இலங்கையில் இடம்பெற்று வரும் மனித உரிமை மீறல்கள் குறித்து கவனம் செலுத்துமாறு ஒபாமாவிடம் HRW கோரிக்கை

இலங்கை உள்ளிட்ட நாடுகளில் இடம்பெற்று வரும் மனித உரிமை மீறல் சம்பவங்கள் தொடர்பில் கவனம் செலுத்துமாறு அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி பரக் ஒபாமாவிடம் மனித உரிமைகள் கண்காணிப்பகம் எழுத்து மூல கோரிக்கை விடுத்துள்ளது.

முன்னாள் ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யூ புஷ்ஷின் ஆட்சி காலத்தில சர்வதேச ரீதியில் மனித உரிமைக்கு உரிய மதிப்பளிக்கப்படவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டங்களை அரசாங்கங்கள் எவ்வாறு முன்னெடுக்கின்றன என்பது குறித்து ஒபாமா உன்னிப்பாக அவதானிக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் சிவிலியன்களுக்கு பல்வேறு அச்சுறுத்தல்கள் விடுக்கப்படுவதாகவும், கடத்தல்கள் காணாமல் போதல்களின் எண்ணிக்கை உயர்வாகக் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மனித உரிமை மீறல்களில் ஈடுபடுவோருக்கு உரிய தண்டனை விதிக்கப்படாத நிலை காணப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இலங்கையில் இடம்பெற்று வரும் மனித உரிமை மீறல்கள் குறித்து விமர்சிக்கும் நபர்களை, உயர் அரசாங்க அதிகாரிகள் விடுதலைப் புலி ஆதரவாளர்களாக சித்தரிக்கும் கலாச்சாரம் நிலவுவதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் பான் கீ மூன், நோபள் சமாதான விருது பெற்ற மெஸ்மன்ட் டுட்டு பேராயர், அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜிம்மி காட்டர் போன்றவர்களையும் விடுதலைப் புலி ஆதரவாளர்களாக அரசாங்க அதிகாரிகள் சாடியிருந்தமை குறிப்பிடத்தக்கதென மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.


Comments