தமிழனை மீட்கும் ஆண்டு




பல இன்னல்களையும், நெருக்கடிகளையும் தந்த ஆண்டாக 2008ஆம் ஆண்டு கடந்து 2009 என்னும் புதிய ஆண்டில் தடம்பதித்திருக்கிறோம். இந்த புதிய ஆண்டு பெரும்பாலும் தமிழர்களுக்கு ஒரு நிரந்தரத் தீர்வைப் பெற்றுத்தரும் ஆண்டாக அமையும் என பல்வேறுபட்ட தரப்பினராலும் எதிர்பார்க்கப்படுகின்றது. இது எந்தளவிற்கு சாத்தியப்பாடானதாக அமையும்? அவ்வாறு சாத்தியப்பாடானாலும் அது எந்தவகையில் அமையும்? என்ற கேள்விகள் எழுகின்றன.

தற்பொழுது உலகமெங்கும் இருக்கும் கண்களும் உற்றுப் பார்த்துக் கொண்டிருக்கும், எமது விடுதலைப் போராட்டம் உச்சக்கட்ட நிலையை எட்டியிருக்கும் இந்த நிலையில், தமிழ் மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு ஓரணியில் சேர்ந்திருக்கும் இன்றைய காலத்தில் தமிழ் மக்கள் இவ்வளவு காலமும் எதிர்பார்த்திருந்த ‘தமிழீழத் தாயகம்' மலரும் என்ற நம்பிக்கை பிறந்திருக்கிறது.

சிறிலங்கா இராணுவம் தமிழர் தாயகத்தின் பல பகுதிகளையும் வல்வளைப்புச் செய்து தற்பொழுது கிளிநொச்சி நகரிலும் முல்லைத்தீவு நகரங்களின் விளிம்புகளிலும் வியகமிட்டு நிற்கின்றன. சிறிலங்காத் தரைப்படைக்கு ஆதரவாக சிறிலங்கா விமானப்படையினரும், கடற்படையினரும் தமது பங்களிப்புக்களை முழுமையாக வழங்கிக் கொண்டிருக்கின்றனர்.

இராணுவத்தரப்பிலும் அதிதீவிர முயற்சிகளும் உச்ச வளப்பயன்பாடும் செலுத்தப்பட்டுக்கொண்டே இருக்கின்றன. இவ்வாறு சிறிலங்கா அரசதரப்பு அனைத்தும் போருக்கே என்ற நோக்கோடு செயலாற்றுகின்ற போதும் அதன் நோக்கமும், பெறுகின்ற விளைவுகளும் எவ்வாறானது என்பதை நாம் சற்று தெளிவாகப் பார்க்க வேண்டியது அவசியம்.

குறிப்பாக சிறிலங்காவில் இருக்கின்ற அரைவாசிக்கும் மேற்பட்ட ஆளணி வளம் போருக்குள் உள்வாங்கப்பட்டுள்ளது. அத்துடன் வரவு செலவுத் திட்டத்தின் முக்கால் பகுதி போருக்கும், போர் வீரர்களின் தொடர்பான செலவுகளுக்குமே ஒதுக்கப்பட்டுள்ளது. இவ்வாறான நடவடிக்கைகளானது போரை தீவிரமாக முன்னெடுத்து தமிழ் மக்களை அழித்தொழித்து சிறிலங்காவை பெரும்பான்மையுடனும், தனிச்சிங்கள மேலாதிக்க நாடாகவும் மாற்றுவதற்காக முன்னெடுக்கும் செயற்பாடுகள் ஆகும்.

கடந்த சில மாதங்களில் வன்னிக் களமுனைகளில் நடைபெற்ற மோதல்கள் சிறிலங்காப் படைத்தரப்பிற்கு பெரும் கலவரத்தை ஏற்படுத்தியிருக்கின்றன. அத்துடன் இதுவரை அறுபதினாயிரம் (60,000) படையினர் களமுனையிலிருந்து அகற்றப்பட்டுள்ளனர் என்பதை சிறிலங்காப் படைத்தரப்புச் செய்திகள் உறுதிப்படுத்தியுள்ளன.

இதுவரை, அதாவது கடந்த இரண்டரை ஆண்டுகளாக நடைபெற்ற மோதல்களில் 60,000பேரை படைத்தரப்பு களமுனைகளில் இழந்திருக்கின்றமை விடுதலைப் புலிகளின் தாக்குதல் வலுவிற்கும், அவர்களின் இராசதந்திரத்திற்கும் கிடைத்த பெருவெற்றியாகும்.

