இராணுவத்தினரின் வழங்கல் நடவடிக்கைகள் அனைத்தும் யாழ் -கண்டி வீதியூடாகத் தரைமார்க்கமாக மேற்கொள்ளப்படுகின்றது என்னும் பரபரப்பான செய்திகள் இந்த வெற்றிக் கொண்டாட்டங்களுக்கு காரணமாக இருக்கின்றன. இவ்வாறான வெற்றிச் செய்திகளைக் கேட்டு, இதுவரை வராத நம்பிக்கையும் எதிர்பார்ப்பும் சிங்கள மக்களிடம் பரவத்தொடங்கியிருக்கிறது. சிறிலங்காவின் தற்போதைய சனாதிபதியும், முப்படைத் தளபதியுமாகிய மகிந்த ராஜபக்ச, பச்சைக்கொடி கட்டி வானில்ப் பறந்து கொண்டிருக்கிறார்.
விடுதலைப்புலிகளை கழுத்தைப் பிடித்துத் தள்ளுவேன், அதுவும் மிகவிரைவில் நடக்கும் எனத் துள்ளிக்குதித்துக் கூச்சலிடுகிறார். இவை இவ்வாறிருக்க, வன்னி மக்கள் இங்கு என்ன செய்கிறார்கள்? எப்படி வாங்கிறார்கள்? அவர்களும் இந்த வெற்றிக் கொண்டாட்டங்களில் பங்கெடுக்கிறார்களா? என்பதை மகிந்த கவனிக்கவில்லை என்ற விடயம் இங்கு நோக்கப்படவேண்டியதே. சிங்கள மக்களையும், தமிழ் மக்களையும் ஒப்பிட்டு நோக்கும் போது, தமிழ் மக்களின் நிலைப்பாடு மிக மோசமானது என்பதை விட என்பதைவிட வாய்விட்டுச் சொல்ல முடியாதநிலை தற்பொழுது ஏற்பட்டுள்ளது.
ஒவ்வொரு குடும்பமும், ஒவ்வொரு தனிமனிதனும், சிறுவர்களும், வயோதிபர்களும் இதுவரை காணாத, அனுபவிக்காத, துயரங்களைத் தற்பொழுது மகிந்த ஆட்சியில் அனுபவிக்கிறார்கள் என்பதை யாராலும் மறுத்துவிட முடியாது. மன்னார்-அடம்பன், வட்டக்கண்டல், பாப்பாமோட்டை, பாலைக்குழி, வெள்ளாங்குளம், முழங்காவில், ஜெயபுரம், பூநகரி, அக்கராயன், கோணாவில், புதுமுறிப்பு, கனகபுரம், பரந்தன், வட்டக்கச்சி, முரசுமோட்டை, தருமபுரம் என மக்கள் ஓடியோடி, தற்பொழுது விசுவமடு தொடக்கம் தேவிபுரம் வரையான சில கிலோமீற்றர்கள் பரப்புள்ள மிகக்குறுகிய வட்டத்திற்குள் மக்கள் அடக்கப்பட்டுள்ளார்கள்.
படையினரின் எறிகணைகளும், விமானக் குண்டுகளும் மக்களை இடைவிடாது துரத்தியும், சேதப்படுத்தியும், பலியெடுத்தும் வருகின்றது. மக்கள் தாங்கொணாத் துன்பத்தில் விளிம்பில் நின்று தவித்துக் கொண்டிருக்கின்றார்கள். கடந்த ஜனவரி பதினொராம் திகதியன்று மட்டும் அறுபத்து இரண்டு பொதுமக்கள் சிறிலங்கா இராணுவத்தினரின் எறிகணைத் தாக்குதலில் காயமடைந்திருக்கிறார்கள். அத்துடன் இந்த ஆண்டு தொடக்கம் முதல் இன்றுவரை நாற்பது வரையான பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளார்கள்.
