஒருவரின் அபிப்பிராயப்படி, விடுதலைப்புலிகள் ஏப்ரல் மாதத்திற்குள் தோற்கடிக்கப்பட்டு விடுவார்கள் என்பதாக இருந்தது.

இதேவேளை அரசாங்கத்தரப்பில் சிலரது அபிப்பிராயப்படி, பெப்ரவரி மாத நடுப்பகுதிக்குள் யுத்தம் ஒருகட்டத்தை – அதாவது இறுதிக்கட்டத்தை அடைந்துவிடும் என்பதாகவுள்ளது. இத்தகைய பெப்ரவரிமாத காலநிர்ணயத்திற்கு பெப்ரவரியில் வரும் சிறிலங்காவின் சுதந்திரதினக் கொண்டாட்டமும், பெப்ரவரியில் வரும் இரண்டு மாகாணசபைத் தேர்தல்களும் காரணமாக இருத்தல் கூடும். சிறிலங்காப் படைத்தரப்பினரதும் ஆளும் தரப்பினரதும் இத்தகைய பேச்சுக்களுக்கு கிளிநொச்சி கைப்பற்றப்பட்டதான பின்னர் ஏற்பட்டதான சற்று விரைவான முன்னேற்றமும் காரணமாக இருக்கலாம்.

அதாவது ஆனையிறவை இராணுவம் சென்றடைந்ததாகவும் தருமபுரம்வரையில் முன்னேறியுள்ளமையும் இதற்கு ஆதாரமளிப்பவையாக இருந்தன இதேசமயம் இராணுவத்தின் குறிப்பிடத்தக்கதான வேகமான நகர்வுகள் சில நெருக்கடிகளைத் தோற்றுவித்துள்ளது என்பது உண்மைதான் மக்கள் பாதுகாப்பான இடங்களைத் தேடிக்கொள்வதில் உள்ள நெருக்கடி, விடுதலைப்புலிகளின் நகர்வுகளில் ஏற்படத்தக்கதான தாமதம் என்பன தவிர்க்கப்படமுடியாதவையாகவே உள்ளன.

ஆனால், இவை எவையும் சமர்களுக்கெல்லாம் ‘தாய்ச்சமர்’ இறுதிப்பெரும் சமர்முடிந்துவிட்டதாக அர்த்தப்பட்டுவிட்டுவிடுமா?

அன்றிவிடுதலைப்புலிகள் பலம் இழந்துவிட்டதாக அதாவது போரிடும் ஆற்றலை இழந்துவிட்டதாக அர்த்தப்படுமா?

என்பது கேள்விக்குரிய விடயங்களே ஆகும்.

சிறிலங்கா இராணுவம் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் இருந் த பெரும் நிலப்பரப்பைத் தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துள்ளதென்பது உண்மைதான். இவை விடுதலைப்புலிகளுக்கு சில பாதகமான சூழ்நிலையைக் கொண்டது என்பது நிராகரிக்கப்பட முடியாதவையே. ஆனால், இவ்வாறான அனுகூலங்கள் இருக்கின்றபோதும் கேட்கத்தக்கதான ஒரு சில முக்கிய கேள்விகள் இருக்கவே செய்கின்றன.

இதில் ஒன்று விடுதலைப்புலிகள் பலம் இழந்துபோய்விட்டனரா? என்பதும் சிறிலங்கா இராணுவத்தால் ஆக்கிரமித்துக்கொண்டுள்ள இடங்களைத் தக்கவைத்துக் கொள்ளமுடியுமா? என்பதுமான இரண்டு இன்று முக்கியமான கேள்விகளாகும்.

2006 ஆம் ஆண்டின் மத்தியில் இருந்து இராணுவம் விடுதலைப்புலிகள் மீது பாரிய தாக்குதல்களை மேற்கொண்டுவருகின்றது. சிறிலங்காப் படைத்தரப்பு வெளியிடும் புலிகளின் இழப்புக்குறித்த தகவலானது கற்பனைக்கும் அதிகமானது. அதாவது 20,000 இற்கும் அதிகமான புலிகள் இவ் இரண்டரை ஆண்டில் கொல்லப்பட்டுள்ளனர் என்பது இராணுவத்தரப்புத் தகவலாகும்.