விடுதலைப் புலிகள் இதுவரை படையினர் தொடுத்த தாக்குதல்களுக்கு எதிரான முறியடிப்புத் தாக்குதல்களையே நடத்தி வந்திருக்கின்றனர். எனினும் தற்பொழுது வன்னிக் களங்களில் அவர்கள் வலிந்த தாக்குதல்களையும் நடத்தி வருவதாகவும் செய்திகள் வெளியாகியிருக்கின்றன. இதனால் மகிந்த ராஜபக்ச குழுமம் இப்போது பெரும் குழப்ப நிலையில் முட்டிமோதிக் கொண்டிருக்கின்றன.

இதனைவிட, விடுதலைப் புலிகளுக்கு அண்மைய நாட்களில் ஆயுதக் கப்பல்கள் வந்திருப்பதான தகவலும் சிறிலங்கா அரச தரப்பை நிலைகுலையச் செய்திருக்கின்றன. ஆயுதங்கள் வந்ததாக வெளியாகிய செய்தியைக் கேட்ட சிறிலங்கா நிலைகுலையும் நிலை ஏற்பட்டால் அவற்றை புலிகள் போரில் பயன்படுத்தினால் எவ்வாறான நிலை ஏற்படும் என்பதை கற்பனை செய்து பார்த்தால் தெரியும்.

இவ்வாறான அச்சநிலை சிறிலங்காவிற்கு ஏற்படக் காரணங்களும் இல்லாமல் இல்லை. கடந்த காலங்களில் நடைபெற்ற ஜெயசிக்குறு, சத்ஜெய, ஓயாதஅலைகள் நடவடிக்கைகளில் விடுதலைப்புலிகளிடம் பேரடிகளைப் படைத்தரப்பு வாங்கி ஓட்டமெடுத்த சந்தர்ப்பங்களும் இருக்கின்றன.

இவை மூலம் விடுதலைப்புலிகளின் தாக்குதல் தந்திரோபாயமும், தாக்குதல் வலுவும், சிறிலங்கா அரசிற்கும், படைத்தரப்பிற்கும் நன்கு புகட்டப்பட்டவையாகும். எனவே மீண்டும் ஒருமுறை அவ்வாறான ஒருநிலை ஏற்படுமோ? என அவர்கள் பீதியடைவது ஒன்றும் ஆச்சரியப்படத்தக்கதல்ல.

எனினும், இவ்வாறு விடுதலைப் புலிகளின் தாக்குதல் ஏதோ ஒருநிலையில் வலுவானதாக அமையும் என நன்கு தெரிந்து கொண்டும் ஏன் இவர்கள் மீண்டும் மீண்டும் போரையே நடத்துகிறார்கள்? என்ற கேள்வி இப்போது எழுகிறது. சிறிலங்கா ஆட்சியாளர்களைப் பொறுத்தளவில், அவர்களுடைய நோக்கம் தமிழ் மக்களை தங்களுடைய அடிமைகளாக வாழ வைப்பதே. அந்த அடிப்படையிலேயே சிறிது சிறிதாக தொடங்கப்பட்ட தமிழின அழிப்பு நடவடிக்கை இன்று பெரும் வியகமொடுத்திருக்கின்றது.

இதன் உச்சக்கட்டம் இப்பொழுது ‘மகிந்த ராஜபக்ச' என்னும் பெயரில் நடத்தப்படுகிறது. இதுவரை ஆட்சி செய்த தலைவர்கள் செய்துவந்த அதே நடவடிக்கையை அதிதீவிரமாக மகிந்த முன்னெடுக்கிறார். அதனைச் செயற்படுத்தும் வகையில் இராணுவத்தினரை முன்னகர்த்தி தமிழ் மக்கள் மீது தாக்குதல்களைத் தொடுக்கிறார். அதற்கு உறுதியாக இராணுவத் தளபதி சரத்பொன்சேகாவும், அவரது நடவடிக்கைகளும் திகழ்கின்றன. தாம் இதுவரை மூவாயிரம் சதுரக் கிலோமீற்றர் பரப்பளவை கைப்பற்றியுள்ளதாக சரத்பொன்சேகா கூறுகின்றார்.

உலக நாடுகளுக்கு தாம் போரில் வெற்றி பெறுவதாக கூறிக்கொண்டும் இதுவரை ஆட்சி செய்த தலைவர்களால் முடிவிற்குக் கொண்டுவராத போரை தான் முடித்து வைப்பேன் எனவும் மகிந்தர் முழக்கமிடுகிறார். இந்த அறிவிப்பிற்கு செயல்வடிவம் கொடுக்கும் கருவிகளாக சிறிலங்கா இராணுவத்தின் முப்படைகள் திகழ்கின்றன. எனவே தனது முன்னோரும் முன்னைய ஆட்சியாளர்களும் தமிழன அழிப்பையே முன்னெடுத்ததால் மகிந்தவும் அதனையே செய்யத் துணிந்திருக்கலாம்.