எனினும் இத்தொகை நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டிருக்கின்றது. இவற்றைத்தான் மகிந்த அரசு வெற்றியாக அறிவித்திருத்துக் கொண்டாடுகிறாரா? பொதுமக்களை ஓட ஓட விரட்டி அவர்களின் வாழ்விடங்கள் மீது குண்டுமழை பொழிவது தான் மகிந்தவின் வெற்றியா? இதனை எந்தத்; தமிழனால் ஏற்றுக்கொள்ள முடியும். கடந்த நான்கு தசாப்த காலமாக போராடிக் கொண்டிருக்கும் தமிழின விடுதலைப் போராட்டத்தை எவ்வாறு நசுக்க முடியும்? என்ற கேள்விகள் எழுந்து மனதை கொதித்தெழ வைக்கிறது.
கிளிநொச்சியையும், முல்லைத்தீவையும் கைப்பற்றி விடுதலைப் புலிகளை அழிப்பது மகிந்தவின் திட்டமாக இருந்தால், பொதுமக்களின் வாழ்விடங்கள் மற்றும் வைத்தியசாலைகள், பாடசாலைகள் என்பவற்றை இலக்குவைத்து ஏன் தாக்குதல் நடத்தவேண்டும். இவற்றுக்கெல்லாம் மகிந்த ராஜபக்ச தக்க பதில் கூறக் கடமைப்பட்டிருக்கிறார். ஆனால் மகிந்த ஒருபோதும் இவற்றைப்பற்றிச் சிந்திக்கப் போவதில்லை. இவ்வாறான செயற்பாடுகள் அப்பட்டமான மனிதஉரிமை மீறல்கள் என்று நன்கு தெரிந்துகொண்ட போதும் மகிந்த அரசு மீண்டும் மீண்டும் தமிழ்மக்களைப் பழிவாங்கும் நடவடிக்கைகளைச் செய்துகொண்டே இருக்கும்.
ஏனெனில் கடந்த கதலங்களில் ஆட்சி செய்த சிறீமாவோ மற்றும் சந்திரிக்கா ஆட்சியிலும் இவை நடைபெற்றன என்பது அனைவரும் அறிந்த விடயம். உலகப் போரியல் வரலாற்றில் தற்பொழுது அதிகம் பேசப்படுகின்ற போராக இஸ்ரேல் - காசா மீது நடத்துகின்ற பயங்கரவாத யுத்தம் இருக்கின்றது. அங்குகூட கடந்த ஒரு வாரகாலமாக தொடர்ந்த இஸ்ரேலியப் படைகளின் வன்மையான தாக்குதலை நிறுத்த வேண்டும் என இங்கிலாந்து உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள், ஐ.நா வில் அறிக்கை வெளியிட்டுள்ளது.
அங்கு ஒருவாரகாலமாக நடந்த தாக்குதலைக் கண்டித்து அறிக்கை வெளியிட்ட ஐ.நா அமைப்பு, இங்கு ஒரு வருடத்திற்கும் மேலாகத் தொடரும் மக்கள் மீதான வன்முறைத் தாக்குதலைத் தடுக்க முன்வரவில்லை. இவற்றைக் கண்டும் காணாதது போல அவை நடந்துகொள்வது தமிழ் மக்களை கவலையடையச் செய்துள்ளது.
இந்தியா, பாகிஸ்தான், மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் சிறிலங்காவிற்கு ஆயுத உதவிகளைக் குறைவின்றி வழங்குகின்றது. நோர்வே, ஜேர்மனி, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் குறைந்தபட்டமாக கண்டன அறிக்கைகளை வெளியிட்டு வந்தபோதிலும் தற்பொழுது அந்நாட்டு அரசுகளும் எதுவும் பேசுவதில்லை.
இவற்றைச் சாதகமாகப் பயன்படுத்தி சிறிலங்கா அரசு தமிழ் மக்கள் மீதான இனஒடுக்குமுறையை மிகத் தீவிரமாகச் செயற்படுத்துகிறது.