சிறிலங்கா இராணுவத்தரப்பின் தகவல்கள் உண்மையானால் இதுவரையில் குறைந்தது 30,000 விடுதலைப் புலிகள் களத்தில் இருந்து வெளியேறியிருந்தல் வேண்டும். ஆனால், சிறிலங்காப் படைத்தரப்பின் மதிப்பீட்டின்படி யுத்தம் ஆரம்பிக்கப்பட்ட போது சுமார் 6000 வரையிலான புலிகளே இருந்துள்ளனர். இப்புள்ளிவிபரக் கணக்கை ஓரம் தள்ளிவிட்டு நிலைமையை கவனத்திற்கொண்டால் விடுதலைப்புலிகள் இன்னமும் மரபுவழியில் போரிடும் ஆற்றல் கொண்டவர்களாகவே உள்ளனர்.

அதாவது இரண்டரை வருடப்போரின் பின்பும் சில கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பிரதேசங்கள் உட்பட பல பிரதேசங்களை இழந்துள்ள போதும் அவர்கள் மரபு வழிப்படையணியாகப் போரிடும் ஆற்றல் பெற்றவர்களாகவே உள்ளனர்.


பொதுவில் ஒரு மரபுவழிப் படையணி – தனது பலத்தை இழக்கவேண்டுமானால், அதன் ஆளணியில் பெரும் வீழ்ச்சி ஏற்படுதல் வேண்டும். அதாவது அதன் படையணியில் குறிப்பிடத்தகதான வீதம் அழிக்கப்படுதல் வேண்டும். அன்றிக் கைதுசெய்யப்படுதல் வேண்டும். ஆனால் விடுதலைப்புலிகளின் படையணிகளில் அத்தகைய இழப்புக்களோ முடக்கங்களோ ஏற்பட்டதாக இல்லை.

அடுத்ததாக மரபுவழிப் படையணிகளின் ஆயுததளவாடங்கள் பெருமளவில் அழிக்கப்பட்டோ, கைப்பற்றப்பட்டோ இருத்தல் வேண்டும் ஆனால் சிறிலங்கா இராணுவத்தரப்பால் இது மேற்கொள்ளப்பட்டதாக இல்லை. சுருக்கமாகச் சொல்லப்போனால், புலிகளின் ஆட்லறிப் பீரங்கிகள் உட்பட்டதான கனரக ஆயுதங்கள் கைப்பற்றபட்டோ அன்றி அழிக்கப்பட்டோ இருத்தல் வேண்டும்.

அதாவது கனரக ஆயுதங்களின் செயற்பாட்டை முடக்கத்திற்குள்ளாக்க சிறிலங்காத் தரப்பர் முடியவில்லை. இத்தகையதொரு நிலைக்கு விடுதலைப்புலிகளால் படையணிகள் களமுனையில் இராணுவத்தினரின் நகர்விற்கு எதிராகப் பின்வாங்கி ஓடுதல் - அதாவது ஆயுததளவாடங்களை கைவிட்டுத் தப்பியோடுதல் வேண்டும். ஆனால் இதுவரையில் அவ்வாறு களமுனைகளில் புலிகள் அனைத்தையும் கைவிட்டு ஓடியதாகவும் தகவல் இல்லை.

அதாவது விடுதலைப்புலிகள் களமுனைகளிலிருந்து வெளியேறியிருக்கலாம். இது பின்வாங்கலாகக் கொள்ள முடியுமேயொழிய தோற்றோடியதாக் கொள்ளமுடியாது.