மகிந்தவின் இந்த போர் வெறியால் சிறிலங்கா இராணுவத்தின் தரைப்படையினர் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். விடுதலைப் புலிகளின் நேரடித் தாக்குதல்கள் பலவற்றுக்கு அதிகம் முகம் கொடுப்பது தரைப்படையினரே எனவே இதனால், இதுவரை தரைப்படையினருக்கு ஏற்பட்ட இழப்புக்களையும், உளவியல் தாக்கங்களையும் ஈடுசெய்யும் விதமாக மகிந்த 2009ஐத் தரைப்படையினருக்குரிய ஆண்டு என்றும் அறிவிப்பைச் செய்திருக்கின்றார்.

தரைப்படையினருக்குரிய ஆண்டு என அறிவித்ததன் காரணமாக, சிறிலங்காத் தரைப்படையினருக்க ஏற்பட்டிருக்கின்ற ஆளணி இழப்பை ஈடுசெய்யும் முகமான பரப்புரையை முன்னெடுக்கவும், இதுவரை இருக்கின்ற படையினரின் உளவுரனை மேம்படுத்தி போருக்கு தயாராகவும் செய்யலாம் என்பதே மகிந்தவின் திட்டமாகும்.

அதனைவிட 2009இல் தான் வெற்றி பெற்றுவிடுவேன் என அவர் கருதியிருப்பதாலும் அது பெரும்பாலும் தரைப்படையினரின் துணையுடனேயே நிகழ வேண்டியிருப்பதாலும் 2009ஐத் தரைப்படைக்குரிய ஆண்டாக அறிவித்திருக்கலாம். இந்த அறிவிப்பிற்கு தக்க நன்மையும் மகிந்த ராஜபக்சவிற்கும் கிடைத்திருக்கின்றது. சிறிலங்காத் தரைப்படையின் 57,58வது இடுபடையணிகள் கிளிநொச்சியைக் கைப்பற்றி விட்டதான செய்தி மகிந்த ராஜபக்சவிற்கு தரைப்படையினர் கொடுத்த தகுந்த வெகுமதியாகும்.

தரைப்படையினர் ஆண்டு என்று மகிந்த கூறியதும் அதை மகிந்த கூறியதற்கான நோக்கமும் இப்போது நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த வெற்றிக் கொண்டாட்டங்கள் எவ்வளவு காலத்திற்கு நிலைத்திருக்கப் போகின்றது என்பதே இப்போது தமிழ் மக்களியேயும் தமிழின உணர்வாளர்கிடையேயும் எழுந்திருக்கின்ற கேள்வியாகும்.

"ஆறேழு நாடுகளின் துணையோடு ஆறேழு மாதங்கள் பாடுபட்டு இப்போது புலிகள் பின்வாங்கிய நிலையில் ஆயிரக்கணக்கான சிங்கள வீரர்களைப் பலி கொடுத்த பின், இப்போது எதிர்ப்பின்றியே வெறும் கட்டடங்களையும், வெறும் நிலப்பரப்புக்களையும் சிங்களம் கைப்பற்றியுள்ளது" என தமிழகத்தின் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் தெரிவிக்கின்றார்.

அத்துடன் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி ‘புலி பதுங்கினால் தீவிரமாய்ப் பாயும்' என்றும் கவிஞர் வைரமுத்து ‘கிளி விழும் புலி விழாது' எனவும் கூறியிருக்கிறார். தமிழக ஆதரவாளர்களின் இவ்வாறான கூற்றுக்கள் உண்மையில் நம்பத் தக்கவையாக உள்ளன. ஏனெனில் விடுதலைப் புலிகளின் பலம் பற்றியும் அவர்களின் தந்திரோபாயம் பற்றியும் ஏற்கனவே பலமுறை நிரூபிக்கப்பட்டுள்ளதால் இவர்களின் கருத்துக்களும் ஏற்றுக் கொள்ளத்தக்கதே.

கிளிநொச்சியை விட்டு விடுதலைப் புலிகள் பின்வாங்கியுள்ள இந்நிலையில் அடுத்த கட்டம் என்ன? என்பது பற்றி எவராலும் திடமாகச் சொல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஏனெனில் உலக நாடுகளின் விடுதலைப் போராட்டத்திற்காக போராடிய இனங்கள் அனைத்தும் இறுதிக் கட்டத்தில் ஒன்றுமே இல்லாது சாவா? வாழ்வா? என்ற ஒரு கட்டத்தை அடைந்த போதுதான் அவர்களுக்கான விடுதலை வாசல் நிரந்தரமாக்கப்பட்டதும் வரலாறுகளே.

தற்போது தமிழர் பலம் ஒன்று திரண்டுள்ளது. எனவே தமிழர்களுக்கான ஈழவிடுதலையின் வாசலும் விரைவில் திறக்கப்படும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

- அஞ்சலி-



Comments