ஈழப்பிரச்னை தொடர்பாக திருமாவளவன் மேற்கொண்ட பட்டினிப் போராட்டத்தை முடித்து வைத்தபோது, மேற்கண்ட அறிவிப்பை ராமதாஸ் முன்மொழிந்திருக்கிறார். பா.ம.க. முன்னின்று சாலை மறியல் போராட்டத்தை நடத்தினால், அதன் விளைவு எப்படியிருக்கும் என்பதை எல்லோருமே அறிவார்கள். வன்னியர்கள் உள்ளிட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு தனியே இடஒதுக்கீடு கேட்டு 1987-ம் ஆண்டு டாக்டர் ராமதாசு நடத்திய சாலை மறியல்போராட்டம் தமிழகத்தையே ஸ்தம்பிக்க வைத்தது.
அதன் விளைவாக தனி இடஒதுக்கீடும் கிடைத்தது. 87-ல் போராட்டம் நடத்தப்பட்டபோது பல இடங்களில் வன்னியர்களுக்கும், தாழ்த்தப்பட்டவர்களுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது. இப்போதோ இரு கட்சிகளுமே இணைந்து போராட்ட அறிவிப்பை வெளியிட்டிருப்பதால், அத்தகைய மோதல்களுக்கு இடமில்லை என்பது மட்டுமின்றி, போராட்டத்தின் வீச்சும் அதிகமாக இருக்கும் என நம்பலாம்.
ஈழத்தமிழரைக் காப்பாற்ற போர்நிறுத்தம் செய்யப்படவேண்டும் என்ற கோரிக்கையையும், தமிழக மக்களின் உணர்வுகளையும் காங்கிரஸ் அரசு தொடர்ந்து அலட்சியப்படுத்தி வருவது மட்டுமின்றி, தமிழக முதல்வர் உள்ளிட்ட அனைவரையும் அவமானப்படுத்தும் விதத்தில் செயல்பட்டு வருகிறது. அண்மையில் இலங்கைக்குச் சென்ற வெளியுறவுத்துறை செயலாளர் சிவசங்கர மேனன், இரண்டு நாட்கள் தங்கி விருந்து சாப்பிட்டுவிட்டு, 'இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான நட்புறவு உச்சத்தில் இருக்கிறது' என்று புளகாங்கிதம் அடைந்திருக்கிறார். அதோடு, சிங்களப் படைகளின் தாக்குதலுக்கு ஆளாகிவரும் தமிழ் மக்களுக்காக, ஒன்றரை கோடி ரூபாய் மதிப்புள்ள மருந்துப் பொருட்களையும் வழங்கி 'கடமை'யைக் கழித்துக்கொள்ளும் சாமர்த்தியத்தைக் கையாளப் பார்த்திருக்கிறார்.
கொழும்புவிலிருந்து வரும் தகவல்களைக்கொண்டு பார்த்தால், இலங்கையில் அதிகாரப்பகிர்வு திட்டம் ஒன்றைப் பற்றி சிவசங்கர மேனன் விவாதித்ததாகத் தெரியவருகிறது. 1987-ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட ராஜீவ்-ஜெயவர்த்தனே ஒப்பந்தத்தையட்டி இலங்கையின் அரசியலமைப்புச் சட்டத்தில் ஏற்படுத்தப்பட்ட 13-வது சட்டத் திருத்தத்தின் அடிப்படையில் அதிகாரப்பகிர்வை வழங்குவதுபற்றி ஓராண்டாகவே இந்தியா பேசி வருகிறது. ராஜபக் ஷேவால் அமைக்கப்பட்ட அனைத்துக் கட்சிக் குழுவும் இதைத்தான் தீர்வாக முன்வைத்திருந்தது.1987-ம் ஆண்டு ஒப்பந்தம் ஏற்பட்டபோது அதைக் கடுமையாக எதிர்த்தது ராஜபக்ஷேவின் கட்சிதான். 'இந்த ஒப்பந்தம் இலங்கையின் இறையாண்மையை விட்டுக்கொடுக்கிற துரோகம்' என்று வர்ணித்து, இலங்கை சுதந்திரக் கட்சி அப்போது ஆர்ப்பாட்டம் செய்தது. ஆனால், அதையே இன்று செயல்படுத்தப்போவதாக சொல்கிறார்கள். அன்றும் இன்றும் இந்த ஒப்பந்தத்தை சிங்கள தீவிரவாதக் கட்சிகளான ஜே.வி.பி. போன்றவை ஏற்றுக்கொள்ளவில்லை.
அவை எதிர்ப்பது ஒருபுறம் என்றால், தமிழர் அமைப்புகளும்கூட இதை ஏற்கவில்லை. எல்லா அதிகாரங்களையும் ஜனாதிபதி கையில் கொடுத்துவிட்டு, ஒப்புக்கு அதிகாரப்பகிர்வு எனச் சொல்லும் இந்த ஏற்பாடு எந்த விதத்திலும் தமிழ் மக்களுடைய பிரச்னைக்குத் தீர்வாக இருக்காது என்று அவை கூறிவருகின்றன. தமிழ் மக்களுக்கு சமஉரிமையை உத்தரவாதப்படுத்தும் ஏற்பாடுதான் தேவை என்றும் அவை வலியுறுத்தி வருகின்றன.
இலங்கையில் வாழும் தமிழர்களின் பிரச்னையைத் தீர்ப்பதற்காக ராஜீவ்- ஜெயவர்த்தனே ஒப்பந்தம் ஏற்படுவதற்கு முன்பாகவே இந்தியா சில பரிந்துரைகளை வழங்கியிருந்தது. 1983-ம் ஆண்டு இனப் படுகொலைகளுக்குப் பிறகு அன்றைய பிரதமர் இந்திராகாந்தி, தன்னுடைய பிரதிநிதியாக ஜி.பார்த்தசாரதியை இலங்கைக்கு அனுப்பி ஒரு தீர்வு திட்டத்தை முன்வைத்தார்.