கிளிநொச்சியில் கூட இதுவே நடந்தது. கிளிநொச்சியில் இராணுவத்தினருக்கு பெருமளவு ஆளணி இழப்பை ஏற்படுத்திய விடுதலைப்புலிகள் இறுதியாக தளத்தைக் கைவிட்டு பின்வாங்கியே இருந்தனர். அடுத்ததாக மரபுவழிப் படையணியை முடக்கத்திற்குள்ளாக்காததினால் அதன் விநியோகத்தைத் துண்டித்தல் வேண்டும். ஆனால் தற்பொழுது சிறிலங்காப் புலனாய்வுத் தகவல்களின் அடிப்படையில் விடுதலைப்புலிகளுக்கான விநியோகங்கள் துண்டிக்கப்பட்டதாக இல்லை. இதனை களநிலவரங்களும் நிரூபிப்பதாகவே இராணுவ ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இத்தகையதொரு நிலையில், தற்பொழுது எழும் கேள்வியானது சிறிலங்காவின் இராணுவத்தரப்பும், அரசதரப்பும் கூறிக்கொள்வதுபோன்று சமர்களுக்கெல்லாம் தாய்ச்சமர் முடிந்துவிட்டதான தொனியில் பிரச்சாரம் செய்வதும், விடுதலைப்புலிகளை இராணுவ ரீதியில் தோற்கடிக்கத்தககதான காலம் நெருங்கிவிட்டதா எனப் பிரச்சாரம் செய்வது எத்தகைய பொருத்தப்பாடு உள்ளது என்பதே பல இராணுவ விமர்சகர்களும், இராணுவ ஆய்வாளர்களும் விடுதலைப்புலிகளை இராணுவ ரீதியில் தோற்கடித்துவிட முடியாது என்பதற்கு விடுதலைப்புலிகள் இயக்கம் 30 வருடகாலப்போராட்ட அனுபவமும், உலகில் இறுக்கமான கட்டமைப்பைக்கொண்ட ஒரு அமைப்பாகவும் கெரில்லாப் போரில் பெரும் அனுபவமும் கொண்ட அமைப்பாகவும் உள்ளதெனக் கூறுவதுண்டு.

ஆனால், இத்தகைய அபிப்பிராயமும் ஆருடங்களும் எவராலும் பரிசீலிக்கப்படுவதற்கு முன்பதாக தாய்ச்சமர் அதாவது இறுதிப்பெரும் சமர் முடிவடையவில்லை எனபதையும் விடுதலைப்புலிகள் மரபுப் படையணியாகப் போரிடும் ஆற்றலை இன்னமும் இழக்கவில்லை என்பதையும் புரிந்துகொள்ளவேண்டும்.

அடுத்ததாக விடுதலைப்புலிகள் இராணுவரீதியில் தோற்கடிக்கப்படத்தகதான சூழ்நிலை இன்னமும் உருவாகவில்லை என்பதையும் - சிறிலங்கா இராணுவத்தின் படைநகர்வுகளை முறியடிக்கும் வகையில் சக்திகொண்டவர்களாக அவர்கள் உள்ளார்கள் என்பதையும் விளங்கிக்கொள்ளுதல் வேண்டும்.

அதாவது கெரில்லாப் பாணியிலான நடவடிக்கைக்குப் புலிகள் செல்லும் நிலை இன்னமும் உருவாகிவிடவில்லை என்பதாகும். ஆகையினால், சிறிலங்காப் படைத்தரப்புக் கூறிக்கொள்வதுபோல், விடுதலைப்புலிகள் வலுவிழந்த அமைப்பாகவோ அன்றி முடக்கத்திற்கு உள்ளாகிவிட்ட அமைபாகவோ இல்லை.


மாறாகக் களமுனையில் மாற்றத்தை ஏற்படுத்தத் தக்கதானதொரு அமைப்பாகச் சிறிலங்கா இராணுவத்தின் நகர்வை எதிர்கொண்டு போரிடத்தக்கதான வலுமிக்கதானதொரு அமைப்பாகவுமே இன்றும் அதுவுள்ளது.

சுருக்கமாகச் சொல்லப்போனால் சிறிலங்காப் படைத்தரப்பினதும் அரச தரப்பினதும் எதிர்பார்ப்பிற்கும் படைத்தரப்பினதும் அரச தரப்பினதும் எதிர்பார்ப்பிற்கும், தீர்மானங்களுக்கும் ஏற்ப யுத்தம் இடம்பெற்றுவிடும் என்றோ யுத்தத்தின் போக்கு அமையும் என்றோ கொள்வதற்கில்லை. யுத்தத்தின் போக்கில் மாற்றங்களும், திருப்பங்களும் ஏற்படுத்தும் சக்தியை விடுதலைப்புலிகள் இன்னமும் கொண்டேயுள்ளனர் என்பதே களமுனையதார்த்தம் நிரூபிப்பதாய் உள்ளது.

- ஜெயராஜ் -

தமிழ்க்கதிர்



Comments