நீதி செத்த தேசம் இது என்பதை உயர்நீதிமன்றமே ஏற்கும் நிலை!



நீதி செத்த தேசம் இது என்பதை
உயர்நீதிமன்றமே ஏற்கும் நிலை!

சட்டமும், ஒழுங்கும் நிலைநாட்டப்பட முடியாத தேசம் இலங்கை என்பதை உயர்நீதிமன்றமே பகிரங்கமாக ஒப்புக்கொள்ளும் அவல நிலைக்கு நாடு வந்துவிட்டது.

நாட்டின் பிரஜை ஒருவரின் அடிப்படை உரிமை மீறப்படுமானால் அதிலிருந்து மீட்சியும், நிவாரணமும் பெறுவதற்கு அந்தப் பிரஜைக்கு சட்ட ரீதியாக ஒரே யொரு வழிதான் உண்டு. அது, உயர்நீதிமன்றத்திடம் அடிப்படை உரிமை மீறல் மனுத் தாக்கல் செய்து அந்த நீதிமன்றத்தின் மூலம் மீட்சி பெறுவதுதான்.

ஆனால் நாட்டின் முழுப் பிரஜைகளினதும் அடிப் படை உரிமைகளைப் பறிக்கும் ஒரு விடயத்தில், உயர் நீதிமன்றம் தலையிட்டு, நீதி, நியாயத்தை எடுத்துரைத் தும் கூட, அந்த அடிப்படை உரிமை மீறலைத் தன்னால் தடுக்க முடியவில்லை என்பதை உயர்நீதிமன்றமே பகிரங்கமாக ஒப்புக்கொள்ளும் பேரவலத்துக்கு இலங்கையின் நீதித்துறை வந்துவிட்டது.

எரிபொருள் விலை தொடர்பான "ஹெட்ஜிங்" ஒப்பந்த முறைகேடு மூலம் பல்லாயிரம் கோடி ரூபாவை அரசு வீணாக விரயமாக இழக்கின்றது என்பதைச் சுட்டிக்காட்டி, அதனால் மக்களின் தலைமீது எரிபொருள் செலவினக் கணக்கில் பெரும்தொகை நிதி வீணே வரி யாக சுமத்தப்படுகின்றது என்பதை விளக்கி, உயர்நீதிமன் றின் முன்னால் புத்திஜீவிகள் குழுவினால் அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

அந்த மனுக்களை விசாரணைக்கு ஏற்ற உயர்நீதி மன்றம் அந்த விண்ணப்பங்களில் குறிப்பிடப்பட்ட மோசமான அம்சங்கள் இடம்பெறுவதை ஏற்றுக்கொண்டு, "ஹெட்ஜிங்" ஒப்பந்தத்தைத் தொடர்வதற்கும் அத னடிப்படையில் வங்கிகளுக்குப் பல்லாயிரம் கோடி ரூபா நிதியை முறைகேடாகச் செலுத்துவதற்கும் எதிராக இடைக் காலத் தடை விதித்தது.

இந்தத் தடைகளின் அடிப்படையில், எரிபொருள் இறக்குமதிக் கொள்வனவின்போது ஏற்படும் விலை வீழ்ச்சியைக் கருத்தில் எடுத்து, நியாயமான விலைக்கு எரி பொருளை மக்களுக்கு விற்பதற்கான விலைச் சூத்திரம் ஒன் றைத் தருமாறு அரசுக்கு திறைசேரிச் செயலாளருக்கு நீதிமன்றம் பணிப்புரையும் விடுத்தது. அரசின் சார்பில் அவர் சமர்ப்பித்த விலைச்சூத்திரத்துக்கு அமைவாகப் பெற்றோலின் விலையை லீற்றர் நூறு ரூபா வீதம் குறைத்து விற்கும்படி நீதிமன்றம் பணிப்புரை விடுத்தது.

அடிப்படை உரிமை மீறல் விடயம் ஒன்றை ஒட்டி, அரசுத் தரப்பினால் சமர்ப்பிக்கப்பட்ட விலைச் சூத்திரத் தின் அடிப்படையில் விடயத்தைத் தீர்மானித்து உயர் நீதிமன்றம் விடுத்த இந்த உத்தரவை ஏற்று நடை முறைப்படுத்த அரசே தவறி விட்டது. அந்த உத்தரவை உதாசீனப்படுத்தி, புறந்தள்ளி, நிராகரித்து விட்டது நாட்டின் நிறைவேற்று அதிகாரம்.