இவை இவ்வாறிருக்க, புலம்பெயர்ந்து ஐரோப்பிய நாடுகளில் வாழுகின்ற எம்தமிழ்ச் சொந்தங்களும், மலேசியா, சிங்கப்பூரில் வாழுகின்ற எம் தமிழ் உறவுகளும், அத்துடன் இந்திய - தமிழகத்தில் வாழுகின்ற எம்மினமானச் சொந்தங்களும் எமக்காக் குரல் கொடுத்த வண்ணமே இருக்கின்றன. அண்மைய நாளில் எம் பண்பாட்டு நிகழ்வான பொங்கல் பண்டிகையைக் கூட அவர்கள் புறக்கணித்து எமக்காகக் குரல் கொடுத்திருப்பதை அந்நாட்டு அரசுகள் புரிந்துகொள்ள வேண்டும்.
சிறிலங்கா - தமிழ் மக்கள் மீது நடத்துகின்ற பயங்கரவாத தாக்குதல்களை நிறுத்த சர்வதேச சமூகம் முன்வர வேண்டும் என்பதே ஒட்டுமொத்தத் தமிழ் மக்களின் எதிர்பார்ப்பாகும். அதனை விடுத்து, சிறிலங்காவிற்கு ஆயுத உதவிகளையும், படைத்துறைப் பயிற்சிகளையும், ஆலோசனைகளையும் வழங்குவது ஏற்றுக்கொள்ளத்தக்க விடயமல்ல. இவ்வாறு சர்வதேச சமூகம் முன்வராத சூழலில் தமிழ் மக்கள் தமக்கான இறுதித் தீர்வை தாமே முன்நின்று செயற்படுத்த வேண்டிய நிலை ஏற்படும் என்பதில் ஐயமில்லை.
தமிழ் மக்களின் இனப்பிரச்சினையைத் தீர்க்கவோ அல்லது அதற்கு தகுந்தவாறான நிரந்தரத் தீர்வுத்திட்டமொன்றை முன்வைக்கவோ சர்வதேச பிரதிநிதிகள் தயாராக இருப்பதாகத் தெரியவில்லை.
இலங்கைப் பிரச்சினை தொடர்பாக இந்திய மத்திய அரசு தலையிட்டு தீர்வுத்திட்டமொன்றை முன்வைக்க வேண்டும் என தமிழக முதல்வர் கலைஞர் மு.கருணாநிதி மன்மோகன்சிங்கிடம் விடுத்த வேண்டுகோளுக்குக் கூட இந்தியா தலைசாய்த்தாகத் தெரியவில்லை.
அதாவது இந்திய வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜியை இலங்கைக்கு அனுப்பி பேச்சுவார்த்தை நடத்துவதாகக் கூறி இரண்டு மாதங்கள் கடந்த நிலையில் தற்பொழுது பிரணாப் முகர்ஜியின் வருகையை இலங்கை அரசு விரும்பவில்லை என தெரிவித்துள்ளது.
தமிழ் மக்கள் மீது போரை நடத்துவது இலங்கை அரசு. அப்படியிருக்கும் போது தமிழ் மக்கள் பிரச்சினை தொடர்பாக பேச்சு நடத்த வரும் இந்தியப் பிரதிநிதியின் வருகையை எவ்வாறு அது விரும்பும். இதனை நன்கறிந்த இந்திய அரசு தமிழகத்தைச் சமாளிக்கும் விதத்தில் இவ்வாறானதொரு சாட்டுப்போக்கைக் கூறியிருக்கின்றது. தமிழகமும் அதனை நம்பியிருக்கின்றது.
இடையில் இருக்கும் அரசுகளும் பிரதிநிதிகளும் தங்கள் தங்கள் வசதிக்கேற்ற வகையில் தமிழ் மக்கள் மீது அக்கறை காட்டுவதாகக் கூறிக்கொள்கின்ற போதும் எவரும் தமிழர்களுக்கு ஒரு நிரந்தரத் தீர்வைப் பெற்றுத்தரப் போவதில்லை என்பதை தற்பொழுது தமிழ் மக்கள் நன்கு உணர்ந்துகொண்டுள்ளனர்.
தமிழர்கள் தமக்கான தீர்வை தாமே தனித்து நின்று வென்றெடுக்கும் காலம் கனிந்திருக்கின்றது என்பது உறுதியாகிவிட்ட விடயமே.
- அஞ்சலி.
Comments