மாகாண கவுன்சில்களை ஏற்படுத்துவது, அவற்றுக்கு சட்ட, நிர்வாக, காவல்துறை அதிகாரங்களை வழங்குவது என்பவை உள்ளிட்ட பரிந்துரைகள் அதில் இடம்பெற்றிருந்தன. ஏறத்தாழ இந்தியாவிலிருக்கும் மாநிலங்களை ஒத்த அதிகாரங்கள் அந்த மாகாண கவுன்சில்களுக்கு பரிந்துரைக்கப்பட்டன. ஆனால், இவை இலங்கை அரசால் நடைமுறைப்படுத்தப்படவில்லை.
ராஜீவ்- ஜெயவர்த்தனே ஒப்பந்தம் தமிழர்களின் ஒட்டுமொத்த பிரச்னையையும் தீர்க்காது என்ற போதிலும், தமிழர்கள் வாழும் வடக்கு, கிழக்கு பிராந்தியங்களை ஒன்றிணைத்து ஒரே பகுதியாக அறிவித்திருந்தது. அதில் இடம் பெற்றிருந்த நல்ல அம்சமாக அதைத்தான் குறிப்பிடவேண்டும். ஆனால், இலங்கையின் உச்ச நீதிமன்றத்தைப் பயன்படுத்தி இந்த அம்சத்தையும் ராஜபக்ஷே இப்போது ரத்துசெய்துவிட்டார்.
வடக்கும், கிழக்கும் பிரிக்கப்பட்டுத் தனித்தனி பிராந்தியங்களாக அறிவிக்கப்பட்டுவிட்டன. ஒப்பந்தத்தின் உயிராக இருந்த அம்சம் பறிக்கப்பட்டு, அது வெறும் பிணமாக மாற்றப்பட்டுவிட்டது. அந்தப் பிணத்தைத்தான் இப்போது தமிழர்களின் தலையில் கட்ட சிவசங்கர மேனன் ஆலோசனை வழங்கியிருக்கிறார்.
'இந்திய நாடாளுமன்றத்துக்கு பொதுத் தேர்தல் வருவதற்கு முன்பு, இலங்கையில் உரிமை கேட்டுப் போராடி வரும் தமிழ் மக்களை ஒழித்துக் கட்டுவதுதான் இந்திய ஆட்சியாளர்களின் உள்ளார்ந்த திட்டம். ஈழத் தமிழர்களுக்கு எதிராக இந்திய அரசு செய்துவரும் துரோகம், அதே தீவிரத்தோடு இங்குள்ள தமிழர்களுக்கு எதிராகவும் திரும்பும். தமிழர்கள் மீது வெறுப்பு கொண்ட சிலரே இந்த அணுகுமுறைக்குக் காரணமாக இருக்கிறார்கள்' என்ற எண்ணம் தமிழ்நாட்டில் வலுவடைந்து வருகிறது.
ஏ.கே.அந்தோணி, வயலார் ரவி, சிவசங்கர மேனன், எம்.கே.நாராயணன் என மத்திய அரசின் ராணுவ மற்றும் வெளியுறவுத்துறைகளில் கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் மேலாதிக்கம் செலுத்தி வருவதும்; முல்லைப் பெரியாறு உள்ளிட்ட பிரச்னைகளில் தமிழக நலன்களுக்கு எதிராக கேரளா செயல்பட்டு வருவதும் இந்த சந்தேகத்தை அதிகரிக்கின்றன.
தமிழர்களின் இன்றைய அவல நிலைக்கு தமிழக அரசு பெரும்பான்மை பலமில்லாத அரசாக இருப்பதே அடிப்படைக் காரணமாகும். காங்கிரஸை சார்ந்திருக்கவேண்டிய இக்கட்டான சூழலில், தம் கண் எதிரிலேயே தமிழரின் உரிமை பறிபோவதைப் பார்த்துக்கொண்டிருக்க வேண்டிய கொடுமை தி.மு.க-வுக்கு நேர்ந்திருக்கிறது. தமிழர்களின் சுயமரியாதைக்காக எத்தனையோ தியாகங்களைச் செய்த ஒரு கட்சி இப்படி இருப்பது வேதனையிலும் வேதனை!
இந்த நிலையை மாற்றவேண்டிய கடமை பா.ம.க., ம.தி.மு.க. மற்றும் இடதுசாரிக் கட்சிகளுக்கு இருக்கிறது. 'நாங்கள் உங்களை ஆதரிக்கிறோம், நீங்கள் காங்கிரஸின் சதிகளுக்குப் பணியாதீர்கள்' என்று அவை ஒருங்கிணைந்து குரல்கொடுக்க வேண்டும்.
இந்த ஆதரவு, நிபந்தனையற்ற ஆதரவாக இருக்கவேண்டும் என்று அவசியமில்லை. நிபந்தனையாக,
'தமிழ் இனத்தின் உரிமைகளை வென்றெடுக்கும் போரில் ஒருபோதும் பின்வாங்கக்கூடாது' என்று தி.மு.க-விடம் சொல்லலாம்.
இன்றைய இக்கட்டான நிலையிலிருந்து விடுபடுவதற்கு இதுதான் சரியான வழி. தமிழ் இன உணர்வுகொண்ட இந்தக் கட்சிகளின் தலைவர்கள் இதைச் செய்வதற்கு முன்வருவார்களா?
நன்றி: ஜீனியர் விகடன்
Comments