நேற்றுமுன்தினம் இந்த வழக்கின் கடைசித் தவணை யின் போது கூட, உயர்நீதிமன்றின் பணிப்புரையை நடைமுறைப்படுத்துவதா என்பது குறித்து அரசுத் தலைமை ஆராய்வதற்கே அரசு சார்பில் ஆஜரான பிரதி சொலிஸிட்டர் ஜெனரலினால் கால அவகாசம் கோரப்பட்டது என்பது கவனிக்கத்தக்கது.

பெற்றோல் விலை தொடர்பாக உயர்நீதிமன்றம் விடுத்த உத்தரவை நடைமுறைப்படுத்துவதற்குக் கால அவகாசம் கோரப்படவில்லை. நடைமுறைப்படுத்து வதா அல்லது இல்லையா என்று ஆராய்வதற்குத்தான் மேலும் கால அவகாசம் அரசுத் தரப்பினால் கோரப்பட் டது என்பது கவனிக்கத்தக்கது.

அதாவது, உயர்நீதிமன்றம் இலங்கையின் அதியுயர் நியாயாதிக்கம் கொண்ட நீதி ஆயம் விடுத்த உத்த ரவை நடைமுறைப்படுத்தாமல் புறக்கணித்து, உதாசீ னம் செய்யும் அதிகாரம் தனக்கு இருப்பதாக நிறை வேற்று அதிகாரமும், அரசும் வெளிப்படையாகவே பிரதிபலித்துக் காட்டும் நடவடிக்கையே இது.

நாட்டின் மிக உயர்ந்த சட்ட ஆயத்தின் கட்டளை யையே, நாட்டின் ஆட்சிப் பீடம் தூசாக மதித்து, தூர வீசும் நிலையில்
தமது அடிப்படை உரிமைகள் ஆட்சித் தரப்பால் மீறப்படுவதற்கு நிவாரணம் கோரி அந்த ஆயத்திடம் சட் டப்படி விண்ணப்பித்த பொதுமக்கள், வேறு வழியின்றி தங்கள் விண்ணப்பங்களை முடிவுறுத்திவிட்டு, நடை யைக் கட்டவேண்டியதாயிற்று.

மறுபுறத்தில், உயர்நீதிமன்றமும், தனது உத்தரவு களை அரசு நடைமுறைப்படுத்தி ஆகவேண்டும் என்ற சட்ட நியாயத்தை கடப்பாட்டை வெளிப் பேச்சுக்கு ஒரு தடவை கூறி, வழக்குக் கோவையில் அதைப் பதிந்து விட்டு, அடங்கிப் போக வேண்டியதாயிற்று.

உயர்நீதிமன்றக் கட்டளையை நடைமுறைப்படுத்த முடியாது என உதாசீனப்படுத்தி, நீதிமன்றத்தை அவ மதித்த குற்றத்துக்காக நிறைவேற்று அதிகாரத்தையோ அல்லது அரசின் அமைச்சரவையையோ, தண்டிக்க முடி யாத கையாலாகாத் தனத்தில் இருக்கும் உயர்நீதிமன்றத் திற்கு அந்த வழக்கின் விசாரணைகளை அத்துடன் முடிவுறுத்தி, கோவைகளை மூடிக்கட்டி தூக்கிப் போடுவதைத் தவிர வேறு வழியில்லை என்பது துலாம்பரமாகியுள்ளது.

நீதி செத்த நாடு இது என்பதை நீதிமன்றமே நாட் டின் உச்ச நியாயாதிக்கம் கொண்ட நீதி ஆயமே பகிரங் கமாக ஒப்புக்கொண்டு இலங்கைத் தீவுக்கும், இதன் அரச நிர்வாக முறைமைக்கும் "நற்சான்றிதழ்" அளிக்கும் அவலம் இத் தேசத்துக்கு நேர்ந்திருப்பது அதன் துரதிஷ்டமே.


Comments