இராணுவ வெற்றிக்குப் பின்னைய அரசியல் தீர்வை ஒருபோதும் தமிழ் மக்களால் ஏற்கவே முடியாது: மனோ கணேசன்

சிறிலங்கா படையினரின் இராணுவ வெற்றிக்குப் பின்னைய அரசியல் தீர்வை தமிழ் மக்கள் ஒருபோதும் ஏற்றுக் கொள்ளவே முடியாது என்று மேலக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையின் தமிழ் வடிவம்:

இனப்பிரச்சினைக்கான அடிப்படைக்காரணமும் அதனடிப்படையில் எழுந்த ஆயுதப் போராட்டமும் முடிவுக்கு வரும்போது நாங்கள் கூடத்தான் வெடி கொழுத்தி கொண்டாடுவோம். இப்போதைய தேவையே கௌரவமான அமைதித் தீர்வுதான். ஆனால் அதனின்று நாம் வெகுதொலைவில் உள்ளோம்.

21 ஆண்டுகளாகியும் 13 ஆவது அரசியல் யாப்பு திருத்தம் நடைமுறைக்கு வரவில்லை என்பது வரலாறு.

இராணுவ வெற்றிக்குப் பிந்தைய அரசியல் தீர்வு என்பது தமிழ் மக்களாலும் அனைத்துலக சமூகத்தாலும் ஏற்கப்படக்கூடியது அல்ல.

அதே நேரத்தில் சிங்கள இனம் தமிழ் மக்களை வெற்றி கொண்டதாக இந்த வெற்றியை அர்த்தப்படுத்த வேண்டாம் என்று மகிந்த ராஜபக்ச கூறியிருப்பதை வரவேற்கிறோம். ஆனால் இந்த கருத்துக்கள் நடைமுறைகளில் ஒத்துப் போக வேண்டும்.

வடபகுதியில் இன்று போர்க் களமாகி உள்ளதால் கிழக்குப் பகுதி அரசியல் போர்க்களமாகியிருக்கிறது.

நீங்கள் உங்கள் சொந்த மாகாண சபையை வைத்திருக்கின்றீர்கள். இது அரசியல் தீர்வு அல்ல. இது அரசியல் யாப்பின் ஒரு பகுதியாகும். அரசியல் யாப்பு திருத்தம் 13 ஆவது பிரிவைக் கூட நடைமுறைப்படுத்தவில்லை.

உங்களால் உருவாக்கப்பட்ட முதலமைச்சர் சந்திரகாந்தன் மற்றும் அமைச்சர் ஹிஸ்புல்லாவின் கருத்துக்களைக் கூட கேட்கவில்லையே.

பேராசிரியர் திச விதாரனவின் அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் குழுவின் கடையை நீங்கள் மூடிவிட்டீர்கள்.

ஒட்டுமொத்த இராணுவ வெற்றிக்குப்பின்னைய அரசியல் தீர்வை தமிழ் மக்கள் ஒருபோதும் ஏற்க முடியாது. அனைத்துலக சமூகத்தைக் கூட இது திருப்திபடுத்தாது. இதுவே கடினமான உண்மையும் ஆகும் என்று அவர் கூறியுள்ளார்.



Comments